பிளாஸ்டிக் நரகம்- கடலூர் சீனு

 

1850 முதல் அடுத்து வந்த நூறு ஆண்டுகளில் ரசாயன ஆய்வுத் துறையில் பல கிராக்பாட்டுகள் இறங்கி வேலை செய்திருக்கிறது. இரும்பை தங்கமாக்கும் முயற்சியில் ஒருவர் கவரிங் தங்கம் கண்டு பிடித்து இருக்கிறார். அதே முயற்சியில் ஒருவர் இன்டோலியம் கண்டுபிடித்திருக்கிறார்.  இந்த வரிசையில் தற்செயலாக பிளாஸ்டிக் இன் முன்னோடி கண்டுபிடிக்கப்பட்டு, அதே முன்னோடியை அவ்வாறே கண்டுபிடித்த வேறு இருவரை பின்னுக்கு தள்ளி, பதிவு அனுமதி வரிசையில் 12 மணி நேரம் மூத்தவர் எனும் முன்னுரிமை அடிப்படையில்  1907 இல் பெல்ஜிய ரசாயன ஆய்வாளர் மார்க்கிட்டீர் லேவ் பய்க்கீலாண்ட்  இன்றைய பிளாஸ்டிக் என்பதன் பேட்டன்ட் உரிமையை வெல்கிறார்.

பிளாஸ்டிக் போன்ற ஒன்றின் தேவை எப்போதுமே இருந்திருக்கிறது. பிளாஸ்டிக் அளிக்கும் பயன்முறை கொண்ட பல்வேறு பொருட்கள் எப்போதுமே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அந்த இடத்தைத்தான் பிளாஸ்டிக் வெகு சில மாதங்களில் எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி எளிமை காரணமாக உலகை வளைத்துப் போட்டிருக்கிறது. ஆச்சர்யமாக பிளாஸ்டிக் பொருள் சார்ந்த முதல் விளம்பரம் தந்தங்களின் பொருட்டு யானை வேட்டையை தடுப்பதில் பெரும்பங்கு வகித்திருக்கிறது. யானைத் தந்ததில் செய்யப்பட்டது போலவே சீப்புகள் சிற்பங்கள் பேழைகள் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டு, அதற்காக வேண்டி யானைகள் இனி வேட்டையாடப்பட தேவை இல்லை எனும் போதம் மேல்தட்டு மக்கள் வசம் பரவியது. மேல்தட்டு மக்கள் உபயோகிக்கும் தந்த பொருட்கள் போலவே சாமானிய மக்களும் கைக்கொள்ள முடிந்தது எனும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் விரைவாக பரவியது. அதன் வளர்ச்சி பல்வேறு அலகுகளுடன் பிணைந்து வெகு வேகத்தை எட்டியது. விளைவாக இங்கே சபரிமலை நடை திறக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகளை உண்டு வயிறு பிதுங்கி செத்த யானைச் சடலங்கள் கண்டெடுக்கப்படுவது குறித்த செய்திகள்  சகஜமாகிப் போனது.

இதோ இன்று பிளாஸ்டிக் என்பது பல்வேறு ரூபங்களில் உயிர்க்குலத்தை உடனிருந்து மெல்லக் கொல்லும் நஞ்சு என்பது ஐயமே இன்றி உறுதிகண்டு விட்டது. ஆனாலும் பிளாஸ்டிக் உற்பத்தியும் பயன்பாடும் அவ்விதமே நீடிக்கிறது. ஏன்?

ஏன் எனில் உண்மையாகவே பிளாஸ்டிக் இன்றி பல அத்யாவசியங்கள் இன்று நிலை பெற வாய்ப்பே இல்லை. குறிப்பாக மருந்துகள். நச்சு நீக்கப்பட்ட பிளாஸ்டிக் வழியே உயிர் காக்கும் மருந்துகள்  கொள்ளும் பாக்கேஜ் மற்றும் நீண்ட நாள் பாதுகாப்பை அவ்விதமே அளிக்கும் வேறு மார்க்கம் இன்று இல்லை. பிளாஸ்டிக் உரையில் அடைத்து உலகம் முழுக்க விநியோகம் காணும் ஒரு உணவு பொருளை, பிளாஸ்டிக் பதிலாக வேறு பொருள் கொண்டு பொதிந்தால் 10 ரூ எனும் அடக்கம் 70 ரூ எட்டி விடும். இவை போக சுமந்து செல்லவும் எடை அதிகம். பாதுகாப்பும் குறைவு. இடத்தையும் அதிகம் பிடிக்கும். உலகு தழுவி பல்துலக்கும் பிரஷ் முதல் வீட்டு கதவு வரை சாமானியன் கொண்ட  ரெவன்யூ வழியே வளர்ந்து நிற்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை இடம்பெயர்த்து அங்கே இன்னொன்றை கொண்டு வருவது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை.   ஆக மீள இயலா ஒரு விஷ வட்டத்தில் நாம் சிக்கிவிட்டோம் என்பதே உண்மை.

இதில் மீட்சி குறித்து  சொல்லப்படும் அறிவியல் ஆலோசனைகள் எல்லாம் மனம் மயக்கும் தேவதைக் கதைகள் என்பதற்கு மேலாக ஏதும் இல்லை. பிளாஸ்டிக்குக்கு மாற்றான எதுவும் பல மடங்கு செலவு பிடிக்கும், உழைப்பு பாதுகாப்பு குறைவு, எடை மிகுதி. உதாரணத்துக்கு மஞ்சப்பைக்கு மீள்வோம் எனும் கோஷத்தை எடுத்துக் கொண்டால், ஒரு பிளாஸ்டிக் பையை விட மஞ்சள் பை கொள்ளும் மெய் நிகர் நீர் அளவு அதிகம், உபயோக காலமோ மிக மிக குறைவு. இவை போக பிளாஸ்ட்டிக்குக்கு மாற்றான எப்பொருளும் பிளாஸ்டிக் அளிக்கும் அந்த சூழல் சீர்கேடு அளவை எவ்விதத்திலும் குறைக்கும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. இப்படிப் பல.

இதை வெல்ல இன்று வரை அறிவியல் தீர்வு என ஏதும் இல்லை. குறிப்பாக மறு சுழற்சி(குப்பைகளை எரித்து மின்சாரம் எடுப்பது இன்ன பிற)  எனும் தேவதைக் கதையை எடுத்துக்கொண்டால். உண்மையில் இன்று பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக்கில் 30 சதவீதத்தை மட்டுமே மறு சுழற்சி செய்ய முடியும் என்பதே உண்மை. எனில் மிச்சம்? புதைத்தால் குடிநீர் பஞ்சம் வந்து சாவோம். எரித்தால் ஓசோன் ஓட்டை வழியே வளிமண்டல உஷ்ணம் எகிறி வெந்து சாவோம். இப்போது பிளாஸ்டிக் குப்பை  என்பதை இல்லாமல் செய்ய இந்த இரண்டாவது நிலையையே நாம் கைகொள்ளுகிறோம்.

இதில் பிளாஸ்டிக் மற்றும் இன்னபிற குப்பைகளை மறு சுழற்சிப் பணி என்ற பெயரில் பிற வலு குறைந்த தேசங்களில் (அந்த தேச சட்டங்கள் அதற்கு ஒரு பொருட்டே அல்ல)  கொண்டு கொட்டுவதை வளர்ந்த தேசங்கள் தங்கள் இறையாண்மையின் ஒரு பகுதியாக வைத்திருக்கின்றன. சில வருடங்கள் முன்னர் இங்கிலாந்து தான் அடிமை செய்து சுரண்டிய இன்றைய சுதந்திர நாடு ஒன்றுக்கு மறு சுழற்சிக்கான காகிதங்கள் எனும் பெயரில் பல்லாயிரம்டன் கணக்கில் குப்பைகளை அனுப்பியது. திறந்து பார்த்தால் எல்லாம் உபயோகித்து முடித்த நாப்கின் குப்பைகள்.

இத்தகு விஷயங்களிலும் சீனாத்தான் வல்லரசு என்பதை 2016 இல் ஜூ லியாங் வாங் இயக்கத்தில் வெளியான பிளாஸ்டிக் சீனா ஆவணம் வெளிப்படுத்துகிறது. 2014 முதல் ஆபரேஷன் க்ரீன் வேலி எனும் கோஷத்துடன் சீனா தனது தேசப் பசுமையை பாதுகாக்க அரை கூவி களம் இறங்கி விட்டதாக உலகுக்கும் தனது மக்களுக்கும் அறிவித்தது. ஆனால் உள்ளப்படிக்கே சீனாவின் உள்ளே நிலவரம் என்ன என்பதை இந்த ஆவணம் வெளியே காட்டுகிறது.

மறு சுழற்சிக்கான பிளாஸ்டிக் வந்து குவியும் உலகின் ஒரே மிகப் பெரிய வாசல் சீனாதான். சீனா சட்டபூர்வமாக அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் வசமிருந்து பல்லாயிரம் டன்களை இறக்குமதி செய்கிறது.  வந்து குவியும் பிளாஸ்ட்டிக் குப்பை மலையில் 30 சதம் மறு சுழற்சி செய்யப்பட்டு, கடலூர் உள்பட உலகெங்கும் 10 ரூபாய்க்கு பொம்மையாகவும், 50 ரூபாய்க்கு செருப்பாகவும், கொசு மட்டையாகவும் இன்ன பிறவாகவும் கிடைக்க, மிச்ச 70 சதவீதம் எரிக்கப்படுகிறது. சீனா வில் குவியும் இந்த பிளாஸ்டிக் மொத்தமும் அதன் மறு சுழற்சி என்பது இயந்திரங்கள் அன்றி (இங்கே செங்கல் சூளை கொத்தடிமைகள் போல) மானுட உழைப்பை ஒட்ட ஒட்ட உறிஞ்சி நிகழ்வது.

அப்படிச் சீனாவின் பள பள டிஸ்பிளே நகரங்களுக்கு பின்னால் நாறும் சாக்கடைப் புறக்கடை நகரங்களில் இயங்கும் பல்லாயிரம் பிளாஸ்டிக் மறு சுழற்சி குடோன்களில் ஒன்றான குன் என்பவர் நடத்தும் குடோனில், அவரது அடிமைத் தொழிலாளர் குடும்பம் ஒன்றில் சில நாட்கள் நம்மைக் கட்டிப் போடுகிறது இந்த ஆவணம்.

நாறும் பிளாஸ்டிக் குப்பை மலை. அதன் மறு சுழற்சிப் படி நிலைகளின் சாக்கடைகள். ஒரு கணமும் ஓய்வே இன்றி பிளாஸ்டிக் குப்பைகளை வகை பிரிக்க நிகழும் மறு சுழற்சிப் படி நிலைப் பணிகள். அதற்குள் நித்தமும்  வாழும் ஒரு குடும்பம். அதன் நான்கைந்து குழந்தைகள். அந்தக் குப்பை மலையில் கழியும் அந்தக் குடும்பக் குழந்தைகளின் பால்யம். 10 வயது மகள். படிக்க அவளுக்கு விருப்பம். பள்ளிக்கு அனுப்பவோ குடும்பத்தில் வசதி இல்லை. குப்பைகளில் வரும் காகிதங்கள் வழியே அவள் உலகை மெல்ல மெல்ல வாசிக்கிறாள். குப்பைகளில் கிடைக்கும் அழகு பொருட்கள் கொண்டு தன்னை அலங்கரித்து கொள்கிறாள். குப்பை வழியே கிடைக்கும் பார்பி பொம்மை ஒன்றே அவள் தோழி. குப்பைகள் வழியாக மட்டுமே வெளி உலகம் என்றால் என்ன என்பதை அவள் அறிகிறாள்.

சக குழந்தைகள் அவளுடனேயே குப்பை மலைக்குள் வீடு கட்டி, குப்பையில் கிடக்கும் பலூன்கள், கொண்டு விளையாடுகின்றன. குடோனுக்கு வெளியே சாக்கடை என்றாகிப்போன நதியில் செத்து மிதக்கும் மீன்களை அள்ளி வந்து சுட்டு தின்று விருந்து கொண்டாடுகின்றன. அந்த சிறுமிக்கு மட்டும் தான் படித்து இந்த குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம். அப்பா அம்மா வசம் காசே இல்லை. முதலாளி அளிக்கும் சொற்ப காசு உணவுக்கும், மருந்துக்கும், குடிக்கும் மட்டுமே காணும். முதலாளி குன்  எல்லா ஆண்டை போலத்தான். தனது அடிமைகள் மேல் கசப்பும், பொறுப்பும் கொண்டவர். மற்றபடி பெரிய கொடுமைக்காரர் ஒன்றும் இல்லை. அவரது அத்தனை குடோன் வருமானத்தையும் அரசு வரியாக ஒட்ட ஒட்ட கறந்து விடுகிறது. குடோன்கள் தரும் கரண்ட் பில் கணக்கை கட்டவே குன்னுக்கு நாக்கு தள்ளுகிறது. அவரது கனவெல்லாம் பெய்ஜிங் நகரில் ஒரு வசதியான வீடு, கார், சமூகத்தில் அந்தஸ்தான ஒரு இடம். இந்த அடிமைகளை கசக்கிப் பிழிந்து அந்தக் கனவை அடைந்து விட குன் முயலுகிறார்.

சாக்கடையும் குப்பை மலையும் என அதில் புழு போல உழலும் ஒரு மனித வாழ்வு, எட்ட இயலா கனவு என சொர்க்கம் போலும் பெய்ஜிங் நகர வாழ்வு. ஒரு நாள் குப்பையில் கிடைக்கும் சிம் ஒன்றை அடிமைக் குடும்ப மகள் குன் வசம் எடுத்து சென்று தருகிறாள். அந்த சிம்மை இயக்கினால் எழும் முதல் குரல் வெல்கம் டூ சீனா என்கிறது. அங்கிருந்து கேமரா உயர்ந்து வடவைத்தீ என எரிந்து எழும் பிளாஸ்டிக் குப்பை மலையை காட்டுகிறது.

இயக்குனர் மிகுந்த சிரமத்துக்கு இடையில் இந்த ஆவணப்படம் எடுத்து, இரண்டு சர்வதேச விழாக்களில் வெளியிட்டு கவனம் பெற, வழக்கம் போல அவர் சீனாவால் தேச விரோதி என முத்திரை குத்த பட்டு, இந்த படம் சாத்தியப்பட்ட எல்லா வகையிலும் வெளியே தெரியாமல் இருக்க சீனா நடவடிக்கை எடுத்தது. நோய் முடக்க சூழலுக்கு பிறகு விஷயங்கள் வேறு வடிவம் கொண்டு விட்டாலும், இந்த ஆவணம் காட்டும் வாழ்வு அங்கே சீனாவில் அவ்விதமே நீடிக்கிறது. உலகம் முழுக்க இருந்து, முதலாளித்துவ வாழ்வில் திளைத்தபடி  அவுட் ரேட்டிங் முறையில் தங்கள் அறிவை வாடகைக்கு  விடும் இடதுசாரி அறிவு ஜீவிகள் இந்த அப்பட்டமான உண்மை முன் இன்று வரை வாய் திறக்க வில்லை.

தனது கிட்டத்தட்ட அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலில் பில் ப்ரைசன் ஒரு மனிதனின் வாழ்நாள் எத்தனை குறுகியது என்பதை உதாரணத்துடன் விளக்கி இருப்பார். அப்படியே வளர்ந்து முதல் உயிர் தோன்றிய காலம் முதல் இன்று வரையிலான காலம் எத்தனை குறுகியது என்று விவரித்திருப்பார். அந்த வரலாற்றில் இதுவரை உயிர் தோன்றிய காலம் முதல் இன்று வரை முகிழ்ந்த உயிர்கள் 100 சதம் எனில் இப்போது எஞ்சி இருப்பது அதில் வெறும் 9 சதம் என்றும் அது எப்படி என்றும் விளக்குவார். ஐந்து பேறூழிக் காலம் முடிந்து இப்போதய யுகத்தில் இருப்பது அதில் எஞ்சிய உயிர்கள் மட்டுமே என்பார்.

ப்ரேக்கிங் தி பவுண்டரிஸ் ஆவணம், கேம்பரியன் ஜூராசிக் என ஒவ்வொரு உயிர்த்தளி காலத்துக்கும் மஞ்சள் துவக்கம், பச்சை விரிவு, சிகப்பு முடிவு என்ற கால வரையறை செய்து, இப்போதய நாம் வாழும் ஆறாவது காலம் எந்த வண்ணத்தில் உள்ளது என்று சொல்லும்.  அது சிகப்பு வண்ணத்தில் இருக்கிறது. சிகப்பின் அடர்த்தி கூடிக்கொண்டே போகிறது. அதன் காரணங்களில் ஒன்று பிளாஸ்டிக்.

மனம் கசக்கச் செய்யும் இவ்வாவணத்தில் வரும் அந்த குடும்பம் ஒட்டுமொத்த மானுடத்தின் குறியீடு. இன்று நாம் அனைவருமே வெவ்வேறு முறைகளில் அந்த பிளாஸ்டிக் குப்பை மலையில்தான் உழன்று கொண்டு இருக்கிறோம்.

கடலூர் சீனு

Documentary: plastic china. 2016
Directed by: jiu-liang Wang.

https://www.dailymotion.com/video/x8hwstj

முந்தைய கட்டுரைபடிப்பு பெண்களுக்கு விடுதலையை அளித்துவிடுகிறதா?
அடுத்த கட்டுரைவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்