பழைய வரலாறும் புதிய வினாக்களும்

பின்தொடரும் நிழலின் குரல் வாங்க

பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெ

பின் தொடரும் நிழலின் குரலை வாசித்து முடித்தேன். அதிலுள்ள பெரும்பாலான செய்திகள் எனக்குப் புதியவை. நான் ஸ்டாலின் என்ற பெயரை மட்டுமே கேட்டிருக்கிறேன். சோவியத் ருஷ்யாவுக்கு உலகப்போரில் பெரிய வெற்றியை ஈட்டியளித்தவர் என்று மட்டும்தான் தெரியும். இந்நாவலில்தான் அவருடைய சர்வாதிகாரத்தின் முழுவடிவையும் தெரிந்துகொண்டேன். ஒரு கொள்கை எப்படி மொத்த சமூகத்தையும் அடிமையாக்கமுடியும் என்ற விஷயம் திகைப்பை ஊட்டியது.

நாவல் அளித்த பெரிய அவநம்பிக்கையைச் சொல்லித்தானாகவேண்டும். இடதுசாரிகளின் அறவுணர்ச்சி பற்றி ஒரு நம்பிக்கை இருந்தது. அது உடைந்தது. அந்த இடத்தில் மிகப்பெரிய வெற்றிடம் வந்துவிட்டது. அந்த உடைப்பை நிகழ்த்தவேண்டும் என நீங்கள் எண்ணினீர்களா?

இடதுசாரிகளின் ஆதிக்கப்பார்வையையும் அது உருவாக்கிய அழிவையும் பேசிய நீங்கள் உலக அளவில் வைக்கும் மாற்றுத்திட்டம்தான் என்ன?

அரவிந்தன் மகாலிங்கம்

அன்புள்ள அரவிந்தன்,

பின் தொடரும் நிழலின் குரலை எழுதியபோது அடுத்த ஐம்பதாண்டுகள் உலகமே பேசப்போகும் ஓர் அடிப்படைப்பிரச்சினையை எழுதுவதாக எண்ணியிருந்தேன். அரசியல் தற்காலிகமானது, வரலாறு ஓடி மறைவது, வரலாற்று ஆளுமைகள் வெறும் காலக்குமிழிகள், இலக்கியம் என்றுமிருப்பது என்று என் கண்கூடாகவே உணர்ந்தது இன்று பின் தொடரும் நிழலின் குரலை இளைஞர்கள் வாசிப்பதிலுள்ள இடர்களைக் கண்டபோதுதான். அவர்களுக்கு அந்நாவல் ஏதோ தொலைதூர வரலாற்றில் இருந்த ஒரு சிக்கலைப்பேசும் படைப்பாக தோன்றுகிறது. நூறாண்டுக்காலம் உலகை ஆட்டிப்படைத்த பெருங்கனவு ஒன்றின் சரிவைப்பற்றியது அந்நாவல் என நானே சொல்லிக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. இடதுசாரிகளுக்கே இன்று சோவியத் ருஷ்ய வரலாறெல்லாம் தெரியாது.

ஆனால் இப்படி கொஞ்சம் பின்னகர்ந்துவிட்ட ஒரு வரலாற்றை முன்வைத்தே நாம் அடிப்படைப்பிரச்சினைகளைப் பேசமுடியும். சமகால வரலாற்றைக்கொண்டு அடிப்படைகளைப் பேசமுடியாது. சமகாலப்பிரச்சினைகள் இன்னமும் கலங்கி தெளியாதவை. அலைகொண்டபடி இருப்பவை. அவற்றை நம்மால் முழுமையாகப் பார்க்க முடியாது. எல்லா தரவுகளும் வெளிப்படையாக நமக்குக் கிடைக்காது. பழங்கால வரலாறு அவ்வாறல்ல. இன்று சோவியத் ருஷ்யாவின் ஆவணங்கள் எல்லாமே வெளிப்படையாகக் கிடைக்கின்ற. 1992 க்கு முன்பு எழுதியிருந்தால் எல்லா தரவுகளையும் ஏகாதிபத்தியச் சதி என ஒரே வார்த்தையில் முடித்திருப்பார்கள்.

அப்படி வெளிப்படையாக உள்ள வரலாற்றைக்கொண்டே நாம் அரசியல், சமூகம், ஆன்மிகம் சார்ந்த சிலவற்றை விவாதிக்கமுடியும். பின் தொடரும் நிழலின் குரல் பேசுவது கம்யூனிசம் பற்றி மட்டும் அல்ல. அரசியலைப் பற்றி கூட அல்ல. அது சிந்தனையிலுள்ள சில சிக்கல்களை, மானுட ஆன்மிகத்தின் அடிப்படையான சில திரைகளையே விவாதிக்கிறது. நம்மை தர்க்கபூர்வமாக நிறைவு செய்யும் ஒன்று எப்படி உண்மை என நமக்கு தோன்றுகிறது? நம் தர்க்கம்தான் இந்த உலகத்தின் ஆதார விதி என எப்படி நாம் முடிவு செய்கிறோம்? ஓர் உண்மை நமக்கு உகந்தது என்றால் அதைச்சுற்றி மற்ற அனைத்தையும் எப்படி புனைந்துகொள்கிறோம்? நாம் ஏற்றுக்கொண்ட ஒன்றை உலகம் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என ஏன் எண்ணுகிறோம்? ஏன் அதன்பொருட்டு சாகிறோம், கொல்கிறோம்? கருத்துக்களை விட கொடிய ஆயுதம் வேறொன்று உண்டா?

பின் தொடரும் நிழலின் குரல் கருத்தியலின் வன்முறையை பேசுவது. எல்லா கருத்தியலும்தான். வலதுசாரி இடதுசாரி கருத்தியல்கள் அனைத்தும்தான். அவை நம் சிந்தனையை கான்கிரீட் ஆக உறையச் செய்கின்றன. மூளைக்குள் கான்கிரீட் கட்டிகளுடன் நம்மைச் சுற்றி எத்தனை ஆயிரம்பேர். அவர்களின் சொல்வன்முறைகள் எவ்வளவு! அவை நேர் வன்முறைகளாக ஆக ஒரு சில கணங்கள் போதும். அதை வரலாறு காட்டுகிறது. அரசுகளல்ல, ராணுவமல்ல, படைக்கலங்கள் அல்ல கருத்தியல்களே கொடிய அடக்குமுறை அமைப்புகள், இரக்கமற்ற கொலை இயந்திரங்கள். அது ஃபாஸிசமாக இருந்தாலும் சரி, கம்யூனிஸமாக இருந்தாலும் சரி. மொழி, மதம், இனம், நாடு என எந்த வகையான மையம் கொண்டதாயினும் சரி.

பின் தொடரும் நிழலின் குரல் கருத்தியலின் அந்த அழிவை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது. சென்றகாலத்தில் ‘நல்ல கருத்தியல் ‘கெட்ட கருத்தியல்’ என சிந்தனை செய்து பழகிவிட்டோம். அது உருவாக்கிய அழிவுகளை அந்நாவல் சுட்டிக்காட்டுகிறது. எல்லா கருத்தியல்களுமே அபாயகரமானவையே. நல்லவை என நாம் நம்புவனவற்றை சொல்கிறோம், அவ்வளவுதான். கருத்தியல்களால் அல்லாமல், விழுமியங்களால் வாழ்க்கை முடிவுசெய்யப்படும் ஒரு காலத்துக்கான கனவு அந்நாவலில் உள்ளது. கிறிஸ்து அந்நாவலில் தோன்றி சொல்வது அதையே

ஜெ

முந்தைய கட்டுரைச.பவானந்தம் பிள்ளை
அடுத்த கட்டுரைமணிப்பூரின் உணர்வுகள்- கடிதம்