வலியின் ஒளி- கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ.,

அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு “Stories of the true” படித்தேன். சிறப்பான முயற்சி. ஒவ்வொரு கதையும் மூலக்கதை ஏற்படுத்திய அதே தாக்கத்தை ஏற்படுத்தியது. சில கதைகளைப் படித்து முடித்தவுடன் மூலக்கதையை படிக்கவேண்டும் போல இருந்தது. குறிப்பாக ‘பெருவலி’. மொத்தத் தொகுப்பிலும் ஒரே ஒரு கதையை தெரிவு செய்யவேண்டுமென்றால் நான் தயங்காமல் ‘பெருவலி’ யையே தெரிவு செய்வேன். இந்தக் கதை மொழிபெயர்ப்பிலும் மிகச் சிறப்பாக வந்திருந்தது. இந்தக்கதையில் கோமலின் வாழ்நாள் சாகசத்தையும், புற்றுநோய்ப் ‘பெருவலி’ யையும் மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருப்பீர்கள்.

எப்போதோ சிறுவயதில் கேட்ட வானொலிப்பேட்டியில் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் மாரடைப்பினால் ஏற்படும் மரணத்தையே தேர்வுசெய்வேன் என்று சொல்லியிருந்தார். சிறிது நேரமே சிரமம். விடுதலை நிச்சயம். இருப்பதிலேயே கொடுமையான வலி புற்றுநோயினால் ஏற்படும் வலிதான் என்று கூறியிருந்தார். அந்தக் ‘கதவிடுக்கில் விரலை வைத்து அழுத்திக்கொண்டிருக்கும்” வலியை வருடக்கணக்கில் சகித்துக்கொண்டிருப்பது நரகக்கொடுமையன்றி வேறில்லை. நிலையான புத்தியோடு இருப்பதே சாகசம்தான். அத்தகைய வலியைப் பருவடிவில் தொட்டுவிடலாம் போல குழந்தையாக, வளர்ந்த பெண்ணாகப் பார்க்கிறார் கோமல். பாவம்தான். அவர் மலையேறிய கஷ்டத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார் உங்களிடம்.

“தவ்விதவ்வி நாலடி போய்டுவேன். ஒரு வலி வலிக்கும்பாரு… கடப்பாரையால அடிச்ச மாதிரி. அப்பிடியே நின்னுருவேன்”

“நின்னா சரியாயிடுமா சார்?”

“யாருய்யா நீரு? நின்னா மம்பட்டியால வெட்டினா மாதிரி வேற வலி. வலில வித்யாசம் இருக்கறது நல்லதுதான”

இந்தத் தீவிர கட்டத்திலும் கோமலின் சற்றே எரிச்சலேறிய “யாருய்யா நீரு?” நம் முகத்தில் கொண்டு வரும் புன்னகையை ஆங்கிலத்தின் “What a man you are” கொண்டு வருவதில்லை. அது மொழியின் போதாமைதான். “கோட்டி” யிலும் இத்தகைய போதாமைகள் வெளிப்படும் இடங்கள் நிறைய உண்டு. தமிழிலும் அத்தகைய போதாமைகள் உண்டுதான். ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கும்போது நானும் உணர்ந்திருக்கிறேன்.  மேலும் அருஞ்சொற்பொருள் வைத்திருக்கலாமோ? பிறநாட்டினர் படிக்கும்போது Vetti என்றால் உடை என்று தெரியாமல் திண்டாடுவார்கள்தானே? மேலும் தமிழறியாதவர்களுக்கு கலைஞனின் மனவெளிப் பயணம் குறித்த  ‘தாயார்பாதம்”, “மயில் கழுத்து” போன்ற கதைகள் என்னவாகப் பொருள்படும் என்று எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதே நேரத்தில் உலகக்குடிமகன், ஓலைச்சிலுவை போன்ற கதைகள் பிற மொழியினரை எளிதில் சென்று சேரும் என்றும் தோன்றுகிறது.

கதையில்  தாங்கமுடியாத வலியோடு ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரமத்திற்கிடையேதான் பேசிச் செல்கிறார் கோமல். எத்தனையோ பேரிடம் சொல்லிச்சொல்லி மொழி கூர்கொண்டு விட்டிருக்கலாம். எழுத்தாளரான உங்களுடன் பேசும்போது மொழியின் வெளிப்பாடு உச்சத்தினை அடைந்து விட்டிருக்கிறது. எல்லா வலிகளும் சற்று நேரமாவது மறந்து, கடைசியில் கைலாய தரிசனம் கண்டு மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உன்னதத்தின் ‘எடை’ தாங்காமல் தள்ளாடுகிறார் கோமல். பழைய வலி திரும்ப வந்தவுடன்தான் ஆசுவாசப் பட்டிருப்பாராய் இருக்கும். அவர் குடும்ப உறுப்பினர்களிடம் கூட இவ்வளவுதூரம் பகிர்ந்து கொண்டிருப்பாரா? தெரியாது. ‘ஒடம்ப வ்ருத்திக்காதீங்கோ’ என்று வாயடைத்து விட்டிருக்கலாம். எழுத்தாளனைப் பார்த்தவுடன் மனதின் அடியாழத்தில் கிடக்கும் கசடு முதற்கொண்டு பொங்கி வருகிறது. தன் வலியும், தரிசனமும் வரலாற்றுப் பதிவாகலாம் என்ற உள்ளக்கிடக்கை இருந்திருந்தாலும் தவறில்லை.தலையில்   குல்லாவோடு அந்தப்பொன்னொளிர் தருணத்தில் கைலாய மலைமேல் கோமல் நிற்கிற காட்சி வாசகர் மனதில் அழியாமல் நின்று விடுகிறது. ‘அறம்’ தொகுப்பில் மட்டுமல்ல, உங்கள் மொத்தச் சிறுகதைப் பரப்பிலுமே ‘பெருவலி’ க்குத்  தனியிடம் கொடுப்பேன்.

அன்புடன்,

சங்கரன் சங்கரன்

அறம் ஆங்கில மொழியாக்கம்- அமேசான்

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைஅஞ்சலி:செ.இராசு
அடுத்த கட்டுரைகடுக்கரை பவித்ரா மகாதேவன்