மலை தங்குமிடத்தில் ஒருங்கிணைக்கப்படும் முகாம்களுக்கு ஒவ்வொரு முறை வந்து செல்லும் போதும் புலப்படாத உத்வேகம் நிகழ்கிறது. கற்றலுக்கான சாத்தியம் எவ்வளவு பரந்துப்பட்டது என்கிற ஆச்சரியம் நிரம்பி இருக்கிறது.
முகாம் நிறைவுக்குப் பிறகு அடுத்த சில நாட்களுக்கு புறவுலகில் இருந்து தனித்து திரிபவனாகத் தான் இருக்கிறேன். மிக நெருக்கமாக உண்மையைத் தரிசித்த அதிர்வு எப்போதுமே தோன்றுகிறது. இந்த முறையும் அதுவே. ஆலயக்கலை வகுப்புக்கு வந்து திரும்பியுள்ளேன்.
நான் எனது நண்பர் ஓவியர் பிரகாஷ் உடன் இணைந்து இந்த ஆலயக்கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். கோயில் கோபுரங்களை அந்த இடத்தில் அமர்ந்தே Live Sketch ஆக செய்யக் கூடியவர் பிரகாஷ். வகுப்பு முடிந்து திரும்பி வரும் போது எங்களுக்கு இருந்த மனநிலை என்பது இத்தனை நாட்களாக இந்தக் கோயில்கள் குறித்து தவறாக புரிந்துக் கொண்டிருந்தோம் என்பதே. ஆலயங்கள், புராணங்கள், வழிபாடு எல்லாவற்றை குறித்தும் மழுப்பலான விளக்கமே சிறுவயது முதல் இங்கு சொல்லித் தரப்படுகிறது. ஒரு கட்டத்தில் கோயில்கள் என்பவை வெறும் விஷேசத்திற்கு சென்று வரும் இடம் என்கிற அளவில் சுருக்கி புரிந்து கொள்ள வைக்கப்படுகிறது.
இந்த வகுப்பை எடுத்த ஜே.கே. பேசும் போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார் ‘ஆயிரம் வருடங்களுக்கு முன்பு செதுக்கிய சிற்பிக்கு நாம் செலுத்தும் நன்றி என்பது அந்தச் சிற்பத்தைக் கவனித்து பார்ப்பது என்பது தான்’. சரி தான் என்று பட்டது. ஒரு கோயிலைப் பார்க்கும் விதமே இந்த நிகழ்வுக்கு வந்து சென்ற பிறகு மாறி உள்ளது. 23 வருடங்களாக எனக்கு இதனை யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை என்பதைத் தாண்டி தவறாக சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பது உச்சியில் ஆணி அறைந்தது போல உரைத்தது. ஓவியர் பிரகாஷ் கலை ரீதியாக கோயில்களில் இருந்து நிறைய inspirations பெற முடியும் என்பதைத் தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
ஜே.கே. பற்றி சொல்லி ஆக வேண்டும். நான் விளையாட்டாக ஒன்றை குறிப்பிட்டேன் ‘விஷ்ணுபுரம் ஆசிரியர்களிலேயே நீங்கள் தான் பொறுமையானவர் என்று’. அவர் கேள்விகளை எதிர்கொண்ட விதம் ஆச்சரியம் அளித்தது. அறிவின் முழுமையால் மட்டுமே இத்தனை எளிமையாக விளக்க முடிகிறது. ஏற்கனவே ஜேகே பற்றி இன்னொரு நண்பர் முன்பு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டது போல குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார். வகுப்பிலும் வகுப்புக்கு வெளியிலும்.
நேரடியாக ஒரு கோயிலுக்கு செல்வது குறித்து அடுத்து திட்டமிட்ட உள்ளதாக வகுப்பின் நிறைவில் ஆசிரியர் தெரிவித்தார். அதற்கு முன்பு நாங்கள் சில கோயில்களுக்கு சென்று திரும்புவோம் என நம்புகிறேன். இன்னும் ஆழமாக கற்றுக் கொள்ளும் பாதையைக் காட்டிய வகையில் மிகவும் மகிழ்வோடு அமைப்பினருக்கும் ஆசிரியருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.