தூரனின் இசை, செந்தில் ஜெகன்னாதன்

தூரன் விருது- இசை நிகழ்வு

அன்புள்ள ஆசிரியருக்கு மனமார்ந்த வணக்கம்,

எங்கள் வீட்டில், தொலைக்காட்சி  இல்லாத பால்யம் அமைந்து, வானொலி கேட்கும் ஆர்வம் அதீதமாக இருந்த காரணத்தினால்தான் முதன்முறையாக நாதஸ்வர-தவில் கச்சேரிகளை நான் கேட்க ஆரம்பித்தேன்.

அறிவிப்பாளர் ’பொங்கும் மங்களம்’ நிகழ்ச்சியில் திருவெண்காடு சுப்ரமண்ய பிள்ளை குழுவினரின் நாதஸ்வர இசை கேட்கலாம். என்று அறிவிக்க நாதஸ்வர இசை ஒலிக்கத் தொடங்கும்.

கேட்டுக் கேட்டு அதில் தோய்ந்து, படிப்படியாக ’வெறுமனே’ கேட்பதிலிருந்து, நாத இன்பத்தால் ஈர்க்கப்பட்டு, நாதஸ்வர ரசிகனாக மாறத் தொடங்கினேன்.

பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த சமயம், எங்கள் ஊர் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலுக்கு என் தந்தையாருடன் சென்றிருந்தேன்.

அன்றைக்கு துலா உற்சவ திருவிழாவின் கடைமுழுக்கு நாள்!

மாயூரநாதரும் அபயாம்பிகையும் ரிஷப வாகனத்தில் காவிரிக்கு புறப்பட தயாராக இருக்க,  கிட்டதட்ட முப்பது தவில் நாதஸ்வர கலைஞர்கள்  அவர்களின் முன்னே வட்டமடித்து நின்று வாசித்துக் கொண்டிருந்தார்கள். இசை குறித்த எந்தப் புரிதலுமற்ற அந்த வயதில் அவர்களின் அந்த வாசிப்பில் சிலிர்த்து, மனயெழுச்சியடைந்து, கண்ணீர் விட்டு நின்றுவிட்டேன். பிற்பாடு அந்த வாசிப்பைப் பெரியவர்கள் ‘மல்லாரி’ என்று சொன்னார்கள். அந்தத் தருணம் என் நினைவில் அழியாச் சித்திரமாக இருக்கிறது. அக்கணத்திலிருந்து நான் மல்லாரியின் தீவிர ரசிகனானேன். கடைமுகத் தீர்த்தவாரிக்கு முன்பு இசைக்கப்படும் புறப்பாட்டு மல்லாரி காவிரியாற்றில் வாசிக்கப்படும் தீர்த்தமல்லாரி என தவறாது கேட்கும் பழக்கம் உண்டானது.

பெரிய கோவிலுக்குப் போகும்போது கூட நாதஸ்வரக் கலைஞர்கள் பயிற்சி செய்வதைக் கேட்டுக்கொண்டே போகலாம் என்று மடவிளாகத் தெரு வழியே சுற்றிக்கொண்டு சென்றிருக்கிறேன்.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம், ஏகேசி.நடராஜன், யாழ்ப்பாணம் தக்ஷ்ணாமூர்த்திப் பிள்ளை, திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி, திருப்பாம்புரம் சகோதரர்கள், யாழ்ப்பாணம் பிஎஸ். பாலமுருகன் என்று விருப்பமான தவில்-நாதஸ்வரக் கலைஞர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் எப்போதுமிருந்தாலும், இக்கலைஞர்களின் இசையைக் கேட்பதும், இவர்கள் குறித்த செய்திகளைக் கொண்ட நூல்களைத் தேடி வாசிப்பதிலும், இசை நுணுக்கங்களைக் குறித்துத் தெரிந்து கொள்வதிலும் தீவிரமான ஆர்வம் உண்டு. அதுவே தவில்-நாதஸ்வரக் கலைஞர்களைக் குறித்து ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தையும் அளித்தது. திரைக்கதைப் பணி, மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறேன். விரைவில் எழுதத் தொடங்கிவிடுவேன். ஒருநாள் அதிகாலை ஆபேரி ராகத்தில் காருக்குறிச்சியார் வாசித்த நகுமோமுவைக் கேட்டு என்னையறியாமல் ‘அநாகதநாதம்’ கதையை எழுதத் தொடங்கினேன். அந்தக் கதையை வாசித்துவிட்டு இசைக் குடும்பங்களைச் சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டு பேசியதும் நாவல் எழுதும் ஆவல் இரட்டிப்பானது.

முதன்முறையாக ஒரு மாலை நடையில் நண்பர் அகரமுதல்வனிடம் ”இந்நாவல் எழுதவிருக்கிறேன் என்பதைச் சொல்லி அதன் வெளியீட்டு விழாவுக்கு மிகச்சிறந்த கலைஞர்களை வரவழைத்து கச்சேரி செய்ய வேண்டும்.. உரிய பொருளாதாரம் அதற்குள் கைகூட வேண்டும்” என்றேன். ”சிறப்பாக நடக்கும் எழுதுங்க” என்று அகரமுதல்வன் நம்பிக்கை கூறினார்.

இரண்டுநாட்களுக்கு முன்பு தங்களின் தளத்தில் தமிழ்விக்கி பெரியசாமித் தூரன் விருது விழாவில் நாதஸ்வர தவில் கச்சேரி அதுவும் பெரியசாமித் தூரன் இயற்றிய கீர்த்தனைகளையே வித்வான்கள் வாசிக்க விருக்கிறார்கள் என்ற செய்தியை வாசித்ததும், நாவல் எழுதி முடித்தால் எத்தனை மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ அத்தனை மகிழ்ச்சியடைந்தேன்.

ஒரு இலக்கிய நிகழ்வை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பாரம்பரிய இசையோடு நடத்துவதும், அதையும் முன் தயாரிப்போடு வந்து வாசிக்கப் போகிறவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளவும், என்ன வாசிக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் முன் திட்டத்தோடு அதுகுறித்து எழுதப்பட்டு இந்நிகழ்வு நடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சியை  அளிக்கிறது.

’நாதஸ்வர எமன்’ என்று அழைக்கப்பட்ட திருமெய்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை அவர்களின் மகன் திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் அவர்கள், இளம் வயதிலேயே மிகச்சிறந்த வாத்தியக் கலைஞராக உருவெடுத்திருக்கும் பாண்டமங்கலம் யுவராஜ் அவர்கள், மற்றும் எந்த நாதஸ்வரக் கலைஞருக்கும் சளைக்காமல் ஈடுகொடுத்து வாசிக்கக் கூடிய தவிலிசைக் கலைஞர் ஐயா, தலைச்சங்காடு டி.எம் ராமநாதன் அவர்கள் என மூன்று அற்புதமான கலைஞர்களின் இன்னிசை நிச்சயமாக சிறப்பான விருந்தாக அமையும். (இவர்களின் வாசிப்பை நேரிலும், பரிவாதினி லலிதாராம், சுவாமிமலை சரவணன் ஆகியோரின் வழியே யூட்யூபில் நிறையக் கேட்டும், யோகேஸ்வரன் அண்ணனின் மூலமாக கேள்விப்பட்டும் இருக்கிறேன்.)

கோவில்களில் இயந்திரப் பயன்பாடு வந்ததும், திருமண வீடுகளில் மற்ற வாத்தியங்கள் வந்து பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு மாற்றாக பயன்படுத்துவதும். இந்த மரபான இசைக்கருவிகள் மற்றும் அதை நம்பியிருக்கும் கலைஞர்களுக்கு பெரும் ஏக்கத்தையும், வருத்தத்தையும் அளித்திருப்பதை எத்தனையோ செய்திகளில் ஊரடங்கு காலத்தில் படித்திருப்போம். இப்படியான சூழலில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மங்கல வாத்தியக் கலைஞர்களையும் ஓர் அங்கமாகக் கொண்டு நடத்துவது என்பது மிகவும் வரவேற்கத் தக்கது.

பெரியசாமித் தூரன் கலைக்களஞ்சியப் பணிகளுக்காக எத்தனை தீவிரத்துடன் செயல்பட்டிருக்கிறார் என்பதை தங்களின் தளத்திலும், தமிழ் விக்கியிலும் வாசித்து அறிந்துகொண்டோம். இந்த அற்புதமான கீர்த்தனைகளை இயற்றியவர் அவர்தான் என்பது தெரியாமலேயே இசையாகக் கேட்டு மானசீகமாக உரையாடிக் கொண்டிருந்திருக்கிறோம் என்பது உள்ளபடியே நினைத்தால் நெகிழ்வாக இருக்கிறது.

( அன்பே சிவம் அருளே தெய்வம், முருகா முருகா என்றால், அழகு தெய்வமாக வந்து.. போன்ற பாடல்களெல்லாம் அடிக்கடி கேட்கும் பாடல்கள்)

விழாவிற்கு நேரில் வந்து ரசிக்கும் தருணத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்..

மிக்க அன்புடன்

செந்தில் ஜெகன்நாதன்

முந்தைய கட்டுரைரமணி குளம் -கடிதம்
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரனின் பெரும்பணிகள்