சிறுகதையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?

விஷால் ராஜா

அன்புள்ள ஜெ

நான் தொடர்ச்சியாக நீங்கள்,சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன்,  யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்கள் தலைமுறைக்குப்பின்னர் வெளிவந்துள்ள முக்கியமான சிறுகதையாசிரியர்கள் யார், சிறுகதைநூல்கள் என்னென்ன என அறிய விரும்புகிறேன். கோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இக்கேள்வி.

செ.சிவக்குமார்

சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சிவக்குமார்,

என்ன நிகழ்ந்தது என்று ஓர் இலக்கிய விமர்சகர், ஒரு மூத்த எழுத்தாளர் சொல்லலாம். தனக்கான பார்வையை முன்வைக்கலாம். என்ன நிகழ்கிறது, நிகழவிருக்கிறது என்று சொல்வது கொஞ்சம் கடினம். மிகக்கறாரான பார்வை, மிகவிரிவான ஆய்வு ஆகியவை புதியதாக எழவிருக்கும் சில முகிழ்வுகளை அழுத்தி இல்லாமலாக்கிவிடக்கூடும். இவற்றை  கவனிக்கலாம் என்று மட்டுமே நான் சொல்லமுடியும். சொல்லப்போனால் நூல்களை விட ஆசிரியர்களையே குறிப்பாகச் சுட்டமுடியும்.

அனோஜன் பாலகிருஷ்ணன்

புதிய எழுத்தாளர்களை இலக்கியவாசகன் கவனித்தாகவேண்டும், வாசித்தாகவேண்டும். ஏனென்றால் அதன் வழியாகவே அவன் வரவிருக்கும் இலக்கியத்தை நோக்கி நகர்கிறான். வாசித்தறிந்து ரசித்து வரும் படைப்பாளிகளையே நாம் வாசிக்க விரும்புகிறோம். அந்த பொதுமனநிலையில் இருந்து கூரிய படைப்பாளிகள் தங்களை விடுவித்துக்கொண்டு முன்னேறியாகவேண்டும்.

சுனீல் கிருஷ்ணன்

ஆனால் அதிலுள்ள சிக்கல் முதன்மையாக ஒன்று. இளம் எழுத்தாளர்களின் எழுத்துமுறை, நடை ஆகியவற்றுடன் நமக்கு அறிமுகம் இருப்பதில்லை. நாம் அவற்றுக்குப் பழகியிருப்பதில்லை.  ஆகவே முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுக்குள் நாம் இயல்பாக நுழைவதுபோல அவர்களின் படைப்புகளுள் நுழைய முடியாது.

மயிலன் சின்னப்பன்

ஜானகிராமனையோ அசோகமித்திரனையோ படிக்கும் இயல்பான தன்மையுடன் நாம் இவர்களை வாசிக்கமுடியாது. உடனே நாம் பழைய எழுத்தாளர்களிடம் இருக்கும் சுமுகமான வாசிப்புத்தன்மை இன்றைய எழுத்தாளர்களிடமில்லை என்று முடிவு செய்வோம். பிரச்சினை நம்மிடம்தான். நமக்கு முந்தையவர்கள் பழகியிருக்கிறார்கள் அவ்வளவுதான். பழக்கத்தை தொடர்ச்சியாக உடைத்துக்கொண்டிருப்பதே வளர்ச்சி.

லெ.ரா.வைரவன்

ஆகவே நாம் நம் தரப்பில் இருந்து ‘முயற்சியின் சாதக அம்சத்தை’ புதிய எழுத்தாளர்களுக்கு அளித்தே ஆகவேண்டும். அத்துடன் ஒரு படி மேலான கவனத்தையும் கொடுத்தாகவேண்டும். ஏனென்றால் அவர்களிடம் இருக்கும் புதிய அழகியல் இன்னும் முழுமையாக வளர்ந்து கிளைவிட்டு மலர்ந்து கனியாகவில்லை. அது முளைத்தெழுந்துகொண்டுதான் உள்ளது. அதை முளையிலேயே கண்டறிவதே கூர்வாசிப்பென்பது

அகரமுதல்வன்

இன்னுமொன்று, அவர்கள் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஒரே வகையினர் அல்ல. ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு வகையைச் சேர்ந்தவை. தனக்கான தனித்துவம் கொண்டவை. ஒருவரை இன்னொருவரிடம் ஒப்பிடாமல் வாசிக்க முடியாது. ஆனால் ஒருவர் இன்னொருவர் போல் எழுதவேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.

சுஷீல்குமார்

ஒரு சூழலில் வேரூன்றிவிட்ட எழுத்தாளர்களுக்கே வாசகர்கள் மிகுதியாக இருப்பார்கள். அது பிழையல்ல. ஆனால் புதிய எழுத்தாளர்கள் வாசிக்கப்படவில்லை என்றால் இலக்கியம் என்னும் இந்த இயக்கம் முன்னகர்வதை நாமே தடுத்தவர்கள் ஆவோம். இந்த ஒரு காரணத்தாலேயே ஒரு முதன்மை எழுத்தாளரின் நூலை வாங்குபவர் தொடர்ந்து ஓர் இளம் எழுத்தாளரின் நூலையும் வாங்கியாகவேண்டும் என்று நான் சொல்லத்துணிவேன்

கமலதேவி

இன்று எழுதும் சில புதிய சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்கிறேன். அவர்களை தொடர்ந்து கவனப்படுத்தியும் வருகிறேன். இவர்களின் பட்டியல் முழுமையானது என்று சொல்லமாட்டேன். உடனடியாகச் சொல்லத்தக்கவை இப்பெயர்கள். இவர்களின் சிறுகதை நூல்களை புத்தகக் கண்காட்சியில் தேடி வாங்கலாம். இவர்கள் வழியாக இன்றைய சிறுகதைப்போக்குகள் பற்றிய ஒரு மதிப்பீட்டை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.

கார்த்திக் புகழேந்தி

பொதுவாக புதிய சிறுகதையாசிரியர்களின் நூல்களை சில குறிப்பிட்ட பதிப்பகங்களிலேயே பெறமுடியும். விஷ்ணுபுரம் பதிப்பகம், காலச்சுவடு, யாவரும், உயிர்மை, ஸீரோ டிகிரி, சுவாசம் போன்ற பதிப்பகங்களில் இவர்களின் நூல்களை வாங்கலாம்.

கார்த்திக் பாலசுப்ரமணியன்

இவர்களில் கார்த்திக் பாலசுப்ரமணியன், சுரேஷ் பிரதீப், மயிலன் சின்னப்பன், சுசித்ரா போன்ற சிலர் இலக்கிய விருதுகள் வழியாக அடையாளம் காட்டப்பட்டவர்கள். சிலர் இன்னமும் கூட விரிவாகக் கவனிக்கப்படாதவர்கள். அந்த விருதுகள் முக்கியமானவை. ஆனால் எப்போதும் விருதுகள் மட்டுமே முக்கியமானவை அல்ல.

சுசித்ரா

இன்னொன்று இந்தியாவுக்கு வெளியிலும் தமிழிலக்கியம் உள்ளது. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில். அங்குள்ள இலக்கிய உலகம் பற்றிய அறிமுகமும் நமக்குத்தேவை. அங்கு எழுந்துவரும் இளம் நவீன இலக்கியவாதிகளை இன்று புத்தகக் கண்காட்சிகள் வழியாக எளிதாகக் கண்டடையமுடியும்

நவீன்

உங்கள் வினா உற்சாகம் அளிக்கிறது. இத்தகைய தேடல்கொண்ட சில வாசகர்களே இளம் எழுத்தாளர்களின் ஆற்றலை வழங்குகிறார்கள். இளம் எழுத்தாளனாகிய எனக்கு அன்று அத்தகைய ஊக்கத்தை அளித்த சிலர் உண்டு. தியடோர் பாஸ்கரன், விஜயா வேலாயுதம் போல. அவர்களை இன்றும் நன்றியுடன் நான் எண்ணிக்கொள்கிறேன்

ஜெ

பார்க்க

கதைகள் மற்றும் விரிவான தகவல்களுக்கு தமிழ் விக்கி பதிவுகள்.

சுசித்ரா 

கமலதேவி

கார்த்திக் புகழேந்தி

கார்த்திக் பாலசுப்ரமணியன்

அகரமுதல்வன்

மயிலன் சின்னப்பன்

அனோஜன் பாலகிருஷ்ணன் 

சுரேஷ் பிரதீப்

சுனீல் கிருஷ்ணன்

விஷால் ராஜா

லெ.ரா.வைரவன்

சுஷீல்குமார்  

ம.நவீன்

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சியில்….கடிதம்
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி, ஞானி -கடிதங்கள்