குருபூர்ணிமா சந்திப்பு- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

 கடந்த ஆண்டு குருபூர்ணிமா நிகழ்வில் பங்கேற்க முடியாத ஏக்கம் இருந்தது. இம்முறை குருபூர்ணிமா -23 அழைப்பிதழைக் கண்டவுடன் ஆவல் மேலிட பதிவு செய்ய முடிவு செய்து மனைவியிடம் கூறினேன். எப்போதும்போல நானும் உடன் வருவேன் என்றார். அப்போது, பனிரெண்டாம் வகுப்பு பாட நெருக்குதல்களுக்கு நடுவே வெண்முரசின் மழைப்பாடல் நூலை வாசித்துக் கொண்டிருக்கும் என் மகளும் நானும் வருகிறேன் என்றாள். ஏற்கனவே ரஷ்யன் கலாச்சார மையத்தில் எம். .சுசிலாம்மா நிகழ்வில் தங்களை அவள் கண்டிருந்தாலும் வெண்முரசு வாசித்தவுடன்  அதனை எழுதியவர் மேல் எழும் பெரும் பிரமிப்பு அவள் முகத்தில் இருந்ததுகுடும்ப விழாக்களுக்கு என்றால் பள்ளியை காரணம் காட்டுபவள் இப்போது  பள்ளிக்கு இருநாள் விடுப்பெடுக்க ஒப்புக்கொண்டாள். இருவரும் வெண்முரசு பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென கூறிக் கொண்டார்கள்.

சேரன் அதிவிரைவு வண்டி இருபத்தைந்து நிமிடங்கள் தாமதமாக ஈரோட்டை அடைந்தது. அதன் காரணமாக வெள்ளிமலைக்கு வரும் முதல் பேருந்தை தவறவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின் வரும் அடுத்த பேருந்தை எதிர்நோக்கி அந்தியூரில் அமர்ந்திருந்தோம். அங்கு, சென்னையில் பணிபுரியும் பழனியைச் சேர்ந்த நண்பர் பரணியும், நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டினும் எங்களோடு இணைந்து கொண்டார்கள். ஆஸ்டின், சென்னையில் நிகழ்ந்த குமரகுருபரன்– 23 விழாவிற்கு நாகர்கோவிலில் இருந்து வந்து கலந்துகொண்டார் என்பது தங்கள் சொற்கள் மேல் அவர் கொண்ட பிரியத்தினால்தான்.

ஏழரைக்கு வரவேண்டிய பேருந்து எட்டு மணிக்கே வந்தது. பத்தரை மணிக்கு வெள்ளிமலை என இறக்கி விட்டார் நடத்துனர். எங்கள் ஐவரோடு சென்னையில் இருந்து வந்த திரைப்பட இயங்குநர் மருதுவும் இன்னும் சில பெண்களும் இறங்கினார்கள்நித்யவனத்துக்கு ஏற்கனவே வந்திருந்த பெண்கள் எங்களுக்கு வழிகாட்டி வயல் வரப்புகள் குடிசை வீடுகளுக்கிடையே நித்யவனத்திற்கு அழைத்து வந்தார்கள். பெயர் பலகையைக் கண்டவுடன் மானசீகமாக குரு நித்யாவை வணங்கிக் கொண்டேன். அறைக்கு வந்தவுடன் குளித்து உடைமாற்றிவிட்டு கூட்ட அரங்கிற்கு செல்லலாம் என நினைத்தபோது பரணிநிகழ்வு தொடங்கப் போகிறது. குளியல் முக்கியமா இல்லை நிகழ்வாஎனக் கேட்டார். நிகழ்வுதான் என முடிவு செய்து பைகளை அப்படியே வைத்து விட்டு கூட்ட அரங்கிற்கு வந்தோம். அங்கே ஏற்கனவே வந்திருந்த ஐம்பதிற்கும் மேலான நண்பர்களுடன் உரையாடல் நடத்திக் கொண்டிருந்தீர்கள். உங்களைப் பார்த்தவுடன் உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றியது. முதல்முறைக் காணும்போது ஏற்படும் பரவசத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு முறையும் அவ்வாறு தோன்றுவதை எப்படி எடுத்துக்கொள்வதுஒவ்வொருமுறையும் காணும்போது கடந்தமுறை கண்டபோது ஆற்றியிருந்ததைவிட  இன்னும் அதிகமாக நீங்கள் ஆற்றிய செயல்தான் சிலிர்ப்பை அளிப்பதாக தோன்றுகிறது.

வெண்முரசை முடித்தவுடன் இந்தியா முழுக்க வேற்கொள்ளப் போவதாகச்  சொன்ன நடை பயணத்தை எப்போது தொடங்குகிறீர்கள்என ஒருவர் வினவ அருகிலிருந்தவர்எப்போது தொடங்குகிறோம் எனக் கேட்க நினைத்ததைத்தான் சற்று மாற்றிக் கேட்டுவிட்டார்எனக் கூறினார். அதற்கு சற்று விரிவாகவே பதில் சொன்னீர்கள். வெண்முரசை முடித்த பிறகு உள்ளத்தில் தோன்றப்போகும் வெற்றிடத்தை நிரப்ப அல்லது எதிர்கொள்ள இந்தியா முழுவதும் நடைபயணம் செல்ல முடிவு செய்ததாகவும் ஆனால் அப்போது பெருந்தொற்று காலமானதால் அத்திட்டம் மாறியதாகவும் கூறினீர்கள். மேலும், அப்போது  ஜூம் செயலி மூலம் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததையும், தினம் ஒரு சிறுகதை எழுதியதையும் கூறி வெற்றிடம் கடக்கப்பட்டதைக் கூறி நடைபயணத் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை என்றும் கூறினீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல, வெண்முரசு நிறைவுக்குப் பின் மனதில் ஏற்படும் வெற்றிடத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது என் மனதிற்குள்ளும் ஒரு அச்சமாக மறைந்திருந்தது. அநேகமாக வெண்முரசை தினம்தினம் வாசித்துவந்த எல்லா நண்பர்களுக்குமே இருந்திருக்கக் கூடும். நீங்கள் கடந்த தடம் வழியாகவே நாங்களும் அவ்வெற்றிடத்தைக் கடந்தோம் என்பது ஒரு நிறைவுதான். ஒரு பேரிடர் வேறுவிதத்தில் நல்ல விசயமாகவும் இருந்திருக்கிறது.

சனிக்கிழமை மாலை இரண்டு உரைகள். முதல் உரை அந்தியூர் மணியுடையது சைவ பக்தி இலக்கியங்களுக்கும் தத்துவ நூலான மெய்கண்டார் இயற்றிய. சிவஞானபோதத்திற்கும்  பாலம்போன்று அமைந்த திருவுந்தியார் இயற்றிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் மற்றும் திருக்களிற்றுப்படியார் இயற்றிய  அவரது சீடர் திருக்கோவிலூர்   உய்யவந்த தேவநாயனார் மரபை பற்றி விரிவான சித்திரத்தை அவர்களின் பாடல்கள் மூலம் விவரித்தார். இவரது உரையில் குருவின் சாதியையும் குருவால் கண்டுபிடிக்கப்பட்ட சீடரின் சாதியையும் திரும்பத் திரும்ப குறிப்பிடுவது ஏனென்ற வினா மனதில் எழுந்ததுசீடர் குருவின்மேல் கொண்டிருந்த மதிப்பை அவர் இயற்றிய பாடல் மூலம் விவரித்தபோது, அதற்கான விளக்கத்தை அறிந்துகொண்டேன். குருவின் மீது மதிப்பு கொண்டதன் காரணமாக தன் பாடலின் பொருளை தவிர்த்ததற்கு பதிலாக மாற்றிப் பாடியிருந்தால் குருவுக்கும் அது பெருமைதானே என ஒருவர் கேட்க, அந்தியூர் மணி  உங்களை நோக்கி ஒரு பார்வையை வீசியபின்குருவை மீறி முன்னே செல்லும் நவீன இலக்கிய உலகத்தைக் கொண்டு அன்றைய குரு மரபை மதிப்பிடக் கூடாதுஎன பதில் கூறினார். அக்காலத்திலேயே குருவிற்கும் மாணவருக்கும் பிணக்கு இருந்ததென இராமானுஜருக்கும் அவர் குருக்குமான உறவை உதாரணம் காட்டிய பின் பணிவதோ மீறுவதோ அவரவர் நிலைப்பாடு என நீங்கள் அதை முடித்து வைத்தீர்கள்.

ஓவியரும் திரைப்பட கலை இயக்குநருமான பி. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி அடுத்த உரையை ஓவியர் ஜெயராம் ஆற்றினார். மருத்துவ செலவுக்காக தான் வாங்கிய தேசிய விருதை விற்ற கலை இயக்குநர் என்ற செய்தியை அறிந்த பின் பி. கிருஷ்ணமூர்த்தியை சந்தித்திருக்கிறார் ஜெயராம். தன் இருப்பிடத்திலிருந்து நடக்கும் தொலைவில் இருந்த அவர் வீட்டிற்கு சென்று உரையாடியதையும் தேவதேவன் போன்ற குணமுடையவர் என்று தான் உணர்ந்து கொண்டதையும் கூறினார். விருதுகள் பெற்ற பல படங்களுக்கு பணியாற்றிய போதும் அவரைப் பற்றி அத்துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு  தெரியவில்லை எனக் கூறியபோது மனம் நெகிழ்ந்தது. தான் செய்த எளிய ஒன்றை உயர்த்திப் பிடித்து கூவிக்கூவி பிரபலப்படுத்தும் கூட்டத்திற்கிடையே கவிஞர் தேவதேவன் போல தன் பணியை மட்டும் ஆற்றிக் கொண்டிருப்பவர்களை யாரும் அறிவதில்லை. பி. கிருஷ்ணமூர்த்தி இறந்து இரண்டு ஆண்டுகளாகிய பிறகும் அவரது ஓவியங்கள் யாரோவொருவருடைய அறையில் அடைபட்டு சிதைந்து கொண்டிருக்கிறது என ஜெயராம் கூறியபோது மனம் கலங்கியது. நீங்கள் நான் கடவுள் படத்தில் பணியாற்றியபோது பி. கிருஷ்ணமூர்த்தியை உடன் இருந்து பார்த்ததைப் பற்றியும் அவரது குணத்தைப் பற்றியும் கூறியது மனதின் கலக்கம் மறைந்து புன்னகைக்க வைத்தது.

சுவையான இரவு உணவை உண்டவுடன் நண்பர்களெல்லாம் கைப்பையென தோற்றமளித்த பத்து டெண்ட்களை கூட்ட அரங்கிற்கு எடுத்து வந்தார்கள். அங்கிருந்த நாற்காலிகளை எல்லாம் ஓரமாக அடுக்கிவிட்டு சிறிய குடில்களை அமைத்தார்கள். அதை அமைக்கும்போது பார்த்துக் கொண்டிருந்தவர்களோடு சேர்த்து அத்தனை பேரின் உள்ளமும் குழந்தமையைக் கொண்டுவிட்டது. முகத்தில் சிரிப்பும் களிப்பும் வழிந்தது. சிறிது நேரத்திலேயே இரண்டு ஐந்து வரிசையில் சற்று பிரமாண்டமான நத்தைகளாக தோன்றிய பத்து துணிக் குடில்கள் உருவாகிவிட்டன. குடிலுக்கு இருவராக உள்ளுக்குள் ஒடுங்கினார்கள். சென்னையின் வெங்காற்றையே உணர்ந்துள்ள எனக்கு கூட்டுக்குள் படுக்க விருப்பமில்லை. இளங்குளிரான காற்று மேனியில் பட உறங்க வேண்டுமென ஆவல் தோன்றியது. அங்கே ஓரமாகக் கிடந்த கயிற்றுக் கட்டிலில் போர்வையை விரித்து படுத்தேன். 180 பாகையில் திரும்பிச் சுழலும் காற்றாடியில் வருவதுபோல சில வினாடிகளுக்கொரு முறை மலைக்காற்று உடலில் பட்டு நகர்ந்தது. உறக்கத்தில் ஆழும் தருணம் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் வந்து எழுப்பினார். “அதிகாலையில் குளிர் அதிகமா இருக்குங்கிறதால, சார், யாரும் வெளியே படுக்க வேண்டாம்னு சொன்னார்எனக் கூறி வேறொரு அறையைக் காட்டி படுக்கச் சொன்னார். நல்ல குளிரை அனுபவிக்கும் வாய்ப்பு தவறியதால் விருப்பமில்லாமலேயே சென்று படுக்கையில் படுத்து நன்றாக உறங்கினேன்.

ஞாயிறு காலை குரு மரபைப் பற்றி சிறு உரையாற்றினீர்கள். அன்றைக்கு சில நண்பர் கிளம்புவதால் மறுநாள் ஆற்றவேண்டிய உரை எனக் குறிப்பிட்டீர்கள். எப்போதும் நீங்கள் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கும் இரு தரப்புகள் இருப்பதனாலேயே உலகம் உயிர்ப்புடன் திகழ்கிறது, அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது என்பதனை வேதாந்த தரப்பு மற்றும் அதை மறுக்கும் தரப்பின் அறுபடாத தொடர்ச்சியை விவரித்தீர்கள். வேத வியாசர், மகாபாரதம் எழுதிய கிருஷ்ணதுவைபாயன வியாசர் மற்றும் பதினெட்டு புராணங்களை இயற்றிய வியாசர் என தொடர்ச்சி உள்ளது. இதே போல வேத மறுப்பின் தரப்பாக நவகிரகங்களில் ஒன்றான வியாழன் கோளாக கருதப்படும் பிரகஸ்பதி அவரது சீடர் சுக்கிரர்   போன்றவர்களின் தரப்பு எப்போதும் இருக்கிறது. நாம் குரு வணக்கம் எனும் போது அடுத்த தரப்பு குருக்களையும் மனதில் கொள்ளவேண்டும் எனக் கூறியது புதுத் தெளிவைத் தந்தது.

அன்று மாலை இரண்டு உரைகள். உரையாற்றிய விஜயபாரதி மற்றும் ஸ்ரீனிவாஸ் இருவருமே எனக்கு நெருக்கமான நண்பர்கள். கம்பராமாயணம் வாசிக்கும் இம்பர்வாரி குழுவின் முக்கியமானவர்கள். காலையிலிருந்தே நண்பர்களுடன் சேராமல் தனிமையில் இருந்து உரைக்காக தயாரானார்கள். அதற்கு நல்ல பலன் இருந்தது. விஜயபாரதி ஈரோடு மருத்துவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீவானந்தம் பற்றி உரையாற்றினார். மருத்துவர் ஜீவாவுடைய போராட்ட குணம் அவரது இரத்தத்திலேயே கலந்தது என்பதை அவரது தாய் தந்தையரின் வாழ்க்கையிலிருந்து கொண்டு வந்து இணைத்தார். மருத்துவராக பணிபரிந்தாலும் பள்ளி மாணவர்களை சூழலியல் போராட்டத்திற்குள் கொண்டு வந்ததையும், மருத்துவர்கள் மக்கள் என்ற இருதரப்பில் ஒரு தரப்பின் பக்கம் சாயாமல் இருதரப்பின் பிரச்சனைகளையும் நடுநிலையில் அணுகியதையும் விவரித்தார். பல நூல்களை முக்கியமாக ஜே.சி. குமரப்பாவின் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்மருத்துவர் ஜீவா ஒரே சமயத்தில் காந்தியவாதியாகவும் மார்க்சியவாதியாகவும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவராகவும் விளங்கியதை சுவாரசியமானதாகக் கூறினார். அதாவது அந்த மூன்று தரப்பின் முதன்மைக் கூறுகளை கைக்கொண்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததையும்  நூறு புரவலர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் பெற்று ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் மருத்துவமனையை அமைத்து, கட்டணம் அதிகமாக இல்லாமலும் குறைவாகவும் இல்லாமல் சிறந்த சேவையை மக்களுக்கு அளித்ததையும் கூறினார்இந்த உரையை தொடங்கியபோது மருத்துவர் ஜீவா காதலர்கள் சந்திப்பதற்கான மரங்கள் சூழ்ந்த பூங்கா ஒன்றை அமைக்க விரும்பியதைக் குறிப்பிட்டார். முடிவில் இவரது தந்தையும் தாயும் முதன்முதலில் சந்தித்த மரம் வெட்டப்பட்டபோது அதனை அவர்களே வாங்கி பலகைகளாக மாற்றி அவர்களது வீட்டிற்கும் ஜீவா பிறந்தபோது அவரது தொட்டிலுக்கும் அம்மரமே பயன்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டார். முத்தாய்ப்பாக பூங்காக்களில் மரம் வளர்ப்பதன் மூலம் ஜீவாவின் தாய் தந்தையர் போல பல காதலர்கள் உருவாகி பல ஜீவாக்களும் தோன்றுவார்கள் என கச்சிதமாக முடித்தார். விஜயபாரதியின் இந்த உரை மிகவும் நிறைவளித்தது. குறிப்பாக, மருத்துவர் ஜீவாவிற்கு ஒத்துழைப்பு அளித்த அந்த நூறுபேர்தான் மிகவும் முக்கியமானவர்கள், அவர்கள்தான் ஜீவாவின் பணியினை சாத்தியமாக்கியவர்கள் என்றது சிறப்பு.

அடுத்து கம்பரை பயின்று கொண்டிருக்கும் நண்பர் ஸ்ரீனிவாஸின் உரை. கம்பரைப் பற்றிய குறிப்புகளுடன் தொடங்கி கம்பராமாயணத்தை பதிப்பித்தவர்களின் விவரம் எனத் தொடர்ந்து அதன் உரையாசிரியர்களைக் கூறி உரையாற்றுபவர்களின் தகவல்களைக் கூறினார். அத்தனை பெயர்களையும் வருடங்களையும் குறிப்புத் தாள் எதையும் நோக்காமல் கூறியது அவரது நினைவாற்றலைக் காட்டியது. அதன்பின் கம்பனின் தத்துவம் என்று ஆரம்பித்தார். கம்பனில் எல்லாமே முழுமை நோக்கிச் செல்கிறது. இராமனை ஒரு முழுமையான பாத்திரமாக படைத்ததோடு இராவணனையும் முழுமையான பாத்திரமாகவே படைத்துள்ளார் எனக் கூறி அவன் அறம் பிறழ்வதும் அந்த முழுமையிலிருந்துதான் என விவரித்தார். கம்பர் தன் கற்பனையின் உச்சத்தில் உருவாக்கும் வர்ணனைகள் மூலம் காவியத்தை காலாதீத நிலைக்கு கொண்டு செல்வதை உதாரணத்துடன் கூறினார். விராடன் வதை படலத்தில் யானைகளை கோர்த்து மாலையாக அணிந்திருப்பதையும் அவன் இடையில் இருக்கும் அணியும் பெரும் விலங்குளால் உருவானதாக உள்ளதாகவும் அவன் கையில் வைத்துள்ள முப்புரிவேலில் ஒரு யானையை குத்தியிருப்பதையும் காட்டுகிறார் என்று ஒரு பாடலையும் நினைவிலிருந்தே சந்தத்துடன் பாடினார். மேலும் ஒரு உதாரணமாக மாராமரப் படலத்தில் மராமரத்தின் பிரமாண்டத்தைக் காட்ட அதன் உச்சியில் விண்ணவர்களின் பிள்ளைகள் விளையாடுவதாகவும் அம்மரத்தின் வேர்கள் பாதாள நாகலோகத்தில் நாகத்தை துளைத்துக் கொண்டிருப்பதாகவும் காட்டுவதன் மூலம் எல்லையற்ற காலத்தில் காவியம் நிகழ்வதாக உள்ளது எனக் கூறினார். ஒருநாள் விட்டு ஒருநாள் என வாரத்திற்கு மூன்று நாட்கள் கேட்கும் குரல்தான் என்றாலும் மேடையில் பேசுவதைக் கேட்கும்போது எனக்கு ஒருவித பரவசமாக இருந்தது. பிறருக்கும் அப்படித் தோன்றியிருக்கிறது என்பதை, கேள்வி ஏதேனும் இருந்தால் கேளுங்கள் என ஸ்ரீனி கூறியபோதுநீங்களே இன்னும் ஏதாவது பேசுங்கஎன ஒரு பெண் கூறியதன் மூலம் உணர்ந்தேன்.

நிறைவாக கம்பராமாயணம் உருவான காலத்தைப் பற்றிய சித்திரத்தை நீங்கள் அளித்தீர்கள். “நல்லவண்ணம் வாழலாம்..” என்ற பாடல் உருவானதும், சிவனின் ரூபம் கோரத்திலிருந்து மங்கலமாக அதாவது கல்யாண கோலத்திலும் சோமாஸ்கந்தர் வடிவிலும் உருவான காலத்தில்தான் கம்பராபாயணம் உருவானது என கூறினீர்கள். மேலும், விஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான இராமனை தலைவனாகக் கொண்ட கம்பராமாயணம் வைணவர்களால் பயிலப்படவோ எடுத்தாளப்படவோ இல்லை, பல சைவ நூல்கள் இதன் வடிவத்தில் தோன்றியுள்ளன. உதாரணமாக திருவிளையாடல் புராணம். அதற்கு பின்வந்த கிருஸ்தவ நூலான இரட்சணீய யாத்திரீகமும் இஸ்லாமிய நூலான தேம்பாவணியும் கம்பராமயண வடிவிலேயே அமைந்துள்ளனஆனால் வைணவ நூல்கள் ஒன்று கூட உருவாகவில்லை. அதோடு கம்பராமாயணத்திற்கு உரை எழுதியவர்களும் உரையாற்றுபவர்களும் பதிப்பித்தவர்களும் பெரும்பாலும் சைவர்களும் பிற மதத்தவருமே என நீங்கள் கூறியது புதிய அறிதலாக இருந்தது.

திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு முன்பே எழுந்து வெளியே வந்தபோது அதே குடிலில் உறங்கிய அஜிதன் அரவம் கேட்டு விழித்து  கையில் கைபேசி மற்றும் குறிப்பேடுடன் வெளியே வந்து அமர்ந்தார். அன்று அவர் உரையாற்றுவார் என நீங்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. உரைக்கு தயாராகிறார் என அறிந்ததும் அவருக்கு உறுத்தாத வண்ணம் சற்று தூரத்தில் அமர்ந்து தொலைவில் தெரிந்த காலைநேர பசுமையை நோக்கிக் கொண்டிருந்தேன். தேநீர் தயாரானவுடன் சென்று அருந்திவிட்டு சிறிது தூரம் நடந்துவிட்டு திரும்பி வந்தபோதும்   அஜிதன் முதலில் அமர்ந்திருந்த நிலையிலேயே அமர்ந்திருந்தார். உரையை மனதிற்குள் ஓட்டிக் கொண்டிருப்பார் என எண்ணினேன்.

காலை உணவுக்குப்பின் அஜிதனின் உரை. மேலைத் தத்துவத்தில் முதன்மையான இரு மரபுகள் உள்ளன. அனைவரும் அறிந்தது சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் மற்றும் பிளேட்டோ. இந்த குரு மரபில் குருவின் முதன்மைச் சீடராக இருந்து பின் அடுத்த குருவாக மாறினார்கள். குருவும் சீடனும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். அதிகமாக அறியப்படாத இன்னொரு குரு மரபு உண்டு. அது டேவிட் ஹியூம், காண்ட் மற்றும் ஷோபனோவர். இவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. ஹியூமின் நூல்களின் மூலமே காண்ட் அவரை அறிந்தார். அதே போல காண்ட் இறந்த பிறகுதான் ஷோபனோவர் அவரின் தத்துவத்தை வந்தடைகிறார். ஹியூமின் தத்துவப் பார்வையை காண்ட் விரித்து முன்னெடுத்து செல்கிறார். காண்டின் பார்வையை மேலும் நுணுக்கமாக ஷோபனோவர் ஆய்கிறார். இதில் ஹியூமின் தத்துவப் பார்வை என்ன. அதை காண்ட் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை ஒரு பேராசிரியரைப் போன்று விவரித்தார் அஜிதன். ஆங்கில வார்த்தைகள் சரளமாக வந்தபோதும் அவர் கூறவந்தது புரிந்தது. அந்த வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளை அவர் கூறியிருந்தால் புரியாமல் போயிருப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஒன்றரை மணி நேரம் அமர்ந்தும் நின்றும் வெண்பலகையில் எழுதியும் அஜிதன் உரையாற்றியது பல்கலக்கழக வகுப்பறையில் அமர்ந்திருக்கும் உணர்வைத் தந்ததுமேலை நாட்டு தனிமனிதன் தான் உணர்ந்து, அறிவியலுக்கும் இணக்கமாக இயற்றிய  தத்துவங்களை அறிவதன் வழியாக இந்திய தத்துவங்கள் கூறுவதை தன்னால் உணரமுடிகிறது என முத்தாய்ப்பாக கூறி முடித்தார். நவீன மொழியால் கூறப்படும் இந்தியத் தத்துவங்களே நீடிக்கின்றன, மற்றவை மறக்கப்பட்டு வருகின்றன என நீங்கள் முடித்து வைத்தீர்கள். வெறுமனே கேட்பதாக மட்டும் இல்லாமல் அறிதலாகவும் அமைந்த ஒரு நல்ல அனுபவம்.

உரைகளுக்கிடையே நிகழ்ந்தவை வேறுவகையான இனிய நினைவுகள். மாலை நடையின்போது மேகம் திரள்கிறதே மழை வருமா என அந்தியூர் மணியிடம் நீங்கள் கேட்க அவர்வராது ஜெ, அது அந்தப் பக்கமாகவே சென்றுவிடும்எனக் கூறினார். சிறிது நேரத்தில் தூறல் மேலே பட்டவுடன் மழை வருது என அவர் கூறியதும் நண்பர்களிடம் சிரிப்பு பரவியது. யாருமே ஓடாமல் மழையில் நனைந்தபடி நடந்தே இருப்பிடம் வந்தது வித்தியாசமான அனுபவம். மறுநாள் மாலை செடிகள் செறிந்த பாறைகளுக்கிடையே வழிந்தோடும் நீரின் சலசலப்புக்கிடையே தங்களின் உரையாடல் வேறுவித அனுபவம். மலையின் முனையில் இருக்கும் பாறையை ஒட்டியபடி நின்று உங்களின் பேச்சைக் கேட்கும் போது நீங்கள் எப்போதாவது குறிப்பிடும் கிருஸ்துவின் மலைப் பிரங்கம் நினைவுக்கு வந்து மனதில் ஓர் சிலிர்ப்பு ஓடியது. ஞாயிறு இரவு உணவுக்குப்பின் மரத்திற்கு கீழே அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து மலையாளத் திரைபடங்களில் க்ளாசிக்கான படங்களைப் பற்றி விவரித்தீர்கள். குறிப்பாக அடூர் கோபாலகிருஸ்ணனின் எலிப் பத்தாயம் உள்ளிட்ட கருப்பு வெள்ளைப் படங்களைப் பற்றி. வெளிச்சம் குறைவாக இருந்த இருளில் அமர்ந்து நீங்கள் பேசியது ஒரு கருப்பு வெள்ளைப் படத்தைக் கண்டதைப் போன்றே நினைவில் தங்கிவிட்டது.

கம்பராமாயணக் குழுவான இம்பர்வாரி நண்பர்கள் ஸ்ரீனிவாஸ், விஜயபாரதி, கமலநாதன், ஸ்ரீராம் மற்றும் திரைப்பட இயக்குநர் மருது ஆகியோருடனான உரையாடல் புன்னகையின்றி நடந்ததில்லை. அதேபோல பிரபந்தம் வாசிக்கும் குழுவின் விஜயலட்சுமியை மட்டுமே தெரியும். அக்குழுவில் வெறும் குரலாக மட்டுமே அறிந்த அமுதா, மது போன்றவர்களை நேரில் கண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடன் இணைந்து என் மனைவியும் பேசிக் கொண்டிருந்தது மாலையில் மரத்தில் அடையும் பறவைகளின் சேக்கொலியை கேட்பது போலவே பெரும் நிறைவை அளித்தது. பெண்களுக்கு எப்போதாவதுதானே இப்படி குடும்பக் கவலைகளை மறந்து பேசிக் கொண்டிருக்க வாய்க்கிறது. என் மகள் மூன்று நாட்களும் எந்தப் பரபரப்பும் இல்லாத மலை வாழ்வை வியப்புடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

உங்களிடம் கேட்பதற்கு எந்தக் கேள்வியும் என்னிடம் இல்லை. ஆசிரியரைப் பார்த்துக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மூன்று நாட்கள் அவருடன் இருக்கவேண்டும் அவ்வளவே. ஆசிரியரிடம் கேள்வி கேட்டு அறிவதல்ல, அவரைப் பணிவதன் மூலம் தானே அறிவதே என் வழிமுறை. இம்மூன்று நாட்களில் எதையெதை அறிந்தேன் என்பதை திட்டவட்டமாக வரையறுக்க முடியவில்லை. அவை உள்ளுக்குள் உறைந்திருக்கும், எப்போதேனும் வெளிப்படும் என்றே நம்புகிறேன். என் மனைவியும் மகளும் தங்கள் கேள்விகளை உங்களிடம் கேட்கவில்லை. பிறகு எப்போதாவது கேட்கலாம், அல்லது அவர்களே விடைகளை அறிந்துகொள்ளவும் கூடும்.

வணக்கம்.

கா. சிவா

முந்தைய கட்டுரைவீழ்ச்சியும் மீள்வும்
அடுத்த கட்டுரைமு.காசிவிஸ்வநாதன் செட்டியார்