இரவுப்புயல்

பெரும்புயலடித்த இரவுக்குப் பின் காலை அசாதாரணமான அமைதியுடன் திகழ்கிறது. உடைந்த மரக்கிளைகள், சுவரோரம் ஒண்டிக்குவிந்த சருகுகள், சிதைந்த பறவைக்கூடுகள், சலித்து ஓய்ந்த மரங்கள் எல்லாமே அந்த அமைதியில் மூழ்கி நின்றிருக்கின்றன. அமைதிக்குள் ஒலிக்கும் கேளாப்பேரோசை போலப் பயங்கரம் வேறில்லை.

நேற்றிரவு ஓர் அகப்புயல். அவ்வப்போது அது நிகழ்வதுண்டு. கலைஞர்கள் அனைவருக்கும் உரியது அது. செயலூக்கம் கொண்டவர்கள், தங்கள் உச்ச விசையை வெளிப்படுத்தும் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது உள்ளம் அவ்வாறு தன்னை பின்னிழுத்துச் சுருட்டிக்கொள்வதுண்டு. ஒரு நரம்புச்சிக்கல் என்றே சொல்லத்தக்க சோர்வு.

ஆனால் நான் அதில் திளைப்பதில்லை. அதை ஒரு கலைசார் மனநிலையாக இனிமைப்படுத்திக் கொள்வதில்லை. அதன்மேலெந்த கற்பனாவாதத்தையும் ஏற்றிக்கொள்வதில்லை. இசை அந்த மனநிலையை மிகமிக எளிதாக பெருகி வானளாவச் செய்யும் ஆற்றல் கொண்டது. ஆகவே நான் ஊக்கமாக இருந்தாலொழிய கடந்தகால ஏக்கம் நிறைந்த இசையை அணுகவிடுவதில்லை.

ஏனென்றால் அது ஒரு இருள்நிலை என்றே அறிவேன். என் உச்சவிசைகொண்டு அதை உதறிவிடுவேன். இருண்ட அறையில் நான்குபக்கமும் மூடிய சுவர்களில் முட்டி ஏதோ ஒரு வாசலை திறந்துவிடுவேன். ஏனென்றால் நான் ஆண்டுக்கணக்கில் நீளும் உளச்சோர்வின் இருட்டின் எடையை நன்கறிந்தவன். எனக்கான ஒளியை கொளுத்திக்கொண்டவன்.

ஆனால் அவ்வப்போது வந்து சுழற்றிச்செல்லும் இந்த புயலை ஒன்றும் செய்யமுடியாது. நேற்று பெருந்தேவி அருண்மொழிநங்கையின் நூலுக்கு எழுதிய முன்னுரையை (நமக்கிங்கே தொழில் காதல் செய்தல்- பெருந்தேவி) படித்ததும் அது உருவானது. அது வெளியான பின்னரே நான் அதை முதல்முறையாக வாசிக்கிறேன். பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. கணிப்பொறியை அணைத்துவிட்டு படுக்கச் சென்றேன். பத்துநிமிடம் தூக்கம். உள்ளம் விழித்துக்கொண்டது. புயல் முழங்கியபடி அருகே வந்தது.

இழந்தவை குறித்த ஏக்கம்தான். இழந்துகொண்டே இருப்பதையே வாழ்க்கை என்கிறோம். இனியவை அகன்று செல்வதென்பது வாழ்வின் நெறி. இளமை, கனவுகள், வந்துகொண்டே இருக்கும் காலமென்னும் முடிவிலா வாய்ப்புகள். ஒரு கணத்தில் அவை எல்லாம் இன்றில்லை இனியில்லை என்றாகி, சென்றவை என உருக்கொண்டு, நின்றவை மட்டுமே எஞ்ச, வெற்றுச் சொற்களெனச் சுருங்கிவிடுகின்றன.

எழுந்து வந்து அமர்ந்தேன். நூற்றி முப்பத்தாறு சிறுகதைகளில் எஞ்சியவை படையல் என்னும் நூலாக வெளிவருகின்றன. நாயக்கர் காலக் கதைகள். புதியதாக எழுதிய மங்கம்மாள் சாலை என்னும் குறுநாவலுடன். அந்த பதிவை வெறுமே வாசித்தேன். எல்லா தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டு உள்ளம் வெந்துச் சுருண்டு துடிக்கத் தொடங்கியது.

நூற்றுமுப்பத்தாறு கதைகள். நாளுக்கொன்றாக. ஒவ்வொரு கதையும் ஓர் உலகம். ஒன்றிலிருந்து ஒன்றுக்கென நகர்ந்துகொண்டே இருந்தேன். ஒருநாளில் பல உலகங்களில் வாழ்ந்தேன். எப்படி எழுதினேன். இனி எழுத முடியுமா என்னால்? முடியாது என்றே அப்போது தோன்றியது. கற்பனையிலேயே வாழும் உள்ளம் என்னுடையது. முகில்களாலான அகம். அத்தனை முகில்களும் பாறைகளாகி அமைந்துவிட்டிருக்கின்றன.

இனி முடியாது. இனி அந்த உச்சநாட்கள் அமையவே போவதில்லை. இனி அதற்கு முயன்றால் கேலிக்குரியவனாவேன். என்னை நானே சிறுமைப்படுத்திக் கொள்வேன். எண்ணி எண்ணி இரங்கி சலித்து அமர்ந்திருந்தேன். என் மூளை சுட்டுப் பழுத்து உருகிய உலோகமென செங்குழம்பாக இருந்தது. கண்களில் நனைவுடன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது.

எவருடனும் பகிரமுடியாது. எவரும் உடனமர முடியாது. பிறர் நம்முடன் உரையாடல் வழியாகவே வந்தமர முடியும். உரையாடலென்பதே தர்க்கத்தாலானது. சற்றேனும் தர்க்கம் இருந்தாகவேண்டும் அதற்கு. நம் கொந்தளிப்பின் உளைசேற்றுப் பரப்பில் ஒரு காலூன்றவாவது நிலம் உலர்ந்திருக்கவேண்டும். இந்த நிலையில் முற்றிலும் வாயுவாலான மாபெரும் கோள் போன்றிருக்கிறேன். பிரம்மாண்டமானது. ஆனால் எதையும் தாங்காதது. ஒரு கூழங்கல்லின் எடையைக்கூட, ஒவ்வொன்றும் மூழ்கும் வெளி அதன் நிலம். ஒவ்வொன்றும் அதன் மிகைவெப்ப மையம் நோக்கி சுழன்றிறங்குகின்றன.

நூற்று முப்பத்தாறு கதைகள். அவ்வளவுதான் எழுதுவதற்கு உள்ளதா? முடிந்து விட்டதா? பருவம் முடிந்தபின் புளியமரத்தை அறுதியாக உலுக்கி புளியம்பழம் சேர்ப்பார்கள். இனி பருவங்களில்லை. இனி இந்த மரம் கிளைகுறுகி கோடையும் குளிரும் ஒன்றென்றாகி, அடிமரம் தடித்து வெறுமே நின்றிருக்கும். இதன் உயிரிழக்கும் பட்டைகளில் கரையான் மண்பூசித் தழுவிமேலேறும். மண்ணுக்குள் இதையுண்ணும் பலகோடி பெரும்பசிகள் முட்டைகளிலிருந்து எழுந்து நுரையெனப் பெருகிக்கொண்டிருக்கின்றன.

இல்லை, இது வெறும் தன்னிரக்கம். தன்னையே சாட்டையாலடித்துக் கொள்ளாதோர் எவர்? நான் அதன்பின்னரும் நாவல்கள் எழுதியிருக்கிறேன். குமரித்துறைவி, அந்த முகில் இந்த முகில், கதாநாயகி. காதல்கதைகள் எழுதியிருக்கிறேன்.  இன்னும் எழுத முடியும். ஆனால் ஆக்ரோஷமாக அதை மறுத்தது உள்ளம். அந்த உத்வேகமான காதல்கடிதங்களை எழுதியவன் இன்றில்லை. அவனுடைய இறுதி உத்வேகம் அந்த நூற்று முப்பத்தாறு கதைகள். அன்று மூளையை அதிரச்செய்த மின்சார வெள்ளத்தை இனி அடையப்போவதே இல்லை. இனி அது நிகழவே போவதில்லை. அதை நானன்றி எவரும் புரிந்துகொள்ளப் போவதே இல்லை. அந்த மின்வெள்ளத்தை. இந்த நினைவுப்பெருவெறுமையை.

இனி உயிர்வாழவேண்டியதில்லை. இந்தக் கைகள் பயனற்றவை. இவ்விரல்களை வெறுமே விசைப்பலகை மேல் வைத்தாலே கதைபெருகும் என நான் தருக்கியிருந்தேன். இவை பொருளிழந்துள்ளன. இவற்றை இனி தோள்நுனியெனச் சூடிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. வெறும் தசையெலும்புத் துண்டங்கள். இந்த மின்பொருத்தில் கைகளை செருகிக்கொள்ளவேண்டும். இவற்றை பொசுக்கி அழித்துவிடவேண்டும். இக்கைகளுக்கு இனி நான் பொறுப்பில்லை. செயலற்ற அடையாளங்களாக இனி இவை நீடிக்கவேண்டியதில்லை.

எழுந்து சென்று மின்பொருத்தின் அருகே நின்றிருந்தேன். ஒரு கணத்தில் அப்படி நின்றிருப்பதன் அபத்தத்தை நானே உணர்ந்தேன். விரல்கள் என்ன செய்யும்? அவை அடிமைகள். இந்த மூளை. இதை என்ன செய்வது. என் வரமும் சாபமுமான இது. நான் என் தலைச்சம்புடத்திற்குள் சுமந்து திரியும் இந்த வெண்கூழ். நொதித்து நுரைக்கிறது. குமிழிகள் வெடிக்கின்றன. ஆவி கொந்தளிக்கிறது. ஒன்றே செய்வதற்குள்ளது. உயரமான ஓரிடத்தில் இருந்து இதை வீசவேண்டும். ஆழத்தில் இது உடைந்து சிதறவேண்டும். இதை ஆட்டுவித்த தெய்வங்கள் முன் சிதறுதேங்காயென இதை படைக்கவேண்டும்.

அக்கொந்தளிப்பு அளித்த களைப்பாலேயே மூளை அடங்கலாயிற்று. பின்னிரவில் படுத்து காலையில் எழுந்தேன். இந்த அமைதி அச்சுறுத்துகிறது. முந்தையநாள் போதையின் களைப்புக்கு எஞ்சிய மதுவை ஊற்றிக்கொள்வதுபோல அவ்விரவை எழுதிவிடவேண்டும். எழுதப்படும்போது பேய்கள் ஆணிகளில் அறையப்படுகின்றன. தெய்வங்கள் தங்கள் பீடங்களில் அமர்கின்றன. சொற்களைப்போன்று வாழ்க்கையை பகடி செய்வன பிறிதில்லை. ஓர் எளிய மந்திரம் புயலோசைக்கு நிகராக நம்முள் நின்றிருக்கலும் ஆகும்.

புனைவுக்களியாட்டு சிறுகதைகள் வாங்க
குமரித்துறைவி வாங்க
வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க
பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
வாசிப்பின் வழிகள் வாங்க
ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க
ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க
தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க
அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க
எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க
முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க
இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க
மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க
நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க
மைத்ரி நாவல் வாங்க
ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க
இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க
சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க
வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க
ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க
கதாநாயகி ஆன்லைனில் வாங்க
ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க
அனல் காற்று ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க
ஞானி ஆன்லைனில் வாங்க
நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க
விசும்பு ஆன்லைனில் வாங்க
வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
முந்தைய கட்டுரைதேவதேவன்
அடுத்த கட்டுரைவெல்லவேண்டிய அநீதி