’ஜெயமோகன் மாடல்’
அன்புள்ள ஜெயமோகன்,
மாடல் கட்டுரையை படித்தேன். அந்த கட்டுரையில் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உங்களை நீங்கள் முன்வைப்பதை ஆதரிக்கிறேன்.
பெண்கள் பணத்தாசை பிடித்தவர்கள், வெளியில் வாங்கித் தின்கிறார்கள், நுகர்வு வெறியர்கள் என்ற பட்டாசு வெடி கொஞ்சம் மிகை. உண்மையில் இன்றைய ஆண்களும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள் ஜெ. இந்த காலகட்டமே.
மேலும் அறிவுலக ஆண்களுக்கு துணை கிடைப்பதில்லை என்பது போலவே பெண்களுக்கும் கிடைப்பதில்லை. கலை வழியாக தன்னை வளர்த்துக்கொள்ள ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு அவ்வளவு எளிதாக திருமணம் கைகூடுவதில்லை. இதுதான் நிதர்சனம். கலை ஆர்வம் இருக்கலாம். ஆனால் குடும்பத்தை மகிழ்விக்க ஓர் அணிகலனாக இருக்குமளவுக்கு கலை வெளிப்பட்டால் போதும். இதுவே எதிர்பார்ப்பு (இது சற்றேனும் கலை ஆர்வம் உள்ளவர்களை பற்றி. பெரும்பான்மை நீங்கள் சாடும் நுகர்வர்கள் தான்)
இசை, நடனம் போன்ற கலைத்துறைகளில் இருப்பவரிடம் கூட இதை கவனித்திருக்கிறேன். நிகழ்த்துக்கலைகளில் தீவிரமான ஆம்பிஷன் உள்ள பெண்ணுக்கு மணத்தேடலும் – சிலபோது மணவுறவும் – போராட்டமாகவே அமைகிறது. இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று தான் அவளிடம் எப்போதும் சொல்லப்படுவதாக தோன்றுகிறது. அறிவுத்தோழி தன் காதலை சொல்ல அதை நிராகரித்த நண்பனை எனக்குத் தெரியும். அவளிடம் நீ அறிவுக்கான தோழி. அறிவுத்தோழியுடன் வாழ்க்கை அமைத்தால் சரிவராது என்றான். பிறகு தன் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை மணமுடித்தான். அதை அறிந்த போது எனக்கு கொதிப்பாக இருந்தது. அந்த மனநிலை விளங்கவில்லை. ஏன், அறிவுத்தோழியால் இல்லத்தை நிர்வாகம் பண்ண முடியாதா? உள்ளத்தை பகிர முடியாதா? உடலையும் அறிவையும் பிளந்து பார்க்கும் இந்த பார்வை பெண்களை அவமதிப்பதல்லவா? அந்த லாஜிக்கை ஆண் நண்பர்கள் நான் திரும்பத் திரும்ப சொல்லி கேட்டேன். தன்னை விட மேம்பட்ட பெண்ணைக் கட்டினால் அவள் ஆணை அமைந்து இருக்க விட மாட்டாள். அவள் உந்திக்கொண்டே இருப்பாள். அது அவனை பெரிய தாழ்வுமனப்பான்மைக்கு கொண்டு போகும். இப்படியெல்லாம் சொல்கிறார்கள். இன்று அதை ஆண் மனம் சார்ந்த ஒரு யதார்த்தம் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆண்களுக்கு தங்களை விட விசால புத்தி கொண்ட பெண் வாழ்க்கைத்துணையாக தேவையில்லை என்று தான் புரிந்துகொள்கிறேன். அந்த அளவுகூட சுயநிமிர்வும் தன்னம்பிக்கையும் இல்லாத ஆணை ஒரு கூர்மையான பெண்ணால் தன் ஆழத்தில் தனக்கானவனாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்பது இதன் அடுத்த நிலை.
ஆக அறிவுலகக் கனவுகள் கொண்ட ஆண்மகனுக்கு ஓரளவு பொருத்தமான தன் அறிவுவாழ்க்கையை நிகழ்த்த அடித்தளம் அமைக்கக்கூடிய பெண் கிடைக்கவாவது கிடைப்பார்கள். அறிவுலக கனவுகள் கொண்ட பெண்களுக்கு அது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை. திருமண இல்லம் தனக்கு பலமான அடித்தளமாக அமையும் பெண் கலைஞர்கள் வெகுச்சிலரே. அப்படி இருக்க உங்கள் கட்டுரை புன்னகைக்க வைத்தது. ஆண் கலைஞன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் அவனுக்கு எவ்வளவு ஆலோசனைகள்! எவ்வளவு மாடல்கள்! ஒப்புநோக்க பெண்கள் தனித்தனியாக தங்கள் வழிகளை திரிந்து கண்டடைய வேண்டியிருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம் காலத்தில் எப்போதுமே பொது விவாதமானதாக எனக்கு நினைவில்லை.
சரி. அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரிய இலக்குகளோடு கணிசமான பெண் படைப்பாளிகள் உருவாகி வருவார்கள். அதை உத்தேசித்து கேட்கிறேன். இதே கட்டுரை படைப்பார்வம் கொண்ட பெண்களை நோக்கி எழுதப்பட்டால் எப்படி அமையும்? என்ன மாடலாக இருக்கும் அது? அருண்மொழி மாடல் என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஐம்பது வயதில் முதல் புத்தகத்தை எழுதி இளம் எழுத்தாளராவதும் நல்வாய்ப்புதான் என்றாலும்.
இப்படிக்கு,
நீலி
*
அன்புள்ள நீலி
உங்கள் மின்னஞ்சல் சுவாரசியமானது. மின்னஞ்சல் முகவரியும் சுவாரசியமானது. [email protected]. மிகப்பிரமாதமாக உங்களை ஒளித்துக் கொள்கிறீர்கள்.
என்னுடைய முந்தைய பதில் ஆண்களுக்கானது. அதில் நான் சொல்லியிருப்பது ஓர் அன்றாட நடைமுறை ஆலோசனை மட்டுமே. தமிழில் எழுதப்புகும் ஓர் இளைஞன் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க வாழ்க்கைகளில் ஒன்றுதான் என்னுடையது என ஐயமற என்னால் சொல்லமுடியும். அதைச் சொல்கிறேன். கூடவே அந்த முன்னுதாரணத்தை எந்தவகையிலும் மிகைப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். அது தமிழகத்தின் உலகியல் சூழலில் எந்த வகையிலும் மதிப்பிற்குரியது அல்ல. நுகர்வு- சமூகநிலை ஆகியவற்றை மட்டுமே அளவீடாகக் கொண்டுள்ள தமிழ்ப்பெண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு அது ஏளனத்திற்குரியது மட்டுமே.
ஏனென்றால் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் எந்தவகையான அறிவுச்சூழலிலும் வளர்க்கப்படுவதில்லை. அறிவியக்க அறிமுகம் அவர்களுக்கு நிகழ பொதுவாக வாய்ப்பே இல்லை. இந்த நடைமுறை உண்மை தெரியாமல் மனச்சோர்வுக்குள்ளாகும் இளம் இலக்கிய வாசகர்களை அனேகமாக ஒவ்வொரு நாளும் கண்டுகொண்டே இருக்கிறேன். பலர் முடிவில்லாமல் வாழ்க்கையை ஒத்திப்போடுவதையும் காண்கிறேன். அவர்களுக்காகவே அதை எழுதினேன். ஆகவே பொருளியல் அளவுகோலின்படி தனக்கு அமையும் பெண்ணை மணப்பதே உசிதம். அந்தப்பெண் உளக்கூர்மையுடையவள் என்றால், மணப்பவருக்கு அவளை அறிவுலகுநோக்கி ஈர்க்கும் அறிவாற்றலும் அன்பும் இருக்குமென்றால், அவளை தனக்குரிய இணையாக ஆக்கிக்கொள்ள முடியும். அதற்கும் ஏராளமான முன்னுதாரணங்கள் அண்மைக்காலத்தில் உள்ளன.
இது என் தனியனுபவங்களை ஒட்டி நான் சொல்வது. என் தனியனுபவங்களே எனக்கு ஆதாரம். இது ஓரு நடைமுறை யதார்த்தம். இது அறிவார்ந்த தளங்களில் அறிமுகமுள்ள பெண்களின் அகங்காரத்தைப் புண்படுத்துமென தெரியும். ஆனால் உண்மை என்றும் அவர்கள் அறிவார்கள். அவர்களே தங்கள் தோழிகளின் சூழலில் மிகுந்த தனிமை கொண்டிருப்பார்கள். வாசிக்கும் பெண்கள் அனைவருமே என்னிடம் சொல்லும் முதன்மைப் பிரச்சினை இந்த திகைப்பூட்டும் தனிமைதான். இந்த தனிமையை அஞ்சியே வாசிப்பை, அறிவுச்செயல்பாட்டை உதறிவிட்டோம் என்று சொல்பவர்களே சிலர் உள்ளனர். இந்த நடைமுறை உண்மையைச் சொல்லும்போது சொல்பவன் மேல் சீற்றம் கொள்ளாமல் அந்த உண்மையை நோக்கிச் சிலர் செல்லவேண்டுமென விரும்புகிறேன்.
*
இனி நீங்கள் சொல்லும் தரப்பு. நான் சொல்வது என் அனுபவதளம் சார்ந்த உண்மை. நீங்கள் சொல்வது உங்கள் அனுபவ தளம் சார்ந்த உண்மை. இரண்டுக்குமே நிரூபணங்கள் இல்லை. நான் நீங்கள் சொல்வதை உண்மை என எடுத்துக் கொள்கிறேன்.
பெண்களில் வாசிப்பவர்கள், அறிவியக்க ஈடுபாடு கொண்டவர்கள் நீங்கள் சொல்லும் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பதை நானும் அறிவேன். வெவ்வேறு பெண்கள் அவற்றை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நீண்டநாட்களுக்கு முன்பு இந்திரா பார்த்தசாரதி ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ என்னும் நீள்கதையை எழுதினார். சுவாரசியமான ஒரு கதை. ஒரு டெல்லி அறிவுஜீவிப் பேராசிரியர் கதைநாயகன். அவருடைய மனைவி ஒரு கிராமத்து பெண்மணி. அவருக்கு அவள்மேல் ஏளனம், தனக்கு அவள் பொருத்தமில்லை என எண்ணம்.
பேராசிரியர் ஒரு நவீன அறிவுஜீவி டெல்லிப் பெண்மணிமேல் மையல் கொள்கிறார். அவளே தன் துணைவி என மருகுகிறார். அவள் அவருடன் ஒரு நாள் தங்க ஒப்புக்கொள்கிறாள். இருவரும் இடம்தேடிச் செல்கிறார்கள். எங்குபோனாலும் பேராசிரியருக்கு பயம் பதற்றம். அந்த தனிமைச் சந்திப்பு நிகழவே இல்லை.
அவள் ஏளனமாகச் சொல்கிறாள். “எனக்கு இப்படி ஆகுமென தெரியும். வேண்டுமென்றேதான் இதைச் செய்தேன். நீ ஒரு சாமானியன். அறிவுஜீவித்தனம் உன் வேஷம். அது உனக்கே தெரியும். ஆகவேதான் டெல்லியில் வாழும் நீ ஊருக்குப்போய் கிராமத்துப் பெண்ணை தேடி மணம் செய்துகொண்டாய். உன்னுள் வாழும் உண்மையான உனக்கு அவள்தான் சரியான துணை. அவள்மேல் நீ கொண்டுள்ள ஏளனமெல்லாம் பாவனைதான். நீ மேலானவன் என நீயே சொல்லிக்கொள்ள அதை நடிக்கிறாய். போ, பாவனைகளை விட்டுவிட்டு அவளுடன் மகிழ்ச்சியாக இரு”
இங்கே ‘அறிவுஜீவி’ என நடிப்பவர்களே 90 சதவீதம். தனிவாழ்வில் சாதி, மதம், குடும்பம் என எளிய வட்டத்துள் வாழும் எளிய மனிதர்கள் அவர்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் அலுவலகங்கள் வீடுகளிலெல்லாம் பிள்ளைப்பூச்சிகள். அம்மா சொன்னதை மீறி நினைத்தே பார்க்கமுடியாதவன் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாக ஆலோசனை சொல்லும் நாடு இது. அவர்களால் அறிவார்ந்த பெண்ணை ஏற்கமுடியாது. ஆனால் மெய்யான அறிவியக்க ஈடுபாடுள்ளவனின் இயல்பு அவ்வாறு இருக்காது என்பதே இது வரை நான் அறிந்த உண்மை.
எனக்கு தோராயமாக ஒரு ஐம்பதாயிரம் வாசகர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். (பல்வேறு கணக்குகளின் அடிப்படையில்). அவர்களில் இரண்டாயிரம்பேர் வரை பெண்கள் இருக்கலாம். அவர்களில் ஒரு ஐநூறுபேர் வரை முப்பது வயதுக்கும் குறைவான பெண்கள். தொடர்ச்சியாகத் தொடர்பிலிருப்பவர்கள் நூறுக்கு அருகில். இந்த எண்ணிக்கை, விகிதாச்சாரம் இரண்டும் மிகக்குறைவு. ஆனால் தமிழ்ச்சூழலில் இதுவே பெரிய அற்புதம் என்பதை நான் அறிவேன்.
மிகுந்த நிறைவூட்டுவது என்பது அண்மையில் செயலூக்கமும், அறிவுத்திறனும், நுண்ணுணர்வும் கொண்ட பெண்களை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருக்கிறேன் என்பது. அவர்களின் சம வயது ஆண்களை விட தீவிரமும், கூர்மையும் கொண்டவர்களாக தெரிகிறார்கள். காரணம், இளம் ஆண்களுக்கு இன்று சென்றடைய வேண்டிய இலக்குகளென ஏதும் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. சலிப்புற்றவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். அரசியல், சினிமா என அன்றாடத்தில் சிதறிப் பரவிக்கொண்டிருக்கிறார்கள். தங்களை குவிக்கமுடியாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மிகக்குறைவான வாழ்வனுபவம் கொண்டிருக்கிறார்கள். கூடுதல் அனுபவங்களுக்காகத் தேடிச்செல்லும் சாகசத்தன்மை இல்லாத சோம்பேறித்தனமும் உள்ளது.
மாறாக, இன்றைய பெண்களில் அறிவார்ந்த தேடல் கொண்டவர்களுக்குத் தங்களை நிரூபித்தாக வேண்டும் என்னும் வேட்கை இருக்கிறது. நிரூபிக்கப்பட்டாலொழிய தனக்கென ஆளுமை இருப்பதாக ஆகாது என நினைக்கிறார்கள். சென்ற காலகட்டம் போல குடும்பமே எல்லாம் என்னும் உளநிலையும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல ஒரு சிறு திறப்பு போதும், அதன் வழியாக பெருகி வெளியே செல்ல முடிகிறது அவர்களால்.
இன்று நான் பெருநம்பிக்கை கொண்டிருக்கும் நாற்பது வயதுக்கு குறைவானவர்களின் ஒரு பட்டியலை எடுத்துப்பார்த்தேன். முக்கால்பங்கினர் பெண்கள். அவர்களின் அணி பெருகுமென்றால், அவர்கள் இலக்கியத்தை, சிந்தனையை கையில் எடுத்துக் கொள்வார்கள் என்றால் அது தமிழின் திருப்புமுனையென அமையும். அந்த எதிர்பார்ப்பை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறேன்.
*
பெண்கள் அறிவியக்கத்தில் ஈடுபடுவதன் சிக்கல்கள் என்ன?
முதற்சிக்கல் ‘குடும்பமே முதன்மையானது. அதற்காக அனைத்தையும் தியாகம் செய்பவளே முன்னுதாரணமான பெண்’ என்னும் பேச்சு.
நான் முப்பதாண்டுகளாக தீவிரமாக நிராகரித்துவரும் ஒரு கருத்து இது. ஆணோ பெண்ணோ குடும்பத்துக்காக மட்டுமே வாழ்பவர்கள் மெல்லமெல்ல ஆன்மிகமான வறுமையை அடைவார்கள். வாழ்க்கையின் பொருளின்மையில் சென்று அமைவார்கள். சலிப்பு, விரக்தி, எதிர்மறை மனநிலைகள் ஆகியவற்றை நிறைத்துக் கொள்வார்கள். அல்லது முற்றிலும் மழுங்கிப்போனவர்களாக எஞ்சுவார்கள்.
ஏனென்றால் குடும்பம் என்பது அடிப்படையில் உலகியல் சார்ந்தது. தொழில் போல, வணிகம் போல. அதில் ஆன்மிகமாக ஒன்றுமில்லை. காதல், குழந்தைகளின் இளமைப்பருவத்தின் மகிழ்ச்சி ஆகியவையே அதன் இனிமைகளின் உச்சம். அந்த உயர்நிலையில் கூட அது அளிப்பது உலகியல் சார்ந்த இன்பத்தையும் நிறைவையுமே. ஆகவே குடும்பத்தை மட்டுமே சார்ந்திருப்பவர்கள் சென்றடைவது ஒரு வெறுமையை. அந்த வெறுமையில் அமர்ந்திருக்கும் முதியோரை நமக்கு சுற்றும் நாம் பார்க்க முடியும்,
உலகியலுக்கு அப்பாற்பட்ட செயல்கள் இரண்டு கூறுகள் கொண்டவை. ஒன்று, தனக்கு நிறைவளிக்கும் செயலைச் செய்தல். இரண்டு, சமூகத்திற்கும் பண்பாட்டுக்கும் கொடுப்பவராக ஆதல். இவ்விரு அம்சமும் இல்லாத எச்செயலும் அடிப்படையில் அறிவும் நுண்ணுணர்வும் கொண்ட ஒருவருக்கு நிறைவின்மையையே அளிக்கும். ஒருவர் செயல் வழியாக தன்னை நிறைவுசெய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்டிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.
ஆகவே ’குடும்பத்திற்காக வாழ்தல்’ என்பது ஒருவர் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்வெனும் மகத்தான வாய்ப்பை வீணடித்துக்கொள்ளுதலே. அதில் எந்த பெருமையும் எவருக்கும் இல்லை. (மிகச்சிலர், குறிப்பாக பழங்காலப் பெண்கள் குடும்பத்தின் மீதான பற்றை விரித்து ஒரு வகையான மானுடப்பற்றாக ஆக்கிக்கொள்வார்கள். எவருக்கும் எப்போதும் கருணைகொள்ளும் உள்ளத்தை அடைவார்கள். அவர்களின் ஆன்மிகநிலை வேறொருவகை உன்னதம். ஆனால் அது சிறுகிராமங்களில் மட்டுமே இன்று சாத்தியம்)
குடும்பத்திற்காகவே வாழும் ஒருவர் தன் செயலுக்கான ‘பிரதிபலனை’ எவ்வகையிலோ குடும்பத்தினரிடம் எதிர்பார்ப்பார். தான் இழந்தவற்றுக்கு குடும்பம் பொறுப்பேற்கவேண்டுமென எண்ணுவார். அக்குடும்பத்தை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவார். அதிலிருந்து தப்ப அக்குடும்பம் அவர்களை விட்டு விலகும், காரணங்கள் கண்டடைந்து அவர்களை வெறுக்கவும்கூடும்.
அதனால் குடும்பத்தை நிராகரிக்கவேண்டும் என நான் சொல்லவில்லை. உலகியல் நிராகரிப்பை நான் முன்வைப்பதில்லை. உலகியலை நிராகரிப்பது அனைவராலும் இயல்வதல்ல. மிகச்சிலருக்கு மட்டுமே உரிய வாழ்க்கை அது. எஞ்சியவர்களுக்கு உலகியல் அளிக்கும் இன்பங்கள் தேவையாகிறது. அதைவிட பாதுகாப்பு தேவையாகிறது. அவையிரண்டும் வேண்டியதில்லை என்பவரே உலகியலை நிராகரிக்க முடியும். அவையிரண்டையும் அடைபவர் உலகியல் கோருவனவற்றைச் செய்தாகவேண்டும். குடும்பக் கடமைகள், சமூகக் கடமைகள் என அவை விரிந்துள்ளன. அவற்றை நிறைவேற்றவேண்டும்.
ஆனால் அவற்றை மட்டுமே நிறைவேற்றுவது வாழ்வாகாது என்பதையே சொல்ல வந்தேன். அது ஒரு பக்கம் மட்டுமே. ஒருவர் தனக்காக வாழவேண்டும். ஒவ்வொருவருக்கும் தன் மகிழ்வு. நிறைவு, ஆன்மிக முழுமை ஆகியவற்றை நோக்கிச் செல்லவேண்டிய உரிமை உண்டு. நான் அதைக் கடமை என்றே சொல்வேன்.
இரண்டாவது சிக்கல், தனித்து நின்றிருத்தல்.
ஆண்களை விட அறிவியக்கத்தில் செயல்படும் பெண்கள் இச்சிக்கலை மிகுதியாகச் சந்திக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கை விகிதத்தில் மிகச்சிற்பான்மையினர் என்பதே முதல் காரணம், சென்ற நூறாண்டாகத்தான் அப்படி தனித்த அறிவுப்பயணத்துக்கான வாய்ப்பு பெண்களுக்கு அமைகிறது என்பது இரண்டாவது காரணம். விளைவாக சகப்பெண்களிடமிருந்து அவர்கள் விலகிவிடநேரிடும். அறிவியக்கத்தில் செயல்படும் பெண்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்தே விலக்கம் அடைய நேரிடுவதை கண்டுள்ளேன்.
அவ்வாறு விலகிவிடாமல் ஒரு சமநிலையை, ஒரு வகை சமூகநடிப்பை அவர்கள் மேற்கொள்ளலாம் என்பதே என் பரிந்துரை. எங்கும் எப்போதும் தன்னை அறிவியக்கவாதியாக முன்வைக்கவேண்டியதில்லை. சமூகப்புழக்கம் தேவையான இடத்தில் மூளையை கழற்றிவிட்டு, ஆளுமையற்றவராக நடிப்பது ஒரு நல்ல வழியே. நான் அறிந்து கடைப்பிடிக்கும் வெற்றிகரமான வழி அது. அதையும் மீறி அமையும் தனிமை தவிர்க்கவே முடியாதது. அதை ஆன்மிகமான ஒன்று என்றுதான் விளக்குவேன்.
மூன்றாவது சிக்கல், பாலியல் அடையாளத்தின் சுமை.
நான் தமிழகத்தின் அறிவுச்சூழலில் பார்த்து ஒவ்வாமை கொள்ளும் விஷயம் இது. இலக்கியச் செயல்பாடு, அறிவியக்கச் செயல்பாடு என்பதே ஒருவகை பாலியல் மீறல் என்று புனைந்து உருவாக்கும் ஒரு வெட்டிக் கும்பல் இங்குள்ளது. இலக்கியத்துள் நுழையும் எல்லா பெண்களையும் காதலிகளாக காணும் மனப்பிறழ்வை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எந்தப்பெண்ணிடம் எதைப்பேசினாலும் நான்காவது சொற்றொடரில் பாலியலில் சென்று நிற்பவர்கள் பலர் இங்குண்டு. நான்கு வரி கடிதம் எழுதினால் அந்த வாசகியை காதலி பட்டியலில் சேர்த்துவிடும் சோட்டா எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் பெண்களுக்கான பொதுவெளியை அழுக்காக்கி வைத்துள்ளனர். இலக்கியவாசகி என்று சொல்லிக்கொள்வதே ஒருவகை அவமானமாக பெண்கள் நினைக்கும் சூழல் இங்குள்ளது.
பெண்களிலும் சூட்டிகை இல்லாத ஒரு சாரார் இணையத்தில் உலாவும் பாலியல் வறட்சிகொண்ட போலி அறிவுஜீவிகளின் பசப்புகளை நம்பி அறிவியக்கம் என்பதே ஒருவகை பாலியல் விடுதலைக்களம் என எண்ணத் தலைப்படுவதுமுண்டு. பாலியல் சார்ந்து தனக்கான நெறிகளைக் கொண்ட பெண்களை பிறர் கேலிசெய்வதுகூட இங்குள்ளது. பாலியல் வாழ்வுமுறை என்பது ஒருவரின் தனிப்பட்ட தெரிவு. அதற்கும் அறிவியக்கத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. அறிவியக்கம் என்றாலென்ன என்றே தெரியாதவர்களே அவ்வாறு பாலியல் விடுதலையே அறிவுச்செயல்பாடு என நினைப்பார்கள். அவர்களுக்கு இலக்கியமோ அறிவுச்செயல்பாடோ முக்கியமல்ல. அவர்கள் தங்கள் பாலியல் வறட்சிக்கு ஒரு ஈரநிலம் தேடுபவர்கள் மட்டுமே.
பாலியல் சார்ந்து பெண்களுக்கு எழும் முதன்மையான இடர் அது பாலியல் என்பது மட்டுமல்ல என்ற விஷயம்தான். அதில் ஆட்கொள்ளுதல் உள்ளது. ஒரு பெண்ணிடம் பாலியல் சார்ந்து சிறு அணுக்கம் கொண்டாலே ஆண் அவளை வென்றுவிட்டதாக எண்ணுவான். அவளை கட்டுப்படுத்த முனைவான். அவளை தன் உடைமை என எண்ணுவான். ஆகவே சரியாக தன் பாலியல் அணுகுமுறையை வகுத்துக்கொள்ளாத பெண் அவமதிப்பைச் சந்திப்பாள். ஆண்களிடமிருந்த அவமதிப்பையாவது விலகிக்கொண்டு சமாளிக்கலாம். தனக்கே தன்னைப்பற்றி உருவாகும் அவமதிப்பை கடப்பது கடினம். பெண்ணின் சுதந்திரம், நிமிர்வு இரண்டுமே அவள் தன் பாலியலை தானே எப்படி வகுத்துக்கொண்டு ஒழுகுகிறாள் என்பதிலேயே உள்ளது.
இவ்வாறு பாலியல் வறட்சிகொண்ட ஆண்களாலான சூழலால் பெண் எனும் பாலியலடையாளம் ஒருவர் மேல் தொடர்ச்சியாகச் சுமத்தப்படுகிறது. மறுபக்கம் பெண்களே அந்த அடையாளத்தை தங்களுக்குச் சூட்டிக்கொண்டு எங்கும் எப்போதும் பெண்களாகவே தங்களை முன்வைக்கிறார்கள். பெண்விடுதலை சார்ந்த அரசியல் செயல்பாடு ஒருவரின் களம் என்றால் அதில் ஒரு வகை நியாயம் உண்டு. மற்றபடி எப்போதுமே பெண்ணாக இருந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. என் அனுபவத்தில் புனைவெழுத்தின் கணத்தில் அப்படி ஒரு மாறாத தன்னடையாளம் இருப்பதில்லை. இருந்தால் அது பெரிய தளை. அறிவியக்கத்திலும் அத்தகைய உறுதியான தன்னடையாளத்தை கடந்து மானுட உள்ளமாக மட்டுமே தன்னை உணர்வதே விடுதலை.
ஒரு பெண் எழுதத்தொடங்கும்போது பெண் என தானடைந்த அனுபவங்கள், எண்ணங்கள் சார்ந்தே எழுதுவாள். ஆனால் எழுதிச் சென்றடையுமிடம் ஒரு மானுட இருப்பு என்னும் நிலையில் இருந்து அடைந்தவை, அறிந்தவையாகவே இருக்கவேண்டும். அந்த சுய எல்லையை கடப்பதே முதிர்வு. அப்படிக் கடந்த ஆண் எழுத்தாளர்களே பெண்ணுலகையும் உள்ளிட்ட முழுமையை படைத்துள்ளனர். கடந்த பெண் எழுத்தாளர்களே ஆணுலகையும் உள்ளிட்ட வரலாற்றுப்பெருக்கை படைத்துள்ளனர். குர்ரதுல் ஐன் ஹைதர் உதாரணம்.
நான்காவது சிக்கல், மேலதிகாரத்தை தவிர்த்தல்.
தன்மேல் எவருக்கும் முற்றான அதிகாரத்தை ஒரு சிந்திக்கும் மானுடன் அளிக்கலாகாது என்று நான் நினைக்கிறேன். ஆண், பெண் இருவருக்கும். என் மகன், மகள் இருவரிடமும் திரும்பத் திரும்பச் சொல்வது அதைத்தான். ஒருவரை ஆசிரியராக ஏற்றுக்கொள்வது, கற்பது வேறு. ஆனால் அதுகூட முழுமுற்றான அதிகாரம் அல்ல.
பெண்கள் மேல் சமூகம், குடும்பம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரம் ஒரு படி கூடுதலானது. அந்த அதிகாரத்தை ஏற்காமலிருக்கவேண்டும். ஆனால் அந்த அதிகாரத்தை எதிர்த்துக்கொண்டிருக்கலாகாது. எதிர்க்கத் தொடங்கினால் எதிர்ப்பு மட்டுமே நம்மிடம் எஞ்சும். நாம் கசப்பு கொண்டவர்களாக ஆவோம். அதை பொருட்டென கருதாமல் நமக்கான பாதையில் நம் செயல்நோக்கிச் செல்லவேண்டும்.
ஐந்தாவது சிக்கல், எதிர்மனநிலைகள் நோக்கிச் செல்லுதல்.
சிந்தனை, இலக்கியம் ஆகியவற்றுக்குள் வரும் பெண்களில் ஒரு சாராருக்கு எதிர்மனநிலை உருவாகிவிடுவதை காண்கிறேன். தொடர்ச்சியாக எல்லாவற்றிலும் எதிர்ப்பு, கொதிப்பு, நையாண்டி என்றே பேசிக்கொண்டிருப்பார்கள். எதிர்மனநிலையை உருவாக்குவது மிகப்பெரும்பாலும் அரசியல். இன்றைய இந்தியாவில் எல்லா அரசியலுமே எதிர்மனநிலையை கட்டமைப்பதாகவே உள்ளன. எதிர்ப்பு என்பது மட்டுமே அரசியல் என்றும், எதிர்த்தல் என்பது ஒரு புனிதமான அறிவுத்தளம் என்றும் சமகால அரசியல் கற்பிக்கிறது.
எதிர்ப்பு என்பது அறவுணர்வின் வெளிப்பாடு. ஆனால் முழுநேர எதிர்ப்புநிலை என்பது அறிவுச் சூம்பல், அழகியல் வறட்சி, ஆன்மிகத் தேக்கநிலை. எதிர்நிலையை ஆளுமையாகக் கொண்டவருடன் அதே எதிர்நிலையை தானும் கொண்டவர் கூட நெருக்கமாகப் பழக முடியாது.
பொதுவாக தமிழ்ச்சூழலில் பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், ஆண்களை விட நடைமுறைப்பார்வை பெண்களுக்கு அதிகம். ஆகவே அரசியல் பேச்சுகளிலுள்ள கொள்கை, இலட்சியம் ஆகிய பாவனைகளை நம்ப மாட்டார்கள். அரசியலென்பது பணமும் அதிகாரமும் மட்டுமே என்று புரிந்துகொண்டு, அது தங்கள் வட்டத்திற்கு வெளியே தொலைவிலிருப்பது என்பதையும் விளங்கிக்கொள்வார்கள்.
விதிவிலக்காக அரசியலார்வம் கொண்டுள்ள பெண்கள் இரு வகை. ஒரு சிறு சாரார் அரசியல் கொள்கைகளை குடும்பச்சூழலில் இருந்தோ நட்புச்சூழலில் இருந்தோ பெற்றுக்கொண்டு அதற்கு ஆட்பட்டவர்கள். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் ஒரு கட்சிகட்டலாக மட்டுமே அரசியல் பேசுபவர்கள். ஒற்றை நிலைபாட்டை மட்டுமே திரும்பத் திரும்ப முன்வைப்பவர்கள். அதற்கு வாசிப்போ புரிதலோ தேவையில்லை. அந்த ஒற்றை நிலைபாட்டை ஓர் ஆண் முன்வைத்தால் அவனை அரைவேக்காடு என நினைப்போம். பெண் முன்வைத்தால் பரவாயில்லையே, அரசியலெல்லாம் தெரிகிறதே என வியப்போம். இதுவே தமிழ்ச்சூழல்.
அரசியல் பேசும் பெண்கள் தாங்கள் ‘அரசியல்படுத்தப்பட்ட’, ஆகவே ஒரு படி மேலான, பெண்கள் என எண்ணிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது ஒரு நிலைபாடும், அதைச்சார்ந்து சூழலில் புழங்கும் சில தர்க்கமுறைகளும் மட்டுமே என அவர்களிடம் நாம் சொல்லமுடியாது. அரசியல் பேசும் பெண்கள் மேல் ஆண்களுக்கு ஓர் ஈர்ப்பு உருவாகிறது. அவர்களிடம் பேச ஆண்களுக்கு ஒரு பேசுபொருள் அமைகிறது என்பது முதல் வாய்ப்பு. அவர்களை அறிவுஜீவிகள் என கற்பனை செய்துகொள்ள முடிகிறது. பத்தே நிமிடத்தில் அப்படியெல்லாம் இல்லை என்று புரிந்தாலும் அக்கற்பனையை ஆண்கள் கலைப்பதில்லை.
ஆணானாலும் பெண்ணானாலும் ஒற்றைப்படையான எளிய அரசியல் நிலைபாடு என்பது நுண்ணுணர்வு, சிந்தனை ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானது. அறிவார்ந்த ஒரு தேக்கநிலை அது. வாழ்நாள் முழுக்க அதிலேயே சுற்றிவர முடியும், ஆனால் தீவிரமாகச் செயல்பட்டபடியே இருப்பதாக எண்ணிக்கொள்ளவும் முடியும். அரசியல் நம்பிக்கை என்பது மதநம்பிக்கையின் நவீன வடிவம். அவர்களே நம்பிக்கையிழந்து வெளியேறினால்தான் உண்டு. இன்னொருவர் அவர்களை மீட்க முடியாது. அரசியல், மதம் சார் நம்பிக்கையில் தளைக்கப்பட்டவர்கள் மிக எளிதில் சலிப்பூட்டுபவர்கள்.
நம் பெண்களுக்கு சமூகம், குடும்பம் ஆகியவை பெரும் கட்டுப்பாடாகவே அறியவருகின்றன. இந்தியப்பெண் தன்மேல் உணரும் தளைகள் பல உண்டு. ஒவ்வொரு நாளும் இங்கே பெண் அவற்றைச் சந்திக்கிறாள். அவற்றை மீறவேண்டும் என்னும் துடிப்பு அறிவார்ந்த பெண்ணுக்கு வாசிப்பின் தொடக்கத்தில் எழுவது இயல்பு. ஆகவே எல்லாவகையான எதிர்நிலைகளையும் மீறல்களையும் அவள் ஏற்றுப் போற்றுவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. அது வரவேற்கப்படவேண்டிய ஒரு தொடக்கம். தொடக்கநிலைச் சீற்றம் போல ஒருவரை அறிவார்ந்த விசைகொள்ளச் செய்வது இன்னொன்று இல்லை.
ஆனால் அந்த எதிர்ப்பை மேலும் ஆழமாக கொண்டுசென்றால் மட்டுமே அவள் தன்னை, தன் சூழலை, வரலாற்றை முழுமையாக புரிந்துகொள்ளும் ஆர்வத்தை அடையமுடியும். சிந்தனையிலும் வரலாற்றிலுமுள்ள முரணியக்கங்களை உள்வாங்க முடியும். அதற்கு தொடர்வாசிப்பு தேவை. அந்த தொடர்வாசிப்பை நிகழ்த்த முடியாமல் ஆக்குவது அரசியல் சார்ந்த ஒற்றை நிலைபாடு. அந்த கண்மூடித்தனம் மேற்கொண்டு அறியமுடியாமலாக்கிவிடுகிறது. அந்த முதல்கட்ட எதிர்நிலைபாட்டை தானாகவே உடைத்து மேலும் விரிவாக்கிக் கொள்ளும் சவாலே இன்றைய பெண்களுக்கும் முன்னால் இருக்கிறது.
எளிய அரசியல் எல்லாவற்றையும் எளியதாகக் காட்டுகிறது. அதன்பின் ஒற்றைவரிக் கோஷங்கள் போதும். எல்லாரையும் எளிமையாக முத்திரை குத்தினால் போதும். சிந்தனைகளோ சிந்தனையாளர்களோ தேவையே இல்லை. எல்லாமறிந்த தன்னம்பிக்கை உருவாகிறது. ஒற்றைவரிக் கூச்சல்களை மிகையுணர்ச்சியுடன் முன்வைக்கமுடியும். ஆகவே போலியான ஓர் உணர்ச்சிகரம் உருவாகிறது. தான் மிகுந்த கொதிநிலையில் இருப்பதாக கற்பனைசெய்துகொள்ள முடிகிறது. தன்னை புரட்சியாளர், கலகக்காரர், போராளி என்றெல்லாம் உருவகம் செய்துகொள்ள முடிகிறது.
என்னை எப்போதுமே சலிப்படையச் செய்வது தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த மிகக்கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்வைக்கும் அரசியல்சார்ந்த நையாண்டிகள், எக்காளங்கள், போலிச்சீற்றங்களை முன்வைக்கும் பெண்களைப் பார்ப்பதுதான். இத்தனை படிகளுக்குப்பின் வெளியே வந்து அறிவியக்கத்தின் குப்பைகளை மேய்வது என்பது உச்சகட்ட அபத்தம். அதற்கு அரசியலறியா பெண்ணாக டிவிசீரியல் பார்த்து, ஆடையாபரணங்களில் லயித்து வாழ்வதே மேல். ஒரு வகை எளிய கள்ளமின்மையாவது எஞ்சும்.
சிந்தனை என்பது எப்போதுமே சுயவிமர்சனத்தில் தொடங்குகிறது. அப்பட்டமான, சங்கடமான நிதர்சனங்களைப் பார்ப்பது அதன் முதல் சவால். ஒவ்வொன்றும் எப்படி உட்சிக்கல் மிக்கதாக, பின்னிப்பிணைந்ததாக, ஒட்டுமொத்தப்பார்வையாலன்றி விளங்கிக்கொள்ள முடியாததாக உள்ளது என சிந்தனை கண்டடைகிறது. அதற்கு வாசிப்பு, தொடர் விவாதம் தேவை.
அதை அடைவது எளிய ஒன்றல்ல. ஒற்றைக்கூச்சலை போட்டுக்கொண்டே இருக்கும் எளிமையான பெண்கள் புகழ்பெற்றவர்களாக சூழலில் இருப்பதை இன்றைய இளம்பெண் காண்கிறாள். அந்த ஒற்றைநிலைபாட்டின் அர்த்தமின்மையை சுட்டிக்காட்டுபவர்கள் அனைவரையும் ஆணாதிக்கவாதி, பிற்போக்குவாதி என முத்திரைகுத்துவதனால் அதற்கு மாற்றான தரப்புகள் அவள் கண்ணிலேயே படுவதில்லை. இந்நிலையில் மிக அந்தரங்கமாக ஓர் இலக்கியப்படைப்பை, அல்லது சிந்தனையை வாசித்து தன்னைத்தானே உடைத்துக்கொண்டு விரிவது என்பது நிகழவேண்டும். சமகாலத்தின் அரசியல் தரப்புகளின் எளிமைப்படுத்துதல்களை கடத்தலே சிந்தனையின் முதல் படி. ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும்.
*
இச்சவால்களை பெண்கள் கடந்தாகவேண்டும் என நினைக்கிறேன். அதை இப்படி இன்னொருவகையில் விளக்குகிறேன். இதைச் சொன்னதுமே ஒரு கொதிப்புக்குழு கிளம்பி என்னை ஆணாதிக்கவாதி என்றும் ’பெண்களுக்கு ஆலோசனை சொல்ல இவன் யார்’ என்றும் சொல்லும் என்று தெரிந்தும் எந்த தயக்கமும் இல்லாமல் இதைச் சொல்கிறேனே இந்த துணிவு எந்த அறிவியக்கவாதிக்கும் வேண்டும். பெண்களுக்கும். ஆகவே உங்கள் கடிதம் அபார நிறைவை அளிக்கிறது.
எவருக்கும் சொல்வதையே பெண்ணுக்கும் சொல்வேன். உங்களை நிகழ்த்துங்கள், அச்செயலால் உங்களை நிறைவுறச்செய்யுங்கள், செயலே விடுதலை.
*
முன்னுதாரண ‘மாடல்’ என எவரைச் சொல்வேன்?
முன்னுதாரணங்களை கொள்ள நமக்கு தேவை அளவுகோல்கள். அந்த அளவுகோல்களையே முதலில் சொன்னேன். அவற்றின்படி நமக்குத்தேவையான முன்னுதாரணங்களை நாமே கண்டடைய வேண்டியதுதான்.
நான் என் பார்வையில் முன்னுதாரணமான பெண்களாகக் கொள்பவர்கள் எவர் என என் வாசகர்களுக்கே தெரிந்திருக்கும். அவர்களைப்பற்றி தொடர்ந்து எழுதியிருப்பேன். நூல்களை சமர்ப்பணம் செய்திருப்பேன்.
சேவை, சமூகப்பணி ஆகியவற்றில் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் நம் காலகட்டத்தின் மகத்தான தமிழ்ப்பெண்மணி என நினைக்கிறேன். எழுத்தாளர் என்னும் வகையில் சூழல் வரையறுத்தளித்துள்ள பெண்ணெழுத்தாளர் என்னும் எல்லா அடையாளங்களையும் மீறிய எழுத்தை உருவாக்கிய குர்அதுல் ஐன் ஹைதர். தன் காலகட்டத்தை எழுத்தால், நேரடிப் பணியால் முழுமையான தீவிரத்துடன் எதிர்கொண்ட சுகதகுமாரி நான் முன்வைக்கும் இன்னொரு மகத்தான முன்னுதாரணம்.
ஜெ