வணக்கம் ஜெயமோகன் ,
ஜெயன் சார் நல்லா இருக்குதியளா? என்று தான் ஊரில் உங்களைப் பார்த்தால் கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.
நான் பிறந்து சரியாக ஒருவருடத்தில் எழுதப்பட்ட நாவல் ரப்பர், இன்று எனக்கு 34 வயது, என் நினைவுகளில், மண்ணில் சுருண்டு கிடக்கும் காய்ந்த சருகுகள் போலப் படர்ந்து ஊறி கிடக்கும் நிலத்தின் கதையை, அதன் மொழி சுவையை இந்த ரப்பர் நாவல்மூலம், ஊற்று கண்ணில் வாய் வைத்துப் பருகிக்குடிப்பதுபொல குடித்திருக்கிறேன். நான் பிறப்பற்கு முன் காலத்தில் ஒரு பிறப்பெடுத்து காடுகள் எப்படி ரப்பர்களாக மாறியது என்பதை பார்க்க முடிந்தது. ஒரு நிலம் எதற்காக எழுதப்பட வேண்டும் என்பதற்கு இதுவே சான்று.
இந்தக் கால இடைவெளி கடந்து என்னை என் நிலத்திற்கு அறிமுகம் செய்துள்ளது ரப்பர் நாவல். புத்தகங்கள் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கும் இதுவே சான்று. வீட்டு பெரியவர்கள் முற்றத்திலிருந்து பேசின பழைய கதைகளின் சத்தத்தில் சிதறி காதில் விழுந்த மனிதர்களின் வாழ்கையை கண்முன் நிறுத்தியது ரப்பர் நாவல. கமூனிச கதைகள், ஏமான்களின் கதைகள் என்று பல ஊர்களின் கதைகள் பேசுவார்கள். மாரப்பாடி, அருமனை, களியல், திருவட்டார், நாகர்கோயில், தொடுவட்டி என்று எல்லா ஊர்களையும் அதன் காலத்தையும் கண்முன் நிறுத்தியது ரப்பர் நாவல்.
எங்கள் நெல், மரிச்சினி, வாழை வயல் மற்றும் விளைகள் என் கண்முன்னே ரப்பராக மாறியதை, கறுப்பு நெகிழிகளை கிழித்து வரிசை வரிசையாக நட்டு வைத்ததும், விளை கஞ்சி செய்து உப்பும் புளியும் இடித்து, மரிச்சினி கிளங்குடன் உண்டு, முள் குத்தி குளியிட்டு, சொசைட்டி உரமிட்டு ரப்ப்ரை வளர்த்ததையும் நினைவில் கொண்டுவந்தது. புலி கொசக்கள் நிறைந்த ரப்பர் காடுகள், பால் காய்ந்த வாடை, கல் கழன்று கிடத்த சாலை, தோடு, ஒற்றை அடி பாதைகள், மாடம், ஒட்டுகறை, ஆசிட் பட்டு வெந்த புண் வடு, நிலத்தில் ஊறி வந்த ஊற்று குளிகள், அதில் வாய் வைத்துக் குடித்தது என்று என் சிறு வயது வாழ்கையை மீண்டும நாவல் நிலத்தில் வாழமுடிந்தது.
கதைமனிதர்களின் வாழ்கையின் அடுக்குகள், சிந்தனையின் அடுக்குகள், வேலைகள், நிலம், அதன் உரிமை, அதன் உருமாற்றம், அதன் மூலம் கதை மனிதர்களின் வாழ்க்கைமாற்றம். அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த என் வாழ்க்கை மாற்றங்கள் என எல்லாவற்றிலும் என்னைப் பொருத்தி பார்க்க முடிந்தது.
ரப்பர் என் வாழ்கையின் ஆதாரம், அது ஊட்டிய பாலில் வளர்க்கப்பட்டவன் நான், என் அப்பா பால்வெட்டுகாரர். அவருக்கு வேறு தொழில் இன்று வரை தெரியாது. அவர் வெள்ளை பொடி பாறை தேர்ந்தெடுத்து, கத்தி ராவி மரம் வெட்டினால் இரண்டு மூன்று ரப்பர்சீட்டுகள் அதிகம் கிடைக்கும் கைபக்குவம்முள்ளவர். விடிகாலையில் சைக்கிள் மிதித்து, மாப்பிளையர்கள் தோட்டத்திற்கும், ரப்பர் கம்பனிகளூக்கும், பின் சொந்த மரங்களையும் வெட்டிப் பணமாக்கி, எங்களை வளர்தார். வறுமையிலும் எப்படியோ தோட்டம் பள்ளிகூடத்திலும், அருனாச்சலம் பள்ளியிலும் படிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் மலேசியா ரப்பர் மரங்களையும் சென்று சில வருடங்கள் பால் வெட்டிச் சென்னையில் கல்லூரிக்கு அனுப்பினார். எங்கள் ரப்பர் விளை இருக்கும் கைதக்கல் தான் கதை முழுதும் என் நினைவில் இருந்தது. அங்கு இருந்த பக்கி ஏமான் உணவுகடை (நிச பெயர் எனக்குத் தெரியவில்லை) அங்குக் கிடைத்த மெல்லிய குட்டி தோசை இரசவடை, சட்டினி மறந்து போன நினைவுகள், ரப்பர் நாவலால் உயிர் பெற்றது.
நாவலில் வரும் ஊர்களில் பெயர்களில் ஓடி நடந்தும், சைக்கள் மிதித்தும் வளர்ந்ததால். ஒவ்வொரு தெருவின் காட்சியும் கண்முன் வந்து கதை சொன்னது. நான் பிறந்த ஊர் திருவரம்பிற்கு அருகில் உள்ள அரமன்னம் என்னும் ஊர். கதையில் வரும் காணி ஐயா பேரன் பெயரைப் போல, என் அப்பா பெயரும் லாறன்ஸ். எனது தாத்தா வறுவேல் வைத்தியர்பற்றி நீங்கள் கேள்விபட்டருக்க வாய்ப்பு இருந்திருக்குமோ என நினைத்துபார்க்கிறேன். அரமன்னம் தூய தோமையார் ஆலயம் போகும் பாதையில் உள்ளது எனது வீடு. உங்கள் அருகாமையில் பிறந்து வளர்ந்து முப்பது வருடங்கள் கடந்து உங்கள் எழுத்துக்கள் மூலம அறிந்திருக்கிறேன்.
கல்லூரிக்காக ஊரைவிட்டு வெளியேறியபிறகு ஊருக்கும் எனக்கும் உள்ள உறவு அம்மாவிடமிருந்து பிரித்த பிள்ளை போலானது. ரப்பர் நாவல் ஊர் அனுபவங்களை மீண்டும் எனக்குத் தந்தது. தற்போது மனைவி பிள்ளையுடன், வேலையிடமான தென்காசியில் வசிக்கிறேன். என் சிறு வயதில் ஏமான் வீட்டு முற்றத்தில், சட்டை இல்லமல் கால்சட்டை மட்டுமிட்டு, வராண்டாவில் ஏறிச் சன்னலில் தொங்கி நின்று தொலைகாட்சி பார்த்த நினைவு, ஒரு புகைபடம் போன்று மனதினடியில் கிடக்கிறது. காலச் சுழற்சியில் நண்பர்களாக்கப்பட்டு அதே வீட்டின் அடுக்களை வரை சென்று உறவாடவும் சமூகத்தின் மாற்றம் நிகழ்ந்தது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
ஊரின் டக்கர் பயணம், தென்னை மரங்கள், நாங்கு சுற்று அங்ஙணம் உள்ள எனது ஓட்டு வீடு, அதன் திண்ணை என்று என் நினைவுகளில் என் வீட்டையும், நிலத்தையும் அதன் மனிதர்கலையும் மீண்டும் எனக்கு அய்னி பழம்போல ஊட்டியதற்கு மன ஆழத்தின் அன்பின் அணைப்போடு நன்றிகள் ஜெயமோகன்
அன்புடன்
இலா.லிவின்
அன்புள்ள இலா லிவின்
நான் திருவரம்பை விட்டு வெளியேறி 40 ஆண்டுகளாகின்றன. ஆனால் ஆச்சரியம், வறுவேல் வைத்தியரை தெரியும். அரமன்னத்தில் என் நண்பர் ஸ்ரீதரனின் வீட்டுக்கு அருகே அவர் வீடு. தோமையர் ஆலயத்தின் பாதையும் நினைவிலுள்ளது.
திருவரம்பு இப்போது ரப்பர் காடு ஆகிவிட்டது. 1982 வரை அப்படி இல்லை. ரப்பரைப் பார்க்கவேண்டுமென்றால் திற்பரப்பு சாலையில் களியல் வரைச் செல்லவேண்டும். இன்று ரப்பரும் மதிப்பிழந்துவிட்டது. ரப்பர் வந்ததும் பழைய திருவரம்பெங்கும் ஓடிக்கொண்டிருந்த அழகிய ஓடைகள் அழகிழந்து தூய்மையும் இழந்துவிட்டன.
ஜெ