யுகத்துளி

கொடூரமான கொலைவிலங்கு. ஈவிரக்கம் என்பது உருவாகாத பழைய ஜுராஸிக் காலகட்டத்தைச் சேர்ந்தது. தீராப்பசி வேறு. ஆகவே எந்நேரமும் தீனிதான். எத்தனை உயிர்களை ஒருநாளில் உண்கிறது என்பதற்குக் கணக்கே இல்லை.

காரணம், அதன் வேட்டை உத்தி. அதற்கு காலம் இல்லை. ஜுராஸிக் காலம் என்பது பாறைகளைப்போல உறைந்துவிட்டிருப்பது.  ஆகவே எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் காத்திருக்க முடியும். காத்திருக்கையில் அதுவும் பாறைகள் போல் ஆகிவிட்டிருக்கும்.

ஆனால் உயிர்வருவது கணத்தின் ஒரு துளியில். உயிரென்பது விசைகொண்ட வேகம். ஒரு பாறை அப்படி மின்னலென எழுவதை எந்த உயிர்தான் எதிர்பார்க்க முடியும்? பிடிபட்டால் தப்ப முடியாது. அதன் வாயின் அமைப்பு உட்கொள்வதற்கு மட்டுமேயானது. நினைத்தாலும் துப்பமுடியாதது.

அது அசைவுகளை மட்டுமே பார்க்கும் கண்கள் கொண்டது. அசைவு என்பதே உயிர். உயிரற்றவை அதன் உலகில் இல்லை. அல்லது தானும் உயிரற்றதாகி அது அவற்றுடன் இணைந்து ஒன்றாகிவிடுகிறது. உண்மையில் அது உயிர்தானா? பாறைகள், கற்களில் ஒன்றுக்கு சட்டென்று பசியும் வேகமும் உருவாகி மீள்வதுதானா?

அந்த விந்தையான கண்கள். அவை இருபக்கமும் விலகித்திறப்பவை. அசைவுகளை படம்பிடிக்கும் ஒரு காமிரா போல. அந்த முகத்தில் இருப்பவை இந்த யுகத்தில் வாழும் நான் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகள். 

ஆனால் அதை நான் ஒரு வெறிப்பாக எடுத்துக்கொள்கிறேன். அது வாய் திறக்கையில் ஒரு  பசியிளிப்பாக. அது வாய்மூடியிருக்கையில் ஒரு வெற்றிப்புன்னகையாக. அது மறைந்துபோன அந்த யுகம் என்னைப் பார்க்கும் ஒரு சிறு வாசலா?

நான் அமர்ந்து எழுதும் இந்த மேஜைக்கு அருகில் தன் துணையுடன் வந்து அமர்ந்திருக்கிறது. என்னை பார்க்கிறதா? என்னை எப்படி மதிப்பிடுகிறது?  விசைப்பலகைமேல் துள்ளும் என் விரல்களை மட்டும்தான் பார்க்கிறதா?

அந்த ஜுராஸிக் யுகத்தில் பேருருக்கொண்டு மண்ணதிர நடந்த உயிர். கருமுகிலில் இருந்து ஒரு சொட்டு போல இன்று இத்தனை சிறிய உருவுடன் என் முன் நின்றுள்ளது. நாம் எடுத்தாடும் கூழாங்கற்கள் எந்த மலை உதிர்த்த துளிகள்?

அசைவை அது நன்கறியும். அசைவுக்கு முந்தைய எண்ணத்தையே அறியும். அதை படமெடுப்பது எளிதல்ல. செல்பேசியை தொட்டதுமே மறைந்துவிடும். ஆனால் இந்த ஐஃபோன் அதிநுட்பம் கொண்டது. என்னிடமிருந்து மறைந்து அது அமர்ந்திருக்கும் இடத்தை இத்தனை தொலைவில் இருந்து என்னால் அணுக்கமாக எடுத்துவிடமுடியும்.

இந்த தொழில்நுட்பம் இன்னும் விரிந்தால் ஒருவேளை அந்த விந்தையான கண்களுக்கு அப்பாலுள்ள ஜுராஸிக் யுகத்தை நான் படம்பிடித்துவிடக்கூட இயலும்

முந்தைய கட்டுரைரொனால்ட் சியர்ல்
அடுத்த கட்டுரைதூரன் இசை-“நாதம் எழுக!” அகரமுதல்வன்