இலக்கியக் கணவர்கள், கடிதம்

இலக்கியவாதிகள் நல்ல கணவர்கள் இல்லையா?

அன்புள்ள ஜெ

நேற்றைக்கு முன்தினம் அசோகமித்திரனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான படைப்புக்கலை நூலை வாசித்தேன். சுரேஷ் பிரதீப் ஞாயிறுதோறும் செய்யும் நூலறிமுகங்களில் இந்நூலை அறிமுகப்படுத்தியிருந்தார். படைப்புக்கலையின் கட்டுரை வரிசையில் மனைவிகள் என்றொரு கட்டுரை இருக்கிறது.

அசோகமித்திரன் அக்கட்டுரையில் சாக்ரடிஸின் மனைவி ஜாந்திபி பற்றி மாக்ஸவெல் எழுதிய Barefoots on Athens நாடகத்தையும் ஆபிரகாம் லிங்கனின் மனைவி மேரியும் டால்டாயின் மனைவி சோபியாவும் சோபியாவுக்காக பரிந்து பேசிய மாக்ஸிம் கார்க்கியையும் அவரது மனைவியையும் என நான்கு பேரை எடுத்து கொள்கிறார். முதல் மூன்று மனைவிமார்கள் குறித்து பொதுவான சமூக சித்திரம் மிக எதிர்மறையானது. ஆனால் அசோகமித்திரன் இம்மனைவிமார்களின் நியாயத்தை எடுத்து கொண்டு பேசுகிறார். அவர்கள் செய்தவற்றில் பிழைகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் எதிர்கொண்ட கணவன்கள் ஒரு சாதாரண பெண்ணின் எதிர்ப்பார்ப்பிற்கு முரணானவர்கள். எனவே அப்பெண்களின் பிழைகளை காணும் நேரத்திலேயே எதிர்மறையான வில்லன் முத்திரையிடாமல் புரிந்து கொள்வோம் என்கிறார். மாக்ஸிம் கார்க்கி சோபியாவுக்காக இரங்கி பேசியது இக்கோணத்திலேயே என்கிறார். இன்றைக்கு வெளியான எழுத்தாளர்கள் மோசமான கணவர்களா ? என்ற கட்டுரையை படித்தவுடன் அண்மையில் வாசித்த அமியின் மனைவிகள் கட்டுரையே நினைவில் வந்தது. அக்கட்டுரையை வாசிக்கையில் எழுத்தாளன் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் என தோன்றியது. அவனுக்கே அம்மனவிரிவு சாத்தியம். ஆனால் அமி அந்த பெரிய மனிதர்களை பற்றி எதுவும் சொல்லாவிடினும் டால்ஸ்டாய் சற்று வில்லங்கம் பிடித்த கணவன் என்பதாக கற்பனை பண்ணி கொள்வது வாசக தவறு.

உங்கள் கட்டுரையை வாசித்து செல்லச்செல்ல என் சின்னஞ்சிறு வாசிப்பு நினைவில் இருந்து எடுத்து பார்க்கையிலும் கூட எழுத்தாளர்கள் நல்ல கணவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது உறுதி. இதற்கு நேர்மாறாக எண்ணி கற்பிதம் செய்து கொள்வது சொந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து வருவதே தான். இங்கே பொதுவாக காணக்கிடைக்கும் இரண்டு வகை கணவர்களை குறித்து சொன்னீர்களே, அதில் மனைவிகளின் உரிமைகளை பறித்து கூண்டு கிளியாக வளர்க்க விரும்பும் இரண்டாம் வகை ஆண்களின் தொகை அதிகமே. இன்னும் ஒரு தலைமுறை காலமாவது இது மாற போவதில்லை. நம் பெண்கள் இன்று கல்வியும் வேலையும் பெறுகிறார்கள். ஆனாலும் அது பல வழிகளில் இனிமை என்னும் பெயரில் அவர்களை விட்டு அகல செல்கிறது. அவற்றை கடந்து பெண்கள் நிற்க வேண்டும். பின்வரும் ஆண் வாரிசுகள் மாற வழிவகுக்கும்.

இறுதியாக கட்டுரை முழுக்க தமிழின் முதன்மை எழுத்தாளர்களின் இணையருடன் இருக்கும் படங்களின் தேர்வு அற்புதம். எல்லாமே மலர்ந்து மகிழ்வில் திளைத்திருப்பவை. நீங்கள் சொல்வது உண்மை தான், பெரும்பாலான இணையர் முதிரும் தோறும் பேச எதுமில்லாதவர்களாக ஆகிவிடுவதையே நாம் பார்க்கிறோம். பேச எதுமில்லாமல் ஆவது பகிர்வதற்கு எதுவும் இல்லாது ஆகும் உளநிலையே. அங்கே பிரியத்தின் மலர் பூத்து நிற்பதில்லை. உலகியலில் சறுக்கல்கள் நிகழலாம், ஆனால் நல்ல எழுத்தாளனின் மனைவி அவனை புரிந்து கொண்டவளென்றால் பேறு பெற்றவளே

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைபவா என்னும் அழகன் – ராஜன் சோமசுந்தரம்
அடுத்த கட்டுரைகுருகு- தூரன் விருதுச் சிறப்பிதழ்