வெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம்

திரு  ஜெமோ

கடைசியாக ஒரு வார்த்தை. நான முழு பிராம்மணன் அல்ல. என் தாய் வேளாளர் ( நீலகிரியின் படகர் இனப் பெண்). என் தந்தை தான் பிராம்மணர். என் பொறியியல் குரு ஒரு நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

என் தாய் எனக்கு சிறு வயது முதலே ஊட்டி வளர்த்த பிராம்மண எதிர்ப்பு வாதங்கள் மட்டுமே பிற்காலத்தில் என்னைச் சிந்திக்கத் தூண்டின. “never believe a brahmin. even his photo” என்று என் தாத்தா கூறியதாக என் தாய் சொல்லாத நாளே இல்லை. ஆனால் நடந்தது வேறு. நான மட்டுமே என் குடும்பத்தில் இரு வழிக் கலாச்சாரங்களுக்கும் பாலமாக இருக்கிறேன். என் தந்தையை என் தாத்தா இறந்த போது வாய்க்கரிசி போடக் கூட அனுமதிக்கவில்லை என் மாமாக்கள். இத்தனைக்கும் அக் குடும்பத்தில் எல்லோருமே பட்டதாரிகள். பெரியம்மா பாராளுமன்ற உறுப்பினர்.

திருமணம் ஆனதும் என் தாய்க்கு இருந்த ஆசிரியை வேலையை பிடுங்கினது, என் தந்தைக்கு கொலை மிரட்டல், என் தாய்க்கு மறுமண முயற்சி, மூளைச் சலவைக்கு நிகரான தொடர்ந்த போதனைகள், இதில் எல்லாம் நான பார்த்த சராசரி வெள்ளாள மனப் பான்மையுடன் தான் என் மாமாக்கள் நடந்து கொண்டனர்.

மாறாக என் தாயை பிராம்மணப் பெண்ணாக அழகு பார்த்தது என் தந்தை குடும்பம். என் பெரியப்பா காலமான போது திருமணமாகாமல் இருந்த அவரது பெண்களுக்கு மனையில் தாயாக இருந்து தாரை வார்த்துக் கொடுத்தவர் என் தாய் தான். இதற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை.

என் தாய் வழியில் நிலவும் குடி வெறி (உங்களுக்கே படகர்களின் குடி மோகம் தெரியும் ) , அப்பட்டப் பண வெறி, சொத்து வெறி, சொந்த அத்தையையே ஏமாற்றி பிடுங்கும் அவலம் ஆகியவை என் காதுக்கு வந்த போது, என் தாயை  இது குறித்தும், அவர்கள் தொடர்ந்து பேசி வரும் பிராம்மண அவதூறுகளையும் ஒப்பீடு செய்யச் சொன்ன போது அங்கே பதில் இல்லை. என் தந்தை குடும்பத்தில் அப்படி இருக்கிறதா என்றும் கேட்ட போது மௌனம் தான். நான என்னுடைய நாப்பத்து ஐந்தாவது வயதில் தான் என் தாய் என்றுமே வெள்ளாளப் பெண் என்று உணர்ந்தேன். ஏறக்குறைய இதே கால கட்டத்தில் தான் இன்றைய சமூகத்தின் பிரி கோடுகள் எந்த அளவுக்கு ஆழமானவை என்று உணர்ந்தேன்.

அயன் ராண்ட் கடிதத்தில் நான எழுதிய கடைசி பத்தி எழுதிய உடனேயே வருந்தினேன். இப்போது நீங்கள் சுட்டிக் காட்டியும் விட்டீர்கள். மீண்டும் வருத்தம் தெரிவிக்கிறேன். அது ஒரு கோபத்தின் வெளிப்பாடு. ஆனால் என் கருத்துகளின் அடிப்படை வெள்ளாளர்களின் இன்றைய வெறுப்பு மனப் பான்மை மற்றும் அது  தோற்றுவித்துள்ள போலி உயர்வு மனப்பான்மை மற்றும் இவை மூலம் ஏற்பட்டுள்ள “வெள்ளாளன் மட்டுமே திராவிடன்” போன்ற வாசகங்கள். இது ஒருக்கால் ஜாதி அடிப்படையில் உங்களைப் பாதித்திருந்தால் வருந்துகிறேன்.

என் வகையில் உங்கள் எழுத்து சுதந்திரமானது என்றே கருதுகிறேன்.ஆனாலும் இந்த விஷயத்தில் உங்களது நடவடிக்கை மற்றும் எதிர்வினை சற்று ஏமாற்றமளிக்கிறது. என் ஜாதி உணர்வை  வன்மையாகக் கண்டித்து எழுதியிருந்தால் சந்தோசம் ஏற்பட்டிருக்கும். என்  மேட்டிமை  உணர்வை கண்டித்தால் கூட மகிழ்ந்திருப்பேன். உங்கள் எதிர்வினை என்னை நிராகரிப்பதாக அல்லவா அமைந்தது ? உங்கள் சொந்த ஜாதி பற்றிய விமரிசனங்கள் தான் உங்களை அப்படி எழுதத் தூண்டியதோ புரியவில்லை.

இன்றும் நான என்னை அரை வெள்ளாளன் என்று தான் அழைத்துக் கொள்கிறேன். என் தாய் வழி உடற்கட்டு, மண்ணின் மீது பாசம், சோர்வு அற்ற உடல் மற்றும் மன நிலை இவை எல்லாம் என் சொத்துகள் என்றே எண்ணுகின்றவன். என் தாய் வழி சொந்தங்களோடு தொடர்பு என்றும் நீடிக்கப் பாடு படுபவன் .

எது எப்படியோ, நான உங்கள் வாசகனாகவே இருப்பேன். என் வகையில் நான உங்களைப் புரிந்து கொள்ளவே முயற்சிப்பேன். கோவை வந்தால் , உங்களை என் இல்லத்துக்கு வரவேற்கிறேன். ஒரு வேளை அனைத்தும் நிராகரிக்கப் பட்டாலும் என் கவனம் உங்கள் எழுத்துகளின் மீது தொடரும். ஒரு அபூர்வ திறன் கொண்டவர் என்பதால் நான என்றும் உங்கள் எழுத்துக்களைப் படிப்பேன்.

நீங்கள் கூறியது போல் இனி என் அஞ்சல்கள் உங்களுக்கு வராது.

வேங்கடசுப்ரமணியன்

 

அன்புள்ள வெங்கடசுப்ரமணியன்

உங்களை நான் ஒரு சராசரி பிராமணனாகவே எடுத்துக்கொண்டேன் –  அந்தவகையில் உங்கள் அந்த வரிகள் மிக மோசமான மனநிலையைக் காட்டுகின்றன. ஆனால் உங்கள் தனிப்பட்ட பின்னணியில்  அந்த வரிகளுக்கு வேறு பொருள். தனிப்பட்ட  உறவுகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட பிம்பம் அது. இப்போதும் அது பிழைதான்- ஆனால் அது மோசமான மனநிலை அல்ல. ஆக நான் சொன்ன கடுமையான சொற்களுக்கு மன்னிக்கவும்.உங்கள் தொடர்பு நீடிக்கவேண்டுமென விரும்புகிறேன்

இந்தியாவெங்கும் நில உடைமை சாதிகள் [ பொதுவாக இடைநிலைச் சாதியினர்] அளவுக்கு பிறர் கொடூரமான சாதிவெறியர்கள் அல்ல. அந்த மனநிலை நிலத்துடன் சம்பந்தப்பட்டது. அவர்கள் பயணம் செய்வதில்லை. இடப்பெயர்வு இருப்பதில்லை. உறவுகளும் ஒரே இடம் சார்ந்தவை. ஆகவே அந்த மனநிலை உருவாகிவிடுகிறது. இந்தியாவின் இன்றைய பிரச்சினையே இதுதான். வேளாளர்கள் பிராமணர்களைவிட சாதி வெறி கொண்டவர்கள் என்பதை நானே பலமுறை எழுதியிருக்கிறேன்

ஆனால் நீங்கள் நினைப்பது பிழை.  நான் வேளாளன் அல்ல. நான் பிறப்பால் மலையாளி. சாதிக்குள் வாழ்பவனும் அல்ல. சாதி சார்ந்த விமர்சனங்களுக்கு தடை இல்லை. ஆனால் சாதிச்சண்டையை இங்கே அனுமதிக்கலாகாது என எழுதினேன். அந்தவகையான முன்முடிவுகளை முழுமையாக நிராகரித்து விலகுவதே சரியாக இருக்கும் என்பதே என் உறுதியான முடிவு

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகலை அசலும் நகலும்