’ஜெயமோகன் மாடல்’

அன்புள்ள ஜெ

இது உங்கள் நண்பர் சரவண கார்த்திகேயன் இணையத்தில் எழுதியது

அன்புள்ள பெண்களே,

மோகன் மாதிரி ஆளு வேணும்னு கேட்கறதுக்குப் பதிலா ஜெயமோகன் மாதிரி ஆளு வேணும்னு கேட்கலாமே!

*

அதற்கு வந்த பின்னூட்டங்களில் ஒன்று

ஒரு எழுத்தாளரை சாதாரண பெண் எப்படி ஏற்று கொள்வாள்? jeyamohanயை விட அருண்மொழி தான் அபூர்வம்….

*

உங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தேன். ஒரு வேடிக்கைக்காகத்தான்.

ராஜ்

*

அன்புள்ள ராஜ்,

ஒரு வகை சில்லறை விவாதம். ஆனால் சமூக உள்ளத்தின் ஒரு வெளிப்பாடு என்று கொண்டால்  சுவாரசியமானது. என்னிடம் இளம் வாசகர்கள், எழுத்தாளர்கள் பல தருணங்களில் பேசுவது இந்த தலைப்பு.

அறிவியக்க ஆர்வம் கொண்ட ஓர் ஆணின் பார்வையில் இந்த ‘ஜெயமோகன் மாடல்’ என்பது ஒரு வெற்றிகரமான முன்னுதாரணம்தான். நான் அதை எந்த இளைஞனுக்கும் தயக்கமில்லாமல் சிபாரிசு செய்வேன். உண்மையில் அதைத்தான் நான் என் புனைவல்லா எழுத்துக்கள் வழியாக இளைஞர்கள் முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். எழுத்தாளனுக்கு பெரிய இடம் ஏதுமில்லா சமூகத்தில், எழுத்தாளன் மேல் ஐயமும் ஒவ்வாமையும் கொண்ட பொதுச்சூழலில், அன்றாட வாழ்வுடன் போராடியே எழுதவேண்டும் என்னும் நிலைமையில், ஓர் இளைஞன் தன்னை முழுமையாக இங்கே நிகழ்த்திக்கொள்ள அந்த மாடலே மிகமிக உதவியானது.

இப்படி அதை தொகுத்துக்கொள்வேன். உடல்நலம் மற்றும் நல்ல தோற்றத்தைப் பேணுதலில் கவனம். தேவைக்கு சற்று மேலேயே பணம் மற்றும் சேமிப்பு. புகழ், சமூக இடம் ஆகியவை குறிப்பிட்ட அளவில் உண்டு. மது, புகை எதனாலும் மூளையையோ உடலையோ மழுங்கடிப்பதில்லை.

அறிவார்ந்த தீவிரம் எப்போதுமே உண்டு. ஆனால் ஒருபோதும் சிடுசிடுப்பான எதிர்மனநிலை இல்லை. எரிச்சல் அல்லது கசப்பில் நீடிப்பதில்லை. தனிப்பட்ட முறையிலான எந்த கோபத்தையும் ஒரு மணி நேரத்திற்குமேல் கொண்டு செல்வதில்லை. தனிவாழ்வில் சண்டையிடும், பூசல் கொள்ளும் மனநிலை இல்லை. பெண்கள் அல்லது குழந்தைகளின் தனியுலகுக்குள் நுழைவதே இல்லை. அவர்களுக்கு ஆணையிடுவதோ கட்டுப்படுத்துவதோ அறவே இல்லை. அவர்களின் சுதந்திரத்தை எவ்வகையிலும் குறுக்குவதில்லை. எந்நிலையிலும் குடும்பத்தினர் இயல்பாக அணுகக்கூடியவன், அவர்கள் கேலிசெய்யவும் விமர்சிக்கவும் இடம் கொடுப்பவன்.

என் வாழ்க்கை ஒருவகையில் ’ஜேம்ஸ்பாண்ட் தன்மை’ கொண்டது என நண்பர்கள் சொல்வதுண்டு. சலிப்பூட்டும் அன்றாடம் இல்லை.  மலைகள், காடுகள், தொல்லியல் தடங்கள் என உலகமெங்கும் செய்யும் பயணங்கள். மனைவி குழந்தைகளும் கூடுமானவரை அதில் இணைந்துகொள்கிறார்கள். வாழ்வில் எப்போதும் ஒரு சாகசத்தன்மை உண்டு. உடல்நலம் பேணுவது அந்த சாகசத்தன்மைக்காகவே. எந்த அற்ப விஷயங்களிலும் வாழ்க்கையை வீணடிப்பதில்லை.

விரிவான நண்பர் கூட்டம் உண்டு. எல்லா உரையாடலும் நகைச்சுவையுடன் இருக்கவேண்டும், ஒவ்வொரு நாளையும் மகிழ்வாக மட்டுமே கொண்டாடவேண்டும் என்ற பிடிவாதமும் அதற்கேற்ற திட்டமிடலும் உண்டு. மேலாக என்னைச் சூழ்ந்தவர்களை இடைவிடாது மகிழ்விப்பவனாகவே இருந்துள்ளேன். அவர்களின் நெருக்கடிகளில் நான் உடனில்லை என்று ஒருவர்கூட இன்றுவரை சொல்ல நேர்ந்ததில்லை.

பொதுவாழ்க்கை, அகவாழ்க்கை ஆகியவற்றுக்கு நிகராகவே குடும்ப வாழ்க்கையையும் கொண்டுசெல்கிறேன். குடும்பநேரம் ஒருநாள்கூட குறைந்ததில்லை. குடும்பக் கடமைகள் எதிலும் எந்தக் குறையும் எப்போதும் இருந்ததில்லை. முப்பதாண்டுகளில் என்னுடன் பேசும் எந்த தருணத்திலும் அருண்மொழி வெடிச்சிரிப்பும் கேலியும் கொண்டாட்டமும் இல்லாமல் இருந்ததே இல்லை. அருண்மொழிக்கு மட்டுமல்ல, என்னைச் சார்ந்த எந்த நண்பருக்கும், எந்த பெண்ணுக்கும் அவர்களின் இக்கட்டுகளில் மிக வல்லமை வாய்ந்த துணையாகவே இருந்திருக்கிறேன். நட்புவலையும் நம்பிக்கையளிக்கும் தன்மையுமே என் ஆற்றல்.

ஜெயமோகன் மாடல் என்பதே இன்று ஓர் எழுத்தாளன், ஓர் அறிவியக்க இளைஞனுக்கு எழுதுவதற்கு முன்னுதாரணமானது. ஒவ்வொன்றையும் பகுத்துக்கொண்டு முழுமையாக ஈடுபடுதல், உலகியலின் தேவைகளை தவிர்க்காமல் உள்ளிருக்கும் பித்தையும் கனவையும் தக்கவைத்துக் கொள்ளுதல், சூழலில் உள்ள காழ்ப்புகள் மற்றும் கசப்புகளை பிரதிபலிக்காமல் அகத்தே விலகியிருத்தல், சூழல் அளிக்கும் எதிர்மறை அழுத்தங்களைக் கடந்து தன் அறிவாற்றல் முழுமையையும் செயலாக ஆக்கிக்கொள்ளுதல், எதையும் எதிர்பாராமல் தன்னை கூடியவரை முழுமையாக படைப்பாக வெளிப்படுத்துதல், அதன் வழியாக நிறைவுறுதல் ஆகியவையே அது.

அது எளிதில் எய்தக்கூடுவது அல்ல. அதற்கு தொடர்ந்து தன்னை அவதானிக்கும் பயிற்சியும், அறிந்தவற்றை அன்றாடமாக ஆக்கிக்கொள்ளும் பொறுமையும், பெரிய கனவுகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் தன்மையும் தேவை. அதை நான் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறேன்.

*

ஆனால் ’ஜெயமோகன் மாடல்’ என்பது இன்றைய பெண்களிடம் சற்றும் செல்லுபடியாகாது. அதில் ஒரே ஒரு விஷயம் மட்டுமே மதிப்புள்ளது – நான் திரைவசனம் எழுதுபவன், ஆகவே ஒரு நிறுவன சிஇஓ அளவுக்கே பணம் ஈட்டுபவன். மற்ற எல்லாமே உலகியலில், இன்றைய பெண்களிடம் எந்த மதிப்பும் அற்றவை. இதை இன்றைய இளைஞர்களிடம் ஓர் அறிவிப்பாகவே சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால் எழுத்தாளர்கள், அதிலும் இலக்கியப் படைப்பாளிகள் பெண்களால் விரும்பப்பட மாட்டார்கள்.  இளம்பெண்கள் அவர்களை ஒதுக்கவும் வாய்ப்புண்டு. நம் ‘காதலர் சந்தை’யில் எந்த மதிப்பும் இல்லாதது இலக்கிய -அறிவுஜீவி அடையாளமே. சொல்லப்போனால் அது ஒரு எதிர்மறை அடையாளம். அதை முழுமையாக மறைத்துக் கொள்வதே இளைஞர்களுக்கு நல்லது. இதை நம் இளம் நண்பர்கள் அனைவருக்குமே சொல்லி வருகிறேன்.

இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் அறிவாற்றல் பெண்களைக் கவரும் என்னும் ஒரு மூடநம்பிக்கை உண்டு. உண்மை அப்படியல்ல. இங்கே பெண்கள் அந்த பக்குவத்தை அடையும்படி வளர்க்கப்படவில்லை. எந்தக் குடும்பத்தில் அறிவார்ந்த சூழல் உள்ளது? எந்தக் குடும்பத்தில் அடிப்படை கலைப்பின்புலம் உள்ளது? எந்தக் கல்லூரியில் அவை சொல்லித் தரப்படுகின்றன? பெண்களுக்கு ரசனை, நுண்ணுணர்வு ஆகியவை உருவாக என்ன வாய்ப்பு உள்ளது இங்கே?.

ஆண்களுக்கும் மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது. மிகமிகக் குறைவானவர்களுக்கே ரசனையும் அறிவுத்திறனும் உள்ளது. ஆனால் ஒப்புநோக்க ஆண்களுக்கான சந்தர்ப்பங்கள் மிகுதி. அவர்கள் அரசியல், கலைகள் ஆகியவற்றில் தொடர்புகொள்ள நண்பர்கள், ஆசிரியர்கள் என சிலர் அமையக்கூடும். கணிசமானவர்கள் அரசியலியக்கங்களால் அடிப்படை அறிவுத்தளம் நோக்கி ஈர்க்கப்பட்டு, பின் தங்கள் பாதையை தாங்களே தெரிவுசெய்கிறார்கள்.

ஆனால் நம் பெண்கள் முழுக்க முழுக்க உலகியல் சூழலிலேயே வளர்கிறார்கள். அது மட்டுமே வாழ்வு என்றே அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இன்றைய குடும்பம், கல்விநிலையம், நட்புச்சூழல் எல்லாமே மிகச்சிறிய சிறைக்கூண்டுகள். ஆகவே பிறிதொன்றை மிகப்பெரும்பாலானவர்கள் அறிவதே இல்லை. அவர்களில் லட்சத்தில் ஒருவர் அறிவுசார்ந்த அறிமுகமோ, நுண்ணுணர்வு சார்ந்த திறப்போ அடைவது அவர்களின் நடுவயதில்தான். அப்போது அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குடும்பச்சுமையை தவிர்க்க, குடும்ப எல்லையை கடக்க முடிவதுமில்லை.

ஆகவே நம் இளம்பெண்கள் தங்களைச் சூழ்ந்துள்ள எளிய உலகியல் ரசனையும், உலகியல் இலக்குகளும் மட்டுமே கொண்டவர்கள். சினிமா, சாப்பாடு, உடை மற்றும் மோஸ்தர்கள், நுகர்பொருட்கள் ஆகியவை மட்டுமே அவர்கள் அறிந்தவை. தங்களைப்போன்ற பிறரிடம் ஒப்பிட்டுக்கொண்டு மட்டுமே அவர்கள் இலக்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். பெண்களில் எதையேனும் படிப்பவர்கள் அரிதினும் அரிதினும் அரிதானவர்கள். அறிவியக்கம் சார்ந்த ஓரிரு சொற்களை அறிந்தவர்களே மிகச்சிலர்தான்.

அறிவியக்கத் தொடர்பு கொண்ட இளைஞர்கள் பொதுவாக எங்கும் எப்போதும் அறிவார்ந்த உரையாடலை நிகழ்த்தவே விரும்புவார்கள். அது ஓர் ஊக்கக் காலகட்டம். பேசிப்பேசி தன்னை கண்டடைவதும், தன்னை வளர்த்துக்கொள்வதும் அக்காலகட்ட இயல்பு. ஓயாத பேச்சுதான் அறிவுஜீவியின் முதிரா வளர்ச்சி நிலையின் அடையாளமே. ’சிங்கிள் டீ அடிக்கப் போற எடத்திலே சிங்கிஸ் ஐத்மாத்தவைப் பத்திப் பேசுறவன்’ தான் அறிவியக்கவாதி. (ச.தமிழ்ச்செல்வன் ஒரு மேடையில் சொன்ன வரி). அந்த உரையாடலை இன்றைய இளம்பெண்களுடன் நிகழ்த்த முடியாது. அதை உணராமல் இளம் அறிவுஜீவி ஆண்கள் தொடர்ச்சியாக பெண்களிடம் அதற்கு முயன்று அவர்களால் ஒதுக்கப்படுவார்கள், ஏளனத்துக்குள்ளாவார்கள்.

காரணம், அறிவுத்தளத்தில் அடிப்படை அறிமுகம் அற்றவர்களுக்கு இயல்பாக அறிவு சார்ந்த எதன்மேலும் திகைப்பு, ஒவ்வாமை, ஏளனம் ஆகியவையே முதலில் உருவாகும். ஏனென்றால் அவற்றுக்கு நாம் வாழும் கண்கூடான புறவுலகில் பெரிய மதிப்பேதும் இல்லை. அகம் சார்ந்த மதிப்பு உண்டு, ஆனால் அதை அகம்சார்ந்து உணர கொஞ்சம் அதில் வாழ்ந்து பார்க்கவேண்டும். யாருக்கானாலும் அந்த தொடக்கநிலை திகைப்பு, ஒவ்வாமை, ஏளனம் ஆகியவற்றை கடந்துதான் அறிவுத்தளத்தில் ஈடுபாடு ஏற்படும். அதை அவர்களுடன் நீண்ட அணுக்கமான உரையாடல் இல்லாமல் உருவாக்க முடியாது. அன்னியனான ஓர் ஆண் ஓர் இளம்பெண்ணிடம் அதை உருவாக்கும் வாய்ப்பு அனேகமாக நம் சூழலில் இல்லை.

உலகியலில் செல்லுபடியாகக் கூடியது முதன்மையாகப் பணம். இரண்டு, அதிகாரம். பெண்களைப் பொறுத்தவரை மூன்றாவதாகத்தான் தோற்றம் அழகு போன்றவை. குணம் மற்றும் அறிவுத்தன்மையை மதிப்பிடும் தன்மை சமகால இளம்பெண்களுக்கு இல்லை. அதற்கான அறிவுப்பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களைப் போன்ற பிற பெண்கள் நடுவே வியப்பையும் மதிப்பையும் உருவாக்கும் ஆண் என்பதையே தங்களுக்கான ஆணை தெரிவுசெய்வதற்கான அளவுகோலாகக் கொண்டுள்ளனர். கொஞ்சம் முதிர்ச்சியானவர்கள் பொருளியல் உறுதிப்பாடு என்பதை அளவீடாகக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு வகை எதிர்பார்ப்போ மதிப்பீடோ எங்கும் இல்லை.

ஆகவே, தங்கள் பொருளியல் நிலைமையை மட்டுமே முன்வைத்து, அதற்குரிய பெண்ணை மணந்துகொள்வதே அறிவுஜீவியோ எழுத்தாளனோ செய்யவேண்டியது. வேறு வழியே இல்லை. அவ்வாறு மணந்தபின் அந்தப் பெண்ணை அறிவுக்கும் ரசனைக்கும் உகந்த தோழியாக ஆக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு உண்டு. அண்மையில் அவ்வண்ணம் மணந்த நம் வட்டத்தைச் சேர்ந்த பல இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய வாசகர்களுக்கும் அவ்வாறு இனிய தோழமை அமைந்துள்ளது. அவர்களின் துணைவிகள் இலக்கிய, அறிவியக்கச் சூழலுடன் இயைந்து வளர இயன்றுள்ளது.

பெண்ணை தெரிவு செய்கையில் அடிப்படையான புத்திசாலித்தனம், நுண்ணுணர்வு ஆகியவை உடையவரா என்று கவனிக்கலாம். அவ்வளவே செய்ய முடியும். எண்ணியவாறு அமையாவிட்டால் அவ்வாழ்க்கையுடன் பொருந்திச் செல்ல வேண்டியதுதான். அதுவும் இயல்வதே. இளைஞர்களாக இருக்கையில் அது கடினமானது என தோன்றும். ஆனால் குடும்பத்தின் மையம் என்பது குழந்தைகளே. குழந்தைகள் அமைந்தபின் ரசனை- அறிவு சார்ந்த இசைவு இல்லாமலேயே ஒரு சுமுகமான நல்லுறவு அமையமுடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர முடியும்.

அறிவியக்கத்திலுள்ள ஆண் ஒருவரை மணந்த பெண்கள் திருமணத்திற்குப் பின் பெண்கள் அடையும் ஒரு புரிதல் உண்டு. அவர்களின் தோழிகளின் ‘உலகியல் கணவர்’களை விட தங்கள் கணவர்கள் கொஞ்சம் அப்பாவிகளாகவும், பிறரைப் புரிந்துகொண்டு அவர்களுக்கும் இடமளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் அது. அந்த இடத்தை, சுதந்திரத்தை நுண்ணுணர்வும் அறிவுமுள்ள பெண் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வாள். தன்னை விரிவாக்கிக் கொள்வாள், தனக்கான அறிவுலக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வாள். அதையே அவன் பலவீனமாகக் கண்டு, அதைப் பயன்படுத்திக் கொண்டு மிகையான ஆதிக்கம் செலுத்தி, உறவை சிக்கலாக்கிக் கொள்ளும் பெண்களும் உண்டு.

திருமணத்திற்குப் பின்னரே ஆணுக்கு பெண்ணுடன் உண்மையாகவே நெருங்கவும், நீண்ட உரையாடல்களை நிகழ்த்தவும், தன்னை முன்வைக்கவும் வாய்ப்பு அமைகிறது. ஊக்கமும் அறிவுத்திறமும் கொண்ட ஆண்கள் இயல்பாக தங்கள் செல்வாக்கைப் பெண் மேல் செலுத்துகிறார்கள் என்பதை கண்டுள்ளேன். உடனே, பெண்ணியக் கேள்வி எழும். ஏன் பெண் ஆண்மேல் செல்வாக்கு செலுத்தக் கூடாதா? நடைமுறைப் பதில்தான் அதற்கு. இங்கே பெண்ணுக்கு அறிவியக்கம் சார்ந்த அறிமுகம் அமைய வாய்ப்பில்லை, ஆண்களுக்குக் கூடுதல் வாய்ப்பு உள்ளது.

சரி, நான் அப்படி இருந்தேனா? இல்லை. அன்று அறிவுசார்ந்த உரையாடலுக்கு தயாராக இல்லாத எவரிடமும் ஐந்து நிமிடம் பேச நான் ஒப்பியதில்லை. அவர்களை மனிதர்களாகவே மதித்ததில்லை. இன்று அப்படி அல்ல. மனிதர்கள் எவராயினும் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பேசிக்கொண்டிருக்க என்னால் இயலும். ஆயினும் அன்று எனக்கு நல்ல தோழிகள் அமைந்தனர். ஏனென்றால் நான் பணியாற்றியது வடகேரளச் சூழல். அது மார்க்ஸிய விளைநிலம். ஆனால் நெருக்கமான தோழிகளாக இருந்தமையாலேயே காதல் அமையவில்லை. இன்றுவரை நீடிக்கும் ஆழ்ந்த நட்புகள் மட்டுமே உருவாயின. (அவர்களில் முதன்மை அணுக்கம் கொண்டிருந்த கீதா சென்ற ஆண்டு மறைந்தார்.)

அருண்மொழி விதிவிலக்கு என்பதையே எப்போதும் சொல்லி வருகிறேன். அன்றே நான் அறியப்பட்ட எழுத்தாளன். ஆனாலும் தமிழகத்தில் அருண்மொழி அன்றி எவரிடம் நான் என் காதல்கோரிக்கையை சொல்லியிருந்தாலும் அவமானத்தைச் சந்தித்திருப்பேன். நானே அருண்மொழிக்கு எழுதும்போது என் சம்பளத்தைச் சொல்லி, அதை அவள் ஒப்புக்கொண்டால் மட்டும் என் காதலை மேற்கொண்டு யோசித்தால்போதும் என்றே எழுதியிருந்தேன். இன்றும் அதே நிலைதான் இளைஞர்களுக்கு நீடிக்கிறது.  அருண்மொழி என்னை ஏற்றுக்கொண்டது ஓர் ஆச்சரியம்தான். அவள் தோழிகளுக்கும், அவள் வீட்டாருக்கும்.

அவள் என்னை ஏற்றது ஏனென்றால் அவள் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதனால்தான். இன்றைய நுகர்வுக் காலகட்டம் அவள் இளம்பெண்ணாக இருந்தபோது உருவாகியிருக்கவில்லை. அருண்மொழி என்றுமே ஒரு ஜோடி செருப்புக்குமேல் வைத்துக் கொண்டதில்லை. ஒரு கைப்பைக்கு மேல் அவளிடம் இருந்ததில்லை. உடைகள், மின்னணுப் பொருட்கள் சார்ந்த எந்த ஆர்வமும் இன்றும் இல்லை. இன்றும் மளிகைக்கடைக்குச் சென்றால் முன்னரே பட்டியல் கையில் இருக்கும். தேவையற்ற எதையுமே அவள் வாங்குவதில்லை. முன்னுதாரணமான ஒரு சிக்கனம் அவளிடமுண்டு.

அருண்மொழியின் தலைமுறைப் பெண்கள் பெண்ணை வீட்டுக்குள் அடக்கி, எல்லா உரிமைகளையும் வாய்ப்புகளையும் பறித்த அவர்களுக்கு முந்தைய தலைமுறையின் குடும்பத்தைக் கண்டு வளர்ந்தவர்கள். அத்துடன் குடும்பம் என்னும் அமைப்பை கடந்து பெண்ணால் எதுவுமே செய்யமுடியாது என்ற யதார்த்தத்தையும் உணர்ந்தவர்கள். குடும்பம் என்னும் அமைப்பு மீதே அருண்மொழிக்கு பெரும் அச்சம் இருந்தது. அந்த அச்சமே அறிவார்ந்த ஒரு கணவன் என்னும் ஆவலை உருவாக்கியது. நான் அவளை தேடி அடையவில்லை, அவள் என்னைப்போன்ற ஒருவனை தேடிக்கொண்டிருந்தாள்.

சென்ற முப்பதாண்டுகளில் பிறர் குடும்பங்களை பார்த்து அருண்மொழி திரும்பத் திரும்பச் சொல்லும் வரி இது, “நல்லவேளை ஜெயன், உன்னை கல்யாணம் பண்ணாமலிருந்தால் என்ன ஆகியிருப்பேன்!” என் குடும்பத்தில் அருண்மொழிக்கு எந்த தடையும் இருந்ததில்லை. வாசிக்க, எழுத, பயணம் செய்ய, பணம் செலவழிக்க, சுயமாக முடிவெடுக்க. அவளுக்கு தமிழின் அறிவியக்கத்தின் மையத்தை நான் அறிமுகம் செய்தேன். தமிழின் முன்னோடிப் படைப்பாளிகள் அனைவரையும் அவள் அறிவாள். உலகமெங்கும் பயணம் செய்திருக்கிறாள்.

இன்றைய பெண்கள் நுகர்வுயுகத்தின் சிருஷ்டிகள். மிக எளிதாக இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒருவேளை உணவை  ஸொமேட்டோவில் ஆணையிட்டு வரவழைப்பவர்கள். விதவிதமாக செருப்புகள், ஆடைகள், மின்பொருட்களை வாங்குபவர்கள். நுகர்வுக்கான ஆற்றலே அவர்களின் அடையாளம், சமூகநிலை ஆகியவற்றை தீர்மானிக்கிறது. ‘நான் சமைக்கிறதே இல்லை, எல்லாமே ஆர்டர்தான்’ என்று சொல்லும் பெண்ணுக்கு அவள் சூழலில் இருக்கும் மதிப்பு வடகிழக்குக்கு ஒரு பயணம் செய்துவந்த பெண்ணுக்கு இருப்பதில்லை.  இது வாங்குவதற்கு அஞ்சாத ஒரு தலைமுறை. இன்பமென்பது நுகர்வே என இளமையிலேயே பயிற்றுவிக்கப்பட்ட தலைமுறை. “என் மகள் தினம் ஒரு புது செட்டு சீப்புதான் யூஸ் பண்ணுவா சார்…மாசம் முப்பது செட் சீப்பு மொத்தமா வாங்கிருவா…ஒருவாட்டி யூஸ் பண்ணினா நேரா குப்பைக்குத்தான்” என்று பெருமிதமாக ஒரு அப்பா என்னிடம் சொன்னார்.

இன்றைய பெண்கள் குடும்பம் என்பதை அஞ்சவில்லை. அதை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ள முடியும் என அறிவார்கள். அதற்கு முழுமூச்சாக முயல்கிறார்கள். அவர்களின் பொருளியல் சுதந்திரம், முடிவெடுக்கும் உரிமை போன்றவை ஆணைச் சார்ந்து இல்லை. பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் வாழ்க்கை பற்றிய தெளிவான கற்பனைகள் உள்ளன. விருப்பப்படியான நுகர்வு, சமூகத்தின் கண்களில் கௌரவமான இடம், அதற்கேற்ற பொருளியல் ஆகியவைதான் அவை. அந்தப்பொருளியல் கனவுகளுக்கு உகந்த கணவர்களை அவர்கள் நாடுகிறார்கள்.

ஆனால் பணம், சமூகநிலை ஆகியவற்றையே அளவுகோலாகக் கொண்டு துணைதேடும் பெண்கள் அடையும் ஏமாற்றம் ஒன்றுண்டு, உண்மையில் அறிவார்ந்தவர்களே நல்ல காதலர்கள். அதிலும் கற்பனை, நுண்ணுணர்வு கொண்டவர்கள் சிறந்தவர்கள். உளம் சார்ந்து மட்டுமல்ல, உடல்ரீதியாகக் கூட. ஏனென்றால் காமம் என்பது உடல்வலிமை சார்ந்தது அல்ல, உள்ளம் சார்ந்தது, கற்பனையில் விரிவது. பெண்களில் ஒரு சாரார் வாழ்வின் வளர்ச்சிப்போக்கில் தங்கள் நுண்ணுணர்வை கண்டடைகிறார்கள், அதற்குரிய இணையை தான் தேரவில்லை என அறிகிறார்கள். அதற்கு ஒன்றும் செய்யமுடியாது. வாழ்க்கை நாம் செய்யும் பலவகையான தெரிவுகளின் நீட்சியே.

இன்றைய யுகத்தில் ஒருவரின் இயல்பான அடையாளமென்பது பொருளியல் சார்ந்ததே. ஆகவே பொதுவெளியில் அதை மட்டுமே முன்வைக்க முடியும். அதற்கப்பாலுள்ள அடையாளம், ஆளுமை என்பதெல்லாம் நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளவேண்டியவை. நம்மை நன்கறிந்தவர் மத்தியில் மட்டுமே அதற்கு மதிப்பு. அந்த ‘மாடல்’தான் பொதுவெளியில் புழங்கும் ரூபாய் நோட்டு. பிற எல்லாமே தனிப்பட்ட முறையில் மட்டுமே மதிப்புள்ளவை- ஓவியங்கள் போல. ரசனையுள்ளவர்களுக்கு மட்டுமே அவை ஓவியங்கள், எஞ்சியோருக்கு வண்ணக்கறைகள் மட்டுமே.

ஜெயமோகன் மாடல் சிறந்ததுதான், ஜெயமோகனாக ஆகும் சாத்தியம் கொண்டவர்களுக்கு மட்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைசோ.இளமுருகனார்
அடுத்த கட்டுரைஓசூரில் புத்தக திருவிழா