கோவை புத்தகக் கண்காட்சி நிறைவு

கோவை புத்தகக் கண்காட்சி நிறைவடைகிறது. வழக்கமாக நான் புத்தகக் கண்காட்சிகளில் ஒருநாள் மட்டுமே இருப்பது வழக்கம். இப்போதெல்லாம் நாலைந்து நாட்கள் இருக்கிறேன். காரணம் விஷ்ணுபுரம் பதிப்பகம். முதன்மையாக வியாபார நோக்கம்தான். விஷ்ணுபுரம் பதிப்பக நண்பர்கள் என்னிடம் புத்தகக் கண்காட்சியில் இருக்கும்படி கோரிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அரங்குக்கு வந்தால் உண்மையிலேயே விற்பனையில் பிரமிக்கத்த முன்னகர்வும் தெரிகிறது.

முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சியில் மிகுதியான நேரம் இருப்பதில்லை என்பதற்கான காரணம் எந்த இடத்தில் இருப்பது என்பதுதான். என் நூல்களை முதன்மைப்படுத்தும் பதிப்பகம் என ஒன்று முன்பில்லை. என் நூல்களை வெளியிடும் பொதுவான ஒரு பதிப்பகத்தின் இடத்தை நான் அதிகமாக எடுத்துக்கொள்வது பிழை. பிற எழுத்தாளர்களை உந்தி விலக்குவது போன்றது அது. மேலும் எந்த இடத்தில் நான் இருப்பேன் என்பதை என்னால் அறிவிக்கவும் முடியாது. இப்போது அதெல்லாம் சாத்தியமாகிறது.

நான் எப்போதுமே என் வாசகர்களை, புதிய வாசகர்களைச் சந்திப்பதில் ஆர்வமுள்ளவன். அவர்கள் ஒவ்வொருவரையும் எனக்கு நினைவும் இருக்கும். பலருடைய தனிவாழ்வுச் சிக்கல்கள்கூட எனக்கு தெரியும். மறதி மிகக்குறைவு. ஆனால் இம்முறை ஒன்றை கவனித்தேன்.ஒரு முகம் என் முன் வந்தால் அவர் பெயர் நினைவிலெழ ஓரு சில கணங்கள் தாமதமாகிறது. ஒரு சின்ன க்ளூ தேவையாகிறது.  அல்லது இன்னொரு பெயர் நினைவிலெழுந்து அந்தப் பெயரை மறைத்துவிடுகிறது.

ஆச்சரியமென்னவென்றால் மிக அணுக்கமானவர்களிடமும் சிலசமயம் அப்படி நிகழ்கிறது. சென்ற ஓராண்டாகவே இது அவ்வப்போது நிகழ்கிறது. மிக அரிதாகத்தான். ஆனால் இது எனக்கு நிகழுமென்பதே ஆச்சரியமாக உள்ளது. மிக அறிந்த நூல்களின் பெயர்களைக்கூட நினைவில் எடுக்க சற்று துழாவ வேண்டியிருக்கிறது. குறிப்பாக ஒன்றை யோசித்துச்செல்லும்போது சட்டென்று இன்னொன்றை நினைவுகூர வேண்டும் என்றால் ஒரு கணம் தடுமாறுகிறேன். அதற்கான ஒரு உடல்மொழி, தலையில் தட்டிக்கொள்வது, உருவாகியிருக்கிறது.

அறுபது வயதில் இது மிகமிக இயல்பானது, எனக்கு இந்த மறதி மிகக்குறைவாகவே உள்ளது, என் நினைவுத்திறன் மிக அதிகமாகவே உள்ளது என்றே மருத்துவ நண்பர்கள் சொல்கிறார்கள். மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள், சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் உள்ளவர்களில் இந்த மறதி மிக அதிகம். எனக்கு அவை ஏதும் இல்லை. ஆனாலும் இதை என்னால் ஏற்க முடியவில்லை. இதனுடன் தொடர்ச்சியாகப் போராடுகிறேன். இந்த புத்தகக் கண்காட்சியிலும் இது நிகழ்ந்தது.

இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் அறம்தான் விற்பனையில் முதலிடம். எங்கள் எல்லா கணிப்புகளையும் அறம் நொறுக்குகிறது. புத்தகக் கண்காட்சி நடக்கும்போதே மீண்டும் அச்சிட நேர்ந்தது. அடுத்தபடியாக அஜிதனின் அல் கிஸா. மைத்ரி வாங்கியவர்கள் அனைவருமே அதை வாங்கியதைக் காணமுடிந்தது.  இங்கே நூல்கள் விற்பனையாக முதன்மைக் காரணமாக அமைவது வாசகர்கள் அந்த மொழிக்கு அணுக்கமாகச் செல்லமுடிகிறதா, அவர்களின் உணர்வுகளையும் ஆன்மிகத்தையும் அது தொட்டெழுப்புகிறதா என்பதுதான்.

மலர்த்துளி, துணைவன், படையல்  ஆகியவை கோவை புத்தகக் கண்காட்சிக்காக உருவான எனது நூல்கள்.அவையும் சிறப்பாக விற்றன. அருண்மொழி நங்கையின் பெருந்தேன் நட்பும் சிறப்பான வரவேற்பை அடைந்தது. விஷால்ராஜாவின் திருவருட்செல்வி, பி.கே.பாலகிருஷ்ணன் எழுதி அழகிய மணவாளன் மொழியாக்கம் செய்த நாவலெனும் கலைநிகழ்வு ஆகியவையும் இந்த புத்தகக் கண்காட்சிக்காக தயாரான நூல்கள். அவையும் சிறப்பாகவே விற்பனையாயின.

புத்தக் கண்காட்சி என்பது ஒரு கொண்டாட்டம்தான். நான் இளைஞனாக இருக்கையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் பரவசத்துடன் அலைந்து திரிந்திருக்கிறேன். எனக்கான உலகம், நான் இருந்தாகவேண்டிய உலகம் என்னும் எண்ணம் எனக்குள் பெருகிக் கொண்டிருக்கும். இப்போதும் அந்த நிறைவு உருவாகிறது.

கோவை புத்தக் கண்காட்சி உள்கட்டமைப்பு, இடம் ஆகிய அளவில் தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடத்திலுள்ளது. இன்னமும் அதன் விற்பனை பெருகவேண்டுமென்றால் இங்குள்ள கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவேண்டும். கோவையை அடுத்த சிற்றூர்களில் இருந்து நூல்கள் வாங்குவதற்கு மேலும் மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும்.

கோவை புத்தகக் கண்காட்சி முடிந்ததுமே ஈரோடு புத்தகக் கண்காட்சி. அதில் விஷ்ணுபுரம் கடை இல்லை. விஷ்ணுபுரம் நூல்கள் வேறு கடைகளில் கிடைக்கும். ஈரோட்டில் தமிழ் விக்கி – தூரன் விருதுவிழா நிகழ்கிறது. அங்கும் எல்லா நூல்களும் கிடைக்கும்

புத்தகக் கண்காட்சிச் சந்திப்புகள் ஒரு வகை தொடக்கப்புன்னகைகள். பல வாசகர்களுக்கு தயக்கம் இருக்கிறது. அது உடையும் கணங்கள் அங்கே நிகழ்கின்றன. ஆனால் தொடர் உரையாடல் நிகழவேண்டும் என்றால் நேரில் சந்திப்பு நிகழ்வுகளுக்கு வந்தாகவேண்டும். வாசகர்கள் அடுத்த கட்டமாக அவற்றுக்கு வருவார்கள் என நம்புகிறேன்.

இந்த புத்தக விழாவில் குறை என எனக்கு முக்கியமாகத் தோன்றுவது இரவு எட்டு மணியுடன் நிறைவடையவேண்டும் என்னும் விதி. ஏழே முக்காலுக்கே விசில் ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. கோவை தொழில்நகரம். பெரும்பாலானவர்களால் ஆறுமணிக்கு மேல் தான் கிளம்ப முடியும். கொடீஷியா அரங்கு சற்று தள்ளி உள்ளது. வந்து சேர ஏழு மணி. அரங்குகளை பார்ப்பதற்குள் துரத்தி அடித்து கடையை மூடிவிடுகிறார்கள். ஒருவகையில் புத்தகக் கண்காட்சியின் நோக்கத்துக்கே எதிரானது இது.

காலை பத்து மணிக்கு தொடங்கவேண்டியதில்லை. விடிந்ததும் எவரும் கிளம்பி வரப்போவதில்லை. 12 மணிக்குக்கூட தொடங்கலாம். ஆனால் ஒன்பது மணி வரைக்குமாவது அரங்கு இருந்தாகவேண்டும். மற்றபடி நனையாத நல்ல கூடம், சிறந்த உணவகம், நல்ல கழிப்பறைகள் என கோவை புத்தகக் கண்காட்சி சிறப்பானதாகவே இருந்தது. அந்தியின் நிகழ்வுகளும் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தவையாக, தரமானவையாக இருந்தன.

ஒவ்வொரு நாளும் விழா முடிந்து திரும்பும்போது எங்களூர் (நாகர்கோயில்) ஆரியபவனில் உணவு உண்டு அளவளாவி பிரிவது ஓர் இனிய அனுபவம்.நான் இரவு சாப்பிடுவதில்லை என்றாலும் ஒரு கனித்தொகை வாங்கி கொறித்தபடி பார்த்திருந்தேன்.

முந்தைய கட்டுரைசாந்தன்
அடுத்த கட்டுரையோகம், அறிமுகப்பயிற்சி