நஞ்சிலாச் சோலை

காடு புதிய பதிப்பு வாங்க

இளமையில் காட்டில் சிறிதுகாலம் வாழ்வதென்பது ஒரு நல்லூழ். அது எனக்கு வாய்த்தது. நான் பிறந்து வளர்ந்ததே மழைக்காட்டில்தான். எங்களூரின் பசுமைமாறாக் காடுகளில் மண் காய்ந்ததே இல்லை. உயிர்ச்செறிவின் உலகம் அது. அங்கே என் பதின்பருவத்தில் அலைந்து திரிந்திருக்கிறேன்.

1979 ல் ஒருமுறை பேச்சிப்பாறை மலைக்காட்டின் உள்ளே சென்று ஒரு பாறைச்சரிவில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். மரவள்ளி கிழங்கு பிடுங்கி வர ஒருவன் இறங்கிச் சென்றான்.

அவன் சென்ற அதேவழியில் சில நிமிடங்கள் கழித்து என் தொடையளவு பருமனும் என்னைவிட அரைப்பங்கு நீளமும் கொண்ட ராஜநாகம் ஏறி வந்தது. அது வந்த ஓசையை நினைவுகூர்கிறேன். நீரோடையில் நீர் வருவதுபோன்ற ஒருவகை மெல்லிய கசங்கலோசை.

எங்களைப் பார்த்ததும் பத்தி விரித்து எழுந்தது. எங்கள் இடைவரை உயரம். ஒரு சாணுக்குமேல் அகலமான பத்தி. ஆனால் வியப்பு எங்கள் அச்சத்தை அழித்துவிட்டிருந்தது. பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தோம்.

எனக்கு அப்போது தோன்றிய எண்ணத்தை நினைவுகூர்கிறேன்.ஒரு பெரிய சேனைக்கிழங்குச் செடி, ஆனால் சேப்புக்கிழங்கு இலை கொண்டது. திடீரென முளைத்துவிட்டிருக்கிறது. மணிக்கண்கள் எங்களைப் பார்த்தன. பத்தி அசைந்தது.

அப்படியே தணிந்து எங்கள் வலப்பக்கமாக ஒழுகிச்சென்று மறைந்தது. நீரோடையேதான். குளிர்ந்த அமைதியான நீர்வழிவு. அது சென்றதும் அதே வழியில் அந்த நண்பன் மரவள்ளிக்கிழங்குடன் வந்தான்.

“டேய் பாம்புடா….ராஜவெம்பாலை…டேய்…இதே வழியிலே இப்ப வந்தது” என்று பதறிக்கூவினோம்.

”போடா, டூப்படிக்காமல்” என்று அவன் சிரித்தான். நாங்கள் பதறுவதை அவன் பகடியாக நடித்தான்.

ஆனால் என் கண்களைச் சந்தித்ததும் உண்மை என உணர்ந்துகொண்டான். பீதியுடன் கைகால்கள் நடுங்க அப்படியே அமர்ந்துவிட்டான். பிறகு என்ன தோன்றியதோ விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். அன்றே காய்ச்சல் வந்துவிட்டது.

அன்று மேற்கொண்டு காட்டில் தங்காமல் திரும்பிவிட்டோம். அவனுக்கு நாகக்கண் பட்டுவிட்டது. நாகம் தன்னைத்தான் தேடிவந்தது என அவன் நம்பினான். காய்ச்சலில் நாகத்தின் வாசனையை உணந்து புலம்பிக்கொண்டே இருந்தான்.

கணியான் மந்திரவாதியிடம் அழைத்துச்சென்று நாகதோஷ பூஜை செய்தோம். முள்ளெலி முள்ளால் கடுக்காய் சாயத்தில் தொட்டு அரசிலையில் எழுதிச்சுருட்டிய தொன்மையான குறியீடுகளாலான மந்திரத்தை அவன் தன் மணிக்கட்டில் கட்டிக்கொண்டான். மீண்டுவிட்டான்.

அன்று கணியார் சொன்னார். “ராஜவெம்பாலை கடிச்சு செத்தவனை பாத்திருக்கீங்களா?”

“இல்லை” என்றோம்.

“கேள்விப்பட்டதுண்டா?”

“இல்லை”

உண்மையாகவே அது எவரையும் கடித்ததில்லை. ஆச்சரியத்துடன் அமர்ந்திருந்தோம்.

“விரியன் கடிச்சு மனுஷன் சாவான். ஏன்னா அது ஒளிச்சு கிடக்குதது. வெம்பாலைக்கு ரகசியமில்லை. அது பாதாளக்காட்டுக்க ராசாவாக்கும். விரியனுக்கு நாத்தமுண்டு, நாகத்துக்கு மணமாக்கும். நாகம் வேறே உரகம் வேறே”

கணியார் சொன்னார் “நாகம் பாதாளராஜா….அதுக்க வரவு ராஜவரவாக்கும் அதுக்கு. அது நம்மள மாதிரி சின்ன ஜென்மங்களைக் கடிக்காது….அது கடிச்சா ஆனை செத்திரும். ஆனா கடிக்காது…”

அதன்மேல் எடையாக கால்வைத்தால்கூட கொஞ்சம் மட்டுமே தீண்டும் என்றார் கணியார். பின்னர் நானும் அறிந்தேன். ராஜநாகம் தன் நஞ்சை மிக அளந்தே செலவழிக்கும். மிக அரிதாக.

காட்டின் அரசன் யானை. பாதாளத்தில் காட்டின் அரசன் ராஜநாகம். இரண்டும்தான் நான் மீண்டும் மீண்டும் எழுதுபவை. ஆனால் ஆச்சரியம், காடு நாவலில் யானை உள்ளது, பாம்பு இல்லை.

ஏனென்று நானே எண்ணிப்பார்த்தேன். ஏனென்றால் பாம்பு குறிஞ்சித்திணையில் இல்லை. கூடலும் கூடல்நிமித்தமும் நிகழும் மழைமுகில் குடைபிடித்த மலைகளில் நாகம் இருப்பதில்லை. அது ஆழத்திலெங்கோ உள்ளது.

துளி நஞ்சில்லாமல் வாழ்வில்லை. ஆனால் அந்நஞ்சுகூட இல்லாத நிலம் குறிஞ்சி. காடு குறிஞ்சியின் கதை. திகட்டாத ஒரு தித்திப்பின் சித்தரிப்பு. துயர் உள்ளது, இழப்பு உள்ளது, ஆனால் இனிமையை மேலும் இனிமையாக்குவது இழப்பதன் துயர் அல்லவா?

2003ல் இந்நாவலை நான் எழுதினேன். பல பதிப்புகளாக தமிழினி பதிப்பகம் இதை வெளியிட்டு வந்தது. இப்போது காடு விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ளது.

தொடர்ச்சியாக இருபதாண்டுகளாக வாசிப்பில் இருந்துவரும் ஒரு படைப்பு அது. பெரும்பாலான படைப்புகளுக்கு ஒரு சில ஆண்டுகளுக்குப்பின் மதிப்புரைகளோ ரசனைக்குறிப்புகளோ வருவதில்லை. காடு வெளிவந்த நாள் முதல் இன்று வரை மாதம் ஒரு ரசனைக்குறிப்பேனும் எழுதப்படும் ஒரு படைப்பு.

ஏனென்றால் அதனூடாக வாசகர்கள் செல்லும் காடு என்பது வெளியே மரங்களும், விலங்குகளும், மலைகளும் , ஓடைகளுமாக பரந்திருக்கும் ஒன்று அல்ல. தமிழ்ப்பண்பாட்டின் உள்ளே உறைந்திருக்கும் வறனுறல் அறியாச் சோலை.நாம் ஒவ்வொருவரும் கனவில் அங்கே சென்று மீண்டுகொண்டே இருக்கிறோம். காட்டுடன் கூடலை இணைத்துக்கொண்டது நம் மரபுள்ளம். அது ஒரு மகத்தான கற்பனை.

கபிலனை எண்ணி இக்கணம் மீண்டும் வணங்குகிறேன்.

முந்தைய கட்டுரைபூ. அருணாசலம்
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி உரை