எழுத்தாளர்கள், இணையக்காதலர்கள்

’ஜெயமோகன் மாடல்’

பெண்களுக்கான ‘மாடல்’

அன்புள்ள ஜெ,

’ஜெயமோகன் மாடல்’ கட்டுரை வாசித்தேன். உற்சாகமூட்டும்படி தொடங்கி கடைசியில் அப்படியே போட்டு உடைத்த கட்டுரை. என் நண்பன் அதை வாசித்துவிட்டு அதை ‘அதெல்லாம் ஒண்ணும் சான்ஸே இல்ல  தம்பிஎன்னும் ஒற்றை வரியாகச் சுருக்கலாம் என்று சொன்னான். உங்கள் இலக்கிய அறிவு, இலக்கியசாதனை, புகழ் ஆகியவற்றுக்கு இங்கே எந்தச் சமூக மதிப்பும் இல்லை என்றும் எந்தப்பெண்ணும் அதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டாள் என்றும் சொல்கிறீர்கள். சினிமாவில் நீங்கள் ஈட்டும் பணம் மட்டுமே உங்கள் அடையாளம் என்றும் சொல்கிறீர்கள்.

அது உண்மைதான். இன்றைக்கு ஏராளமான இலக்கியவாசகர்கள் சமூகவலைத்தளத்தில் காதலிகளுக்காக ஏங்கி அலைவதை பார்க்கிறேன். எல்லா இடங்களுக்கும் சென்று விண்ணப்பம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் ஒன்றும் அமைவதில்லை. கெட்டபேர் மட்டும்தான் மிஞ்சுகிறது. ஆறுமாசத்துக்கு ஒருமுறை ஒருவர் அகப்பட்டுக்கொண்டு தர்ம அடி வாங்குகிறார்.

இன்னொரு பக்கம் பெண்கள் சரியான பொறுக்கிகளை நாடிச்செல்வதையும் காண்கிறேன். ரௌடிகளை திருத்துவதற்காக அவர்களை பெண்கள் காதலிப்பது சினிமாக்களில் காட்டப்படுகிறது. ஆனால் அது உண்மையிலும் நடந்துகொண்டிருக்கிறது.  அதை புரிந்துகொள்ள முடியவில்லை.

அண்மையில் எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் பல பெண்களை வேட்டையாடிய ஒருவர் பற்றிய செய்தி இணையத்தில் வெளிவந்தது. அந்தப்பெண் அவரை எழுத்தாளர் என நம்பி காதலித்ததாகச் சொல்கிறார்.

என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

எம்.எஸ். மணிகண்டன் 

*

அன்புள்ள மணிகண்டன்,

நீங்களும் நண்பரும் புரிந்துகொண்டது சரி. ஜெயமோகன் மாடல் என்பது ஜெயமோகனுக்கும், அவரைப்போல ஆக நினைப்பவர்களுக்கும் மட்டுமே ஏதேனும் மதிப்புள்ளது. உலகியல் பார்வையில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆகவே பொதுவாகப் பெண்களின் பார்வையில் அது சற்று விலக்கத்திற்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகலாம்.

நம் சூழலில்  ஜெயமோகன் ஈட்டும் பணம் மட்டுமே ஜெயமோகனின் அடையாளம். ஒரு கல்லூரிக்குச் சென்றால்கூட என்னை 2.0 அல்லது பொன்னியின் செல்வன் வசனகர்த்தா என்றுதான் அடையாளப்படுத்துவார்கள். அது வரை எந்த அறிமுகத்துக்கும் பேசாமலிருக்கும் மாணவர்கள் திரைப்படப்பெயர் சொல்லப்பட்ட பிறகுதான் கைதட்டுவார்கள். இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு இதில் வாழ்வது, இங்கே தன்னை வெற்றிகரமாக நிகழ்த்திக்கொள்வது எப்படி என்பது பற்றியே நான் பேசுகிறேன்.

*

ரௌடிகளை திருத்தும் நோக்கில் காதலிக்கும் பெண்கள் எப்போதுமே உண்டு. கப்ரியேல் கார்ஸியா மார்க்யூஸ் ஒரு நல்ல கதை எழுதியிருக்கிறார். பழைய சொல்புதிதில் வெளிவந்தது. ‘உறைபனியில் உனது குருதியின் தாரை’ (செங்கதிர் மொழியாக்கம்). அதில் ஒரு சாகசத்தன்மை உள்ளது. மீறல் உள்ளது. அது அவர்களை ஈர்க்கிறது. அதைவிட முக்கியமானது, அதில் அவர்களின் ஆணவம் நிறைவடைகிறது. அவர்கள் ஒரு படி மேலே இருந்து அறிவுரை சொல்லி ஆற்றுப்படுத்தும் தேவதைகளாக முடிகிறது. அறிவியக்கவாதி அப்படியல்ல, அவன் அவர்களை ஒரு படி கீழாக உணரச் செய்கிறான். அவளுடைய போதாமையை காட்டுகிறான். அதுவும் உலகியலில் பத்து பைசா பெறாத சில தகுதிகளைக் காட்டி. ஆகவே ஒவ்வாமை உருவாகிறது.

இணையவெளியில் எழுத்தாளர்கள் என சொல்லிக்கொள்பவர்கள், அதை ஒரு முகமூடியாகக் கொள்பவர்கள் பலர் உண்டு. எழுதுபவர்களிலேயே சிலர் பலவகை சபலங்களால் அலைக்கழிந்து பெயரழிவதும் உண்டு. அந்த விகிதம் எங்குமுள்ளதே. ஆனால் மெய்யான எழுத்தாளர்கள்; எழுத்தை தன் வாழ்வென, இலட்சியமெனக் கொண்டவர்கள் இங்குள்ளனர். அவர்களில் பெண்வேட்டையர்கள், காமக்களியாட்டை வாழ்வெனக் கொண்டவர்களை நான் கண்டதே இல்லை. அவர்கள் அனைவருமே மிகசிறந்த கணவர்களாக, குழந்தைகள் மேல் பெரும்பித்து கொண்ட தந்தையராகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைய வாழ்க்கையில் தனிப்பட்ட நேரமென கிடைப்பது மிகக்கொஞ்சம். அதைக்கொண்டு முடிந்தவரை ஏதேனும் செய்வது எப்படி என்பதே அவர்களின் தவிப்பாக உள்ளது.

அண்மையில் ஓர் எழுத்தாளர் பற்றிய வம்பு ஒன்று மீனம்மா கயல் என்னும் புனைவாளுமையால் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டது. அவர் வெளியிட்ட அக்கடிதத்தை நண்பர்கள் காட்டினர். அதையொட்டி ’எழுத்தாளர்களே இப்படித்தான்’ என்னும் ஒரு பேச்சு பரப்பப் பட்டது. அதையே சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அந்த கடிதத்தால் குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு தொடக்கநிலை எழுத்தாளர், எழுத்தாளர் என்னும் அடையாளமோ புகழோ அற்றவர். அவரை எழுத்தாளர் என நம்பி எப்பெண்ணும் அணுக வாய்ப்பில்லை. நானறிந்தவரை அந்த இளம் எழுத்தாளர் பண்பானவர், நேர்மையானவர், உதவக்கூடியவர். ஆனால் மிக வெளிப்படையாகவே தன்னை ஒரு காமக்கேளிக்கையாளர் என்று முன்வைப்பவர். அவர் தன்னை ஒரு ஒழுக்கவாதி என எங்கும் சொல்லிக்கொள்ளவில்லை. அவருடைய நாவலே அதைத்தான் சொல்கிறது. காமத்துக்கான காமம் என பேசும் எளிமையான படைப்பு அது. அதைப்பார்த்துத்தான் அந்தக் கடிதத்தை எழுதிய பெண் அவரை நோக்கிச் சென்றிருக்கிறார்.

அதுவும் பெண்களின் இயல்பு. காமக்கேளிக்கை மனநிலை கொண்ட பெண்கள் எப்போதும் காமக்கேளிக்கையாளர்களைத்தான் தேடிச்செல்வார்கள். குற்றவுணர்வோ தயக்கமோ இல்லாமல் காமத்திலாடுவார்கள். ஆனால் ஆண்களைப் போலன்றி அந்த அடையாளத்தை இப்பெண்கள் விரும்ப மாட்டார்கள். காமத்தை அடைந்ததுமே தூயகாதல், திருமணம் என்றெல்லாம் அடுத்தகட்ட பாவனைகளுக்கும் கட்டாயங்களுக்கும் செல்வார்கள். தான் கட்டாயப்படுத்தப்பட்ட அப்பாவி என நடிப்பார்கள். (சினிமாவில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தினந்தோறும் தினத்தந்திச் செய்தி போல தெரியக்கிடைப்பவை). அக்கடிதம் அப்பெண்ணின் அந்த மனநிலையையே காட்டுகிறது. அதற்கு அவர் உடன்படாதபோது சீற்றம் கொள்வதே அக்கடிதத்தின் உள்ளடக்கம்.

அந்த ஆண் தன்னளவில் நேர்மையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அந்த ஸ்க்ரீன்ஷாட்களை பார்த்தேன். வரிக்கு வரி கொஞ்சல், சீராட்டுதல், பாராட்டுதல். நான் திரையுலகில் இந்த எழுத்தாளரைவிட பல மடங்கு திறன் வாய்ந்த முழுநேரக் காதலர்களை கண்டிருக்கிறேன். அவர்கள் மட்டுமே இப்படி வரிக்கு வரி உருகுவார்கள். எந்த மெய்யான காதலனும் இப்படி கொஞ்ச மாட்டான்.

மிக அந்தரங்கமான குரலில் செவிக்குள் பேசுவது, சலிக்காமல் அர்த்தமற்ற கொஞ்சல்களை விடிய விடியப் பேசுவது, எளிய பெண்கள் பேசும் சில்லறை வம்புகளையும் அர்த்தமற்ற அன்றாடச் செய்திகளையும் பொறுமையாக நாள் முழுக்க செவிகொடுத்து கேட்பது, எல்லா உரையாடலையுமே கொஞ்சலாக அமைப்பது, மிகுந்த கனிவும் அக்கறையும் கொண்டவனாக எப்போதுமே காட்டிக்கொண்டிருப்பது, தொடர்ச்சியாக பெண்களிடம் எல்லாவற்றையும் பாராட்டிக்கொண்டே இருப்பது, தேய்வழக்குகளை சலிக்காமல் சொல்வது ஆகியவை முழுநேரக் காதலர்கள் பயின்று, நடைமுறைப்படுத்தும் வெற்றிகரமான உத்திகள்.

எந்த எழுத்தாளனும் இப்படி செயற்கையான, பொய்யான காதல்வசனங்களை கொட்ட மாட்டான். ஏனென்றால் அவனுடைய இலக்கும் கனவும் காமம் அல்ல. அவன் உள்ளம் முதன்மையாக ஈடுபட்டிருப்பது அவனுடைய கலையிலும் இலக்கியத்திலுமாகவே இருக்கும். காதலியிடம்கூட அதைப்பற்றிப் பேசவே விரும்புவான். காதலின் பிதற்றலில் கூட அவன் உள்ளம் படிந்துள்ள விஷயங்களே இருக்கும். அவ்வாறு தன் செயலில் பித்து கொண்டிருப்பதே ஆண்களின் இயல்பு. அவர்களின் பலமும் பலவீனமும் அதுவே. ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என ஔவையார் சொல்வது அதைத்தான். மேலும் எழுத்தாளனுக்கு எந்த கொஞ்சலிலும் கொஞ்சம் மொழிநுண்ணுணர்வு இருக்கும். தேய்வழக்காக அள்ளி வைக்க அவன் கூசுவான்.

முழுநேர உணவாக சீனியை எவரும் உண்ணமுடியாது. அவ்வாறு பேசுபவர்  பயின்ற முழுநேரக் காதலர். அது பெண்களுக்கும் தெரியும். ஆனால் ஒருவன் தன்னிடம் இப்படி இருப்பது காமநாட்டம் கொண்ட பெண்களை மகிழ்விக்கிறது, அவர்களின் ஆணவத்தை நிறைவடையச் செய்கிறது. அதை திறனுறு காதலர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையிலேயே இதெல்லாம் தெரியவில்லை என்றால் அந்தப் பெண் படு அசடு என பொருள். இதை விரும்பும், ஏற்கும் பெண்கள் காமத்திற்கான காதலனைத் தேடுபவர்கள் மட்டுமே. ஆனால் கடைசியில் ‘எழுத்தாளர்களே இப்படித்தான். ஏமாற்றுபவர்கள்’ என்று சமூகவலைத்தள அவதூறையும் பரப்பி விடுகிறார்கள்.  அவர்கள் எழுத்தாளர்களல்ல என்றே சொல்ல விரும்புகிறேன். அந்த பெண்கள் இலக்கியவாசகர்களும் அல்ல.

அது முற்றிலும் வேறொரு உலகம். பாலியல் நாட்டமும் பாலியல் வறட்சியும் இரு முனைகளாக அமைய பாலியலுக்காக மற்ற அனைத்தையும் பாவனை செய்பவர்களின் சூழல் அது. அதன் பழியை இலக்கியம் சுமக்க முடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைகொங்கு சதாசிவம்
அடுத்த கட்டுரைதூரனும் அறிஞர்களும் – கடிதம்