ஓர் அன்னையின் பயணம் -கடிதம்

ஓர் அன்னையின் பயணம்

அன்புள்ள ஜெ,

வணக்கம். நான் சுமார் ஒன்றரை வருடங்கள் முன்பு என் அம்மாவின் வெண்முரசு பயணத்தைப் பற்றி உங்களுக்கு எழுதியது நினைவிருக்கலாம். அம்மா மே மாதம் 19 அன்று இறைவனடி சேர்ந்தார். அம்மா நல்ல நினைவுடன், தெளிவுடன் இருந்த கடைசி சில மாதங்கள் முழுவதும் வெண்முரசும், விஷ்ணுபுரமும் வாசித்து, அவற்றிலேயே வாழ்ந்திருந்தார்.

ஐந்து வருடங்கள் முன்பே சிறிது உடல் நலம் குன்றி, முன்புபோல் சுதந்திரமாக, சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போனபோதே அம்மாவுக்கு வாழ்வு கசந்து விட்டது. அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வாசிப்பிலும், காட்சி ஊடகங்களிலும் ஆர்வம் இழந்தார். விருப்பத்துடன் கேட்கும் கதா காலட்சேபங்கள், சொற்பொழிவுகள், ஸ்லோகங்கள் எல்லாம் அவருக்குச் சலிப்பூட்டின. வெண்முரசு வாசித்துப் பார்க்கச் சொன்ன போது, “எத்தனையோ தடவை கேட்ட அதே மகாபாரதம்தானே” என்று சொல்லிவிட்டார். அதில் புதிதாக என்ன இருக்கப்போகிறது என்று தோன்றியிருக்கலாம். ஒருநாள் தற்செயலாகப் புரட்டிப் பார்த்த மாமலரில் ஆழ்ந்து போனவருக்கு ஒளி மயமான அழகிய வண்ண மலர்த்தோட்டத்தை நோக்கிய சாளரம் திறந்தது. அதன்பின் அதைப் பார்த்து பார்த்து தீரவில்லை. She had something to look forward to.

வெண்முரசு நாவல்களை நிதானமாக வாசித்து, மணிக்கணக்காக என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டபோது அவரது புரிதலைக் கண்டு அசந்து போனேன். ஒருமுறை என்னைப் பார்க்க வந்த உறவினர் அது என்ன புத்தகம் என்று கேட்டபோது அழகாக சில இடங்களை எடுத்துச் சொன்னார். காந்தாரி பொறாமையால் வயிற்றைக் குழவியால் இடித்து, விழுந்த பிண்டம் நூறு கௌரவர்களாக ஆனதைவிட சுபலரின் பத்து பெண்களை மணந்து நூறு கௌரவர்கள் பிறந்ததும், சபையில் திரௌபதிக்கு கிருஷ்ணை மூலம் துகில் வளர்ந்ததும் இதுபோல பலவும் மிகப் பொருத்தமாக அமைந்ததைச் சொன்னார். உறவினர் “இதையெல்லாம் படிச்சா பக்தி போயிடும் மாமி” என்று பதறியதற்கு, ”அப்படி ஒண்ணு ரெண்டு சம்பவத்தை மாத்தினா போற அளவுக்குதானா நம்ப பக்தி?” என்று எதிர்க் கேள்வி. “மகாபாரதமோ, பாகவதமோ எல்லா சம்பவங்களையும் இப்படி நவீன முறையில் விளக்கிண்டே போனாலும் ‘நேதி நேதி’ என தள்ளிண்டே போனாலும் கடைசியில் நிற்கும் சத்தியம், அதுவே தெய்வம்” என்று விளக்கினார். உறவினருக்கு என்ன புரிந்ததோ நானறியேன். அதன்பின் நான் இந்தியா போனால் அவர் என்னை தொலைபேசியில் நலம் விசாரிப்பதோடு சரி, வீட்டுப்பக்கம் வரவில்லை. மரபான வாழ்வுமுறையும், பூஜைகளும், நெறிகளுமாக வாழ்நாளெல்லாம் கழித்த அம்மாவின் மனவிரிவு கண்டு அசந்து போனேன். “மொதல்ல இப்படியெல்லாம் பார்க்கலாம்னு தெரியாதுடி. படிக்கப் படிக்க மனசு விரிஞ்சுண்டே போறது.” ‘நீலம்’ அவருள் ஏற்படுத்திய அமைதியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. திரௌபதி துகில் வளரும் இடம் அவருக்கு அளித்த மன எழுச்சி…

வெண்முரசுக்குப்பின் விஷ்ணுபுரம் படித்துக்கொண்டிருந்தார். சென்ற வருடம் பெப்ருவரி மாதம் விஷ்ணுபுரம் ஞான சபை விவாதங்களைப் படித்து முடிக்கும் தறுவாயில் ஒரு நாள் தம்பி அம்மாவுக்கு நினைவுக் குழப்பமாகவும், பேச்சு முன்பின்னாகவும் இருக்கிறது என்று சொல்லும்போதே எனக்கு அவர் விஷ்ணுபுரத்தைப் படித்து முடிக்க மாட்டார் என்று தோன்றிவிட்டது. அம்மாவின் பயணத்தை நேர்மறையாகப் பதிவு செய்ய விரும்பி அன்றே கடிதம் எழுதி விட்டேன். உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ரத்தம் உறைந்த சிறு கட்டிகள் தோன்றி stroke ஏற்பட்டது. அதன்பின் சிறுசிறு கேள்விகள், பதில்கள் தவிர எதையும் வாசிக்கவோ, கேட்டு கிரகிக்கவோ முடியாமல் போனது. ஒரே ஒரு முறை மட்டும் ஞான சபை விவாதத்தில் யார் ஜெயித்தார் என்று கேட்டு அஜிதர் என்று சொன்னவுடன் ‘நாந்தான் சொன்னேனே’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

தளத்தில் கடிதத்தைப் படித்துவிட்டு அம்மாவின் நலம் வேண்டி விசாரித்துக் கொண்டே இருந்த அமெரிக்க விஷ்ணுபுரம் வட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. எதாவது காரணத்திற்காக தொடர்பு கொள்ள நேர்ந்தால் ‘அம்மா எப்படி இருக்காங்க’ என்பதே முதல் கேள்வியாக இருந்து வந்தது. வெண்முரசு உனக்கு எத்தனை பிள்ளைகளைத் தந்திருக்கிறது பார் என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

அம்மாவுக்கு வலியோ, குழப்பமோ ஏற்படும்போதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்த ‘சிறுகுமிழ் விரல்களே அமைக என் தலைமேல்’ என்ற வரியை அவரிடம் மந்திரம்போல் சொல்லிக்கொண்டே இருப்பேன். கொடுங்கனவாக நீண்ட விமானப் பயணத்தையும், தொடர்ந்த வெறுமையையும், தூக்கமில்லா இரவுகளையும் கடக்கவும் அந்த வரியும், வெண்முரசும், தமிழ்விக்கியுமே எனக்குத் துணை வருகின்றன. முதற்கனலிலிருந்து மீண்டும் தொடங்கியிருக்கிறேன், அம்மாவுடனான உரையாடல்களை நினைவுபடுத்திக்கொண்டே… அந்தச் சிறுகுமிழ் விரல்கள் அவர் தலைமேல் என்றும் அமைந்திருக்கும் என்ற அமைதியுடன்..

அன்புடன்,

ஜெயஸ்ரீ

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைதேன்வரந்தை- தென்னக பிம்பேத்கா
அடுத்த கட்டுரைமலரின் இனிமை -கடலூர் சீனு