எஞ்சியிருப்பது– கடிதம்

கதாநாயகி வாங்க

கதாநாயகி ஓர் அற்புதமான நாவல். அந்நாவலை மிக  வேகமாக வாசித்து முடித்தேன். இப்படி வேகமாக அதை வாசிக்கமுடியும் என்றே நினைத்துப் பார்த்ததில்லை. திகில்கதைகளுக்குரிய pace கொண்டிருந்தது. ஆதியில் இருந்தே வேகம். அந்த பேய் வரும் இடமெல்லாம் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. காரணம் அந்தச்சூழல். நான் வால்பாறையில் 1999 வாக்கில் இதேபோல ஒரு பங்களாவில் ஆய்வுக்காகச் சென்று 7 நாட்கள் தங்கியிருந்தேன். வால்பாறையிலும் இதைப்போலவே நல்ல மழை உண்டு. அந்த திகில் குறையாமல் நாவலை வாசித்து முடித்தேன்.

ஆனால் நாவல் எனக்குள் ஒரு பித்து போல சுழன்றுகொண்டே இருந்தது. நினைக்க நினைக்கத்தான் எவ்வளவு அடர்த்தியான நாவல், எவ்வளவு அழுத்தமான நாவல் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது அடிப்படையில் ஒரு  feel good நாவல். நாவலின் காலமாற்றம் அருமையாக நிகழ்கிறது. ஒவ்வொருவரும் இன்னொருவராக ஆகிவிடுகிறார்கள். எல்லாமே நன்மையாகவும் உள்ளது. இன்னொரு காலம். அதில் நீதி கூடியிருக்கிறது. வறுமையும் மறைந்துவிட்டது.

ஆனால் இன்னொரு கதை காலம் காலமாக பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியைச் சொல்கிறது. பாலியல் அடிமைப்படுத்தல். அது பெண்ணின் தன்மானத்தை அழித்து அழியாத வடிவாக தங்கிவிடுகிறது. அவளால் அதிலிருந்து மீளவே முடிவதில்லை. அவள் அதை விட்டு வெளியேற முயற்சி செய்துகொண்டே இருக்கிறாள். ஆனால் அந்தக்கசப்பு அவளை பேயாக்கிவிடுகிறது. பழிவாங்கினாலொழிய அவளால் அமைதி அடைய முடியவில்லை. அந்த வன்மம்தான் நாவலின் இன்னொரு ஆழம்.

ரோமாபுரிக் காலம் முதல் நாவல் உண்மையில் தொடங்குகிறது 18 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நடைபெற்ற லண்டனின் வாழ்க்கையும் அதன் ஆசாரங்களும் போலி உபச்சாரங்களும்  மேனர்ஸ்களும் நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. ஒரு வஞ்சம் கொண்ட பெண்ணின் விலகிய பார்வை வழியாக அவையெல்லாம் சொல்லப்படுகின்றன. அந்த தீவிரமும் நுட்பமும் நினைக்க நினைக்க ஆச்சரியமானவை.

அதன்பிறகு 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் இந்தியாவின் சூழல். என்னென்ன வகையான அடக்குமுறைகளும், பாவனைகளும் இருந்தன என்று நாவல் காட்டுகிறது.  அன்றைய சூழலில் ஒரு பெண் எப்படி அடிமையாகிறாள் என்று காட்டுகிறது. ஆனால் இந்த வன்முறை எல்லாமே பூடகமாகத்தான் சொல்லப்படுகின்றன. இத்தகைய ஒரு கதையில் குரூரமான சித்திரங்களை அளித்திருக்க முடியும். ஆனால் இந்நாவலில் அப்படி ஏதுமில்லை. எல்லாமே மனம்தான்.

கடைசியில் மாறாமலிருப்பது அந்த ரத்தச்சுவை அறிந்த புலி மட்டும்தான். அந்த இடம் நாவலின் உச்சம். அதுதான் நாவலின் மையம் என்றும் நினைக்கிறேன்

ரமேஷ்குமார் மாணிக்கம்

முந்தைய கட்டுரைமணிப்பூரின் உணர்வுகள்- கடிதம்
அடுத்த கட்டுரைகோவை உரை, வசைகள்