இலக்கியவாதிகள் நல்ல கணவர்கள் இல்லையா?

சென்ற நீண்ட பதிலுக்கு (ஜெயமோகன் மாடல்) தொடர்ச்சியாக இரண்டு தனிக்கேள்விகளுக்கான பதிலும் சொல்லத்தோன்றியது. வேறு இருவர் தனிப்பட்ட முறையில் கேட்டவை

பொதுவாக நம் சூழலில்  ‘எழுத்தாளர்கள் மோசமான கணவர்கள்’ என்ற பிம்பம் உள்ளது. பலரும் அதை நம்ப விரும்புகிறார்கள். அதை பொதுவெளியில் பரப்புகிறார்கள். அவ்வாறு எழுதிப் பரப்புபவர்கள் பெரும்பாலும் பிறர் பற்றிய புரிதலே இல்லாத ஒற்றைநோக்கு கொண்டவர்கள், அன்றாட உலகியலில் உழல்பவர்கள் என்பதைக் காண்கிறேன். அவர்கள் எந்தவகையான கணவர்களாக இருப்பார்கள் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

அவர்கள் எழுத்தாளர்களைப் பற்றி அவ்வாறு நம்ப விரும்புவது ஆழமான தாழ்வுணர்ச்சியால்தான். எழுத்தாளர்களை அவர்கள் அஞ்சுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்கள் மனைவியர் உட்பட பெண்களிடம் படைப்புகள் வழியாக அந்தரங்கமாக உரையாடும் வாய்ப்புள்ளவர்கள் என்ற அச்சம் இவர்களிடம் இருப்பது ஒருபக்கம். எழுத்தாளர்களின் சமூக ஏற்பு பற்றிய பொறாமை இன்னொரு பக்கம். ஆனால் இரண்டுமே அவர்களின் பிரமைகள். அந்தமாதிரி விஷயங்கள் இங்கே பெரும்பாலும் இல்லாதவை.

எழுத்தாளர்கள் மோசமான கணவர்கள் என  எழுத்தாளர்களே எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு  எழுத்தாளர்கள் எழுதுவது எழுத்தாளர்களின் உளவிரிவால்தான். அவர்கள் பிறரின் துயரை உணர்பவர்கள். ஆகவே மனைவியின் பக்கமிருந்து தங்களைப் பார்த்து, தாங்கள் இன்னும் சற்று மேம்பட்டவர்களாக இருக்கலாமே என ஆதங்கம் கொள்கிறார்கள். எண்ணிப்பாருங்கள், நம் கணவர்களில் அப்படி இன்னொருவர் தரப்பைப் பார்க்கும் மிகமிக அடிப்படையான உளநிலை கொண்டவர்கள் எத்தனைபேர்?

நான் தமிழ், மலையாளச் சூழலைப் பார்க்கிறேன். யார் மோசமான கணவர்கள்? புதுமைப்பித்தனா? குபராவா? லா.ச.ராவா? அல்லது அசோகமித்திரனா? சுந்தர ராமசாமியா? ஜானகிராமனா? தேவதேவனா? தேவதச்சனா? அல்லது பாவண்ணனா, எஸ்.ராமகிருஷ்ணனா, இரா. முருகனா, யுவன் சந்திரசேகரா நானா? யார்?

கி.ராஜநாராயணனுக்கோ, தி.ஜானகிராமனுக்கோ, சுந்தர ராமசாமிக்கோ, பிரபஞ்சனுக்கோ, இந்திரா பார்த்தசாரதிக்கோ அவர்களின் துணைவியர் மேல் இருந்த பெரும்பிரியம் இங்கே வெளியே காணற்கரியது. அபி தன் மறைந்த மனைவிமேல் கொண்டுள்ள பிரியத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். மனைவியின் பிரிவால் முற்றிலும் நிலைகுலைந்துபோன கே.சி.நாராயணனின் உளநிலையை கண்டு தொடர்ந்து உடனிருக்கிறேன். இன்றும் யுவன் முதல் இளம்படைப்பாளிகள் வரை  எழுத்தாளர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். மோசமான கணவர்கள் என எவராவது உள்ளனரா?

நம் மரபில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், நாமக்கல் கவிஞர், வே.சாமிநாத சர்மா, கா.அப்பாத்துரை போன்றவர்கள் துணைவியரிடம் கொண்ட பெருங்காதல் இலக்கியப் பதிவுகளாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. ஒரு பார்வையில் இலக்கியவாதியை கணவனாக பெற்ற மனைவியர் நல்லூழ் கொண்டவர்கள் என்றே தோன்றுகிறது. பிற பெண்கள் வரலாற்றில் மறைந்துவிடுவார்கள். எழுத்தாளர் மனைவிகள் என்றுமிருப்பார்கள்.

தமிழ்ச்சமூகச்சூழலை அளவீடாகக் கொண்டு பார்த்தால் மோசமான கணவர்கள் என்று சொல்லத்தக்க கணவர்கள் எழுத்தாளர்களில் அரிதினும் அரிது. ஊழ் என ஒன்றுண்டு. அதனால் வறுமையும் நோயுமாக அலைக்கழிக்கப்பட்டவர்கள் சிலர் உள்ளனர். அது எவருக்கும் நிகழ்வதே. ஆனால் அப்படிப் பார்த்தால்கூட எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் வணிகத்தோல்வி, கடும் பொருளியல் வீழ்ச்சியினூடாக தங்கள் குடும்பங்களை மேலேற்றியவர்கள். சாமானியர் உடைந்துபோகும் சூழலில் எழுத்தாளன் என்னும் உளத்திண்மையால் அவற்றை கடந்து நிலைகொண்டவர்கள்.

எழுத்தாளர்களில் மிக அரிதாக குடி போன்ற அடிமைத்தனங்களால் சீரழிந்தவர்கள் உண்டு. ஒருவகையில் அதுவும் ஊழ்தான். ஆனால் அப்படிப் பார்த்தால்கூட எழுத்தாளர்கள் அல்லாதவர்களில் குடியடிமைகளின் விகிதத்தைப் பார்த்தால் அவ்வெண்ணிக்கை தமிழ் எழுத்தாளர்களில் மிகமிகக்குறைவு. இன்று தமிழகக் கணவர்களில் கால்வாசிப்பேர் குடிஅடிமைகள்தான். எழுத்தாளர்களில் அப்படி குடிக்கு ஆட்பட்டவர்கள் கூட மிகமிகச் சிறந்த தந்தையராகவே திகழ்ந்துள்ளனர், தங்கள் பெருமுயற்சியால் மைந்தர்களை வாழ்க்கையில் மேலேற்றியுள்ளனர். விக்ரமாதித்யனோ லக்ஷ்மி மணிவண்ணனோ உதாரணம்.

நான் சென்ற இருபதாண்டுகளில் ஏராளமான குடும்பச் சிக்கல்களை அறிந்திருக்கிறேன் – பெரும்பாலும் சமரசம் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. அவற்றில் ஏராளமான மோசமான கணவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் இருவகை. முதல் வகை, குடும்பத்தின் எப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் குடிப்பழக்கம், ஊதாரித்தனம், சோம்பல் போன்றவற்றில் திளைப்பவர்கள். பெண்களே அக்குடும்பங்களை தங்கள் உழைப்பால் பேணி நடத்துவார்கள். அப்பெண்களையும் கொடுமைப்படுத்தி அக்கணவர்கள் பணம் பிடுங்குவார்கள்.

இரண்டாம் வகை, பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ அல்லது மற்ற மனிதர்களுக்கோ சுயமும், உணர்வுகளும், சொந்தமாக பார்வையும் உண்டு என்றே அறியாத ஆண்கள். அவர்கள் குடும்பங்களிலேயே அப்படி வளர்க்கப் பட்டிருப்பதில்லை. மிகச் சிறிய விஷயங்களுக்கே ஆணவம் சீண்டப்பட்டு உச்சநிலைச் சீற்றம் அடைவார்கள். வன்முறையில் இறங்குவார்கள். அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுவார்கள். சிறு மீறலையே தங்களுக்கு எதிரான செயலாக எடுத்துக்கொண்டு வெறிகொள்வார்கள். இன்னொருவரின் இடம் என்பதையே அனுமதிக்க முடியாதவர்களாக, அப்படியொன்று இருப்பதையே அறியாதவர்களாக இருப்பார்கள். எப்போதும் ஆழமான பாதுகாப்பின்மை கொண்டிருப்பார்கள்.

மேற்சொன்னவற்றில் இரண்டாம் வகையினர் இங்கே தவறான கணவர்களாக சமூகப்பார்வையில் கருதப்படுவதில்லை. ஏனென்றால் குடும்பத்திற்கு பொருள் சேர்த்துக் கொடுப்பார்கள். குழந்தைகளை நல்ல பொருளியல்நிலையில் இருத்துவார்கள். ஆனால் அதன்பொருட்டு மனைவியரின் வாழ்க்கை அவர்களால் முழுமையாக அழிக்கப்படும். அதை பெண்களே பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன்.

மேலே சொன்ன இரு வகைகளில் இல்லாமல் ஒரு கணவர் என்பது பொதுச்சூழலில் மிக அரிதானவர். ஆனால் சென்ற இருபதாண்டுகளில் மேற்கண்ட இரு வகைமையிலும் சேர்ந்த ஒரே ஒரு எழுத்தாளரைக்கூட கேள்விப்பட்டதில்லை. எழுத்தாளர்கள் பற்றி அதிகபட்சம் கேள்விப்படும் குற்றச்சாட்டுகள் உலகியலில் பெரிய அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள், அன்றாட வாழ்வில் மறதியும் தடுமாற்றமும் கொண்டிருக்கிறார்கள், சமூக உறவுகளில் கொஞ்சம் விலக்கம் கொண்டிருக்கிறார்கள், அவ்வப்போது தனியுலகில் வாழத்தொடங்கிவிடுகிறார்கள் என்பவை மட்டுமே.

இவற்றை பெரும்குறையாகச் சொல்லி புலம்பும் எழுத்தாளர் மனைவிகள் சிலர் உண்டு.  அவர்கள் உண்மையில் பொறுப்பற்ற கணவர்கள் அல்லது ஆதிக்கக் கணவர்களின் கொடுமை என்றால் என்ன என்று அறியாதவர்கள். கணவனின் புரிந்துகொள்ளும் தன்மை, மென்மை ஆகியவற்றை அவனுடைய பலவீனமாக எண்ணி; அதைக்கொண்டு அவனை தனக்கு முழுமையான அடிமையாக ஆக்கிவிடலாமென கணக்கிடுபவர்கள். பெரும்பாலான தருணங்களில் அப்பெண்களின் பெற்றோர், குறிப்பாக அப்பெண்களின் அன்னை, அந்த எண்ணத்தை உருவாக்குபவராகவும் திகழ்கிறார். மூர்க்கமாக தன்னை அடக்கும் ஆணிடம் மட்டுமே இசைந்து போகும் பெண்கள் பலர் உண்டு, இசைந்துபோகும் ஆண்களிடம் அந்தப் பெண்களே அடக்குமுறையாளர்களாக ஆகிவிடுவார்கள்.

பல பெண்கள் ‘நல்லவருதான். கடுமையா ஒண்ணும் நடந்துக்கறதில்லை. எல்லா சுதந்திரமும் குடுக்கறார். புரிஞ்சுக்கிடற ஆள்தான். பொறுப்பானவர்தான். பிள்ளைங்க கிட்ட பாசமா இருப்பார். ஆனா இந்த எழுத்து மட்டும் இல்லேன்னா இன்னும் நல்லா இருந்திருக்கலாம்’ என்றுதான் சொல்வார்கள். அந்த எழுத்தால்தான் அவர் அப்படி இருக்கிறார் என்பதை அவர்களுக்கு புரியவைக்க முடியாது.

மீண்டும் எண்ணி எண்ணி ஒவ்வொரு முகமாக நினைவில் கொண்டுவந்து பார்க்கிறேன். மோசமான கணவர்களாகிய எழுத்தாளர்கள் யார் யார்? தமிழிலக்கியத்தின் நூறாண்டுகாலப் பரப்பில் எனக்கு தெரியவே தெரியாத ஏதாவது எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்ன? கி.ராஜநாராயணன் எல்லாம் மோசமான கணவர்கள் என்று வகுக்கப்படும் அளவுக்கு உத்தமக் கணவர்கள் நானறியாமல் ரகசியமாகத் தமிழகத்தில் நடமாடிக்கொண்டிருக்கிறார்களா? பயமாக இருக்கிறதே, அரசு என்னதான் செய்கிறது?

இணையவெளியில் சில சில்லறை எழுத்தாளர்கள், எழுத்தாளரென நடிப்பவர்கள் பாலியல் வறட்சிகொண்டு அலைகிறார்கள் என கேள்விப்படுகிறேன். பெரும்பாலானவர்களின் பெயர்களும் எனக்குத் தெரியும் – பெண்கள் இயல்பாக இவற்றைச் சொல்லும் நம்பகமான ஆண்களில் நானும் ஒருவன் என்பதனால். ஆனால் அப்போதுகூட அவர்களின் எண்ணிக்கையும் விகிதாச்சாரமும் மிகக்குறைவு. இலக்கிய வாசிப்பே இல்லாமல், இலக்கியப்பாவனையில் இதற்கென வேலைமெனக்கெட்டு அலையும் கும்பலே மிகுதி. ஆனால் சட்டென்று ஒரு பொதுக்கூற்று உருவாகி நிலைகொண்டு விடுகிறது. அதற்கு அடிப்படை என்பது சமூகக் கூட்டுமனநிலை. அதிலுள்ள அச்சம். பொதுப்போக்குடன் ஒவ்வாத எல்லாவற்றையும் சமூகக் கூட்டுமனநிலை எதிர்நிலையிலேயே நிறுத்துகிறது.

பொதுச்சமூக உளவியல் பற்றி ஓர் உதாரணம் சொல்கிறேன். 1998ல் விஷ்ணுபுரம் நாவல் பற்றி நான் எழுதிய குறிப்பில் இவ்வாறு சொல்லியிருந்தேன். “இந்நாவலின் கருவை அருண்மொழியிடம் சொல்லிச் சொல்லி வளர்த்துக்கொண்டேன். திருமணமான தொடக்கநாட்களில் இந்நாவலைப் பற்றியே அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்” .அதற்கு பொ.வேல்சாமி இப்படி எதிர்வினையாற்றினார். “பாவம் சகோதரி அருண்மொழி, அவர்களை இப்படி ஜெயமோகன் கொடுமைப் படுத்தியிருக்க வேண்டாம்”. அக்கூற்றுக்கு இலக்கியச் சூழலில் அப்போதே கடும் எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அதுவே நம் சமூக மனநிலை.

நான் எழுத்தாளன், என் கனவையே மனைவியிடம் பேசமுடியும். அவளோ என்னை காதலித்து மணந்தவள். விஷ்ணுபுரம் நாவலையே அவள்தான் ‘எடிட்’ செய்தாள். இன்றும் அதை தன் பங்களிப்புள்ள தன் நாவலாக எண்ணுகிறாள். அன்று 21 வயதான அவளிடம் அந்தக் கனவை நான் பகிர்ந்துகொண்டதை ஒரு பெரும் கௌரவமாகக் கருதினாள். ஆண்டுக்கணக்கில் அதிலேயே வாழ்ந்தாள். அதன் வழியாகவே வளர்ந்தாள். தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி அனைவரிடமும் அதன் வழியாகவே சென்றடைந்தாள். ஆனால் பொதுச்சமூகம் அதை ‘கொடுமைப்படுத்தல்’ என்றே எண்ணும்போல.

அருண்மொழி எங்கள் காதல் பற்றி எழுதிய நீள்கட்டுரை ‘பெருந்தேன் நட்பு’ என்னுடைய 60 ஆண்டு மலரில் வெளிவந்தது. (சியமந்தகம்) என்னுடன் நீண்டநாள் நட்பு கொண்டவர்கள் பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது. இப்போது அக்கட்டுரை விரிவாக்கப்பட்டு புகைப்படங்களுடன் பெருந்தேன் நட்பு என்ற பெயரில் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக நூல்வடிவில் வருகிறது.

அக்கட்டுரை வெளிவந்த நாட்களில் பலரும் ‘வியந்து’ எழுதியது எழுத்தாளனைக் காதலிப்பதைப் பற்றித்தான். எழுத்தாளர்களுக்குக் காதல் அமைவது அரிது என்பதே உண்மை – ஏனென்றால் சாதாரணமாக பெண்களுக்கு எழுத்தாளர்களின் பொருளியல்நிலை நிறைவளிப்பதில்லை. பொருளியல்நிலை அன்றி வேறு அளவுகோல்கள் சாமானியப் பெண்களுக்கு இருப்பதுமில்லை. ஆனால் பொருளியல்நிலை வலுவாக இருந்த எழுத்தாளர்கள் பெரும்பாலும் காதலித்து மணம் புரிந்து கொண்டவர்களே.

எழுத்தாளர்களைக் காதலிக்கும் பெண்கள் அளவுக்கு தீவிரமான காதலை பிற பெண்கள் ஆண்களிடமிருந்து அடைய முடியாது. ஏனென்றால் காதலின் தீவிரமென்பது நடைமுறைப் புத்திக்கு அப்பாற்பட்ட ஒருவகை கற்பனையுலகைச் சார்ந்தது. நன்றாகப் படித்து, ஒழுங்காக வேலைக்குச் சென்று, முறையாக தொழில்செய்து, சம்பாதிக்கும் ஆண்களுக்கு அந்த தீவிரம் அமைவதில்லை. நடைமுறைப்பார்வையே அதற்குத் தடையாக இருக்கும்.

அன்று அருண்மொழியின் அக்கட்டுரையை ஒட்டிய விவாதங்களில் பலர் காதலித்து மணம் செய்துகொண்ட பின் அந்த காதல் மங்கிப்போயிருக்கும், எழுத்தாளனை எல்லாம் மனைவியரால் தாங்கிக்கொள்ள முடியாது என்று எழுதியிருந்தனர். அதே பொதுப்புத்தி. ஆனால் உண்மையில் நேர்மாறாகவே நடைமுறை உள்ளது. பாலியல் ஈர்ப்பும் குடும்பமும் மட்டுமே இணைப்பாக இருக்கும் மணவுறவுகள்தான் மெல்ல காதலற்ற சடங்காக ஆகின்றன. பாலியல் ஈர்ப்பும் குழந்தைகள் பற்றிய பொது அக்கறையும் முதல் கால்நூற்றாண்டுக்கு மட்டுமே. அறிவுசார்ந்த, நுண்ணுணர்வு சார்ந்த இணைப்பு கொண்ட மணவுறவுகளில் சலிப்பு நிகழ்வதே இல்லை.

இன்றும் என் வாழ்க்கையில் நான் பேசிக்கொண்டிருக்க மிகமிக விரும்பும் ஆளுமை அருண்மொழிதான். சிரிப்பும் வேடிக்கையுமில்லாமல் அவளிடம் பேசுவதே இல்லை.  வீட்டில் இருந்தாலும் பயணத்திலும் எப்போதுமே பேச்சுதான். ஏனென்றால் எனக்கு ஆர்வமுள்ள அனைத்திலுமே அவளுக்கும் ஆர்வமுண்டு. இசையில் கூடுதலாக. அதையே சுந்தர ராமசாமியிடமும் கி.ராஜநாராயணனிடமும் எல்லாம் கண்டிருக்கிறேன்.

அண்மையில் ஒரு பேட்டியில் சு.ராவின் மனைவி கமலாம்மாவிடம் “எப்படி இருக்கிறீர்கள்?” என்ற வினாவுக்கு “எல்லாம் இருக்கு. சு.ரா இல்லியே” என்று பதில் சொல்லியிருந்தார். அதை அவர்கள் நடுவே எப்போதும் ஓடிக்கொண்டிருந்த அறிவார்ந்த நட்பை அறிந்தவர்களே புரிந்துகொள்ளமுடியும்.

முந்தைய கட்டுரைதலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்
அடுத்த கட்டுரைபனியும் தனிமையும் – கடலூர் சீனு