இனிய ஜெயம்
வியாச பூர்ணிமா அன்று துவங்கி, சைவ சமயக் குரவர்களில் மூவர் பிறந்த இடம், மாணிக்கவாசகர் சிவ பதம் எய்திய சிதம்பரம், சில வைணவத் தலங்கள், சில சமணத் தடம் என தொடர் பயணத்தில் இருக்கிறேன். நண்பர் இதயத்துல்லா உடன் நெடு நாள் கழித்து, (அமெரிக்க நண்பர் வாசகர் விசு திருமணத்துக்கு வந்து விட்டு நீங்களும் நானும் போனோம்) திருநறுஙகுன்றம் அப்பாண்டைநாதர் கோயில் சென்றேன். மாலை 4 மணி. எவருமே அற்ற ஆலயத்தில், ஜீன வாணி முன்பு நெடுநேரம் அமர்ந்திருந்தேன். பாறை வழியே கோயில் விமானம் உச்சி அருகே வரை செல்ல முடியும். அங்கே சென்று அந்தி இருளும் வரை அமர்ந்திருந்தேன். (திருநறுங்கொண்டை )
இத்தகு பயண தினங்களில் ஒன்றான நேற்று, விழுப்புரம் வேட்டைவலம் தாண்டி வலது புறத்தில் ஒரு 5 கிலோமீட்டரில், பாறை ஓவியங்களுக்கு புகழ் பெற்ற செத்தவரைக்கு முன்பாக நாராயணபுரம் எனும் கிராமத்தில் ‘விசித்திரமான‘ ஒன்றைக் கேள்விப்பட்டு அங்கே சென்றோம்.
நாராயணபுரம் ஏரிக்கு அருகே இரண்டாய் உடைந்த பாறைதான் அடையாளம். அதன் பின்புறம் இருக்கும் ஒரு சிறு குன்றில் ஏறினால் உச்சியில் இயற்கையாக அமைந்த வட்டக் குளம் ஒன்று. அதை சுற்றி ஜூராசிக் பார்க் படத்தில் வரும் டைனோசர் கால் தடம் போல அளவில் ,கோழி கால் தடம் வடிவில் பல பத்து தடங்கள். அது எரிமலை குழம்பு உறைந்த பாறை. அதை செதுக்க முடியாது. வெட்டினால் சில்லு சில்லாக மட்டுமே உடையும். இந்த தடங்களோ மிக நேர்த்தியான வடிவில் மெழுகு ஒன்றில் உலோக அச்சு கொண்டு பதித்தது போல இருக்கிறது.
அருணைமலை உச்சியில் ஒற்றைப் பாதத் தடம் உண்டு. இப்போது பார்ப்பது அரிது. காரணம் அதன் மேல்தான் இப்போது அருணைமலை ஜோதி விளக்கு ஏற்றுகிறார்கள். வருடம் முழுக்க அந்த இடம் கரிய கிரீஸ் நிறைந்தது போலவே இருக்கும். சிறிய வழுக்கல் போதும். கைலாயவாசல் வந்து விடும். பெரும்பாலும் அந்த கால் தடம் வரலாற்றுக்கு முன்னரே பல்லாயிரம் ஆண்டு இயற்கை ஓட்டத்தில், எரிமலை குழம்பு பாறை மேல் நிகழ்த்திய ரசாயன மாற்றத்தின் விளைவாக அது தோன்றி இருக்கலாம். இந்தத் தடங்கள் அவையும் கிடையாது. மொத்தத்தில் இப்போதைக்கு விடை தெரியாத மர்மம்தான் இந்த தடங்கள். கிராமத்தினர் அறிவியல்பூர்வமான காரணம் ஒன்றை சொன்னார்கள். அது ரத்தக் காட்டேரியின் கால் தடங்கள். அது காட்டேரிக் குன்று. மிகுந்த திருப்தியான விடையாக அது இருந்தது.
அங்கிருந்து கிளம்பி, வழியில்தானே கீழ்வாலை சென்று நமது முப்பாட்டன்கள் விட்டுச்சென்ற கலையரங்கை சென்று பார்ப்போம் என்று வாகனத்தை திருப்பினோம். சில ஆண்டுகள் முன்னர் ஈரோடு கிருஷ்ணன், ஈஸ்வர மூர்த்தி, ராசுகுட்டி, சக்தி கிருஷ்ணன், யோகேஸ்வரன், மயிலாடுதுறை பிரபு கோஷ்டியுடன் இந்த பகுதியில் சுற்றியது. அதன் பிறகு இப்போதுதான் செல்கிறேன்.
1985 கு பிறகு அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தினமணி கதிரில் எழுதிய கட்டுரை வழியே இந்த கீழ்வாலை பிரபலம் கண்டது. மூன்று பாறை சரிவுகளிலாக சற்றே இடைவெளி கொண்ட மூன்று இடங்களில் உள்ளன ஓவியங்கள். இதில் உள்ள சிந்து சமவெளி நாகரீக முத்திரைகள் சிலவற்றை ஐராவதம் மகாதேவன் ஆய்வு செய்திருக்கிறார். இதன் காலம் கி மு 1000 முதல் துவங்குவதாக ஒரு பொதுவான கணிப்பு.
எப்போதும் இத்தகு இடங்கள் சார்ந்து போர்டுகள் ஏதும் இருக்காது. வரும் ஆட்கள் தேடாமல் எதையும் கண்டடைய முடியாது. உள்ளே செல்ல, சரியான பாதை தேர்வு செய்ய அருகே இருந்த ஆடு மேய்க்கும் பெண்ணை விசாரித்தோம். “எல்லாத்தையும் குடிகார பயலுவோ அழிச்சி புட்டானுங்க. ஒரே ஒரு பாறைல மட்டும் கொஞ்சம் இருக்கும், முள்ளு கிடக்கும் கவனமா போய் பாருங்க” என்று சொல்லி வழி காட்டினார். முன்பு கண்ட எதுவுமே இப்போது அங்கே இல்லை. இரண்டு பாறைகளின் ஓவியங்களை முற்றிலும் இழந்துவிட்டோம். இரண்டு பாறை முழுக்க (முன்பு காணாதது இப்போது கண்டது) உளி கொண்டு வெட்டியும் பெயிண்ட் கொண்டும் எழுதபட்ட யார் யாருடன் உன்னத காதலும் மெய்தோய் இன்பமும் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனும் அரிய தகவல்கள் மட்டுமே வாசிக்கத் கிடைத்தது. உபரியாக நெற்றிக்கு வைக்கும் சிவப்பு சாந்து கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் கொஞ்சம் காணக் கிடைத்தது. மூன்றாவது பாறையில் ஓவியங்கள் ஏதேனும் எஞ்சி இருக்கலாம். போகும் பாதை முழுக்க ஓரத்தில் காடாக வளர்ந்த முட்செடிகள் போக, வெட்டிப்போட்ட கருவை முள்ளடுக்குகள். எனவே அருகே செல்ல முடியவில்லை.
திரும்பும் வழி நெடுக, நெஞ்சின் உள்ளே ஏதும் இல்லாத கூடாக ஆகி விட்டது போல, அடியற்ற பள்ளம் ஒன்றை திடீர் என காண நேரிட்டது போல, ஒரு ஹாஆ ஆ எனும் வெற்று உணர்விலேயே உடலும் மனமும் இருந்தது. இதுதான் நாம். நாம் இவ்விதம்தான் இருக்கிறோம். காக்க வேண்டிய அரசுக்கு வேறு பணிகள், அறிவீனமும் தடித்தனமும் குடியும் மட்டுமே என்றாகிப்போன கிராம். நமக்கு இத்தகு மேன்மைகள் எதையும் பெற்றுக்கொள்ளவோ பேணிக்கொள்ளவோ தெரியாது. காட்டுவாசிகள் நாம். காட்டுவாசிகள் கூட இல்லை. இந்த ஓவியங்களை நமக்கு விட்டு சென்றவர்கள் அவர்கள்தானே. நாய்க்கடி வெறி மூளைக்குள் நிறைத்து வைத்திருப்போர் நாம். நம்மிடம் இவை இருக்கக் கூடாது. இவையெல்லாம் அழிவதுதான் நியாயம்.
கடலூர் சீனு