அன்புள்ள ஜெ,
புனைவுக்களியாட்டுச் சிறுகதைத் தொகுதிகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இவற்றிலுள்ள கதைகளின் வகைபேதங்கள் திகைப்படையச் செய்கின்றன. தவளையும் இளவரசனும், மணிபல்லவம், அனலுக்குமேல் எல்லாம் அற்புதமான சிறுகதைகள். அவை பெரிதாக இங்கே பேசப்படவில்லை. அந்த கதைகளின் பேரபிள் தன்மையும், வடிவ ஒருமையும் ஆச்சரியப்படுத்துபவை. நான் திரும்பத்திரும்ப அவற்றின் அர்த்தங்களையும் அவை விரிந்துகொண்டே போவதையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னை கேட்டால் உங்கள் வாழ்நாள் சாதனை என்பது இந்த 13 கதைதான். இலக்கியமறிந்த ஒரு வாசகன் தமிழிலக்கியத்தின் முதன்மையான சாதனை என்பதும் இந்த மாபெரும் கதைவெளிதான் என்பதை ஒப்புக்கொள்வான்.
வாழ்த்துக்கள்
ஆர்.கே.பாலசுப்ரமணியன்
அன்புள்ள ஜெ
புனைவுக்களியாட்டுக் கதைகளை வாசிக்கையில் அவற்றை எப்படி எழுதினீர்கள் என்னும் பெரும் திகைப்பு எனக்கு ஏற்படுவதுண்டு. அண்மையில் இரவுப்புயல் கட்டுரை வாசித்தேன். அந்த நாட்களின் மின்சாரநிலை பற்றி எழுதியிருந்தீர்கள். அவை எந்த அளவுக்கு உச்சகட்ட கிரியேட்டி நிலையில் வெளிவந்துள்ளன, எப்படிப்பட்ட இன்பநிலையை உங்களுக்கு அளித்திருக்கின்றன என்று தெரிகிறது. அதை எழுதிய ஜெமோ ஒரு ஊபர்மான். அந்த ஜெமோவாக சாதாரண நிலையில் ஜெமோ தன்னை நினைத்துக்கொண்டால் வருவதுதான் இரவுப்புயலில் வருவதுபோன்ற சோர்வுநிலை
ஜெயசந்திரன், மங்காடு