இளமையின் துயர்

வைக்கம் முகமது பஷீர்- விக்கி

அன்புள்ள ஜெ,

பால்யகால சகி ஒரு இரவு பணியின் இடைவெளியில் வாசித்து முடித்தேன். அழகிய ஒழுக்காக செல்லும் கதை. மொழிபெயர்ப்பு என்று சொல்ல இயலாத நேரடியான இயல்பான மொழி.

தொடக்க அத்தியாயங்களில் (குழந்தமையுள்ள) குழந்தைகளாக சுகாராவும் மஜீத்தும் மாம்பழங்களுக்காக சண்டை போட்டுக்கொள்கிறார்கள். முசுறு எறும்புகளுக்கு பயப்படாத மஜீத், சுகாறாவின் கை நகப் பரண்டல்களுக்கு பயந்து நடுங்குகிறான். கபடமற்ற அவர்களது உரையாடல்கள் இனிமையாக நிறைந்தது.

குழந்தைகள் வளர வளர குடும்பமும், இந்த சமூகமும் கண்ணுக்குத் தெரியாமல் உழன்று கொண்டிருக்கும் பல்லாயிரம் கைகளால் அவர்களை உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது.

மிக பகட்டாக, ஆடம்பரமாக நடக்கும் மஜீத்தின் சுன்னத் கல்யாணமும் எளிமையாக நடக்கும் சுகாறாவின் காது குத்து நிகழ்வும் இருவருக்கும் அவர்கள் உலகம் ஒன்றில்லை என்று உணர்த்தி விடுகின்றன.

மேற்படிப்புக்கு வழியில்லாத சுகாறாவை படிக்க வைக்க தந்தையிடம் முயலும்போது அவனுக்கு பணத்தின் கோர முகம் தெரியவருகிறது. சிறுவயதில் அரபிக்கதை சொல்லும் தந்தையும், சுகாராவின் படிப்புக்கு செலவு செய்ய “நெஸீபு” இல்லை என்று சொல்லும், உம்மாவின் வெள்ளை குப்பாயத்தில் சிவந்த வெற்றிலை துப்பல்களை தெறிக்கும், ஊரை விட்டு போகச் சொல்லும் பணக்கார தந்தையும் ஒன்று அல்ல என்பதை உணர்கிறான்.

போலவே, தந்தையை இழந்த சுகாறா, வானம் உயரத்துக்கு “சுல்தான் மஜீத்” கட்டிவைத்த தங்க மாளிகையின் “மகாராணி” இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறாள். குழந்தைகளின் கபடமற்ற மனதுக்கு இந்த மாற்றங்கள் தெரிய வந்து அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை வருவதை நாம் உணரும் போது வாசிக்கும் நமக்குள் ஒரு அறியாத பதட்டம் ஒட்டிக்கொள்கிறது.

குழந்தையாக இருந்த அவர்களுக்குள் வேறு எதுவோ வளர்ந்து யுவன் யுவதியாக மாறிய பின், அவளுக்கு இரவுபகல் அவனுடனே இருக்க தோன்றுகிறது. முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் போது வேறு ஒன்றாக அது மாறுகிறது.

வயலுக்கு வர மறந்துபோன மஜீத்தை உலகை, பணத்தை அறிந்து வர அடித்து விரட்டுகிறார் வாப்பா. உலகம் என்ற காட்டில் பல வருடங்கள் அலைந்து திரிந்து “ஆண் பெண் பிறந்து வளர்ந்து இணை சேர்ந்து உற்பத்தியை பெருக்கி.. பின்பு மரணம்” என்று அறிந்து வருகிறான். குழந்தையில் “ஒன்றும் ஒன்றும் பெரிய ஒன்று” என்று வாத்தியாரிடம் கணக்கு சொன்ன மஜீத்துக்கு இந்த உலகத்திலிருந்து அதைத்தான் கற்றுக்கொள்ள முடிகிறது.

அமைதியாக வாழ்ந்து முடிக்க ஊருக்கு திரும்பி வரும் நேரத்தில் வாப்பாவின் சொத்துக்கள் அத்தனையும் கடனில் மூழ்கி குடும்பம் தரித்திரத்தில் கிடக்கிறது. பட்டணத்து கசாப்புக்காரன் சுகாறாவை திருமணம் செய்திருக்கிறான்.

“வறுமை ஒரு கொடிய வியாதி, அது உடம்பையும் மனதையும் ஆத்மாவையும் நலிந்து போகச் செய்கிறது”. கன்னங்கள் ஒட்டி, கைவிரல்களின் எலும்புகள் துருத்தி, நகங்கள் தேய்ந்து, வெளிறிபோய் இருப்பது சுகாறா மட்டுமல்ல.

அவன் வீட்டிற்கு வந்த பிறகு சுகாறா வைத்த முற்றத்து செம்பருத்தி தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது. பூ பூக்கிறது. தங்கைகளை கரையேற்றவும் சுகாறாவை திருமணம் செய்து கொள்ளவும் மறுபடியும் யாத்திரைக்கு புறப்படுகிறான். உண்மையான உலகத்திற்குள் நுழைகிறான். ஆனால், ஒரு காலையும் காதலியையும் இழந்து விட்டிருக்கிறான்.

****

முதல் வாசிப்பில் ஒரு வெறுமையோடு முடிந்த கதை இரண்டாவது வாசிப்பில் வேறு ஒரு திசையில் திறந்தது.

இம்முறை மஜீத்தின் தந்தை நாவலில் எழுந்து வந்தார். அவன் சிறுவனாக இருக்கும்போது உலகை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறார். அகங்காரம் கொள்கிறார். வன்முறையை பிரயோகிக்கிறார். அப்படியும் “ஆண் பெண் பிறந்து வளர்ந்து இணை சேர்ந்து உற்பத்தியை பெருக்கி.. பின்பு மரணம்” என்று தான் மஜீத் கற்று வருகிறான்.

குழந்தையாக மஜீத்துக்கு அரபிக் கதைகள் சொன்ன அவர் மனதில் இருந்தது உண்மைக் கோபம் தானா?. அவருடைய கோபத்தின் ஆழத்தில் இவன் இதைத்தான் கற்று வருவான் என்று உணர்ந்திருந்தாரா?. அதனால்தான் ஆற்றாமையில் வன்முறையாக, அகங்காரமாக மனைவியிடமும் மற்றவரிடமும் வெளிப்படுத்தினாரா?.

சொத்தை எல்லாம் இழந்து, தங்கைகளை கரையேற்றவும், தன்னுடைய எதிர்கால நன்மையை தேடியும் இரண்டாவது முறை அவன் கிளம்பும் நேரம், மிச்சம் இருந்த மிகச் சிலவற்றையும் விற்று அவர்தான் அனுப்பி வைக்கிறார்.

ஆனால், இந்த முறை அவன் உலகத்தை அறிந்த நேரம் ஒரு காலையும் தன்னுடைய காதலியையும் இழந்துவிட்டானே. தந்தை சொன்ன நேரத்தில் இதையெல்லாம் கற்றிருந்தால் இப்படி நடந்திருக்காதே.

“அப்பாவுக்க செரியும் தெற்றும் கணக்குப் போட பிள்ளையளுக்கு அதிகாரம் இல்லை” என்ற “பின்தொடரும் நிழலின் குரல்” வரிகள் எழுந்து வந்தது.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விழா
அடுத்த கட்டுரைஇரா முருகனும் இருபதாண்டுகளும் – கடலூர் சீனு