கோவை சங்க இலக்கிய உரை, கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

மிக அருமையான உரை.  இயற்கை காட்சி வழி உன்னதமாக்கல் , குகை ஓவியங்கள்-> சங்க இலக்கியங்கள்->பக்தி இலக்கியம்->சீவக சிந்தாமணி+கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்த மலர்துளிகள் போல பல விசயங்களை இந்த உரை எங்களுக்கு சொல்லி தந்தது. கவிதையை வாசிப்பது எப்படி என சென்ற முறை வந்த பொழுது பூன் முகாமில் சொல்லி தந்தீர்கள், அதன் தொடர்சியாகவும்  இந்த உரை அமைந்தது.
அன்புடன்
நிர்மல்
*

சங்க இலக்கிய உரை என்றதும் அதை உங்கள் சங்க சித்திரங்களின் இன்னொரு வடிவமாக உருவகித்திருந்தேன். அதுவே இங்கே வழக்கமாகச் சங்க இலக்கியம் பேசுபவர்களுக்கு பிடிகிடைக்காமல் இருக்கும்.உரையிலேயே சொன்னதுபோல சங்க இலக்கியக் காட்சிகளை சங்ககாலவாழ்வியல்சித்திரங்களாக அப்படியே எடுத்துக்கொண்டு தமிழர் பெருமை என்று பேசுவதே இங்கே மரபு. உங்கள் உரை அடுத்த கட்டத்துக்குச் சென்று கவிதைக்குரிய சப்ளைம் எப்படி சங்கப்பாடல் வழியாக நிகழ்கிறது என்பதை மிக நுணுக்கமாக வர்ணித்துள்ளது. அற்புதமான உரை. எல்லா கவிதைகளும் புதியதாக, வாசிப்பு மேலும் புதியதாக இருந்தது. அந்த குருத்துத் தொடுகையை சப்ளைம்கவிதை அனுபவம் என கொண்டு வந்து முடித்ததை கிளாசிக் டச் என்று சொல்லவேண்டும்

வாழ்த்துக்கள்

ராஜ்

*

அன்புள்ள ஜெ

சங்க இலக்கியத்தை கவிதையாக வாசிப்பதிலோ, அழகியல் சார்ந்து பேசுவதிலோ இங்கே இருக்கும் பெரிய தடைகள் என்னென்ன என்பதை உங்கள் சங்க இலக்கிய உரைகள் வரும்போதெல்லாம் வரும் எதிர்வினைகளில் இருந்து காண்கிறேன். சங்க இலக்கியம் இங்கே நீண்டகாலமாக பாடமாக இருக்கிறது. பல ஆயிரம்பேர் அதை பாடமாக படித்துள்ளனர். ஆகவே தங்களுக்குச் சங்க இலக்கியம் கரதலப்பாடம் என நினைக்கிறார்கள். எவர் என்ன சொன்னாலும் கிளம்பி வந்து ஏதாவது சின்ன பிழைகளை சுட்டுவது, மேற்கொண்டு சில திருத்தங்கள் சொல்வது என ‘நாங்களும் படிச்சிருக்கோம்ல’ மோடிலேயே இருக்கிறார்கள். ஒரு புதிய பார்வையை உருவாக்குவது, அதை பொதுவெளியில் விவாதிப்பது என்பது இங்கே நடைபெறுவதே இல்லை. அதை உடனடியாக குழப்பியடிக்க முதிர்ச்சியில்லாத ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

இரண்டு கருத்துக்கள் எனக்கு புதியவை. ஒன்று சங்கப்பாடல்கள் நிகழ்த்துகலைக்கான டெக்ஸ்ட் ஆக இருக்கலாம் என்பது. ஆனால் நுட்பமான கருத்து என்பது சங்க இலக்கியம் routed என்பதும், அதில் காமம்  sublime ஆக ஆரம்பித்து பின்னர்தான் காதல் என நாம் இன்றைக்குச் சொல்லும் இந்த அர்த்தத்தை வந்தடைந்தது என்பதும், பக்தி இலக்கியத்திலுள்ள அந்த மண்ணில் கால் தொடாத உச்சநிலை உண்மையில் சங்ககாலத்தில் தொடங்கிய sublime ன் முதிர்ந்த நிலைதான் என்பதும்தான். யோசிக்கவேண்டிய ஒரு முன்மொழிவு.

ஆடலரசன் மாணிக்கம்

ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்ற தொகுப்பு இது. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முதல் பல தமிழறிஞர்கள் பாராட்டிய கட்டுரைகள். சங்க இலக்கியத்தை வாழ்க்கையில் பொருத்தி வாசிப்பவை இக்கட்டுரைகள். இந்த வகை எழுத்து இந்நூலுக்குப்பின்னர்தான் ஒரு எழுத்துமரபாகவே தமிழில் உருவானது.

சங்கச் சித்திரங்கள்-ஜெயமோகன் (கட்டுரைகள்) வாங்க

முந்தைய கட்டுரைபெருகும் வண்ணங்களின் நிலம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம், ஓர் ஓவியத்தின் கதை