விஸ்மய ஹஸ்தம் -கடிதம்

திரு.ஜெய மோகன் அவர்களுக்கு ,

ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு மட்டுமே ஆலயக் கலையை கற்றுக் கொள்ள வந்தேன். முதல் நாள் திரு ஜெயக்குமார் அவர்கள் இலக்கியச் சான்றுகளிலிருந்து கோவில்களை  விவரித்துக் கொண்டிருந்தார. Theory class கொடுக்கும் அலுப்பினால் என்னால் சரிவர கவனிக்க இயலவில்லை .மறுநாள் அவர் சிலைகளின் விரல் அமைப்பு, கைகள் வைத்திருக்கும் விதம் முடி அலங்கார அமைப்பு, ஆபரணங்கள், நிற்கும் மற்றும் உட்காரும் விதம் பற்றி விளக்கிக் கொண்டு வரும்போது என்னுள் ஆர்வம் பொங்குவதை நான் உணர்ந்தேன் .பின்னர் படிப்படியாக பல்லவர் காலத்து குடைவரை கோயில்களின் அமைப்பை விளக்கும்போது அவர்களின் திறமையும் உழைப்பையும் உணர்ந்தேன். பின்னர் அது ஒரு கல் கோயிலாகவும்,புடைப்பு சிற்பமாகவும், கற்றளியாகவும்   எப்படி உருமாறியது என்பது பற்றி விளக்கினார்.

உபபீடம் ,ஆதிஷ்டாணம், குமுதம், வியாழவரி ,கோஷ்டம், பிரஷ்தாரம்,கண்ட்டா, சிகரம் பற்றி படிப்படியாக விளக்கினார் .

தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவற்றை விளக்கும்போது அக்கோவில்கள் தொழில்நுட்பத்தில் மேன்மை அடைந்தவிதம் பற்றிி விளக்கினார் .அப்போதுதான் கோயில்களின் சிறப்பையும் அதிலிருந்து உழைப்பையும் நேர்த்தியும் புரிந்து கொண்டேன் .   இதற்குப் பிறகுதான் இலக்கியத்தோடு சேர்த்து கோவில்களை பார்க்கும்போது அதன் அழகு இன்னும் கூடுவதை உணர்ந்தேன்.

இவ்வகுப்பை  எங்களுக்கு இரண்டரை நாட்கள் முகத்தில் எந்தவித அயற்சியையும் காட்டாமல் எடுத்த திரு. ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன் .உணவளித்த திரு அந்தியூர் மணி அவர்களுக்கும் ,அவ்வுணவை சமைத்துக் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். இவையெல்லாம் முடிந்த பிறகு ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கிருந்து கிளம்பும்போது திரு. ஜெயக்குமார் கோவில்களை பற்றி சொன்ன வார்த்தைகளே மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது என் காரில் நித்திய வனம் வாயில் அருகே வரும்போது ஒரு வயதானவர் பணம் வேண்டி  கையை நீட்டினார் .அப்போது என் மனதில் “அட வயதான துவாரபாலகர் வாயிலில் நின்று கொண்டு வழி அனுப்பிக் கொண்டிருக்கிறார்” என  நினைத்துக் கொண்டு அவருக்கு காணிக்கையை செலுத்தினேன் .

பின்பு கோவையை அடைந்தவுடன் வழக்கம்போல் போக்குவரத்து பரபரப்பு தொற்றிக் கொண்டது. அச்சமயத்தில் நான் தவறுதலாக தடம் மாறி செல்ல முயற்சிக்கும்போது பின்னால் இருந்த கார் முன்னாள் சென்று அதன் ஓட்டுனர் கார் கண்ணாடியை இறக்கி “ஏன் இப்படி ஓட்டுறீங்க” என்பது போல கையை காண்பித்தார். அக்கணத்தில் நான் அவதானித்தது அவரது கைவிரல் என்ன ஹஸ்தத்தில் இருந்தது என்பது தான். அப்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் வேகமாக  சிற்பச் செந் நூலை சரிபார்த்து அது “விஸ்மய ஹஸ்தம்” என்று கூறினார் .இங்குதான் திரு. ஜெயக்குமார் அவர்களின் வெற்றி இருப்பதாக உணர்கிறேன்.

நன்றி..

சண்முகவேலு

முந்தைய கட்டுரைதிரௌபதி
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலா