பவா என்னும் அழகன் – ராஜன் சோமசுந்தரம்

அன்பு ஜெமோ,

நலந்தானே?

2019-ஆம் வருடம் நீங்களும் நானும் மட்டும் காலை உணவுக்காக காத்திருந்தபோது, பவா செல்லத்துரை அவர்களைப் பற்றி பேச்சு வந்தது. அவர் வீட்டில் எப்போதும் பலர் கூடி உண்பதும் அதன் வழியாக எத்தனை பேர் வாழ்வில் நம்பிக்கை துளிர்த்திருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஒருநாள் தான் மட்டும் தனியாக உணவருந்தும் நிலை ஏற்பட்ட போது பவா சினந்து, வெளியே ஒரு உணவகத்துக்கு சென்று அங்கே பலருக்கு நடுவில் அமர்ந்து உணவருந்தியதாக சொன்னபோது உதடுகள் துடித்து கண்ணீர் சிந்தினீர்கள். அறம் சிறுகதை மனிதர்களின் உலகத்தை சேர்ந்தவர் பவா என்றீர்கள்.  

பவாஷைலஜா இணையர் இங்கே வீட்டுக்கு வந்து தங்கி, மூன்று நாட்கள் உடன் பயணித்த நாட்களில் அதே உணர்வை நான் அடைந்தேன். எதிலிருந்து விடுதலை அடைந்து இப்படி எடையற்ற சிறகு போல இருக்கிறார் இவர் என்று தோன்றியது. குரல் மட்டுமல்ல, உடல் மொழியே அழகு.  எல்லா மனிதர்கள் மேலும் பேரன்பும் பெரும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். அந்த விடுதலையில் இருந்து வருகிறதா அந்த கம்பீரமும் அழகும்

ஒரு பதட்டமும் ஏற்பட்டது. யார் அழைத்தாலும் செல்கிறார். எதைக் கேட்டாலும் சரி என்கிறார். பொதுவாக இங்கே வரும் புகழ்பெற்ற மனிதர்களைதங்களின் வியாபார முன்னெடுப்புக்கு ‘சாமர்த்தியமாகபயன்படுத்திக் கொள்ளும் சிலரின் நடவடிக்கைகளை முன்பே  பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்கள் பவாவை சூழ்ந்தபோது, இவர் மக்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர்கள் சிதைத்து விடுவார்களோ என்கிற அச்சம் வந்தது. ஆனால் நடந்ததோ வேறு. பவா அம்மக்கள் மேல் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும், அவர்களிடம் இருந்த உன்னதமான பண்புகளை வெளிக்கொணர்ந்ததை நேரில் கண்டேன்

உரையாடல்கள் எல்லாம் சாதாரணமாகத்தான் சென்றுகொண்டிருந்தன.  ஏதோ ஒரு கணத்தில் அவர்கள் இருவரிடமும் இருக்கும் தன்னலமின்மையும், அன்பும் நம்மைத் தாக்குகின்றன. அதன்பிறகு மனம் தளும்பிக்கொண்டே இருக்கிறது. நண்பர்கள் முத்து காளிமுத்து, மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ், விசு மகாலிங்கம், சார்லட் பிரகாசம் அனைவருமே அதே உணர்வெழுச்சியில் இருந்தார்கள்.      

மூன்றே நாட்கள் தான்ஆனால் பவா என்னும் அழகனின் உடனிருந்து  பயணித்த அற்புதமான நாட்கள்!

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம் 

முந்தைய கட்டுரைஅர்ஜுனனும் துரோணரும், கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியக் கணவர்கள், கடிதம்