குன்றுகள்,பாதைகள்

குன்றுகள்

காபிநுரைக் கொப்புளத்தில் கால்தவழ்ந்து ஏறும் சிற்றெறும்பைப்போல, மூச்சிளைக்க மூட்டுகள் ஓய முன்னால் குனிந்து கைகளைக் காற்றில் துழாவி ஏறி மேலே சென்று, நிமிர்ந்து இடுப்பில் கைவைத்து வானம் நோக்கிப் புன்னகைக்கும் இந்தச்¢றுகுன்று நான் ஏறியவற்றில் எத்தனையாவது? எண்ணிக்கை வைத்துக் கொண்டதில்லை, தினமொரு குன்று என்று சொல்லலாம்.. தினம்தோறும் ஏறும் குன்றும் ஒவ்வொருநாளும் புதிதென்பதால். குன்றுகளே என் நாட்களென ஆகிவிட்டிருக்கின்றனவா என்ன?

ஏழுவயதில் பாடநூலில் படித்த இமயம் என் கனவுக்குள் ஓங்கி வளர்ந்தது. பின்பு இருபது வயதில் அதன் ஓங்கிய கோபுரமுடிகள் பொன்னொளியில் சுடர்வதைக் கண்டு  அண்ணாந்து நின்றிருக்கிறேன். பல்லாயிரம் வருடங்களாக என் குருமூதாதையர் ஏறிச்சென்ற வான்படிகள். இக்குன்றுகளை ஒன்று மீது ஒன்றென அடுக்கினால் இத்தனை நாளில் இமயத்தில் ஏறியிருப்பேன்.விண்ணில் ஏறி மேகவானை தாண்டி சென்றிருப்பேன். அங்கிருந்து திரும்பிப் பார்க்கையில் இவ்வுலகமே ஒரு பசும்புல்வெளி போல் என் காலடியில் விரிந்து கிடந்திருக்கும்.என்னை அன்றாடச் சவாலுக்கு இழுக்கும் இச்சிறுகுன்றுகள் என் பார்வைக்கே எட்டியிருக்காது.

ஆனால் ஒருபோதும் அதைச் செய்திருக்கமுடியாது. ஒவ்வொருநாளும் குன்றுகளில் ஏறியபின் ஒவ்வொரு நாளும் நான் என் இனிய வீடுக்குத்திரும்பியிருக்கிறேன். காற்றோட்டமான அறைகள் கொண்ட வீடு. எனக்குப் பிரியமான அனைத்தையும் நான் சேர்த்து வைத்திருக்கும் களஞ்சியம்.. ஒவ்வொன்றையும் தொட்டு என்னுடையது என்னுடையது என்று சொல்லிக்கொண்டபின் புன்னகையுடன் தூங்கச் சென்றிருக்கிறேன்.அதன்பின் இரவின் சில்லொலியில், திரைச்சீலை அசையச் சாளரம் தாண்டி வரும் குளிர்காற்றில் தூக்கத்திற்குள் மேலும் மேலும் ஏறிச்சென்று என் இமயமலை முடிகளை காண்கிறேன்.

நீரெல்லாம் கங்கை மலையெல்லாம் இமயம். இந்தச் சிறுகுன்றுகளும் இமய முடிகளே. சில கைக்குழந்தைகள். சில தவழும் குழந்தைகள். இவற்றில் ஏறும்போது தூரத்தில் எங்கோ இமயமலைமுடி குனிந்து என்னை புன்னகையுடன் நோக்கி கனிவுகொண்டு தலையசைக்கிறது. இந்தச் சிறுகுன்றில் ஏறி நின்று சூரிய உதயத்தைப் பார்க்கும்போது ஒரு கணத்துப் பிரமையில் அது கைலாயமலை மீது கோடிகோடி பொற்கரங்களுடன் எழுவதைப்போன்றே தெரிகிறது.

வீடுதிரும்பாத பயணங்கள் மூலமே மாமலைகளில் ஏறமுடியும். தன் தோளில் சிறுமூட்டையாகத் தொங்கும் வீட்டையும் தலைசுழற்றி வீசிவிடாத ஒருவன் இமயத்தை ஏறிமுடிப்பதில்லை. இந்தச் சிறு குன்றுமீது ஏறும்போதும் என் மூட்டுகள் கிரீச்சிடுகின்றன, என் தோள் அழுந்திக்குனிகிறது. ஏழு அறைகளும் கூரையும் சுவர்களும் ஏராளமான நூல்களும் உறவுவலைப்பின்னலும் கொண்ட என் வீட்டை நான் சுமந்துகொண்டு ஏறுகிறேன். ஒவ்வொரு முறையும் திரும்பிவந்து வீடெனும் மலையில் ஏறிக்கொண்டிருக்கிறேன். அதன் உச்சியில் ஒரு பொற்கதிரோன் எழக்கூடும் என்று நம்பிக் கொள்கிறேன்.

சிறிய குன்றுகள் சிறிய நம்பிக்கைகள். சிறிய ஆறுதல்கள். சின்னஞ்சிறிய உதிரிக்கருத்துக்கள். சிறிய குன்றுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரும் தினங்கள். சிறிய குன்றுகள் வழியாக நான் ஒவ்வொருநாளும் இமயத்தை ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறேன். இமயம் ஒன்றானது. அது மட்டுமேயானது. அது பிளவுபடாத பெருங்காலம்.

சிறிய குன்றுகள் வழியாக நான் ஏறும் மாமலை ஒன்று இருக்கிறது.
***

பாதை
ஒவ்வொருநாளும் இந்தப்பாதையருகே வந்து ஒருகணம் நின்றதுண்டு. வானுக்குச் செல்லும் பட்டத்தின் சரடு போல அது நீண்டுசெல்கிறது. அதன் வழியாக இறங்கி பலநாட்கள் சென்றிருக்கிறேன், ஒருபோதும் அது சென்றுசேரும் அந்தச் சிறு கிராமம் வரைச் சென்றதில்லை. திரும்பிவிடுகிறேன்.

 

 

அழகிய செம்மண்தடம் இது. பாதை என்பது பலநூறு மனிதர்களின் பல்லாயிரம் பயணங்கள். ஆவலுடன், அச்சத்துடன், கசப்புடன், சேர்ந்தும் தனித்தும் சென்ற சேர்ந்த, சேராத பயணங்கள். இந்தப்பாதைமுனையில் நின்று இதுசென்று சேரச்சாத்தியமான பல்லாயிரம் பலகோடி இடங்களைப்பற்றிய கனவை உருவாக்கிக் கொள்கிறேன். பாதைகள் அனைத்துமே சென்றுவிடு என்கின்றன. நீர் நிறைந்த ஏரியில் திறந்த சிறு மதகு. இந்தப்பாதை வழியாக நான் முற்றிலும் வழிந்தோடி காலியாகிவிடுவேன் என்று எண்ணிக் கொள்கிறேன்.

ஒருபோதும் இடம்பெயராத கால்கள் கொண்ட மரங்களுக்குப் பாதைகள் என்ன பொருள் அளிக்கின்றன? அவற்றின் பயணமின்மை பாதைகளை தன் காலடியில் விழுந்து வணங்கும் தூரம் என்று புரிந்துகொள்கிறதா என்ன?

மண்மூடி மறைந்தழியும் பாதைகளை பொட்டல்களில் கண்டதுண்டு. ஆனால் எந்தப்பாதையும் முற்றாக அழிவதில்லை. மீண்டும் அவ்வழியே மனிதர்கள் வரும்போது அந்தப்பாதையையே தேர்ந்தெடுப்ப்பார்கள். அந்த முதல் மனிதன் அந்தப்பாதையை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள் அப்படியேதானே இருக்கும்?

அவ்வாறென்றால் பாதைகள் இருப்பது மண்ணிலும் கால்களிலுமல்ல. அவை காற்றில் வானில் திசைகளில் இருக்கின்றன. அவற்றை மனம்  எதிர்கொள்ளும் சாத்தியங்களில் இருக்கின்றன. பாதைகள் ஏற்கனவே நுண்வடிவில் இருந்துகோண்டிருக்கின்றன. தயங்கி ஐயுற்று துணிந்து மீண்டும் அஞ்சி மெல்லமெல்ல மனிதன் அவற்றுக்கு மண்ணில் ஒரு பருவடிவத்தை அளிக்கிறான்.

பலகோடி பாதைகளின் பின்னல்வலையால் முற்றிலும் சூழப்பட்ட இந்தபூமி ககனவெளியில் திரும்பித்திரும்பி பிற கோளங்களுக்கு நன் பாதைக்கோலத்தின் அழகைக் காட்டியபடிச் சுற்றி வருகிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலிருந்து பார்க்கையில் கோள்களின் மீன்களின் மாபெரும் பாதைவலையே பிரபஞ்சமென்று தோன்றுமோ?¢

அப்படியே இருக்கட்டும் இந்தப்பாதை. அதன் மறுநுனியில் நானறிந்த அனைத்துமே இன்னும் மேலானதாக மேலும் மகத்தானதாக இருக்கட்டும். பாதை ஒரு  வாக்குறுதி, வெளியே திறந்த வாசல்.

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Feb 28, 2009

 

என்.எச்.47- தக்கலை

என்.எச்.47 என் பாதை

கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி

முந்தைய கட்டுரைஅலெக்ஸ் -கடிதம்
அடுத்த கட்டுரைஅலெக்ஸ் -நிர்மால்யா கடிதம்