சென்னை விளம்பரம், கோவை புத்தகக் கண்காட்சி, துபாய் இலக்கியவிழா…

இந்த மாதமும் பயணங்களே பாதிநாளை எடுத்துக்கொண்டுவிட்டன. சென்றமாதம் முப்பதாம் தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஈரோடு சென்றேன். ஒன்றுமுதல் மூன்றுவரை குருபூர்ணிமா கொண்டாட்டம். நான்காம் தேதி ஈரோட்டில் குருபூர்ணிமா சந்திப்பு. ஐந்தாம்தேதி தேன்வரந்தை குகைகளுக்கான பயணம். அன்றுமாலை சென்னை. ஆறாம் தேதி ஒரு வேட்டி விளம்பரத்துக்கான ‘நடிப்பை’ வழங்குதல். நண்பர் இளங்கோவன் முத்தையாவுக்காக.

அந்தக்குழுவே என் நல்ல வாசகர்களாலானது. பழைய புதிய நூல்களில் கையெழுத்துகள் வாங்கிக்கொண்டார்கள். நான் எண்ணியது வழக்கமான ஒரு ‘பைட்’ அளிக்கும் சடங்கு என. ஆனால் அது கிட்டத்தட்ட சினிமாப்படப்பிடிப்பேதான். வேடிக்கையான அனுபவமாக இருந்தது.

ஆறாம்தேதி கிளம்பி நேராக கோவை. ஏழாம் தேதி முழுக்க அங்கே அமர்ந்து கம்பன் உரையை தயாரித்தேன். ஜூலை எட்டு கம்பன் விழா உரை. அந்த உரை நான் எண்ணியதுபோல நிகழவில்லை. அதற்கான சூழல் அமையவில்லை. என் உளநிலைதான் காரணம். இனிமேல் அதைப்போன்ற பெரிய விழாக்களில் பேசக்கூடாதென்ற முடிவை எடுத்தேன். அத்தகைய நிகழ்வுகளில் விழாக்கொண்டாட்டம் முதன்மைப்பட்டு உரை இரண்டாம்பட்சமாக ஆகிவிடுகிறது. தயாரித்த அந்த உரையை எண்ணியபடி வேறெங்காவது ஆற்றவேண்டும்.

பொதுவாக, பலர் பேசும் அவைகளில் ஒரு பேச்சாளனாக இனிமேல் செல்லவேண்டாம் என நினைக்கிறேன். நூல் வெளியீட்டு விழாக்கள் போன்றவை. என்னால் சம்பிரதாயமான உரையை ஆற்ற முடிவதில்லை. நான் எண்ணிய உரையை ஆற்றும் சூழல் அங்கே அமைவதில்லை. எவரும் கேட்கும் மனநிலையில் இருப்பதில்லை. அரங்கு எவர் கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை என்பதனால் நம் உரையை பிற உரைகள் சிதறடித்து பயனற்றதாக்கியும் விடுகின்றன.

ஆகவே இனிமேல் பொதுநிகழ்வுகளில் உரையாற்ற அழைக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். இதை அறுபது கடந்த ஒருவருக்கான சலுகையாக நம் அறிவுச்சமூகம் அளிக்கலாம். இனி அதிக நேரம் இல்லை. செய்தாகவேண்டிய பணிகளோ பெருகி கண்முன் நின்றுள்ளன.

ஒன்பதாம் தேதி கோவையில் இருந்தேன். நண்பர்கள் சந்திக்க வந்தனர். வழக்கமான அளவளாவல். மதிய உணவுக்காக கோவை முழுக்க காரில் அலைந்தோம். எல்லா ஓட்டலிலும் கூட்டம். எனக்கு காத்திருந்து சாப்பிடுவது பிடிக்காது. உணவு சுமாராக இருந்தாலும் சரி, கூட்டமில்லாத ஓட்டலில் சாப்பிடுவோம் என்றேன். ஜிஎஸ்எஸ்வி நவீன் காரில் சுற்றிச் சுற்றி வந்து ஓர் உணவகத்தை கண்டுபிடித்துச் சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது.

பத்தாம் தேதி காலையில்தான் நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். மூன்றுநாட்கள் வீட்டில் இருந்தேன். பதிமூன்று மாலை ரயிலில் பெங்களூர் சென்றேன். தேவதேவனின் மகன் திருமணம். அந்த மணநிகழ்வுக்காக ஆறுமாதமாக பார்க்கும்போதெல்லாம் என்னை அழைத்துக் கொண்டிருந்தார். பொதுவாக நான் திருமணங்களுக்கே செல்வதில்லை. என் சொந்த பெரியம்மா மகன்களின் குழந்தைகளின் திருமணங்களுக்குக்கூட அருண்மொழிதான் சென்றுவந்தாள்.

நான் வரமாட்டேன் என பொதுவாக அனைவருக்கும் தெரியுமென்பதனால் பிரச்சினை இல்லை. ஏன் தம்பி வரவில்லை என்று கேட்டால் ‘அவன் பெரிய எழுத்தாளனாக்கும், உன்னைபோல வெட்டியாக கல்யாணங்களுக்கு வருபவன் அல்ல’ என்று பாகுலேயன் பிள்ளை மகன் பாலசங்கரப் பிள்ளைவாள் சீறி எழுந்துவிடுவார்.

திருமணங்கள், விழாக்களுக்கு செல்வது மகிழ்வானது. சமூகமயமாக்கலின் ஒரு பகுதி. ஆனால் அது என்னைப்போன்ற ஒருவருக்கு நேரவிரயம். மிகப்பெரிய நட்புவளையம் உள்ளது. ஒருவர் நிகழ்வுக்குச் சென்று இன்னொன்றை தவிர்க்க முடியாது. அனைவர் நிகழ்வுக்கும் செல்லவேண்டுமென்றால் என் எஞ்சிய வாழ்க்கையை அதற்கென மட்டுமே அளிக்கவேண்டியிருக்கும்.

ஆனால் தேவதேவன் மகன் திருமணத்துக்குச் சென்றேயாகவேண்டும். வேறுவழியே இல்லை. அவர் என் ஆசிரியர், எனக்கான கவிஞர். பெங்களூரில் நண்பர் கோகுல் இல்லம் சென்று அங்கே தங்கினேன். கிருஷ்ணன், அந்தியூர் மணி ஆகியோர் ஈரோட்டிலிருந்து வந்தனர். புவனேஸ்வரி என்னை ரயில்நிலையம் வந்து அழைத்துச் சென்றார். ஜி.எஸ்.எஸ்.வி நவீன் மற்றும் கிருபா வந்தனர். மேலும் நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். மாலை ஐந்து மணிக்கு இரண்டு கார்களில் கிளம்பி மொத்த பெங்களூரையும் கடந்து நிகழ்ச்சி நடந்த ரிசார்டுக்குச் சென்றோம்.

மணமகள் வங்கத்தைச் சேர்ந்தவர். ஆகவே திருமணம் வங்க முறைப்படி. ஏழுமணிக்குக்கூட திருமணம் தொடங்கவில்லை. நள்ளிரவிலேதான் முதன்மை நிகழ்வாம். தேவதேவன் பளபளக்கும் ஜிப்பாவுடன் வழக்கம்போல திக்குத்தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். உள்ளங்கையில் மருதாணியெல்லாம் போட்டிருந்தார். வங்காள அணி உள்ளே ஏதோ சடங்குகளில் ஈடுபட்டிருந்தது. நாங்கள் வெளியே காத்திருந்தோம்

நான் அந்தியில் சாப்பிடுவதில்லை. ஆகவே சில பழத்துண்டங்களைச் சாப்பிட்டேன். மணமக்களை வாழ்த்திவிட்டு ஒன்பது மணிக்கு கிளம்பி பதினொரு மணிக்கு மீண்டும் கோகுல் வீட்டை அடைந்தோம். அதன்பின் இசை, பெரியசாமித் தூரன் என பேசி தூங்கச்செல்ல ஒருமணி ஆகியது. இந்த விழாவில் கண்டுகொண்டது பத்துகிலோ எடை குறைப்பதன் முதற்சிக்கல் எல்லா உடைகளையும் புதியதாக வாங்கவேண்டுமென்பது. ஆடைகளெல்லாமே ஜிப்பா போல ஆகிவிட்டன. ஜீன்ஸ்கள் பைஜாமாக்கள்போல.

பதினைந்தாம் தேதி காலை பத்துமணிக்கு கோகுல் வீட்டில் ஒரு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. ஏற்கனவே அவரிடமிருக்கும் நண்பர் குழுவுக்கு தெரிவித்து நாற்பதுபேர் வருகையை உறுதிசெய்துவிட்டனர். ஆகவே இணையத்தில் அறிவிக்கவில்லை. நண்பர்கள் வெண்முரசு முதல் தியானம் வரை வெவ்வேறு களங்களில் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்து பேசினேன். மாலை நான்கு மணிக்குச் சந்திப்பு முடிந்தது. ஏறத்தாழ ஆறுமணி நேரம். மதிய உணவு அங்கேயே ஏற்பாடாகியிருந்தது.

சந்திப்புக்கு விஷால்ராஜாவும் லண்டனில் இருந்து புதுச்சேரி மனைவி இல்லம் வந்த அனோஜன் பாலகிருஷ்ணனும் வந்திருந்தார்கள். மாலை நான்கு மணிக்கு ரயில்நிலையம் கிளம்பினோம். நண்பர்கள் ரயில்நிலையம் வந்து ஏற்றிவிட்டனர். பதினாறாம்தேதி நாகர்கோயில்.

இங்கே இன்னும் சிலநாட்கள். வரும் ஜூலை 22 அன்று மாலை கோவை செல்கிறேன். கோவையில் 23 ஆம் தேதி முதல் புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் அரங்கில் (219-221) இருப்பேன். 24 ஆம் தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் சங்க இலக்கியம் பற்றிப் பேசுகிறேன். பொதுமேடை, என் உரை எப்படி அமையும் என கொஞ்சம் தயக்கம் உள்ளது.

28  வரை நான் கோவையில் புத்தகக் கண்காட்சியில் இருக்க வாய்ப்புள்ளது. 29 ஈரோடு ஒரு நிகழ்வு. 30 அன்று திரும்பிவிடுவேன். ஜூலை இவ்வாறாக கிட்டத்தட்ட முடிகிறது.

ஆனால் அடுத்து உடனே ஆகஸ்டின் நிகழ்வுகள். ஆகஸ்ட் 4 கிளம்பி ஆகஸ்ட் 5 ஈரோடு. ஐந்தும் ஆறும் தூரன் விழாக்கள். ஆகஸ்ட் இரண்டாம் வாரமே ஒரு வட இந்திய பயணத்தை கிருஷ்ணன் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.

செப்டெம்பர் 23 அன்று துபாயில் பரணி கலைவிழா நிகழ்கிறது. நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். அருண்மொழி, சைதன்யாவுடன் செல்லலாம் என திட்டமிட்டிருக்கிறேன். ஒரு நாள் கூடுதலாகத் தங்கி துபாய் பார்த்துவிட்டு திரும்புவது திட்டம். இன்னும் பயணச்சீட்டு போடவில்லை. அவர்கள் இருவரும் துபாய் இன்னும் பார்த்ததில்லை.

பயணங்கள் வழியாக பயணங்கள் என அமைந்துள்ளன இந்நாட்கள். நடுவே சினிமாப் பயணங்களையும் சேர்த்துக்கொண்டால் வீட்டுக்குத்தான் அவ்வப்போது வந்துசெல்கிறேன்.

முந்தைய கட்டுரைஅல் கிஸா- சில சொற்கள்- அஜிதன்
அடுத்த கட்டுரைஜூலை மாத கவிதைகள் இதழ்