அணி (புதிய சிறுகதை)

சுந்தரலிங்கம் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர், ஆகவே அவர் தனியறையில் மடத்தின் முறைமைகளைப் பேணுவதில்லை. கதவை மிகமெல்ல பதமாகச் சாத்திவிட்டு மெல்லிய காலடிகளுடன் அருகே வந்தார். அவர் வந்ததே தெரியவில்லை. கனகசபாபதி அவரை பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் சுந்தரலிங்கம் வருவது ஒரு நிழலசைவுபோல நிகழ்வதாகப் பட்டது. முற்றிலும் ஓசையே இல்லை.

திருப்பனந்தாள் மடத்தின் தொன்மையான கட்டிடத்தை மதுரை அரசர் அச்சுதப்ப ராயரின் தளபதி கட்டி கொடையளித்து இருநூறாண்டுகள் ஆகிவிட்டன. பல்லாயிரம் முறை திறந்தும் மூடியும் கதவுகளின் வெண்கலக் கீல்கள் அச்சம்கொண்ட உதடுகள் போல மென்மையாக ஆகிவிட்டன. பல்லாயிரம் பேர் பணிந்து, உடல் குனித்து வாய்பொத்திப் பேசி, கால்பொத்தி நடந்து, அந்தக் கட்டிடமே ஓசையற்றதாக ஆகிவிட்டது, ஒருவர் கடும் வலியாலோ, அச்சத்தாலோ கதறிக்கூவினால்கூட அங்கே ஓசையெழாதென்று தோன்றியது. அங்கே எந்த வசையை கூவினாலும் நமச்சிவாயம் என்றுதான் அச்சுவர்கள் எதிரொலிக்கும் போலும்.

சுந்தரலிங்கம் அருகே வந்து திண்ணையில் அமர்ந்தார். கனகசபாபதி கையில் இருந்த ஏட்டுச்சுவடியை கட்டி அருகே வைத்துவிட்டு அவரை வெறுமே பார்த்தார். மூடிய அறை என்றாலும் சுந்தரலிங்கம் ஒருமுறை எச்சரிக்கையுடன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டார். பின்னர் மெல்ல “ஒடுக்குவழியா வாறேன்” என்றார்.

“ம்?” என்றார் கனகசபாபதி.

”என்னத்தச் சொல்ல? நான் உங்காளுன்னு இங்க எல்லாருக்குமே தெரியும். என்னையப் பாத்தாலே ஒவ்வொரு கண்ணிலேயும் ஒரு அதிர்ச்சி. என்னமோ பேய்பிசாசைக் கண்டது மாதிரி வெலகிக்கிறானுங்க… சிவஞானத் தம்புரானை இப்ப கொஞ்ச முன்னாடி பாத்தேன். பீயக்கண்ட மாதிரி ஒரு முகம் காட்டுதாரு… நாம என்ன பொல்லாப்புக்கு நின்னோம்? நாம உண்டு, நம்ம தளிகைவேலை உண்டுண்ணு இருக்கோம்… நமக்கு எதுக்கு பெரிய எடத்து பொல்லாப்பு? இது ராசசபை… நாம எச்சிபொறுக்கி வாழுற கூட்டம்… என்ன நான் சொல்லுறது?”

“சொல்லும்” என்றார் கனகசபாபதி.

“கண்டிகையை சாமி எடுத்திருக்கும்னு இப்ப பேச்சு”

“நானா?” என்றார் கனகசபாபதி. அவருக்கு உடல் படபடக்கத் தொடங்கியது. அதை அவர் எதிர்பார்க்கவில்லை. “நான் எடுத்தேன்னா சொல்றாங்க?”

“அப்டீன்னு பெரியதம்புரானுக்கு தளிகை பண்ணுற சாமிக்கண்ணு சொன்னான்… காதிலே விளுந்தது… உங்கள கூப்பிட்டு வெசாரிக்கணும்னு பேசிக்கிட்டிருக்காங்க” என்றார் சுந்தரலிங்கம்.

“அவன் ஏதாவது எசகுமசகா கேட்டிருப்பான்… அதெல்லாம் சொல்ல மாட்டாங்க”

“எல்லாமே சொல்லுவாங்க கனகு… உனக்கு தெரியாது. இந்த எடம் வேற மாதிரி. மேலே இருக்கிறவங்க சாமியாருங்க. சாமியாரை அண்டி வாழுறவன் பொறுக்கியாத்தான் இருப்பான்… அது மடமானாலும் சரி நடுத்தெருவானாலும் சரி… நீ சூதானமா இருந்துக்கோ.”

“சூதானமா எப்டி இருக்கணும்?” கனகசபாபதி சிரித்தார். “நான் எதை திருட்டாந்தம் காட்டணும்? என்கிட்ட இருக்கிறது மூணு காவி வேட்டி, மூணு கோவணம், ஒரு கப்பரை… அதை வேணுமானா பாத்துக்கிடட்டும்… தங்கக் கண்டிகைய வைச்சு நான் என்ன செய்யப்போறேன்?”

“தங்கம்தானே? எங்க குடுத்தாலும் காசு… உன்னைய மடத்த விட்டு நீக்குறது முடிவாப்போச்சு. போறப்ப கையிலே காசு இருக்கணும்னு நீ எடுத்திருக்கலாம்னு நெனைக்கிறாங்க”

“மடத்தனம்” என்று மட்டும் கனக சபாபதி சொன்னார். தன்னைப்பற்றி அப்படி நினைக்கக்கூடும் என்பதே அவருக்கு திகைப்பாக இருந்தது.

“நீ சூதானமா இருந்துக்க” என்று சுந்தரலிங்கம் மீண்டும் சொன்னார். “பண்டார சன்னிதியோட கண்டிகையை எடுத்தவனுக அவரைச்சுத்தி கால்கை புடிச்சு அலையுற நாலுபேரும்தான்… இந்நேரம் அதை சீரணம் பண்ணியிருப்பானுக. சரியான நேரம்னு இதை உன்மேலே போட்டுட்டானுக”

“நான் சிவனை நம்பி இருக்கேன்” என்றார் கனக சபாபதி “சிவன் என்கூட இருக்காரு”

“அதெல்லாம் சொல்லிக்கேக்க கதையிலே நல்லாத்தான் இருக்கும். எத்தனையோ பேரு அநியாயமா அழிஞ்சிருக்கானுக. சிவன் வந்து சூலமும் மழுவுமா துணைக்கு நின்னாரா?”

“என்னப்பன் வருவான்”

“கனகு, நான் சொல்லுறத கேளு… பேசாம போயி பண்டார சன்னிதி காலிலே விழுந்து கண்ணீரோட ஒரு நாலு வார்த்தை சொல்லு… அவரு எதிர்பார்க்கிறது அதை மட்டும்தான்.”

“நான் ஒண்ணும் தப்பு சொல்லலியே”

“ஒரு தப்பும் சொல்லலே… ஆனாலும் பழி வந்தா அந்த கறை போகாது பாத்துக்கோ.”

“என்னப்பன் பாத்துக்கட்டும்”

“கனகு நீ மடத்தனமா…”

“அன்பும் தியாகமும் பக்தியும் ஒரு வகையிலே மடத்தனம்தான்…”

சுந்தரலிங்கம் சிலகணங்களுக்கு பின் “சரி, நான் வாறேன்… என்னைய தேடுவாங்க” என்று வெளியே சென்றார்.

கனகசபாபதி மீண்டும் சுவடியை எடுத்தார். அதில் கண் ஓடியதே ஒழிய மனம் படியவில்லை. அப்படியே வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டார். இயல்பாக உடனே பட்டினத்தார் பாடல் மனதில் ஓடியது.

எரி எனக்கென்னும் புழுவோ எனக்கென்னும் இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரி எனக்கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?

நாலைந்து நாட்களாகவே அது மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. வாசிக்கும் எல்லா சுவடிகளிலும் அது மட்டுமே எழுதப்பட்டிருப்பதுபோல. பெருமூச்சுடன் எழுந்து சென்று சிறிய சாளரத்தை திறந்து வெளியே தெரிந்த தோட்டத்தில் நின்ற வில்வமரத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

கதவு மெல்ல திறந்து மீனாட்சிசுந்தரத் தம்புரான் உள்ளே வந்தார். அவரைத்தான் கனகசபாபதி எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய நெஞ்சு துடிக்கத் தொடங்கியது. இதை நான் அஞ்சுகிறேனா? ஏன் என் மனம் இத்தனை வேகம் கொள்கிறது? இது அச்சமில்லை, வேறொன்று. இது எனக்கான உச்சம். ஒவ்வொருவரும் அவர் நம்பும் சொற்களை குருதியால் அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. சொற்களில் உறையும் தெய்வங்கள் பலிகோருபவை. இது அத்தருணம்.

மீனாட்சிசுந்தரத் தம்புரான் “பாத்துப் பேசிட்டு வாடான்னு பெரிய சன்னிதானம் உத்தரவு” என்றார்.

“வாங்க” என்றார் கனகசபாபதி “சிரமப்பரிகாரம் பண்ணவேணும்.”

மீனாட்சிசுந்தரத் தம்புரான் சிறிய மரப்பீடத்தில் அமர்ந்தார். “நமச்சிவாயம்” என்று நீள்மூச்சு விட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். இங்கே மடத்தில் எவரானாலும் பேசுவதற்கு முன்பு சுற்றும் பார்க்கிறார்கள் என்பதை அப்போதுதான் தனியாகக் கவனித்தார் கனகசபாபதி.

“வர்ரதுக்கு முன்னாடி உங்க சாதகத்தை ஒருவாட்டி பாத்தேன் சாமி… அதைத்தான் முதல்ல சொல்லவேணும்னு நினைச்சேன்” என்றார் மீனாட்சிசுந்தரத் தம்புரான். “ஆனாக்க சாமிக்கு சாதகம் சோதிடம் நம்பிக்கையில்லேன்னு தெரியும்.”

“பண்டாரத்துக்கு ஏது பிறப்பு? எதவச்சு சாதகம்?… பிள்ளையாப் பிறந்து குடும்பியாச் செத்து பண்டாரமாப் பிறந்துதானே நம்ம பிழைப்பு… எந்த நட்சத்திரம் பாத்தீங்க? கனகசபாபதி பிள்ளைக்கா இல்லை அவன் செத்து பிறந்த முத்துக்குமாரசாமி தம்பிரானுக்கா?” என்றார் கனகசபாபதி “எது நட்சத்திரம், எது கோள்நிலை? நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும்னு சொல்லியிருக்காகள்லா?”

“நாம சாத்திரம் படிச்சவன் இல்ல… நம்ம ஞானம் வேற…“ என்றார் மீனாட்சிசுந்தரத் தம்புரான். “நான் சொல்லவேண்டியத சொல்லிடுதேன்.”

“சொல்லுங்க”

“மரணயோகம் இருக்கு… ரொம்ப நீசமா இருக்கு…”

“நமச்சிவாயம்”

“அதுவும் இந்த சட்டி முடியறதுக்குள்ள”

“நமச்சிவாயம்”

“அதோட சேத்து மத்ததச் சொல்லுதேன்” என்றார் மீனாட்சிசுந்தரத் தம்புரான் “என்னன்னா, போன வாரம் பெரிய சன்னிதானத்தோட மகரகண்டிகை காணாமப்போச்சுல்லா?“

“ஆமா”

“அது அவரோட குருபீடமான திருவாவடுதுறை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ சுப்ரமணிய மகாதேசிகர் அருளிக் குடுத்தது. அவரோட ஆசியும் ஞானமும் அந்த கண்டிகைதான்னு பெரியசன்னிதானம் சொல்லுதாரு… அதிலே ஏழு வைரம் இருக்கு… ஏழும் கண்ணீர்ச்சொட்டு மாதிரி தெளிஞ்ச சுத்தசத்வ ரத்தினங்கள்… இன்னிக்கு தேதிக்கும் அதோட மதிப்பு ஆயிரம் வராகனுக்குமேலே இருக்கும்.”

“மதிப்பு நாம போடுறதுதானே?”

“ஆமா… அப்பேற்பட்ட கண்டிகை. அதை யாரு எடுத்தாங்கன்னு நல்லா வெசாரிச்சாச்சு… ஒரு பிடியும் இல்லை. இப்ப ஒரு சந்தேகம்.”

“சொல்லுங்க”

“அதை கெளப்பினவரு மேலெழுத்துப்பிள்ளை நமச்சிவாயம்… அப்றம் காறுபாறு ஆலாலசுந்தரம்… அவங்க ரெண்டுபேரும் ஒண்ணு… தெரியும்ல?”

“நமச்சிவாயம் “

“அதாகப்பட்டது, நகை காணாமப்போனது போன ஆடி மாசம் அம்மாவாசைக்கு பக்கத்திலே… ஆனி ,ஆடி ,ஆவணி மூணுமாசமும் பெரியசன்னிதானத்துக்கு திருவடிசேவை பண்ணினது நீங்க…“

“இல்லியே, மத்த கட்டளைத்தம்புரானுகளும் இருந்தாங்களே”

“நீங்க இருந்திருக்கீங்க. மத்தவங்களை விசாரிச்சாச்சு… உங்களை விசாரிக்கணும்னு தீர்மானம்”

“நான் எப்டி நிரூபிக்கணும்?”

“அது எனக்கெப்டி தெரியும்? அதை நீங்க பேசிக்கிடுங்க… சொல்லி கூட்டிட்டு வான்னு எனக்கு உத்தரவு”

“நமச்சிவாயம்”

“இப்பவே கெளம்பினா பெரிய சன்னிதானத்த பாத்திரலாம்”

“நமச்சிவாயம்” என்றார் கனகசபாபதி “நமக்கென்ன, நாளும் பொழுதும் நமக்கில்லை.”

“சாமி, நான் நேரடியாச் சொல்லிடுதேன்… அங்க பிரச்சினை கண்டிகை இல்ல. கண்டிகை காணாமப்போனது உண்மை. அதை நீங்க எடுக்கலேன்னு தெரியாத ஆளில்லை. அதை வைச்சு உங்கள வெசாரிக்கிறதுக்கு காரணம் உங்களுக்கே தெரியும்”

“சொல்லுங்க”

“சாமி ஏதோ பண்டாரப்பாட்ட சித்தாந்த வகுப்பிலே சொன்னீகளாம்”

“ஆமா, பட்டினத்தார் பாட்டு”

“அவரு யாரு? அப்பேற்பட்ட சைவஞானம் கொண்ட ஆளா அவரு?”

“திருவெண்காட்டிலே பிறந்தவர். சிவனை நேர்நின்னு கண்டவர்… காவேரிப்பட்டினத்திலே வணிகம் செஞ்சவர்.”

“சொல்லிட்டீங்க, அப்ப நம்மாளில்ல. செட்டியாரு… அவரு எப்டி சிவன பாக்க முடியும்?”

கனக சபாபதி புன்னகைத்தார்.

“செரி, அந்தப் பாட்டுக்கு என்ன பொருள்?”

“என்னை எரிக்கப்போற தீ என்னோடதுன்னு சொல்லுது . என் உடம்ப திங்கப்போற புழு என்னோடதுங்குது. என் உடல் மக்கப்போற மண்ணும் என் சடலத்தை திங்கிற பருந்தும் நரியும் நாயும் என்னோடதுங்குது. அப்பேர்க்கொத்த இந்த நாத்தமடிக்கும் உடம்பயா பிரியமா வளத்தேன்? இதனாலே எனக்கென்ன லாபம் இங்கே? இது நான் குடுக்குற அர்த்தம்…. வேறமாதிரியும் பொருள் இருக்கு.”

“ஓ, அந்தளவுக்கு பழுத்திட்டானா அந்தச் செட்டி? உடம்புக்கு சீக்கு வந்தா என்ன செய்வானாம்? வலிச்சா என்ன செய்வானாம்? சரி, மூணுவேளை எரிக்குதே உதரத்தீ, அதுக்கு என்ன செய்வானாம்? சிவனை அள்ளி திம்பானோ?”

“நமச்சிவாயம்” என்றார்.

“சரி, நான் ஒண்ணும் சொல்லலை… நமக்கென்ன? நமக்கு சோறில்லாம சிவம் இல்ல” என்றார் மீனாட்சிசுந்தரத் தம்புரான் “அந்த பாட்டை வகுப்பிலே சொன்னப்ப பண்டார சன்னிதி பத்தி என்ன சொன்னீங்க?”

“நான் யாரப்பத்தியும் சொல்லலியே”

“நகையும் பட்டுமா அலங்கரிச்சு வைக்கிறது நாய் நரியின் உணவை. கனகாசனத்திலே அமர்ந்திருக்கிறது கழுகனோட தீனி. எண்ணி எண்ணி பேசுற கொள்கையெல்லாம் எரி எடுக்கிற குப்பை- அப்டீன்னு சொன்னீங்க… இதே வார்த்தைய சொன்னீங்க.”

“ஆமா, அதான் சித்தாந்தம்.”

“இங்க, இந்த மடத்திலே பட்டுலே காவி கட்டுறது, தங்க நகை போடுறது, கனகாசனத்திலே உக்காந்திருக்கிறது ஒருத்தர் மட்டும்தான்.”

“நான் யாரையும் சொல்லலே”

“அவரு அப்டி நினைச்சுக்கிடலாமே?”

“அதுக்கு நான் என்ன பண்றது?”

“அதான் இப்ப இந்தப் பழியா வெளைஞ்சிருக்கு… சபையிலே நிக்கவைச்சிருக்கு”

“சிவன் துணை”

“போனதுமே அப்டியே விளுந்து கும்பிடுங்க… அபராதம் பொறுக்கவேணும்னு ஒரு வார்த்தை சொல்லுங்க.”

“இல்ல, சொல்ல மாட்டேன். சொன்னா நான் சித்தாந்தத்த மறுத்தவனாவேன். சித்தாந்தம் பொய் இல்ல”

“சரி, அப்ப வாங்க”

கனக சபாபதி எழுந்தார்.

“ஆடை திருத்தணுமானா…”

“வேண்டாம். நான் என்ன அரச சபைக்கா போறேன்?”

இடைநாழி வழியாக நடக்கையில் மீனாட்சிசுந்தரத் தம்புரான் மீண்டும் “ஒரு வார்த்தை போரும்…” என்றார்.

“ஒரு வார்த்தையிலே சிவனை மறுத்திடலாம். சித்தாந்தம் பொய்னு சொல்லிடலாம்.”

“நான் இதுக்குமேலே சொல்றதுக்கில்லை”

அவர்கள் பெரிய சன்னிதானந்த்தின் சிற்றறையை அடைந்தபோது அங்கே நின்றிருந்த லிங்கேசன் அருகே வந்து “சாமி, உங்கள அங்க மருத்துவக்கொட்டில் பக்கமா போகச் சொன்னாங்க… பெரிய சன்னிதானம் அங்க இருக்கு” என்றார்.

“மருத்துவக் கொட்டிலிலேயா? அங்க எதுக்கு?” என்றார் மீனாட்சிசுந்தரத் தம்புரான்.

“அங்க வில்வாதிதைலம் காய்ச்ச மேல்கோட்டை வைத்தியரும் கூட்டமும் வந்திருக்காங்கள்ல? சன்னிதானம் மணம் பாத்து சொல்லணும்னு ஒரு சாத்திரம் உண்டே”

“சரிதான்” என்றபின் மீனாட்சிசுந்தரத் தம்புரான் கனக சபாபதியிடம் “அங்க போயி சன்னிதானம் இருக்கிறதுலே ஒரு கணக்கு இருக்கு. அந்த காறுபாறு போட்ட திட்டமா இருக்கும்” என்றார். “இங்கே விசாரிச்சா நாலு பண்டாரம் காதுக்கும் கண்ணுக்கும்தான் செய்தி போகும். அங்கே கொட்டிலிலே எப்டியும் நாப்பதம்பது பேரு இருப்பான். எல்லாம் வெளியாளுங்க. அங்க வைச்சு பேசினா ஒரே நாளிலே சோளநாடு முழுக்க பேரு நாறிடும்… அதெல்லாம் காறுபாறு பிள்ளைவாளுக்கு சொல்லிக்குடுக்க வேண்டியதில்லை. அவன் ஆளு ஒரு எமன்”

“நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்”

“எல்லாம் மனப்பாடமா படிச்சு வைச்சிருக்கீங்க” என்றார் மீனாட்சிசுந்தரத் தம்புரான் “எனக்கு பயம் இதான். உங்க ராசிக்குச் சாவு பலன் இருக்கு… சமாதி பலன் இல்லை, சாவுதான் …”

“நமச்சிவாயம்”

கொட்டிலில் நிறையபேர் இருந்தனர். பெரிய பித்தளை வார்ப்புருளியில் பச்சிலைச்சாறுடன் நெய் கொதித்து முறுகிக்கொண்டிருந்தது. அதன் புகை எழுவதன் மறுபக்கம் உயரமான நாற்காலியில் பெரிய சடாமகுடத்துடன் பெரிய சன்னிதானம் அமர்ந்திருந்தது. இருபக்கமும் இரண்டு கட்டளைத்தம்புரான்கள் நின்றிருந்தனர். மேல்கோட்டை வைத்தியர் நாகரத்தினம் பிள்ளை குனிந்து வாய்பொத்தி ஏதோ சொன்னபடி நின்றிருந்தார். ஆவியின் அலைக்கு அப்பால் சன்னிதானம் திரைச்சீலை ஓவியம்போல அலைபாய்ந்தார்.

கனக சபாபதி வருவதை அங்கிருந்தவர் அனைவரும் பார்த்தாலும் எவரும் அவரை பார்த்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. அவர் அங்கே வருவார் என எல்லா பண்டாரங்களும் அறிந்திருந்தனர். வைத்தியர்களும் விறகடுப்பை எரியவைத்த வேலையாட்களும் பெரிய ஆர்வமில்லாமல் அவரை பார்த்தனர்.

மீனாட்சிசுந்தரத் தம்புரான் முன்னால் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து கையால் வாய்பொத்தி கனக சபாபதி வந்திருப்பதை பெரிய சன்னிதானத்திடம் சொன்னார். உடனே கனக சபாபதி முன்னால் சென்று முறைப்படி வணங்கினார்.

பெரிய சன்னிதானம் அவரை தன் களைத்துப்போன கண்களால் பார்த்தார். களைப்பு அவர் கண்களில் எப்போதும் இருந்தது. அது சொற்களின் களைப்பு என கனக சபாபதி எண்ணிக்கொள்வதுண்டு. எத்தனை நூல்கள், எத்தனை செய்யுட்கள், எத்தனை கொள்கைகள், எவ்வளவு விளக்கங்கள்.

“நமச்சிவாயம்” என்றார் பெரிய சன்னிதானம் “என்ன முத்துக்குமராசாமி, உன்மேலே பிராது வந்திருக்கே?”

“அருளவேணும்…”

“கண்டிகை களவுபோனது உனக்கு தெரியும்… அதோட மதிப்பும் தெரிஞ்சிருக்கும்.”

“நமச்சிவாயம்”

“நீ எடுத்திருக்க மாட்டேன்னு நான் சொன்னேன். இல்லே கேட்டிரலாம்னு இவுக சொல்றாங்க.”

காறுபாறு குனிந்து “எங்களுக்கும் தெரியும், சாமி அதுக்கெல்லாம் அப்பாலேன்னு. ஆனா ஊருலகம் நாக்கச் சுழட்டி பேசிடப்பிடாதுல்ல? அதனாலே…” என்றார்.

“என்ன செய்யணும்?” என்று கனக சபாபதி கேட்டார்.

“நீ எடுக்கலேன்னு தெரியும்…ஆனா இவனுக சொல்லிக்கிட்டே இருக்கானுக. எல்லார்ட்டயும் கேட்டீகளே அவருகிட்டேயும் கேக்கலாமேன்னு.”

“நான் என்ன திருஷ்டாந்தம் காட்டணும்?”

“எடுத்திருந்தா எடுத்தேன்னு ஒரு வார்த்தை சொன்னாப்போதும். கண்டிகைய நீங்களே வைச்சுக்கிடலாம். அப்டியே விட்டுடலாம்னு பெரிய சாமியோட அபிப்பிராயம்” என்றார் காறுபாறு.

“நான் எடுக்கலே… எடுக்கலேன்னு எப்டி நிரூபிக்கணும்?”

“அதுக்கு நம்ம சம்பிரதாயத்திலெ ஒரு வளக்கம் உண்டு… கொதிக்கிற நெய்யிலே கைய விட்டுட்டு மூணுவாட்டி நமச்சுவாயம் நமச்சிவாயம் நமச்சிவாயம்னு சொல்லணும்”

சுற்றி நின்ற கட்டளைத் தம்புரான்களின் உடலில் ஒரு சிறு விதிர்ப்பு உருவானது.

திருவெழுத்துப்பிள்ளை “அவருதான் எரி எனக்குன்னு பாடுற பண்டாரமாச்சே” என்றார்.

பெரிய சன்னிதானம் கையமர்த்தி “முத்து, நீ எடுத்தேன்னு சொல்லவேண்டாம்… நான் உனக்கொரு வைரம் வைச்ச பதக்கச் சங்கிலி தாறேன்… அதை நீ இங்க இத்தனைபேர் நடுவிலே களுத்திலே போட்டுக்கிடணும்… அதை எப்பவும் கழட்டப்பிடாது. சரின்னா சொல்லு. இப்பவே வாங்கிக்கோ”

கனகசபாபதி அவரையே இமைக்காமல் பார்த்தார் . பிறகு “நான் நெய்யிலே கைவிடுறேன்” என்றார்.

“டேய், பிக்காளிப்பயலே. கை கூழாயிடும்டா” என்றார் பெரிய சன்னிதானம். அவர் கண்களில் இருந்த சிரிப்பு அகன்றுவிட்டது.

“ஆகும்… கூழங்கைன்னே பேரு வைச்சுக்கிடுறேன். கூழங்கை தான் என்னோட ஆபரணம்.”

“அறிவுகெட்டவனே, புராணத்தைப் படிச்சு வீணாப்போகாதே…“ என்றார் பெரிய சன்னிதானம்.

“நமச்சிவாயம்” என்றார் கனக சபாபதி.

“அதெல்லாம் சொல்லலாம்… நெய்யிலே நினைப்பறிஞ்சு கைவிட ஏலுமா?” என்றார் பெரிய எழுத்துப்பிள்ளை.

“நமச்சிவாயம்” என்றபடி கைகூப்பி நெய்கொதிக்கும் வார்ப்புருளியை நோக்கிச் சென்றார் கனகசபாபதி.

“டேய், சொன்னாக்கேளு” என்று பெரிய சன்னிதானம் நடுங்கும் குரலில் அழைத்தார்.

நெய்யருகே சென்று நின்ற கனக சபாபதி உரக்க “நமச்சிவாயம், நமச்சிவாயம், நமச்சிவாயம்” என்று கூவினார். அருகே நின்றவர்கள் திகைத்து விலகினர். கொப்புளமிட்டுக்கொண்டிருந்த நெய்யில் அவர் தன் வலக்கையை முக்கினார்.

கூட்டத்திலிருந்து அலறல்களும் விக்கல்களும் முனகல்களும் கேட்டன. நாலைந்துபேர் மயங்கி விழுந்தனர். சிலர் பாய்ந்து முன்னால்வர மற்றவர்கள் பிடித்துக்கொண்டனர்

கனக சபாபதி எங்கிருக்கிறோம் என்பதையே உணரவில்லை. வலியோ துடிப்போ அவரில் எழவில்லை. நமச்சிவாயம் நமச்சிவாயம் நமச்சிவாயம் என சொன்னபடி நெய்யிலேயே கையை வைத்திருந்தார். அவர் உடலில் ஒரு வலிப்பு ஏற்பட்டது. அப்படியே பக்கவாட்டில் சரிந்து மண்ணில் விழுந்தார். அவரை நோக்கி அங்கிருந்த அனைவரும் ஓடினர்.

(உயிர்மை இதழ். ஆகஸ்ட் 2023)

முந்தைய கட்டுரைபோகன் சங்கர்
அடுத்த கட்டுரைநீலக்கண்கள் – இசாக் டினேசன்