கனவுகளைப் பயில்தல்

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

விஷ்ணுபுரம்  வெள்ளிவிழா செம்பதிப்பு  வாங்க

அன்புள்ள ஜெ

அழகான அட்டையால் ஈர்க்கப்பட்டு நான் விஷ்ணுபுரம் நாவலை சென்ற மாதம் வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை. இரண்டு முறை தோற்றுவாய் மட்டும் படித்தேன். என் கேள்வி இன்றைய சூழலில் எதற்காக இத்தனை கஷ்டப்பட்டு இதை வாசிக்கவேண்டும்? offencive ஆக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்

ரான்

அன்புள்ள ரான்,

படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை. விட்டுவிடலாம். வாங்கிவிட்டீர்கள் அல்லவா? படிக்கும் சிலருக்கு அது கிடைக்கவேண்டுமென்றால் நூல் அச்சேறவேண்டும், அதற்கு முந்நூறு பிரதிகளேனும் விற்கவேண்டும். படிப்பவருக்கு உங்களாலான ஒரு நிதியுதவியைச் செய்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்.

சரி, பொதுவாக விஷ்ணுபுரம் போன்ற ஒரு நாவலை ஏன் படிக்கவேண்டும் என்று சொல்கிறேன்.

அ. உங்கள் நவீன வாழ்க்கை கனவே அற்றது. அப்பட்டமான நடைமுறைச் செயல்பாடுகளாலானது. திரும்பத் திருமப நிகழ்வது. பணமீட்டல் – நுகர்தல் என்னும் இரண்டே புள்ளிகள் மட்டும் கொண்டது. அதற்கு அப்பால் கொஞ்சம் கனவும், பித்தும் உங்களுக்குத் தேவை என்றால் விஷ்ணுபுரம் நன்று

அந்தக் கனவை அடையும்பொருட்டு என்னென்னவோ செய்கிறார்கள். போதைப்பொருட்களை நாடுகிறார்கள். செயற்கையான சாகசங்களுக்கு செல்கிறார்கள். தலைகீழாக மலையில் இருந்து குதிக்கிறார்கள். அவையெல்லாம் போலியானவை. தற்காலிகமானவை. விஷ்ணுபுரம் போன்ற ஒரு நாவல் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு கனவு.

உங்கள் வரண்ட வாழ்க்கையின் ஒரு முனையில் கொஞ்சம் கனவின், பித்தின் பசுமையை வைத்துக்கொள்ள இதை வாசிக்கலாம்.

ஆ. நீங்கள் வாழும் வாழ்க்கை The Matrix படத்தில் வருவதுபோல தொழில்நுட்பம் உங்களுக்கு உருவாக்கியளித்துள்ள ஒரு மாயை. அதில் நேற்று என்பதே இல்லை. இருந்தால்கூட அதுவும் செய்திகள் வழியாக நவீனத் தொழில்நுட்பம் உருவாக்கி அளிக்கும் சித்திரமே. இன்று மட்டுமே உண்மை.

நீங்கள் நேற்றை, முடிவிலாத இறந்தகாலத்தை இணைத்துக்கொண்டு ஓர் அகக்காலத்தை உருவாக்கிக்கொள்ள விஷ்ணுபுரம் உதவும். அதற்கு வரலாறு மட்டும் போதாது. தொன்மம், ஆழ்படிமம், புராணம் எல்லாமே தேவை. விஷ்ணுபுரம் அவை அனைத்தாலுமான ஒரு பெரிய வலைப்பின்னல். மேட்ரிக்ஸுக்கு எதிராக இன்று மனிதன் செய்யக்கூடிய ஒரே விஷயம் கனவுகாண்பதே. விஷ்ணுபுரம் உங்கள் கனவை பலமடங்கு பெரிதாக்கும்.

இ. இன்றைய மனிதனின் புரிதல்திறன் சிக்கலானவற்றை நாடுகிறது. சிக்கலானவையே அவனை உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும். எளியவற்றை சீக்கிரம் கடந்து சென்றுவிடுவீர்கள். விஷ்ணுபுரத்தின் சிக்கல் சிலமாதங்கள் உங்களை உள்ளே வைத்திருக்கும். அதன்பின் வாழ்நாளெல்லாம் தொடரும்.

ஆகவே கொஞ்சம் உங்களைக் கொடுங்கள். பிடிவாதமாக சிலநாட்கள் வாசியுங்கள். நூறுபக்கம் கடந்துவிடுங்கள். விஷ்ணுபுரம் உங்களுடன் இருக்கும். நீங்கள் வாசிக்கும் பல்லாயிரம் பக்கங்கள் அப்படியே மறக்கப்படுவதை கண்டிருப்பீர்கள். விஷ்ணுபுரம் வாசித்த எவரும் அதை மறந்ததே இல்லை. அது அவர்களின் கனவில் நிறைந்துவிட்டிருக்கும்.

ஒரு பிரதி வாங்கிவிட்டீர்கள். நல்லது. கோவை புத்தகவிழாவில் இன்னும் நான்கு வாங்கி நண்பர்களுக்கு அளியுங்கள். விஷ்ணுபுரம் ஓர் அழைப்புபோல அவர்களின் அருகிலேயே இருந்துகொண்டிருக்கட்டும். என்றோ ஒருநாள் ஒரு புள்ளியில் அது அவர்களை பற்றிக்கொள்ளும். விடவே விடாது.

ஜெ

https://youtu.be/6hB7krIivuI?list=PLvWdiqurBsAAEEnNqF-6wL8ZkjIrqKNUj

முந்தைய கட்டுரைகா.கலியப்பெருமாள்
அடுத்த கட்டுரையோகமும் கொண்டாட்டமும் – கடிதங்கள்