பிராமணர் கல்வியை மறுத்தனரா?

ஜெ,

தமிழ் விக்கி தேவை பற்றி, அதன் இல்லாமயால் நாம் பெற்ற பின்னடைவு குறித்து உங்களுக்கு ஒரு கட்டுரையில் சுட்டி இருந்தேன்.  அதன் பிறகு இந்த அறிவிப்பு மனம் நிரம்பி உள்ளது.

அதே போல் முதன் முதலில் தமிழ் அச்சு நூல் வெளிவந்த பிறகு பெரும்பாலான புத்தகங்கள் செட்டியார் மற்றும் முதலியார், பிள்ளை அவர்கள் அளித்த பங்களிப்புகள் அதிகம் தென் படுகிறது. இருந்தும் பிராமணர்கள் அதிகம் படித்தார்கள் மற்றவர்களை படிக்க விடவில்லை என்ற கழக வசைபாடல்களை திரித்தல் களை ரெண்டு தலைமுறைகளாக எ‌ப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

உங்களது எழுத்தில் இதை தொட்டு இருக்கிறீர்களா என்று பார்த்தேன் கிடைக்கவில்லை.

மீண்டும் தேடி பார்கிறேன்.

நன்றி.

சஹ்ருதயன்.

*

அன்புள்ள சஹ்ருதயன்,

நான் இதுபற்றி விரிவாகவே எழுதியுள்ளேன். மீண்டும்.

பிராமணர்கள் பிறரைப் படிக்கவிடவில்லை, அவர்கள் மட்டுமே படித்தார்கள் என்பதெல்லாம் வெறும் அரசியல் காழ்ப்புப்பிரச்சாரம். எந்த வரலாற்றாதாரமும் இல்லாதது. அந்த அரசியலின் மொத்த நோக்கமும் சாதியாதிக்கத்தின் பொறுப்பிலிருந்து பிராமணரல்லா ஆதிக்கசாதிகளை விடுவிப்பது மட்டுமே. ஆகவே ஒருபக்கம் சாதிவெறிக் கூச்சல், மறுபக்கம் சாதியை கற்பித்தவன் பிராமணன் என்னும் பிரச்சாரம் இரண்டையும் சேர்த்தே செய்துகொண்டிருக்கிறார்கள்.

தலித் உட்பட்ட அடித்தள மக்களுக்கு கல்வி – வாழ்வுரிமை மறுக்கப்பட்டது ஓர் உண்மை. ஆனால் அதன் முதன்மைப்பொறுப்பை நேரடியாக நிலம் வைத்திருக்கும் ஆதிக்கசாதியினர்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த பொறுப்பேற்பின் வழியாகவே அவர்கள் கடந்தகாலத்தின் பழியில் இருந்து இனியேனும் விடுபட முடியும். ஆனால் அது இங்கே நிகழ்வதில்லை. காரணம் பிராமணர்மேல் பழிபோட்டு தப்பித்துக்கொள்ளும் சூழ்ச்சி.

என் வரையில் சாதிக்கொடுமைகளின் பழியை பிராமணர்மேல் போடுபவர் அனைவரையுமே மறைமுகமாக இடைநிலைச் சாதிவெறி கொண்டிருப்பவர் என்றே மதிப்பிடுகிறேன். என் வரையில் ஒரே ஒரு விதிவிலக்கக்கூட இன்றுவரை காணநேர்ந்ததில்லை. அவ்வாறல்ல என நான் நம்பிய, மிக அணுக்கமாக இருந்த சிலர்கூட இன்று இடைநிலைச் சாதிக்காழ்ப்பை கரந்தவர்களாக தெரியவரும் வருத்தமும் எனக்குண்டு.

இந்திய இலக்கிய வரலாற்றை ஓரளவேனும் பார்ப்பவர்களுக்கே தெரியும் பிராமணரல்லாதவர்களின் கொடை, குறிப்பாக  இலக்கியக் களத்தில், மிகப்பெரியதென்று. வள்ளுவர், இளங்கோ, சீத்தலை சாத்தனர், திருத்தக்கதேவர், கம்பன், சேக்கிழார்…. எவர் பிராமணர் இவர்களில்? கம்பன் எப்படி சம்ஸ்கிருதம் கற்றுத்தேர்ந்து கம்பராமாயணம் எழுதினான்?

தமிழகத்தில் கல்வியின் மையங்களாக நாநூறாண்டுகள் திகழ்ந்தவை சைவ மடங்கள். அவை பிராமணர்களுக்கு உரியவை அல்ல. தமிழறிஞர்களில் சாதிவாரியாக பட்டியலிட்டால் வேளாளர், முதலியார் எண்ணிக்கையே மிகப்பெரும்பாலும். பழங்காலத்திலும்கூட.

எல்லா காலத்திலும் கல்வியில் தேர்ந்திருந்தோர், உண்மையில் பிராமணர்களை விட ஒரு படி மேலான இடத்தில் இருந்தோர், பிராமணரல்லாத சாதியினரே. மிக அடித்தளச் சாதியினரிடையே பேரறிஞர்கள் இருந்தனர். திருக்குறள் உள்ளிட்ட பேரிலக்கியங்களே அவர்களால் தான் பேணப்பட்டு நவீனகாலகட்டத்தை வந்தடைந்தன.

தமிழக வரலாற்றை கிடைக்கும் சான்றாதாரங்களின்படி பார்த்தால் சங்ககாலம் முதலே கல்வி பரவலாக இருந்துள்ளது. சோழர் காலத்தில் அது உச்சமடைந்தது. தமிழகம் என்றுமே கல்வியின் நிலமே. அதில் முதன்மைப் பங்களிப்பாற்றியவர்கள் சமணர். சமணர்களில் பெரும்பாலானவர்கள் வணிகர்கள். பின்னர் பக்தி இயக்கம் அடுத்த நிலைக்கு கல்வியை கொண்டுசென்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஆங்கிலக்கல்வி, மிஷனரிகளின் பங்களிப்பு, இந்தியத் தேசியக் காங்கிரஸின் தேசியக் கல்வி இயக்கம் என பிற அறிவியக்கங்களின் கொடை பல உள்ளது.

இந்தவகை ஒற்றை வரிகளைப் பேசுபவர்களுக்கு வரலாறு சார்ந்த பார்வை இல்லை. அதை நாம் அவர்களிடம் சொல்லப்போனால் அவர்களின் சிறிய மூளைகள் உறைந்துவிடுகின்றன. வளவளப்பு என சொல்லி புறந்தள்ளி தங்கள் வழக்கமான காழ்ப்புகளுக்குச் சென்றுவிடுவார்கள்.

இந்தியாவில் என்றல்ல உலகத்தில் எங்கும், சென்ற காலங்களில் அனைவருக்கும் ஒரே கல்வி அளிக்கப்படவில்லை. இந்தியாவில் எப்போது அனைவருக்கும் ஒரே கல்வி என்னும் கொள்கை அறிமுகமானதோ ஏறத்தாழ அப்போதுதான் உலகில் அத்தனை நாடுகளிலும் அது அறிமுகமானது.

சென்ற காலத்தில் உலகம் முழுக்க இருந்த கல்வி என்பது தொழில்கல்வி மற்றும் பண்பாட்டுக் கல்வி. அது அக்கால வாழ்க்கைக்கான அடிப்படைக் கல்வி மட்டுமே. அது அந்தந்த தொழில்குழுவினரின் தொழிலுக்கும் மரபுக்கும் ஏற்ப அளிக்கப்பட்டது. ஐரோப்பாவில் தொழில்குழு என்பது இந்தியாவில் சாதி. ஐரோப்பாவிலும் நெடுங்காலம் தொழில்குழுக்கள் பிறப்பு சார்ந்தே முடிவாயின. தொழிற்குழுவினர் பிரபுக்களால் பதினாறாம்நூற்றாண்டு வரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் சாதிசார் கல்வி இருந்தது. அந்தந்த சாதிகளிலேயே அவர்களுக்குரிய ஆசிரியர் இருந்தனர். பொற்கொல்லர் பெறும் கல்வி உழவருக்கு அளிக்கப்படவில்லை. உழவருக்கான கல்வி கல்தச்சருக்கு இல்லை. பொதுவாக அனைவருக்கும் ஒரு நெறிக்கல்வி அல்லது ஆசாரக்கல்வி அளிக்கப்பட்டது. அதன்பின் தொழிலுக்குரிய கல்வி மட்டுமே அளிக்கப்பட்டது. அது தொழிலுக்குரிய வகையில் வேறுபட்டது.

தரம்பால் ‘அழகிய மரம்’ என்னும் புகழ்பெற்ற நூலில் பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு, பண்டைய இந்தியாவில் ,குறிப்பாக தமிழகத்தில் இருந்த பரவலான தொழில் மற்றும் ஆசாரக் கல்வி பற்றி விரிவாக ஆதாரங்களுடன் பதிவுசெய்துள்ளார்.

நாம் இன்று காணும் பொதுக்கல்வி என்பது ஓர் ஐரோப்பிய உருவகம். அனைவருக்கும் சமமான கல்வி, ஒரே கல்வி என்னும் கருத்துரு பதினேழாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் உருவானது. அது ஐம்பதாண்டுகளுக்குள் பிரிட்டிஷாரால் இந்தியாவுக்கும் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் மெல்ல மெல்ல அனைத்துக் குடிகளும் ஒரே கல்வியை அடைய ஆரம்பித்தனர். அனைவரும் அனைத்து வேலைகளும் செய்யலாமென்னும் நிலைமையும் உருவானது.

நினைவில் கொள்ளுங்கள், இந்தியாவிலும் தமிழகத்திலுமுள்ள புகழ்பெற்ற பொதுக்கல்வி நிலையங்கள் பலவும் உருவான அதேகாலகட்டத்தில்தான் ஐரோப்பாவின் புகழ்பெற்ற பொதுக்கல்வி நிறுவனங்களும் உருவாயின. ஐரோப்பாவிலும் அவை மத அமைப்புகளால் தொடங்கப்பட்டவை – ஆனால் முதலாளித்துவ பொருளியலமைப்பின் தேவைக்காக உருவானவை.

முந்தைய கல்விமுறை நிலவுடைமைக்கால கல்வி. பொதுக்கல்வி என்பது முதலாளித்துவச் சமூகத்தின் உருவாக்கம். நிலவுடைமைக் காலத்தில் ஒவ்வொரு இனக்குழுவும், தொழில்குழுவும் தனித்தனி சமூகங்களாகவே வாழ்ந்தன. அந்தச் சமூகக்குழுக்களின் தொகுப்பே அன்று ஊர் எனப்பட்டது. முதலாளித்துவ அமைப்புதான் ஒரேவகையான குடிகளைக்கொண்ட ஒட்டுமொத்தமான சமூகம் என்னும் உருவகத்தையே உருவாக்கியது.

நிலவுடைமைக்காலத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கிய நகர்வு என்பது மிகப்பெரிய முன்னேற்றம். இனக்குழுக் கல்வியில் இருந்து பொதுக்கல்வி நோக்கி வந்தமை நமக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. இதுவே மார்க்ஸியத்தின் அடிப்படைப் பாடம். ஆனால் இங்கே இன்றைய மார்க்ஸியர் திராவிட இடைநிலைச் சாதிக் காழ்ப்பரசியலில் மூளையை அழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய நிலவுடைமைக் காலக்கல்வியில் பிராமணர் அவர்களுக்கான கல்வியைக் கற்றனர். புரோகிதம், சோதிடம், தூது ஆகியவை அவர்களுக்கான தொழில்கள். அவற்றுக்கான கல்வி அது. பிறர் தங்களுக்குரிய கல்வியை கற்றனர். அக்கல்வியில் பிராமணர்களுக்கு எந்த செல்வாக்கும் இருக்கவில்லை. அவர்களால் அதை வடிவமைக்கவோ மாற்றியமைக்கவோ இயலாது என்பதே உண்மை.

முதலாளித்துவக் கல்வி ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்டது. அதில் ஆரம்பத்திலேயே நுழைந்தவர்கள் பிராமணர்கள், ஆகவே அவர்களுக்கு அதில் ஒரு முன்னிடம் இருந்தது. ஆனால் அதையும் அவர்கள் வடிவமைக்கவில்லை, கட்டுப்படுத்தவில்லை, மாற்றியமைக்கவுமில்லை. இந்தியாவின் பொதுக்கல்வியில் கிறிஸ்தவர்களாக மாறிய நாடார் முதலிய சாதியினர் பிராமணர்களை விட செல்வாக்குடன் இருந்தனர். இந்தியாவில் பொதுக்கல்வி வந்த முதல் தலைமுறையின் கல்வியாளர்களிலேயே பெரும்பாலானவர்கள் பிராமணரல்லாதவர்களே.

ஆக, எங்கே பிராமணர் பிறர் கல்வியை தடுத்தனர்? என்னுடைய சாதி பொதுக்கல்வி அறிமுகமானதுமே உள்ளே சென்று முதன்மையிடம் பிடித்தது. அதற்கு முன் குறைந்தது நாநூறாண்டுகளாக கல்வியில் தொடர்ச்சியாக மேன்மையுற்றே இருந்தது. மலையாளத்தின் செவ்விலக்கியங்கள் பெரும்பாலும் நாயர்களால் எழுதப்பட்டன. வியாச மகாபாரதத்தின் முழுமையான சம்ஸ்கிருத மூலம் அவர்களிடமே இருந்தது. ஃபாசனின் சம்ஸ்கிருத நாடகங்கள் எங்களூரில்தான் கண்டடையப்பட்டன.

பொதுக்கல்வி உருவானபோது சிலவகையான சிக்கல்களும் உருவாயின. பழைய சமூகத்தில் ஒரு சிற்பியின் கல்வி பிராமணர்களின் கல்விக்கு நிகரானது.ஆனால் பிராமணர்களின் கல்வி மொழி சார்ந்தது, ஆகவே அவர்கள் பொதுக்கல்விக்குள் எளிதில் நுழைந்தனர். சிற்பிகளின் செயல்சார்ந்த கல்விமுறை ஒட்டுமொத்தமாகவே தேவையற்ற ஒன்றாக ஆகியது. அவர்களின் கல்வியதிகாரம் இல்லாமலாகியது.

அப்படியென்றால் கல்விக்கெதிரான ஒடுக்குமுறை இருந்ததில்லையா? இருந்தது. இரண்டு வகையில். நிலவுடைமைச் சமூகத்தில் ஒரு சாதி அச்சாதிக்குரியது அல்லாத ஒரு கல்வியை அடைவது தடுக்கப்பட்டது. ஒரு புலையர் சம்ஸ்கிருதம் கற்கமுடியாது. பொன்வேலையும் மரவேலையும்கூட கற்கமுடியாது. அவர் தண்டிக்கப்படுவார். நாயர்கள் சம்ஸ்கிருதப் பேரறிஞர்களாக இருந்தனர். ஆனால் வேதம் பயிலமுடியாது. அரசனால் தண்டிக்கப்படுவார்கள்.

அன்று தீண்டப்படாதவர்களாக இருந்த ஈழவர்கள் சம்ஸ்கிருதம் அறிந்ந்திருந்தனர். ஏனென்றால் அவர்கள் மருத்துவம் செய்தனர். ஆனால் அவர்கள் தச்சுப்பணி கற்றுக்கொண்டால் தண்டிக்கப்பட்டனர். இது ஒடுக்குமுறைதான். ஆனால் இது அன்றைய சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பு சார்ந்தது.எவருடைய சூழ்ச்சியும் அல்ல. அன்றைய பொதுமனநிலையே அதுதான்.

சமூகத்தின் கீழ்நிலையில் இருந்த தலித் மக்கள் அவர்களுக்கு வேளாண்மைக்கு தேவையாக இருந்த சில அடிப்படை அறிவு மற்றும் மந்திரவாதச் சடங்குகள் அன்றி எதையும் கற்கக்கூடாதென விலக்கப்பட்டனர். மிகக்குறைவான கல்வி கொண்டவர்கள் அவர்களே. ஆனால் அதற்குப் பொறுப்பு அவர்களுக்கு மேலே இருந்த எல்லா சாதியினரும்தான். பிராமணர்கள் மட்டுமே அதற்குப்பொறுப்பு என்பது அப்பட்டமான மோசடி மட்டுமே.

ஒரு திரைப்படத்தில் வெட்டியானாக வேலைசெய்யும் கவுண்டமணி தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பிராமணர் ஒருவர் தடுப்பதாக ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். தமிழ் இடைநிலைச் சாதியப்புத்தியின் மிகத்தேர்ந்த சூழ்ச்சி வெளிப்படும் காட்சி அது. நடைமுறையில் அவ்வாறு தலித் மக்கள் கல்வி பெறுவதை தடுத்தவர்கள், இன்றும்கூட குமுறிக்கொண்டிருப்பவர்கள் எவர் என நமக்கு நம் குடும்பங்களிலேயே தெரியும். அதைப்பேச, எழுத ஏன் தவிர்க்கிறோம்? ஏனென்றால் நாம் அந்த மனநிலையை நாமே கொண்டிருக்கிறோம். அதை ஆராயவும், கடந்துசெல்லவும் விரும்பவில்லை. ஆகவே பிராமணரை பழியாக்கி ஒளிந்துகொள்கிறோம்.

பொதுக்கல்வி அறிமுகமானதுமே, இந்தியாவில் தலித் கல்வியும் தொடங்கிவிட்டது. சென்னையில் பிரம்மஞான சங்கத்தினர் தலித்துகளுக்கான பாடசாலைகளை ஆரம்பித்தபோது இந்தியாவில் பொதுக்கல்வி தொடக்கநிலையிலேயே இருந்தது. பிரிட்டனிலேயே பொதுக்கல்வி அப்போதுதான் முழுமையாகப் பரவத் தொடங்கியிருந்தது. திருவிதாங்கூரில் ரிங்கல்தௌபே, சார்ல்ஸ் மீட் , ஜேம்ஸ் எம்லின் போன்றவர்கள் பொதுக்கல்வியை கொண்டு வரும்போதே தலித்துக்களையும் உள்ளிட்டே அறிமுகம் செய்தனர்.

அப்போது தலித் மக்கள் கல்விகற்க தடையாக இருந்தவர்கள் பெரும்பாலும் தலித் அல்லாத சாதியினர் அனைவருமே. எண்ணிக்கையில் மிகுதியானவர் என்பதனால் பிராமணரல்லா உயர் சாதியினரே அந்த ஒடுக்குமுறையை நிகழ்த்தினர். அதை மீறி முதல் தலைமுறையிலேயே தலித் மக்களில் உயர்கல்வி கற்றோர் உருவாகி விட்டனர். அயோத்திதாசர், எம்.சி.ராஜா போன்றவர்கள்  இங்கே உருவான பொதுக்கல்வியின் முதல் தலைமுறையினர்.

கல்விக்கான உரிமையை ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சாதியும் அன்றிருந்த அமைப்புடன், தங்களுக்கு மேலே இருந்த சாதியுடன் போராடியே அடைந்தனர். இன்றுகூட அப்போராட்டம் தொடர்கிறது. ஆகவே பிராமணர்கள் கல்வியை பிறருக்கு மறுத்து தாங்கள் மட்டுமே கற்றனர் என்பதைப்போல பொய் பிறிதொன்றில்லை.

ஒருவரின் அடிப்படை நேர்மை என்பது தானோ, தன் முன்னோரோ செய்த பிழைகளுக்குப் பொறுப்பேற்பதிலுள்ளது. என் முன்னோர் தங்களுக்குக் கீழே இருந்தவர்களை ஒடுக்கினர் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமே இல்லை. என் முன்னோரின் கல்வி, பண்பாடு ஆகியவற்றை நான் ஏற்கையிலேயே அவர்களின் அந்த ஒடுக்குமுறையின் பழியையும் கருத்தில்கொள்வேன். இ.எம்.எஸ் அதைத்தான் கற்பித்தார். தமிழகத்தில் அப்பழியை பிராமணர்மேல் போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ள கற்பித்தவர்களே ஆசிரியர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்…
அடுத்த கட்டுரைஆலயக்கலை – கடிதம்