தூரன் விருது- இசை நிகழ்வு

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியை உருவாக்கிய முன்னோடி மேதைகளில் ஒருவர் பெரியசாமித் தூரன். கொங்குநாடு உருவாக்கிய முதன்மை அறிவாளுமை. முதல் தமிழ்க்கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர், பாரதி ஆய்வாளர், குழந்தை இலக்கிய ஆசிரியர் என்னும் தகுதிகளுக்கு அப்பால் அவர் இன்று தமிழிசைக்கு ஆற்றிய பங்களிப்பால் நினைவுகூரப்படுகிறார்.

வரும் ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் ஈரோட்டில் பெரியசாமித் தூரன் நினைவாக வழங்கப்படும் தமிழ் விக்கி – தூரன் விருது மு.இளங்கோவனுக்கும் எஸ்.ஜே.சிவசங்கருக்கும் வழங்கப்படுகிறது. அந்நிகழ்வில் தூரன் எழுதிய தமிழிசைப்பாடல்களை நாதஸ்வர இசைக்கலைஞர்கள் வாசிக்கலாம் என முடிவுசெய்தோம். தமிழிசையில் இருந்து நாதஸ்வரத்தை பிரிக்க முடியாது.

நாதஸ்வரம் கேட்பது இளைய தலைமுறையினரிடம் அருகி வருகிறது. அது ஒரு மங்கல வாத்தியம் மட்டுமாகச் சுருங்கியுள்ளது. தஞ்சைக்கு வெளியே நாதஸ்வரக் கலைஞர்களை அறிந்தவர்களே மிகக்குறைவு. ஆகவே இவ்விழாவில் இரண்டு மணிநேரம் நாதஸ்வர கச்சேரி நிகழும். கவனிக்கவும், இது பின்னணியில் ஒலிக்கும் மங்கல இசை அல்ல. அமர்ந்து கேட்கவேண்டிய இசை நிகழ்வு.

இசை அறிமுகம் அற்றவர்கள், நாதஸ்வர இசை கேட்டு பழக்கமில்லாதவர்கள், தூரன் எழுதிய இசைப்பாடல்களை அறியாதவர்களுக்காகவே குறிப்பாக இந்த இசைநிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கருவியிசையை கேட்கச் சிறந்த வழி பாடப்படும் பாடல்களை முன்னரே பலமுறை கேட்டுவிடுவதுதான். முதலில் அந்த இசைக்குள் செல்லமுடியாமலிருக்கலாம். ஆனால் திரும்பத் திரும்ப ஓடவிட்டால் நம்முள் இயல்பாக அப்பாடல்கள் நுழைந்துவிடும். அந்த வரிகளை நாம் அறிந்துகொள்வோம். இசை நம்முள் பதிந்துவிடும். அதன் பின் கருவியிசையை கேட்டால் உடனே நம் உள்ளம் ஒரு துள்ளலுடன் அந்தப்பாடல்களை சென்று அள்ளிக்கொள்ளும்.

ஆகவே இந்நிகழ்வில் வாசிக்கப்படவிருக்கும் தூரன் கீர்த்தனைகளை முன்னரே இங்கு அளிக்கிறோம். புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பாடிய வடிவம் இங்குள்ளது. இவற்றை நண்பர்கள் கேட்டு வந்தால் நாதஸ்வர இசையை ரசிக்க முடியும். இன்று தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற மூன்று நாதஸ்வர- தவில் இசைக்கலைஞர்களை தெரிவு செய்து இந்த நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளோம்.

நாதஸ்வர தவில் இசை : 

சிறப்பு நாதஸ்வரம் :
திருமெய்ஞானம் டி.பி.நடராஜசுந்தரம் பிள்ளை குமாரர்,
“பெருவங்கிய கலையரசு”
திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன்
பாண்டமங்களம் ஜி.யுவராஜ்

சிறப்பு தவில் : 
”கலைமாமணி” தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்

கட்டிமேடு பி.பாலசங்கர்

தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்

————————————————————————————————-
நிகழ்வுமுறை

அ): முதல் கீர்த்தனை முதல் கடைசி மங்களம் வாசிப்பது வரை இரண்டு மணி நேரம் கச்சேரி முழுமைக்கும், பெரியசாமி தூரன் அவர்களின் கீர்த்தனைகள் மட்டுமே வாசிக்கப்படும்.

ஆ) : கீர்த்தனைகள் பட்டியல், ராகம், அந்த பாடலுக்கு யூடியூப் லிங்க் மூன்றையும் கீழே தொகுத்து அளித்துள்ளோம்

இ):  ராக ஆலாபனை ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும்

கீர்த்தனைகள் இணைப்பு

1) : கீர்த்தனை : கணநாதனே குணபோதனே.ராகம் : சாரங்க (https://www.youtube.com/watch?v=w7FLGjt6k1I)
2) : கீர்த்தனை : தாயே திரி்புர சுந்தரி.ராகம் : சுத்தசாவேரி (https://www.youtube.com/watch?v=iB6gxFRNUqE)
3) : கீர்த்தனை : அன்பே சிவம், அருளே தெய்வம். ராகம் : நளினகாந்தி (https://www.youtube.com/watch?v=QFNpWkopd1A)
4) : கீர்த்தனை : முருகா முருகா.ராகம் :சாவேரி  (https://www.youtube.com/watch?v=iW9dEEsl_SE)
5) : கீர்த்தனை :  ஹரிஹர சுதனே ஐயப்பா.ராகம் : ஆபோகி (https://www.youtube.com/watch?v=C4ucpzT5k5Y)
6):  கீர்த்தனை :  எங்கே தேடுகின்றாய். ராகம் : ஹரிகாம்போதி
7) : கீர்த்தனை :  எங்கு நான் செல்வேனய்யா.ராகம் : திவ்ஜாவந்தி  (https://www.youtube.com/watch?v=3HEiJu9wctw)
8) :  முதன்மை ராக ஆலாபனை : ராகம் ஆபேரி
9) : கீர்த்தனை : முரளிதர கோபாலா. ராகம் : மாண்ட் (https://www.youtube.com/watch?v=NIMbgxjdKps)
10): கீர்த்தனை : கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் : ராகம் : பிருந்தாவன சாரங்க (https://www.youtube.com/watch?v=yub0Te7Jg6o)
11) : காவடி சிந்து: அழகு தெய்வமாக வந்து.  (https://www.youtube.com/watch?v=4cteQT-P3xY)
12) :மங்களம்(முடிவு) : சத்தியமே வெல்லும்,தர்மமே ஓங்கிடும். (https://www.youtube.com/watch?v=GITm8MKTtE0 . இந்த வீடியோவில் 8 வது நிமிடத்தில் இருந்து)

 

முந்தைய கட்டுரைஓசூரில் புத்தக திருவிழா
அடுத்த கட்டுரைவீழ்ச்சியின் இயக்கவியல்