காடு வாங்க
காடு மின்னூல் வாங்க
ஒரு நாவல் அது எழுதப்பட்ட பிறகு பிறந்தவர்களிடம் மேலும் தீவிரமான வாசிப்பை பெறுவதென்பது காலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கான சான்று. காடு எழுதப்பட்டு இருபதாண்டுகளாகிறது. இப்போது வாசிக்கப்படுவது போல பெரும் உணர்வெழுச்சியுடன் அது முன்பு வாசிக்கப்பட்டதில்லை என்றே தோன்றுகிறது. அந்நாவலின் தீவிரத்தால் உந்தப்பட்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் பல உள்ளன.
காடு நாவல் நான் சென்று மீண்ட ஒரு கனவு. 2003-ல் அன்று தக்கலை தொலைபேசி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நான் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றபோது வேளிமலை அடுக்குகளை மூடி கரிய பெருமலைகள் மேலெழுந்த மழைக்கார் மூடலை கண்டு ஓர் உணர்வெழுச்சியை அடைந்து அவ்வண்ணமே இறங்கி திரும்ப வந்து எழுதத்தொடங்கியது இது. இதை எழுதிய நாட்களை நினைவுகூர்கிறேன். இரவும் பகலுமென என்னை வறனுறல் அறியா அச்சோலை தன்னுள் வைத்திருந்தது. காதல் பூத்து நின்ற குறிஞ்சி. ஒவ்வொரு வாழ்விலும் வந்து செல்லும் வசந்தம் திகழும் நிலம். பருவங்களில் மிகக்குறைந்த வசந்தம். என்றுமென நின்றிருக்கும் பிறிதொரு வெளி.
காடு நாவலைப்பற்றி அண்மையில் அருணாச்சலப்பிரதேச பயணத்தின்போது ஹொசூர் நண்பர் பாலாஜி ஒரு கேள்வி கேட்டார். அந்நாவலில் ஏன் காதலின் கனவு நிலமும் கடுந்துயர் நிறைந்த அன்றாடத்தின் நகரமும் மாறி மாறி வருகின்றன. ஒன்றையொன்று அவை ஈடுகட்டுகின்றனவா? அல்லது அந்தக்கனவு நிலம் ஒருவனுக்கு அமைந்ததால் தான் நிகழ்நிலம் அத்தனை வறண்டதாக மாறிவிட்டதா? அல்லது நிகழ்நிலத்தின் அந்த வெறுமைதான் காட்டை பொலிவு கொள்ளச்செய்கிறதா? அது அவருடைய வாசிப்பு.
நான் என்னுடைய வாசிப்பைச் சொன்னேன். ஊஞ்சல் ஒரு திசை நோக்கி ஓட முடியாது மறுஎல்லைக்கு வந்து தான் மீளமுடியும். வசந்தம் அனைவர் வாழ்விலும் உள்ளது. ஆனால் பிறிதொன்றிலாத பெருங்களியாட்டாக அது எழுவது ஒரு குறிப்பிட்ட அகவையில் ஒருமுறை மட்டுமே பின்னர் அதைக் கற்பனையில் நிகழ்த்திக்கொள்கிறோம். அதை மீண்டும் பலவகையில் நிகழ்த்திக்கொள்கிறோம். இந்நாவலில் நிகழ்வது அது தான். என்னைப்பொறுத்தவரை குமாரகோயிலில் ஒரு திருமணத்திற்குச் சென்று விடுதியில் அறையிட்டு சாளரம் வழியாக மழைதிகழும் மலைமுடியைப்பார்த்து கண்ணீருடன் அமர்ந்திருக்கும் கதைநாயகனின் உணர்வுகளுடன் தான் இந்நாவல் பெரிதும் ஒத்துச்செல்கிறது. இதில் உள்ளது வசந்தம் மட்டுமல்ல, இழந்த வசந்தம். குறிஞ்சிக்கு இந்நாவல் அளிக்கும் வரையறையே அது தான். மிகக்குறுகிய காலம் வந்து மீள்வது பிறிதொன்று என நிகழாதது. இந்நாவலை கபிலனூடாக சென்றடைந்தேன். தமிழில் காதலை ஒரு நிலமென மாற்றி நம் கற்பனையில் விரித்துச் சென்ற பெருங்கவிஞனுக்கு என் பாத வணக்கம்.
இந்நாவலின் முதற்பதிப்பை தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்த பதிப்புகளை வெளியிட்ட வசந்தகுமாருக்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றி.
ஜெ
21.02.2023