மணிப்பூர்

அன்புள்ள ஜெ

ஆகஸ் 2016ல் தினமலர் நாளிதழில் நீங்கள் எழுதிய ஜனநாயகச் சோதனைச் சாலையில் என்னும் கட்டுரையில் இதை வாசித்தேன்

ஐரோம் ஷர்மிளா, மீய்ட்டி என்ற பழங்குடி இனத்தை சார்ந்தவர். மொத்த மணிப்புரி நிலமும், மீய்ட்டிகளின் நாடாக மாற வேண்டும் என்று அவ்வினம் சொல்கிறது. அதன்பொருட்டு ஐம்பதுகள் முதல் தொடர்ச்சியாக அங்கே பழங்குடி கலவரங்கள் நடந்து பல்லாயிரம் பேர் இறந்துள்ளனர்.’

மணிப்பூர் என்று தேடியபோது அகப்பட்ட கட்டுரை. ஆச்சரியமாக இருக்கிறது. இந்த யதார்த்தம் ஏன் இதுவரை தமிழில் எழுதப்படவே இல்லை?

அரசன் குமார்

அன்புள்ள அரசன்,

மணிப்பூர் பற்றி இப்போது எழுதிக் குவிக்கப்படுகிறது. தொடர்ந்து நடந்துவரும் கலவரங்கள், அண்மையில் வெளியான ஒரு காணொளித்துணுக்கு ஆகியவையே நம் ஊடகங்களை, சமூக வலைத்தள உலாவிகளை மணிப்பூர் பற்றிப் பேசவைக்கின்றன.

உடனடியான எதிர்வினைகளை தவிர்க்கவேண்டும் என்றே நான் எப்போதும் சொல்லி வருகிறேன். உள்ளே சென்று விரிவாக எழுதப்படும் கட்டுரைகளுக்காக காத்திருப்பதே பொதுவாசகர்கள் செய்யவேண்டியது.

இன்று வன்முறைகளுக்கு எதிராக உயர்ந்து வந்த குரல்கள், கண்டனங்கள் வரவேற்புக்குரியவை. அவை தேசத்தின் குரலாகத் திரள்கின்றன. அரசியல் லாபநோக்குடன் செயலற்றிருக்கும் மோடியின் மைய அரசை சற்றேனும் அசைப்பவை அவை மட்டுமே.

ஆனால் ஊடகங்கள் உருவாக்கும் ஒற்றைப்படையான கருத்தை, அதையொட்டி உருவாக்கப்படும் மிகையுணர்ச்சிகளின் அரசியலை சிந்திக்கும் ஒருவர் கவனமாகவே கையளமுடியும்.

நான் மணிப்பூர் பற்றி எழுதியவை வாசித்தறிந்தவை அல்ல. நேரில் சிலமுறை சென்று கண்டு, விவாதித்து எழுதியவை. தமிழகத்தில் அப்படி நேரில் சென்று கண்டு எழுதிய இன்னொருவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. என் நேரடி அறிதலின் பின்னணியிலேயே கன்னிநிலம் நாவலை எழுதினேன்.

இன்று நிகழும் சித்திரத்தை மிக விரிவாக 2016 முதல் இந்த தளத்தில் எழுதியுள்ளேன். கன்னிநிலம் ஒரு திரில்லர் வகை நாவல். பொதுவாசிப்புக்குரியது. அதிலும் எழுதியுள்ளேன். அது ஒன்றும் அசாதாரணமான அரசியலறிவு அல்ல. நேரில் சென்று பார்த்தால், மணிப்பூரிகளிடம் கொஞ்சம் உரையாடினால் எவருக்கும் தெரிவதுதான். பல கட்டுரைகள் எழுதியுள்ளேன் (ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி, ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1)

இன்று கலவரம் செய்யும் இதே மீய்ட்டி இனக்குழுவினர் பல காலமாக இந்திய அரசின் மேலாதிக்கத்துக்கு எதிராக போராடி வந்தனர். மணிப்பூரை மீய்ட்டிகளுக்கு விட்டுவிட்டு ராணுவம் உடனே வெளியேறவேண்டும் என்று கோரினர். மணிப்பூர் ராணுவச்சட்டங்களுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடத்தினர். ஐரோம் ஷர்மிளா நடத்திய போராட்டம் அதற்காகவே.

அந்தப் போராட்டத்தை மாபெரும் காந்தியப் போர் என ஊடகங்கள் வர்ணித்தன. அவரை இரும்புப் பெண்மணி என கொண்டாடின. தமிழில் மட்டும் மீய்ட்டிகளின் போராட்டத்தை, ஐரோம் ஷர்மிளாவை புகழ்ந்து பன்னிரண்டு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. என் வீட்டிலேயே நான்கு நூல்கள் உள்ளன.

இருபதாண்டுகளாக நான் வெவ்வேறு இடங்களில் எழுதியிருக்கிறேன். மணிப்பூரை மீய்ட்டிகளிடம் ஒப்படைத்தால் குக்கிகள், நாகாக்களின்,அங்கமிக்களின் கதி என்ன என்று. என்னை இந்திய தேசிய வெறியன், ராணுவ ஆதரவாளன் என இதே சமூகஊடக முதிரா அரசியல்கும்பல் வசைபாடியது. என் இணையதளத்திலேயே பார்க்கலாம்.

ஊடகங்கள் ஐம்பதாண்டுகளாக நமக்களித்த சித்திரம் என்ன? ‘மணிப்பூர் மக்கள் ஒற்றுமையாக, ஒரே தேசியமாக இந்திய பெருந்தேசியத்தை எதிர்க்கிறார்கள்; ஆகவே அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்’ – இதுதான் இல்லையா? அது உண்மை அல்ல. அங்கே ஐம்பதாண்டுகளாக மீய்ட்டிகளும் குக்கிகளும் அங்கமிக்களும் இனக்குழுப்போரில் உள்ளனர். பல கொடிய கலவரங்களும் அழிவுகளும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. ஐம்பதாண்டுகளில் தோராயமாக ஒருலட்சம் பேர் இனக்குழுக் கலவரங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

பழங்குடிகளின் அரசியலே வேறுபட்டது. குக்கிகள் குக்கிலேன்ட் என்னும் தனிநாடு கோருகிறார்கள். நாகாலாண்ட் என்னும் தனிநாடு கோருபவர்களும் அதே நிலத்தைத்தான் கோருகிறார்கள். அங்கமிகள் கோருவதும் அதே நிலத்தைத்தான். எந்த இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவுடன் இணைந்து வாழ தயாராக இல்லை. ராணுவம் விலக்கப்படும் இடங்களில் உடனே வெடிப்பது இனக்குழுக் கலவரம். ஐம்பதாண்டுகளாக இதுதான் அங்குள்ள உண்மையான சூழல்.

இதை எப்படிக் கையாள்வது? அந்தந்த இனக்குழுக்களை அமரச்செய்து, பேச வைத்து ஒரு பொது அரசு அமைப்பை ஏற்கச்செய்யவேண்டும். ஆனால் எந்த இனக்குழுவுக்கும் பொதுவாக ஏற்கப்பட்ட தலைமை இல்லை. பலநூறு சிறு ஆயுதக்குழுக்களே அங்குள்ளன. குழுக்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. சில குழுக்கள் இந்தியா மியான்மார் இருநாடுகளிலும் பரவிக்கிடக்கின்றன. அவை தங்களுக்குள் போரிட்டபடியே உள்ளன. குழுக்களுக்குள்ளும் தலைமைப்போர் நிகழ்கிறது.

இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஒரு நிலப்பகுதியில் ஒரு சாதி கூடுதலாக இருக்கும். அவர்கள் அங்கே தனிநாடோ மேலாதிக்கமோ கோரினால் ஏற்க முடியுமா? சிறுபான்மையினரின் உரிமையை எவர் பாதுகாப்பது? பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தை மட்டுமே நம்ப முடியுமா? அதுவும் மீய்ட்டிகள் போல மூடிய இனக்குழுவின் கோரிக்கைகளை எப்படி நம்ப முடியும்? ஒரு ஜனநாயகப்புரிதல் உருவாகவேண்டும். ஆனால் அது ஆயுதங்கள் இருப்பது வரை நிகழாது.

ஆகவே சுதந்திரம் கிடைத்த காலம் முதல் இந்திய அரசு அத்தனை பிரச்சினைகளுக்கும் மீதாக, தீயின்மேல் கம்பிளியை போடுவதுபோல, ராணுவத்தை விரித்து அப்படியே பொத்தி மூடி வைத்துள்ளது. அது பிரச்சினைகளைத் தீர்ப்பது அல்ல, ஒத்திப்போடுவதுதான். ராணுவம் எதுவாக இருந்தாலும் அது வன்முறை கொண்டது, அடக்குமுறைத் தன்மை கொண்டது. ராணுவத்திற்கு எல்லாருமே கலவரக்காரர்கள்தான். எல்லாரையுமே அது இணையாக ஒடுக்கும்.

நான் ராணுவம் சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுவது அடிப்படையான ஜனநாயகத்துக்கு எதிரானது என நம்புபவன். எல்லா ராணுவமும் ஒன்றே. புரட்சிராணுவமும் ஆதிக்கராணுவமும் மக்கள்மேல் வன்முறை செலுத்துவனதான். ஆனால் இனக்குழுப்போர்களை ராணுவம் கொண்டு நிறுத்திவைப்பதே எந்த அரசும் செய்யக்கூடிய ஒரே செயல்.

வடகிழக்கின் பிற பகுதிகளில் அரைநூற்றாண்டுக்கால ராணுவ ஆட்சியால் இனக்குழு வன்முறை தடுக்கப்பட்டு பிரச்சினை ஒத்திப்போடப்பட்டது. இன்று அம்மக்கள் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வுக்கலாச்சாரம் வழியாகவும், கல்வி வழியாகவும், இந்தியாவெங்கும் வந்து வேலைசெய்வது வழியாகவும் இன்றைய பொதுப் பண்பாட்டுக்கு வந்துள்ளனர். அங்கே இனக்குழுக்கள் நடுவே புரிதலும் அதன் விளைவான அமைதியும் உருவாகிடுள்ளன என்பது வரலாறு. அஸாம், மேகாலயா , திரிபுரா போன்றவை உதாரணம். மணிப்பூரும் பெருமளவு மாறியே வந்தது. இன்று பாரதிய ஜனதாவின் அரசியலால் அது மீண்டும் கொளுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேசியத்தை எதிர்த்துவந்த மீய்ட்டிகள் இன்று பாரதிய ஜனதா ஆதரவாளர்கள். மாநிலத்தின் அரசதிகாரம் அவர்கள் கையில். காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் மீய்ட்டிகளே ஆட்சி செய்தனர். ஆனால் பழங்குடிச்சட்டங்கள் காரணமாக குக்கிகளின் நிலங்கள் மேல் மணிப்பூர் அரசின் நேரடி அதிகாரம் இல்லை. அங்கே பழங்குடிச் சபைகளே ஆட்சி செய்கின்றன. மீய்ட்டிகளும் பழங்குடிகளாக ஏற்கப்பட்டால் மணிப்பூரின் முழுநிலமும் மீய்ட்டிகளின் ஆதிக்கத்தின் கீழே வரும். அதை குக்கிகள் எதிர்க்கிறார்கள்.

மணிப்பூரில் சென்ற பத்தாண்டுகளில் படிப்படியாக ராணுவ ஆதிக்கம் குறைக்கப்பட்டு சட்டநிர்வாகம் போலீஸ் துறைக்கு அளிக்கப்பட்டது. போலீஸ் மீய்ட்டிகள் மட்டுமேயான ஓர் அமைப்பு. அது மீய்ட்டிகளின் ஆயுதக்குழுவாக செயல்படுகிறது என குற்றம் சாட்டப்படுகிறது.

பாரதிய ஜனதா அங்கே மீய்ட்டிகளின் கட்சியாக உள்ளது. ஆகவே மீய்ட்டிகளின் வன்முறையை அது கட்டுப்படுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அதுவும் மீய்ட்டிச் சார்புநிலையையே எடுக்கும். ஏனென்றால் மாநிலப்பெரும்பான்மை மீய்ட்டிகளுக்குரியது.

ராணுவ ஆட்சியை மறுபடி கொண்டுவந்து மீய்ட்டிகளை ராணுவம் ஒடுக்க முடியும். ஐந்தே நாளில் அமைதி வரும். ஆனால் மீய்ட்டிகள் தங்களை ராணுவம் ஒடுக்குவதாக கூச்சலிடுவார்கள். மீண்டும் ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். மீய்ட்டிலேண்ட் கோரிக்கை எழும். அப்போது நம் ஊடகங்கள் மீய்ட்டிகளுக்கு ஆதரவாக, ராணுவத்துக்கு எதிராக எழுதுவார்கள். மீய்ட்டிகளை தேசியப்போராளிகளாக சித்தரிப்பார்கள். இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது.

பாரதீய ஜனதா அரசு குறைந்தபட்ச தேசியப்பார்வை கொண்டிருந்தால்கூட அது மீய்ட்டி மக்களை நோக்கிப் பேசியிருக்கும். அவர்களை அடிப்படை ஜனநாயகத்தை நோக்கி கொண்டுவர முயன்றிருக்கும். அதைச்செய்ய அங்கும் மத்தியிலும் பண்பட்ட அரசியல்வாதி என எவருமில்லை. குறைந்தபட்சம் இனக்குழு அடிப்படை கொண்ட மாநிலக் காவல்துறையை விலகச்செய்துவிட்டு ராணுவத்திடம் மாநிலத்தை தற்காலிகமாகக் கையளிக்கும் அரசியல் நடைமுறைப்புத்திகூட தென்படவில்லை.

ஊடகங்கள் எந்த புரிதலுமில்லாமல் ஓர் ஒற்றைப்படை வேகத்தை உருவாக்கிவிட்டு உடனே அடுத்ததற்குச் சென்றுவிடுவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் அரசியலை கண்டடைந்து கூச்சலிடுவார்கள்.இப்படி ஒரு மனசாட்சியை உலுக்கும் நிகழ்வின் போது கூட தங்கள் சொந்த சுயலாப அரசியல், சொந்த தனிநபர் விரோதங்களுக்கு மட்டும் அதை பயன்படுத்திக்கொள்பவர்களே நம்மைச் சூழ்ந்து உள்ளனர். அவர்களுக்கும் அங்கே பெண்ணை கொடுமை செய்தவர்களுக்கும் வேறுபாடில்லை.

இத்தருணத்தில் எவர் கூசாமல் உண்மையின்பால் நிற்கிறார்கள், எவர் அரசியலுக்கு அப்பாற்ப்ட்டவர்கள் என்பது மட்டுமே ஏதேனும் வகையில் தீர்வை நோக்கிச் செலுத்தும். அதுவரை பிரச்சினை அப்படியே நீடிக்கும். இதைத்தான் ஐம்பதாண்டுகளாகக் கண்டுவருகிறோம்.

ஜெ

கன்னிநிலம் ஜெயமோகன் வாங்க

கன்னிநிலம் மின்னூல் வாங்க 

கன்னி நிலம் – மதிப்புரை 

முந்தைய கட்டுரைதாண்டவராய முதலியார்
அடுத்த கட்டுரைதுளிமலர்கள் – பூபதி துரைசாமி