மணிப்பூரின் உணர்வுகள்- கடிதம்

கன்னி நிலம் வாங்க

கன்னி நிலம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

மணிப்பூர் கட்டுரை வாசித்த பிறகுதான் கன்னிநிலம் வாசித்தேன். அது ஒரு திரில்லர் வகை நாவல், இலக்கியமாக எழுதப்பட்டது அல்ல என்று நீங்கள் சொல்லியிருந்ததனால் நான் அதை இதுவரை வாசிக்காமலிருந்தேன். மணிப்பூர் கிளர்ச்சியின் பின்புலம் அதற்கு உள்ளது என்று தெரிந்ததனால் இப்போது வாசித்தேன். ஒரு திரில்லர் என்றவகையில் மிக வேகமான நகர்வுள்ள நாவல். ஒரு போராட்டக் களம், அதில் ஒரு காதல். காதலின் மீறல் என்று சொல்லலாம். திரில்லர்களுக்குரிய ஒரு டெம்ப்ளேட் கதை. ஆனால் டீடெயில்களில் சுவாரசியமும் நுட்பமும் இருந்தன.

மணிப்பூரின் இரண்டு எல்லைகள் கதையில் உள்ளன. ஒன்று ராணுவம். இன்னொன்று பழங்குடி கிளர்ச்சிக்குழு. அதிலும் ராணுவத்தைச் சேர்ந்த கதைநாயகன் மணிப்பூரில் இருந்து மிகமிக தெற்கு எல்லையிலே இருப்பவன். அவனுக்கு அந்த நிலம் பற்றி ஒன்றும் தெரியாது. கதைநாயகிக்கு மணிப்பூர் மட்டுமே தெரியும். இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் எல்லைகளை மீறி அறிய முடிகிறது. அது காதல் வழியாக.

மணிப்பூர் கிளர்ச்சி இங்கே ஒரு கதைப்பின்புலமாகவே உள்ளது என்றாலும் எனக்கெல்லாம் அந்த சூழலும் அந்த நிலமும் புதியவை. முக்கியமாக மணிப்பூர் பழங்குடி கிளர்ச்சியாளர்கள் பர்மிய எல்லைக்கு அப்பால் இன்னொரு வாழ்க்கையை வாழ்கிற செய்தி. உண்மையி, அவர்கள் தனிநாடு கோருகிறார்கள். ஆனால் எல்லா பழங்குடிகளுக்கும் உரிமைப்பட்ட அந்நிலம் எப்படி அவர்களுக்கு மட்டும் சொந்தமானதாக ஆகும்? அவர்களுக்கு அப்படி சுதந்திரம் கிடைத்தால்கூட பழங்குடிகளின் இனப்பிரச்சினையை எப்படி தீர்ப்பார்கள்? பர்மா அவர்களைச் சும்மா விடுமா? இன்றைக்கு அவர்களை ஆதரிப்பவர்கள் யார்? 

எதுவுமே தெரியாது. அவர்கள் ஓர் இருட்டில்தான் இருக்கிறார்கள். அல்லது அப்படி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு மணிப்பூர் பிரச்சினை 90 சதவீதம் தீர்ந்து, அவர்களில் பெரும்பாலானவர்கள் பிஜெபி ஆதரவாளர்களாக ஆனதே வங்காள முஸ்லீம்கள் அங்கே ஊடுருவி நிலத்தைக் கைப்பற்றியபோதுதான். பர்மாவில் இருந்து ரோஹிங்கியாக்கள் இங்கே வந்துவிடுவார்கள் என்ற பயமும் உள்ளது. ஆக்ரமிப்பு உண்மையில் நடக்கும்போது அவர்களுக்கு இந்திய அரசு, இந்திய ராணுவம் தேவையாகிறது. மற்ற சமயங்களில் அவர்கள் இஷ்டப்படி இருக்க விட்டுவிடவேண்டும். பழைய இனக்குழுப்போர்கள் வழியாக அவர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டும். இதுதான் அவர்களின் மனநிலை

அந்த எல்லைகளை எல்லாம் கடந்துசென்று நோ மென்ஸ் லேண்ட் ஐ அடைந்த இருவர்தான் கதையில் இருக்கிறார்கள். மணிப்பூர் பற்றிய இந்நாவலை இப்போது புதிய ஆர்வத்துடன் வாசிக்க முடிந்தது. அரசியல் சார்ந்து உருவாக்கி வைக்கப்படும் எளிமையான டெம்ப்ளேட்களை விட ஒரு திரில்லரின் டெம்ப்ளேட் மிகமிக சிக்கலானதும் விரிவானதும் என்பதே ஆச்சரியமளிக்கிறது

ராஜேந்திரன் எம்

முந்தைய கட்டுரைபழைய வரலாறும் புதிய வினாக்களும்
அடுத்த கட்டுரைஎஞ்சியிருப்பது– கடிதம்