பின்தொடரும் நிழலின் குரல் வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
இனிய ஜெயம்
தூரன் விருதுவிழா முடிந்து காரில் கடலூர் திரும்பும் வழியில், அதிகாலை பிரம்ம முகூர்த்த தருணத்தில் சிவாத்மா தனக்கு வந்திருந்த கத்தார் இயற்கை எய்திய சேதியை பகிர்ந்து கொண்டார்.
“போச்சா… bjp கு மற்றும் ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு நடந்து போச்சா” என்று கேட்டேன்.
“சிவ சிவா இதென்ன அபாண்டம் ” என்று கூவி காதுகளை பொத்திக் கொண்டார் சிவாத்மா.
கத்தார் தனது இரண்டாம் பகுதி வாழ்வை இடதுசாரி பக்கத்திலிருந்து, (இடதுசாரிகள், தலித்துகளுக்கு அவர்கள் சமூக நீதி பெறும் பொருட்டு என்னனென்னவெல்லாம் “செய்தார்கள்” என்று நேரில் கண்ட வகையில் அதிலிருந்து) வெளியேறி அம்பேத்கார் வழியே தனது பாதையை அமைத்துக் கொள்ள முயன்றார். அதிலிருந்தும் விலகி கோயில் கோயிலாக கிருஷ்ணா ராமா என்று திரிந்தார். Bjp இல் கூட சேர்ந்து விடுகிறேன், என் மேல் உள்ள வழக்குகளில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று கேட்க அமித்ஷா ஜீ ஐ சந்தித்தார். நல்ல வேளையாக அமித்ஷா ஜி மனது வைத்ததால், இன்று டோலர்கள் செவ்வணக்கம் போட ஒரு தலை எஞ்சியது.
இவரைப் போலவே கத்தாரின் இரண்டாம் பாதி வாழ்நாள் நிலவரம் தெரியாத இளைய தலைமுறை நோக்கி ஜிந்தாபாத் கோஷ்டி இந்த நாளின் அஞ்சலி கோஷங்கள் வழியே கத்தார் மேல் அவர் கழற்றி போட்ட சிவப்பு துணியை மீண்டும் அவர் மேலேயே வலுக்கட்டாயமாக போர்த்தி வருங்கால வியாபார நோக்கில் புதிய கதையை புனைய முயலுகிறார்கள்.
எனக்கு பின் தொடரும் நிழலின் குரல் நாவலே மீண்டும் நினைவில் எழுந்தது. அதில் தான் பெற்ற வீரப் பதக்கத்தை வைத்திருக்கவும் முடியாமல், விட்டு எறியவும் வகையறியாமல் தவிக்கும் கூர்கா வீரன் போலத்தான் தனது இரண்டாம் பாதி வாழ்வில் கத்தார் தனது உடலில் எஞ்சிய துப்பாக்கி குண்டை சுமந்து திரிந்தார். அதில் எல்லா கனவும் காலாவதி ஆன வாழ்வின் இறுதி தினங்களில் கிருஷ்ண பக்தியில் சென்று அமையும் தோழர் கதாபாத்திரம் போலவே கத்தாரும் இறுதி நாட்களில் மாறிப்போனார்.
ஒரு வகையில் கத்தார் மேன்மையானவர். சொந்த சாதியை பேணிக்கொண்டு, வெளிநாட்டில் முதலாளித்துவ வாழ்வு வழியே வயிறு வளர்த்துக் கொண்டு, அறிவை மட்டும் இடத்துசாரி கொள்கைக்கு வாடகைக்கு விடும் இன்றைய முக நூல் அட்டைப்பூச்சிகள், குடும்பத்தை அமெரிக்காவில் செட்டில் செய்து விட்டு, காலமெல்லாம் போட்டிருக்கும் கிழிந்த சட்டையை சிவப்பு துண்டால் போர்த்திக்கொண்டு ‘எளிய’ வாழ்வை வாழும் மூத்த இடதுசாரி அரசியல்வாதிகள் இந்த இரண்டு வகை பொய்மைகள் போலன்றி, (வேறு வழி இல்லாததால்) தான் எப்போது என்னவாக இருக்கிறோமோ, அதை அவ்வாறே ஒளிவு மறைவு இன்றி முன் வைத்து வாழ்ந்து முடிந்தவர் கத்தார்.
இன்று அவர் எனக்கு பின் தொடரும் நிழலின் குரல் நாவல் பேசும் கதாபாத்திரங்களில் ஒன்று. ஜெயகாந்தன் சொல்வார், ஒரு நிலத்தின் , மொழியின் மக்களின், நிகர் வாழ்வின், உரைகல் இலக்கியம் என்பார். காலங்கள் கடந்தாலும் அந்த சொல்லுக்கு நேர் நின்று பின் தொடரும் நிழலின் குரல் நாவல் தனது ஒளியை பெருகிக்கொண்டே செல்கிறது.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு
நான் கத்தரை ஒருமுறை பார்த்துள்ளேன். தர்மபுரியில். ஒரு பத்து நிமிடம். பேசியதில்லை. அப்போதே அவருடைய எல்லைகளை உணர்ந்தேன். அவர் பெரும் நம்பிக்கையுடனும் கனவுடனும் இடதுசாரி இயக்கத்தில் இணைந்தவர். அக்கருத்துக்களை ஒட்டிச் சிந்திக்க ஆரம்பித்தவர். ஆனால் மிக விரைவிலேயே அவர் அந்தக் கனவின் நடைமுறை எல்லையை உணர்ந்தார். அவருக்கு எல்லா நம்பிக்கைகளும் விரைவிலேயே அகன்றுவிட்டிருந்தன என அன்று கண்டேன்.
ஆனால் அவர் ஒரு வேடத்தை புனைந்துவிட்டார். அதை நடித்தேயாகவேண்டிய நிலை. அதிலிருந்து வெளியேறினால் அழிவு என்னும் நிலை அன்றிருந்தது. அன்று அவருடனிருந்தவர்களும் அந்த நாடகத்தை மிகைநடிப்புடன் தொடர்ந்தனர். அவர் ஒரு ‘நாடோடிப் புரட்சிப் பாடகர்’ . இவர்கள் ’களப்பணி செய்யும் புரட்சியாளர்கள்’. கண்ணீர் மல்கல்,புல்லரிப்பு. ஆனால் அந்நடிப்பு ஒரு மோசடி அல்ல. அதில் ஓர் அப்பாவித்தனம் இருந்தது. ஒருவகையான தற்பாவனை அது. அந்நடிப்பில் அவர்களே அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அது ஒரு ரகசிய வருகை. அன்று அவர் மிகுந்த நம்பிக்கையை தன் பேச்சில் காட்டினார். உணர்ச்சிகரமாகக் கொப்பளித்துக்கொண்டே இருந்தார். ‘நொறுக்கி விடுவோம்’ ‘மக்கள் இருக்கிறார்கள்’ ‘எல்லாம் நெருங்கி வருகிறது’ ‘தீ பரவுகிறது!” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் அவருக்கு இணையாக புல்லரித்துக் கொண்டே இருந்தனர்.
ஆனால் அன்று 28 வயதே ஆகியிருந்தாலும் நான் படைப்பாளி. என் கூரிய பார்வைக்கு அவருடைய அகம் தெரிந்துகொண்டே இருந்தது. அவருடைய மிகைநடிப்பே அவநம்பிக்கையை கடப்பதற்கான உத்தி என அறிந்திருந்தது. அதை அன்று பிறரிடம் சொன்னேன். அவர்கள் என்னை அடிக்கவே வந்துவிட்டனர். தூசும் மாசும் படியாத ஒரு நெருப்புக் கனலை நான் குறைசொல்வதாகச் சொன்னார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆனார்கள். பலர் அதிலிருந்தும் விலகி அதிமுக, திமுக என சென்றனர். தொழில், வணிகம் என இறங்கினர். பலர் தர்மபுரியில் உருவாகி வந்த நிலவியாபாரத்தில் இறங்கி பணம் ஈட்டினர். சிலர் கடைகள் வைத்தனர். கத்தர் பாரதிய ஜனதா வரை சென்றார். அவருக்கு முன்னரே அவருடைய தலைவர் கொண்டப்பள்ளி சீதாராமையா சரணடைந்து வேறொரு வாழ்க்கைக்குள் சென்றுவிட்டார்.
கத்தர் ஒரு முகம் என்றால் இன்று இணையத்தில் கூச்சலிடும் போலிப்புரட்சியாளர்கள் இன்னொரு வகை. இவர்கள் அன்று அந்த நம்பிக்கைக்கு பதிலாக அந்த வேடங்களை மட்டும் கற்றுக்கொண்டவர்கள். அதை இணையவெளியில் நடிப்பது மிகச்சிறப்பான ஓர் அடையாளத்தை அளிக்கிறது என புரிந்துகொண்ட தந்திரசாலிகள். அவர்கள் இன்று கத்தாரின் அந்த பழைய வேடத்தை கொண்டாடிப் புல்லரிக்கிறார்கள். குமட்டல் எடுக்கும் அளவுக்கு.
எனக்கு இலட்சியவாதங்கள் மேல் இன்றும் பெருமதிப்புண்டு. ஆனால் அதை மிகைநடிப்பாக ஆக்கிக்கொண்டால் நாம் ஒரு வேடத்திற்குள் சிக்கிக்கொள்கிறோம். என்றோ ஒருநாள் அந்தவேடம் இரும்புக் கவசம் போல எடைமிக்கதாகும். அதை கழற்றி வீசிவிட வேண்டியிருக்கும். அதாவது நாம் நேர்மையானவர்களாக இருந்தால். கத்தாருக்கு நிகழ்ந்தது அதுவே. கே.கே.எம்முக்கும் நிகழ்ந்தது அதுவே. கௌரியம்மாள் உட்பட பல மூத்த கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கை அதுவே.
இலட்சியவாதத்தை நம் அன்றாடவாழ்க்கையாக ஆக்கிக் கொள்ளவேண்டும். நம்முடைய ஆளுமையாக ஆக்கிக் கொள்ளவேண்டும். பிறருக்காக அன்றி நமக்காகவே அதில் ஈடுபடவேண்டும். நம் சமரசங்கள், சரிவுகள், சிக்கல்கள் எல்லாவற்றையும் நாமே ஒப்புக்கொண்டாகவேண்டும். இலட்சியவாதம் என்பது ஒரு வேடம் அல்ல. ஒரு பொதுவெளி நடிப்பு அல்ல. அது நாமே நமக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு நம்பிக்கை, அதனடிப்படையிலான வாழ்க்கைமுறை.
இலட்சியவாதத்தை மிகைப்படுத்திக்கொண்டு போராளிகள், புரட்சியாளர்கள், கலகக்காரர்கள், தியாகிகள், அன்னியர்கள், மக்கள் சேவையாளர்கள் என்றெல்லாம் அதிதீவிரச் சாயல்களை நமக்காகச் சூடிக்கொண்டால் மிகமிக குறைவான காலம் மட்டுமே அதில் நீடிக்கமுடியும். ஏனென்றால் அது ஓர் உச்சநிலை. ஆகவே ஒற்றைப்படையானது. ஒற்றைப்படையான எதுவும் பொய்யே. பொய்யில் வாழமுடியாது.
ஆகவேதான் ‘நான் இப்படியாக்கும்’ என தனக்கென ஒரு வரையறையை அளித்துவிட்டு பேச ஆரம்பிக்கும் எவரையும் நான் நம்புவதில்லை. அந்த முகமூடியுடன் பேச எனக்குப் பொழுதில்லை. அவர்களை முழுமையாக உதாசீனம் செய்வதே என் வழி.அவர்களுக்கும் தங்கள் போலிமுகம் கசப்பையே அளிக்கிறது. ஆகவே மேலும் கூச்சலிடுகிறார்கள். நேர்நிலைக் கூச்சல் இன்று எவராலும் செவிகொடுக்கப்படாது. புரட்சி ஓங்குக என ஒருவன் கூவினால் எந்த காதும் திரும்பாது. ஆகவே எதிர்மறைக் கூச்சல். வசைபாடல்கள். அவதூறுகள், எக்களிப்புகள். கவன ஈர்ப்புக்கான ஒருவகை நிர்வாண நடனங்கள் இவை. அதற்கப்பால் ஏதுமில்லை.
கத்தார் இலட்சியவாதத்தை மிகையாக ஆக்கிக்கொள்ளும் போக்கின் பலி. அதை நமக்குச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும் சமகால உதாரணம். நான் போலிக்கூச்சல்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்களுக்கு சலிப்பே இல்லை. ஏனென்றால் அவர்களுடையது அவர்களே நம்பாத ஒரு நடிப்பு. நான் மெய்யான இலட்சியவாதம் மிகையால், ஒற்றைப்படைத்தன்மையால், தனக்கே நடித்துக்கொள்வதாக ஆகி, அபத்தமானதாக மாறிவிடுவதைச் சொல்கிறேன். இது ஒருவகை ஈவிரக்கமற்ற கூற்றுதான். ஆனால் நான் ஈவிரக்கமில்லாமல் அணுகவிரும்புவது நானே நம்பும் இலட்சியவாதம் என்னும் வாழ்க்கைமுறையைத்தான்.
இன்று கத்தாருக்கு என்ன இடம்? ஒரு பொதுப்பிம்பம் என்பதைக் கடந்து அவர் ஆற்றிய பங்களிப்பு என்ன? அவரை நம்பி பலியான பலநூறு இளைஞர்களின் பொறுப்பை அவர் ஏற்கவேண்டியதில்லை என கழித்துவிடுவோம். . கவிஞர் அல்ல, அவருடைய வரிகள் வெறும் உரத்தகுரல் கோஷங்கள் மட்டுமே. இலக்கியவாதி அல்ல. அவர் ஒரு வரிகூட உண்மையாக, அசலாக சொல்லவில்லை. அவர் ஒரு நாட்டுப்புறப்பாடகர். சராசரிக்கு சற்றே மேலான தரம் கொண்டவர். அவ்வளவுதான்
மெய்யான இலட்சியவாதம் என்பது அதற்கு இணையான எதிர்விசைகளை சந்தித்துக்கொண்டேதான் இருக்கும். உலகியல் கட்டாயங்கள், நம் சொந்த பலவீனங்கள், வரலாற்றுச் சூழலின் கட்டாயங்கள். உண்மையில் நடைமுறைவாதத்துக்கும் உயர் இலட்சியங்களுக்கும் இடையேயான சமநிலையில் இலட்சியவாதம் ஒரு மயிரிழையே மேலே நிற்க முடியும். முழுமூச்சாக நம்பிக்கையை பேணிக்கொண்டால், உணர்வுச்சமநிலையை தக்கவைத்துக் கொண்டால், தொடர்ச்சியாகச் செயலில் இருந்தால் மட்டுமே அந்த மெல்லிய மேலளவை வாழ்நாளெல்லாம் கொண்டுசெல்லமுடியும்.
அதற்கு வாழ்க்கையை ஒரு யோகமென ஆக்கவேண்டும். இலட்சியவாதம் ஒவ்வொரு நாளும் சற்றேனும் செயலாக ஆகவேண்டும். நேர்நிலைச் செயல்பாடாக. அச்செயல்பாட்டின் விளைவு நம் கண்ணுக்குக் கொஞ்சமேனும் தெரியவும் வேண்டும். அதுவே நமக்கு உறுதிப்பாட்டை அளித்து மேலே செல்ல வைக்கிறது. நான் அத்தகையோரை மட்டுமே முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறேன். அவர்களை மட்டுமே சுற்றமெனக் கொள்ள விழைகிறேன்.
ஜெ