செயற்கை நுண்ணறிவு- கடிதம்

செயற்கை நுண்ணறிவும் கலையும்

அன்பு ஜெ,

செயற்கை அறிவும் இலக்கியமும் பற்றி உங்கள் பதிவு மிக முக்கியமான ஒன்று. யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். சரியாக உங்கள் பதிவிற்கு ஒரு வாரம் முன்னதாக இதே விவாதம் எங்கள் அலுவலகத்தில் நடந்தது. நான் செயற்கை நுண்ணறிவின் பயனர் மட்டுமே. அதன் உருவாக்கத்தில் எங்கள் அலுவலகத்தில் மிகச்சிறந்த வல்லுநர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் இந்த விவாதம் வந்தது.

என்னுடைய புரிதல்கள் இங்கே.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஏதோ சர்வலோக நிவாரணி போன்று தோன்றலாம்.  அடிப்படையில்  அது ஒரு கணித மாதிரி (Mathematical Model ) மட்டுமே. அந்த கணித மாதிரியின் இலக்கங்கள் (parameters ) எண்களாக தன்னை தானே மேம்படுத்தி கொண்டே இருக்கும் கற்பதன் மூலம்.. அதன் முக்கியமான தேவையும்  பயனும் அதன் கணிக்கும்  (prediction) தன்மையே. கணித மாதிரி அதைத்தான் செய்ய முடியும். நாம் அது  சிந்திப்பதாக சொல்வதெல்லாம்  அந்த கணிக்கும் திறனையே. மிக எளிய உதாரணமாக ஒரு பந்தை வீசும்போது அது 20 நொடிகளில் எங்கு இருக்கும் என்பதை ஒரு எளிய  கணித மாதிரி கணக்கிட்டு கூறும் (நியூட்டன் விதி). அதன்தேவை பந்து எறியப்பட்ட கோணம் , நேரம், வேகம், மற்றும் பந்தின் நிறை  மட்டுமே. வெற்றிடத்தில்  அந்த சோதனையை செய்தால் கிட்டத்தட்ட கணித மாதிரி கணித இடத்திலேயே இருக்கும்.

இதற்கு செயற்கை நுண்ணறிவு தேவை இல்லை. ஆனால் காற்றின் திசை, காற்றின் வேகம், காற்றின் ஈரப்பதம், பந்தின் அமைப்பு (ஒழுங்கற்ற வளைவு), ஆகியவற்றையம் சேர்த்து கணக்கிட அந்த கணித மாதிரி மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும். பல நூறு பக்கங்களுக்கு சமன்பாடுகளை நிறைத்து செல்லும். இது மிக எளிய உதாரணம். இதையே வெப்ப மாற்றி போன்ற இன்னும்  கடினமான ஒரு அமைப்பில் இந்த கணித சமன்பாடு மென்மேலும் கடினமாகும். இந்த செயற்கை நுண்ணறிவு அந்த கணித சமன்பாட்டை முழுக்க முழுக்க தகவல் (data ) மற்றும் நிகழ்தகவின்  அடிப்படையில் உருவாக்கி கொள்ளும். உதாரணமாக பந்தை சில முறை வேறு வேறு சூழல்களில்  எறிந்து  அதன் சூழலையும், பந்து இருக்கும் இடத்தையும் கொடுத்து அந்த செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்கலாம். அதன் பின் நாம் அந்த செயற்கை நுண்ணறிவை (கணித மாதிரிதான்) கொண்டு வேறு விதமான பந்துகள், வேறு வேறு  சூழலில் எறியப்பட்டால்  எங்கு இருக்கும் என்று அறிய  உபயோக படுத்தலாம்.

நீங்கள் குறிப்பிட்டது போல இதில் தகவல் (data ) மற்றும் எளிய தர்க்கம் (logic ) மட்டுமே பிரதானம். அதன் நிகழ்தகவும் தகவல் (data ) சார்ந்ததே.  மற்றபடி நாம் சிந்திப்பதாக நினைப்பது அது உருவாக்கும் மாயையே.

20 வருடங்களுக்கு முன்பு இலக்கியம் என்றால் என்ன என்று உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். வாழ்வை அதன் அனுபவத்தின் துளியை உணரச்செய்வது என்று நீங்கள் பதில் எழுதி இருந்தீர்கள். இதுவே என் அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தில் பங்கு பெற்று ஒரு ரஷிய பொறியாளர் கூறியதும். இலக்கியம்  ஆழ்மனதின் தூண்டல் என்றும், தர்க்கம் இருக்க வேண்டிய தேவை இல்லாததும்  ஒருபோதும் அதை செயற்கை நுண்ணறிவால் நிகழ்த்தவே முடியாது என்று முடித்தார்.

இலக்கியம் எங்கு இலக்கியமாகிறது? செயற்கை நுண்ணறிவு எழுத்தாளராவது என்பது இலக்கியம் வெறும் சொற்களின் குவியலாக மட்டுமே இருந்தால்  நடக்கலாம். இலக்கியம் எழுத்தாளனின் ஆழ்மனதில் உருவாகி வார்த்தைகளின் வழியாக பயணித்து வாசகனால் படிக்கப்பட்டு அவன் ஆழ்மனதில் நிகழ்வது. வார்த்தைகள் ஒரு கருவி (tool ) மட்டுமே. இது எல்லா செவ்வியலுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் . மொழியின் ஆளுமை மிக முக்கியமே..ஆனால் அது மட்டுமே எழுத்தை இலக்கியமாக்காது. இலக்கியம் ஆழ்மனது மற்றொரு ஆழ்மனதுடன் கொள்ளும் தொடர்பு. அதனால்தான் எவ்வளவு சொல்லியும் ஒரு நல்ல இலக்கியம் எனக்கு  என்ன செய்தது என்பதை விளக்க முடியாததாக ஆக்குகிறது.  இலக்கியத்தை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் காலம் (ஒருவேளை வந்தால்) வரும்போது, நம்மால் விளக்க முடியாத எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இருக்காது. கிட்டத்தட்ட மனிதன் இந்த பிரமாண்ட பிரபஞ்ச மற்றும் படைப்பின்  ரகசியம் அறிந்தவனாக இருப்பான். அப்போது இலக்கியம் மட்டுமல்ல இந்த ரகசியத்தை அடையும் எந்த கலைகளும், ஆன்மீகமும், ஏன் மொழியே கூட தேவையற்ற நிலையில் இருப்பான். அது கடினமானது மட்டுமல்ல நிகழ வாய்ப்பில்லாததும் கூட.

ஆனால் செயற்கை நுண்ணறிவு இன்றைய வணிக எழுத்தை (அல்லது திரைப்படத்தை) எளிதாக உருவாக்கும். நீங்கள்  ஏற்கனவே கூறியது போல, இங்கு எழுதப்படும் வணிக எழுத்துக்களில் ஒரு முறைமை (pattern ) உண்டு. இதுவும் உங்கள் உதாரணம் தான். ஒரு குற்றம் குறித்த நாவலில் எத்தனை பக்கங்களுக்கு ஒருமுறை கொலை நிகழ வேண்டும் என்று பல்வேறு வெற்றிகரமான நாவல்களில் இருந்து செயற்கை நுண்ணறிவு கற்று கொண்டு அதை எளிதாக உருவாக்கும். மிக கச்சிதமாக. எந்த பக்கங்களில் நாயகனோ அல்லது நாயகியோ அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அந்த வெற்றிகரமான  முந்தைய நாவல்களில் இருந்து (data தான்) அது எடுத்துக்கொள்ளும். அது ஒருபோதும் இலக்கியம் ஆகாது.

யானை டாக்டர் படிக்கும் ஒரு மனம் எங்கோ ஆதியில் ஒரு மனிதன் யானையை முதன் முதலில் தரிசித்த தருணத்தை உணர்ந்து கொள்ளும். அந்த ஆழ்  மனம் இந்த கணித மாதிரியில் எல்லாம் அடங்கும் அளவுக்கு எளிமையானது அல்ல.

மற்றபடி செயற்கை நுண்ணறிவு  பற்றி நாமே சுஜாதாவின் பாணியில் கற்பனை செய்து கொள்ளலாம். அவ்வளவுதான். அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரு உபரி தகவல். செயற்கை நுண்ணறிவு கணினி நிபுணர்களை காணாமல் ஆக்கும் என்பதும் அதீத கற்பனையே. கணினி முதன் முதலில் உருவாக்கப்பட்டபோது அதற்கான மொழி (மென்பொருள்) வெறும் 0 மற்றும் 1 கொண்டே அமைந்தது. ஆங்கிலத்தில் machine language. பக்கம் பக்கமாக எழுதி இருப்பார்கள்.  கொஞ்ச காலம் கழித்து சிறிது மேம்பட்ட மொழி உண்டானது. உதாரணமாக mov , copy போன்று நமக்கு கொஞ்சம் புரியும் மொழியில்.  ஆங்கிலத்தில் assembly language . அதன் பிறகே இன்று உள்ள மேம்பட்ட மென்பொருள் (Java , C++ போன்றவை). அது மேலும் மனித மொழிக்கு நெருக்கமானது. ஆங்கிலத்தில் high level language . செயற்கை நுண்ணறிவு இதையெல்லாம் தாண்டியது. நாம் மனித மொழியில் பேசுவது அல்ல எழுதுவது போலவே மாறிவிட்ட ஒரு மென்பொருள்.

0 மற்றும் 1 ஐ  கொண்டு மென்பொருள் எழுதும்போது அடுத்த கட்டம் வந்த போதும் இதே வேலை போய்விடும் என்ற கருத்தும் வந்திருக்கும். ஆனால் அது தொழில் நுட்பத்தில் வேலை செய்பவர்களை மேம்படுத்தியே உள்ளது. செயற்கை நுண்ணறிவும் அப்படியே. என்ன வேண்டும்? எப்படி வேண்டும் என்பதை மட்டும் இந்த பொறியாளர்கள் யோசித்தால் போதும். அதை வார்த்தையாக்க தெரிந்தால் செயற்கை நுண்ணறிவு அவர்களுக்கான மென்பொருளை தயாரித்து வழங்கும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நம்முடைய பெரும்பாலான மென்பொருள் வல்லுநர்கள் வேலை ஒன்றும் சிந்தித்து செய்வதில்லை. அவர்கள் படித்து படித்து ஒரு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஏதாவது நிறுவனத்தில் என்ன வேண்டும் என்று சொல்வார்கள், இவர்கள் அந்த தகவல் களஞ்சியத்தை (database ) வைத்து மென்பொருள் எழுதி கொடுப்பார்கள். அது வல்லுநர் வேலையே அல்ல. உண்மையில் இந்த மென்பொருள் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு எதிர்காலத்தில் மிக அதிகமாகவே இருக்கும். நம் பொறியாளர்கள் அதற்கு கட்டளையிட்டு கொண்டு இருப்பார்கள். என்ன வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு நிர்பந்திக்கப்படும். அது அவர்களை மேம்படுத்தும். வேலை மாறும். இல்லாமல் ஆகாது. வெறும்  தகவல் களஞ்சியம் தெரிந்தவர்களை வல்லுநர்கள் என்று இனி அழைக்க முடியாது. அவ்வளவுதான்.

-காளிராஜ் 

முந்தைய கட்டுரைவெண்முரசு, நிகழ்வுகள் காணொளிகள்
அடுத்த கட்டுரைசெங்கோலும் எதிர்வினைகளும்