ரமணி குளம் -கடிதம்

கே ஜே அசோக்குமார்

ரமணி குளம் வாங்க

இனிய ஜெயன்,

வணக்கம்.

தங்கள் இணைய பக்கம் மூலம் அறிந்த கே.ஜே.அஷோக்குமாரின் முதல் நாவல் ரமணிகுளம்.

அவர் தன் முன்னுரையில் முதல் நாவலை எழுத் தொடங்கியபோது பழக்கப்படாத கைகள் முதலில் இசைக்கருவியைத் தொடுவது போல இருந்தது என்கிறார். அந்த Freshness நாவலை நடத்திச் செல்கிறது.

வாசிக்கும் போது நீங்கள் உங்களின் நாவல் கோட்பாட்டில் எழுதிய

“நாவல் தரக்கூடாத ஏதாவது ஓர் உணர்வு இருக்குமெனில் அது கச்சிதத் தன்மை மட்டுமேயாகும். எவ்வகையில் அது முடிவின்மையை, பிரம்மாண்டத்தை தன் வடிவம் மூலம் காட்டுகிறது? அதன் ஒவ்வொரு இணைப்பிலும் உள்ள முடிவற்ற சாத்தியங்களை வெளிக்காட்டுவதன் மூலம்தான். எனவே ஒரு நாவல் எங்கும் தொடங்காது. எங்கும் முடியவும் முடியாது. அதன் தொடக்கத்துக்கு  முன்னும், முடிவுக்குப் பின்னும் முடிவின்மை உள்ளது.இதன் மூலம் உருவாகும் பிரமிப்பு நாவலின் அடிப்படை இயல்பாகும்.”

இந்த ஒவ்வொரு வரிகளையும்  ரமணிகுளம் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது.

ஒரு காடு அழிக்கப்பட்டு விளைநிலமாகி, பின் விளைநிலம் வீட்டு மனையாக மாறி, பின் வீட்டுமனை அடுக்கக கட்டிடமாக மாறி பின் அதுவும் அழிக்கப்பட்டு பிறிதொரு உருவமெடுப்பதினூடே ரமணிகுளம் என அழைக்கப்பட்ட குளம் மரித்துப் போய் பின் இறுதியில் சில இளைஞர்களால் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவதற்கான சாத்தியங்களுடன் நாவல் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

நீரில் அலையும் பிம்பம் போல் அசோகமித்திரன் முகம் அவ்வப்போது தென்படுவது ஆசிரியரின் பிரக்ஞையிலிருந்து வந்ததன்று.

நகுலனின் பூனைகள் போன்று இதில் நாய்கள் வந்துகொண்டேயிருக்கின்றன எவ்வித குறியீடுகளையும் அழுத்திச் சொல்லாமல். இந்த அடங்கிய தொனியே இந்நாவலை மேல் தளத்திற்கு கொண்டு செல்கிறது.

நிலத்தின் அழிவுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் ராமமூர்த்தி போன்றவர்களாலும், நிலத்திற்காகத் தீயிட்டு தன்னை ஆகுதியாக்கிக் கொள்ளும் மனோகரிகளாலும் இந்த நிலம் என்றுமிருக்கும் என்பதே இந்நாவலின் Under current message.

சமீபத்தில் ரசித்ததை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும், இதற்கான வாய்ப்புகள் தங்கள் தளத்தில் மாட்டுமே சாத்தியப்படுவதாலும் இக்கடிதம்.

அன்புடன்,

சந்தானகிருஷ்ணன். தஞ்சை.

முந்தைய கட்டுரைவெல்லவேண்டிய அநீதி
அடுத்த கட்டுரைதூரனின் இசை, செந்தில் ஜெகன்னாதன்