ஐவர் மலை, கெட்டிமேடு

தேன்வரந்தை குகைகளைப் பார்த்தபின் மதிய உணவுக்கு ஆளானோம். அதன் பின்னும் நேரமிருந்தமையால் சற்று அப்பால் உள்ள ஐவர் மலை சமணத்தலத்திற்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம். பழநி – கொழுமம் சாலையில் வலது புறத்தில்  பெரிய ஐவர் மலை, சிறிய ஐவர் மலை என ஒற்றைப்பாறை மலைகள் இரண்டு உள்ளன.

ஐவர் மலை ஒரு தொன்மையான சமணத்தலம். ஆனால் பிற்பாடு சமணர்கள் அகன்றுசெல்ல உள்ளூர் மக்களின் நாட்டார் வழிபாட்டு மரபால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுள்ள வாய்மொழித் தொன்மங்களின்படி இது பஞ்சபாண்டவர் வந்து தங்கியமையால் ஐவர்மலை என பெயர் பெற்றது. இங்கே அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபதம் பெற்றான். இங்கே சமணக்குடைவரை பிற்காலத்தில் திரௌபதி அம்மனாக மாற்றம்பெற்று பல குலக்குழுக்களின் தெய்வமாக உள்ளது.

இவ்வூரின் பெயர் அயிரை என்று ஒரு பிற்காலப் பேச்சும் உண்டு. புறநாநூற்றிலுள்ள ஐயூர் முடவனாரின் கதையில் வரும் ஐயூர்தான் ஐவர்மலையாக இருக்கக்கூடும் என்று சிலர் எழுதியுள்ளனர். ஆனால் இது மக்கள் வேளாண்மை செய்து வாழ்வதற்குரிய இடமல்ல. செங்குத்தான வெறும்பாறை. சமணர்கள் தேர்ந்தெடுத்து பள்ளிகளை அமைக்கும் ஒதுக்குபுறமான இடம். இன்றும்கூட மக்கள் வாழுமிடமாக இல்லை.

அருகர் மலையே மருவி ஐவர் மலையாக ஆகியிருக்கலாம். திரௌபதி ஆலயம் அமைந்தமையால் ஐவர் மலை என்னும் பெயர் நிலைபெற்றிருக்கலாம். அல்லது அப்பெயர் இருந்தமையால் திரௌபதி ஆலயம் அமைந்திருக்கலாம். திரௌபதி வணக்கம் என்பது தமிழகத்தில் குடியேறிய தெலுங்கு மக்களின் குடித்தெய்வ வழிபாடு.

ஐவர் மலைக்கு கீழிருந்து மேலே செல்ல பாறையில் வெட்டி அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. மெழுகு உருக்கியமைத்ததுபோன்ற ஒற்றைப்பாறை மலை. அப்பால் தெரியும் பெரிய ஐவர் மலை ஒரு செங்குத்தான கூம்பு போல திகைக்கவைக்கும் அமைப்பு கொண்டது. படிக்கட்டுகளில் ஏறும்போதே சிறுதூறல் விழுந்தது. நாங்கள் மேலே செல்லும்போதே மழைபெய்ய ஆரம்பித்துவிட்டது.

திரௌபதி அம்மன் கோயில், இடும்பன் சன்னதி,குழந்தை வேலப்பர் கோயில், உச்சி பிள்ளையார் கோயில் என ஐந்து கோயில்கள் இங்குள்ளன.குடைவரைக்கோயில் கதவிட்டு மூடப்பட்டிருந்தது. பக்கவாட்டில் ஏறிச்சென்றால் உச்சிப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. குடைவரைகளின் மேலே வரிசையாக 16 சமணத் தீர்த்தங்காரர்களின் புடைப்புச்சிலைகள் அமைந்துள்ளன. அவற்றை செதுக்க உதவியர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சிலைகளின்  ஓரமாக பாண்டிய மன்னர் இரண்டாம் வரகுணனின் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது. இந்தச் சிற்பங்கள் பொயு 9 ஆம் நூற்றாண்டை சோர்ந்தவை என ஆய்வாளர் கருதுகிறார்கள்.

கோயிலுக்குப்பின்னால் சரிந்து செல்லும் குகைத்தளம் சுமார் 140 அடி நிளமும் 15 அடி உயரமும் உள்ளது. இப்போது இக்குகைத் தளம் சுவர்கள் வைத்துப் பல பிரிவுளாக பிரிக்கப்பட்டு பல்வேறு தெய்வங்கள் நிறுவப்பட்ட நிலையில் இருக்கிறது. முன்பு விரிவான ஒரு கூடம்போல சமணப்பள்ளியாக இருந்திருக்கலாம். இப்போதும் சில சமணப்படுக்கைகள் உள்ளன. இங்கிருந்த சமணப்படுக்கைகள் மேல் சிமிண்ட் பூசி தரைத்தளம் அமைத்துள்ளனர். திரௌபதி அம்மனை வழிபடுபவர்கள் குகைக்குள் பொங்கலிட்டு பூசைசெய்வதனால் கூரைப்பகுதி கருகியுள்ளது. மேலும் கல்வெட்டுகள் உள்ளனவா என்று தெரியவில்லை.

இந்த மலைப்பகுதியில் இன்னும் பல குகைகள் உள்ளன என்கிறார்கள். பல குகைகள் நீண்டகாலம் முன்னரே பாறைகளால் அடைக்கப்பட்டுவிட்டன. அவற்றில் சித்தர்கள் வாழ்வதாக நம்பிக்கை உள்ளது.போகர், புலிப்பாணி போன்றவர்கள் பற்றிய பல தொன்மங்கள் ஐவர் மலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது சமணமுனிவர்களின் இடம் என்பது மக்களின் நினைவில் நீடித்திருப்பதன் விளைவு இது. வள்ளலாருக்கென ஒரு சிறு ஆலயம் உள்ளது. இங்கே நூறாண்டுகளுக்கு முன் நாராயணப் பரதேசி என்பவர் வந்து தங்கி சமாதியாகியிருக்கிறார்.

பெரியசாமி என்ற யோகி இங்கே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் இருந்த இடத்தை ஒரு கோயிலாகக் கட்டியிருக்கின்றனர். பெரியசாமியின் மாணவர் பெருமாள்சாமி என்பவர் மலையடிவாரத்தில் வசிக்கிறார் என்றார்கள்.

ஐவர் மலையில் நனைந்து குளிர்ந்திருந்த பாறைமேல் வளைந்துசென்ற படிக்கட்டுகள் வழியாக அங்கிருந்த புஷ்கரணியை பார்க்கச் சென்றோம். மலைமேலிருந்து வரும் நீர் ஊறித்தேங்கும் இச்சுனைநீரை அண்மையிலுள்ள ஆலயங்களுக்கு பூசைக்கு கொண்டுசெல்கிறார்கள். அப்பகுதியே பிரம்மாண்டமான பாறைகளின் அமைதியுடன் தனிமைகொண்டு நின்றிருந்தது. அத்தகைய இடங்கள் அளிக்கும் நிறைவுணர்வுஅந்த தனிமையின் ஓரு முதிவுநிலை.

திரும்பும் வழியில் கெட்டிமேடு என்னும் ஊரிலுள்ள புதிர்ப்பாதை வளையங்களை காணச்சென்றோம். ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டு வரை தொன்மைகொண்ட பெருங்கற்கால நாகரீகத்தைச் சேர்ந்தவை இந்த கல்வட்டங்கள். இத்தகைய புதிர்பாதைகள் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் போன்ற ஊர்களிலுள்ளன. தமிழ்நிலத்தின் தொன்மையான பண்பாட்டுத்தடையங்கள். (புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1)

ஆனால் சென்ற பத்தாண்டுகளுக்குள் ஒரு பூசாரி உள்ளூர் மக்களின் நன்கொடையை வசூலித்து அந்த கல்வட்டங்களை அழித்து நடுவே ஏழுசுற்றுக் கோட்டைமாரியம்மன் என்னும் கோயிலை நிறுவி வழிபாட்டுக்கு கொண்டுவந்துள்ளார். தகரக்கூரையிடப்பட்ட ஒரு கொட்டகை அது. கல்வட்டங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

தமிழ்மக்களைப்போல வரலாறு குறித்து இந்த அளவு பதற்றம் கொள்பவர்கள் வேறெங்கும் இருப்பார்களா என்பது ஐயமே. உலகிலேயே தொன்மையானது தங்கள் நாகரீகம் என நம்புபவர்கள். அதை எவர் சொன்னாலும் உடனே பரவசம் கொள்பவர்கள். அதை எந்த ஆய்வாளர் ஐயப்பட்டாலும் அவரை துரோகி என வசைபாடுபவர்கள். தமிழக அரசியலின் அடித்தளமே இந்த போலிப்பெருமிதம்தான்.

ஆனால் தமிழ்மக்களைப்போல மறுசிந்தனையே இல்லாமல் வரலாற்றுத் தடையங்களை அழிப்பவர்களும் வேறெங்குமில்லை. இங்கே ஆலயங்கள் கண்டபடி மாற்றிக்கட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன. தொல்லியல் தடையங்கள் சூறையாடப்படுகின்றன. அதைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறேன். அதை எவரும் பொருட்படுத்துவதுமில்லை. விந்தைதான்.

மாலையில் ஈரோடு வந்து சேர்ந்தேன். இரவு ஒன்பது மணி ரயிலில் சென்னை. அங்கே விடியற்காலை மூன்றரை மணிக்கு இறங்கினேன். அடுத்தநாள் இன்னொரு உலகம். ஒரு வேட்டி விளம்பரத்தின் படப்பிடிப்பு. அன்றே கிளம்பி கோவை. அடுத்தநாள் கம்பன் விழா. அதற்கு மறுநாள் நாகர்கோயில். என்னுடன் குகை ஓவியம் காணவந்தவர்களில் பலர் கால்வலி கைவலி என்று சொன்னதை கேள்விப்பட்டேன். எடைக்குறைப்பின் வெற்றி!

முந்தைய கட்டுரைபா.விசாலம்
அடுத்த கட்டுரைஅருட்செல்வப் பேரரசனுக்குச் சிறுவாணி விருது