ஒளிப்படத்துறையில் புகழ்பெற்ற இந்திய ஒளிப்படக்கலைஞர் கே.ஜெயராம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் காலமாகிவிட்டார். தமிழ்ச்சூழலில் பெரிதும் கவனமேதுமின்றி கடந்துவிட்ட அவரது இறப்புக்கு, உங்கள் வலைதளம் வழியாகவேனும் அஞ்சலி செலுத்தும் அறநீட்சியின் பொருட்டே இக்கடிதம்.
கே.ஜெயராம் தனது 14வது வயது முதல் ஒளிப்படங்கள் எடுக்கத் துவங்கியவர். இயற்கை மற்றும் கானுயிர் சார்ந்து இவர் காட்சிப்பதிந்த ஒளிப்படங்கள் உலகளவில் பிரபலமடைந்துள்ளது. 1970களிலேயே பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று, 1969 ஆம் ஆண்டில் அவர் ஒரு ஒளியியல் நிபுணருடன் இணைந்து, கேமராவுடன் பொருத்தப்பட்ட ஒரு உருப்பெருக்கி லென்ஸை உருவாக்கியது.
இந்தக் கண்டுபிடிப்பு பூச்சிகள், வண்டுகள், மற்றும் ஊர்வன உள்ளிட்ட உயிரினங்களை நம்பமுடியாத அளவுக்கு உருப்பெரிதான படங்களை காட்சிப்பதிய வழிவகுத்தது. Macro Photography என்றழைக்கப்படும் ஒளிப்படத்துறை பிரிவில் பெரும் வல்லுநராகக் கருதப்பட்டவர். பூச்சிகள், வண்டுகள் ஆகிய சிற்றுயிர்களை ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தியதில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது.
National Geographic மற்றும் Sanctuary உள்ளிட்ட உலகளாவிய சூழலியல் இதழ்களிலும், BBC காட்சி ஊடகத்திலும் இவரது ஒளிப்படங்களும் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. கேரளாவின் மழைக்காடுகள் அமைந்துள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் வாழும் பட்டாம்பூச்சிகள் குறித்து இவரெழுதிய (இணையாசிரியர்) ‘Some South Indian Butterflies’ புத்தகம் மிக முக்கியமான சூழியல் ஆவணம். தேள் மற்றும் பூச்சிகள் குறித்த இவரது ஒளிப்படத்தொகுப்புக்கு International Salon of Photographs எனும் அமைப்பின் மூலம் சர்வதேச விருது கிடைத்தது.
ஒளிப்படங்கள் எடுப்பதை வாழ்வாகக்கொண்ட கே. ஜெயராம் உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஒளிப்படக்கலைஞராக மட்டுமின்றி, புதிய உயிரினங்களைக் கண்டறியும் வகைப்பாட்டியலாளராகவும் ஆனார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒளிப்படக்கலைஞனாக வாழ்ந்து இத்தேசத்தின் வனங்களெங்கும் அலைந்துதிரிந்து கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஒளிப்படங்களுக்கும் அதிகமாகக் காட்சிப்பதிந்த செயல்மனிதர். இவருடைய சூழலியல் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், புதியவகை தவளைக்கும், சிலந்திக்கும் இவரது பெயர் இணைத்து பெயரிடப்பட்டுள்ளது (Philautus jayarami, Myrmarachne jayaramani).
எல்லாவற்றுக்கும் மேலாக, கே.ஜெயராம் அவர்களை நாம் அகமேந்துவதற்கு இன்னொரு இன்றியமையாத காரணமும் உண்டு. உங்களது ‘யானை டாக்டர்‘ டாக்டர் புத்தகம் தமிழினி வெளியீடாக வந்து பல்லாயிரக்கணக்கில் மக்களைச் சென்றடைந்தது. அந்தப்பதிப்பில் அச்சாகியிருந்த யானை ஒளிப்படங்கள் அனைத்தும் ஜெயராம் அவர்கள் காட்சிப்பதிந்தவை. ஒளிப்படங்கள் வழியாக எத்தனையோ சிற்றுயிர்களை ஆவணப்படுத்தி சூழலியலுக்கும் ஒளிப்படக்கலைக்கும் தன்னை ஒப்படைத்து வாழ்ந்துமறைந்த அந்த மூத்தமனிதரை இக்கணம் மனதில் ஏந்தி எங்கள் நினைவஞ்சலியை இறைசேர்க்கிறோம். கே.ஜெயராம் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கான இணைப்பையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
கே.ஜெய்ராம் அவர்களின் வாழ்வுபற்றிய ஆவணப்படத்தின் இணைப்பு
: https://youtu.be/bmFmiB2Wd_Q
“சிறகற்று பறக்கமுடியாமலானாலும் பட்டாம்பூச்சியின் ஆன்மா சிறகடித்துக்கொண்டேதான் இருக்கும்” என்ற உங்களது வரிகளை… கலையை நேசித்து வாழ்ந்து உயிர்துறந்த அந்த நற்கலைஞனுக்கான நினைவஞ்சலியாக மீண்டுமொருமுறை நெஞ்சுக்குள் உச்சரித்துக்கொள்கிறோம். நூறாயிரம் பட்டாம்பூச்சிகளாக அவரது நல்லான்மா இம்மண்ணில் தீராப்பிறப்படைக!
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி