யோகமும் தியானமும் எதற்காக?

இசையும் ஓவியமும் இலக்கியத்திற்கு எதற்காக?

அன்புள்ள ஜெ,

இசை, ஓவியம் என்பவை இலக்கியத்திற்கு எதற்காக என்னும் கட்டுரையைக் கண்டேன். அதன் விரிவான வாதங்கள் ஏற்புடையவை. ஆனால் யோகம், தியானம் ஆகியவை இலக்கியவாதிக்கு அவசியமா என்ன?  அந்த வகுப்புகளையும் ஏன் நடத்துகிறீர்கள்?

அன்புடன்

ரவிராஜ்

அன்புள்ள ரவி

பழைய கடிதங்களையும் சேர்த்துப் பார்த்தேன். கேள்விகளின் சுரங்கமாக இருக்கிறீர்கள்.

இலக்கியத்துக்கு யோகமும் தியானமும் அவசியமில்லை. ஆனால் என் நோக்கம் இலக்கியம் மட்டுமல்ல. விஷ்ணுபுரம் அமைப்பு இலக்கியம், பண்பாட்டு ஆய்வுகளுக்குரியது. நான் இலக்கியத்தை மட்டுமே முன்வைப்பவன் அல்ல.நான் முன்வைப்பது ஓர் ஒருங்கிணைந்த பார்வையை. ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையை. அதற்கு யோகமும் தியானமும் அவசியம்,

ஒருவருக்கு இவை தேவையில்லை என்று தோன்றினால் தேவையில்லை. விட்டுவிடலாம். தேவை என்று தோன்றினால் பங்குகொள்ளலாம். இங்கே தியானம், யோகம் பழக பல அமைப்புகள் உள்ளன. ஆனால் அவ்வமைப்புகளில் இலக்கியவாசகர்கள், இலக்கியவாதிகள் கலந்துகொள்வதில் ஒரு விலக்கம் உள்ளது.

முக்கியமான காரணம், அங்கே உள்ள வழிபாட்டுமுறைகள். ஒன்று, பழையபாணி மதவழிபாடு. அங்கே சாதியும் பழமைவாத ஆசாரப்பார்வையும் இருக்கும். அல்லது இன்னொரு வழி இன்றைய நவீன அமைப்புகள். அங்கே தனிநபர் வழிபாடு இருக்கும். வழிபாடு, மத அடையாளம், தன்நபர் வழிபாடு ஆகியவை கட்டாயமில்லாத பயிற்சிமுறைகளே இன்றைய சூழலில் ஒரு நவீன இளைஞர்களுக்கு உரியவை.

அத்துடன் பிற அமைப்புகளின் பயிற்சிகள் ஒட்டுமொத்தமாகப் பெருந்திரளுக்கு நடத்தப்படுவதனால் அவற்றின் பொதுவான அறிவுத்தள விளக்கம் மிக மிக எளிமைப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. அது அறிவார்ந்து யோசிப்பவர்களுக்கு போதுமானதாக அமைவதில்லை.

நான் பலமுறை சொன்னதுதான். பிற பெரிய அமைப்புகளின் பயிற்சிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியருடன் தனிப்பட்ட உறவு இயல்வதில்லை. என் அனுபவத்தில் முதல் ஐந்தாறாண்டுகள் பயிற்றுவிக்கும் ஆசிரியருடன் தனிப்பட்ட உறவாடல் மிக இன்றியமையாதது.

இக்காரணத்தால்தான் நான் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஆசிரியர்களைக் கொண்டு இவற்றை ஒருங்கிணைக்கிறேன். இது விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்திட்டம் அல்ல. எனக்கு உதவியாக இருந்தவை, பிறருக்கு உதவுமென நினைக்கிறேன்.

யோகமும் தியானமும் ஏன் தேவையாகின்றன? இன்றைய சூழலில் நாம் இரண்டு வகைச் சிக்கல்களை எதிர்கொள்கிறோம். ஒன்று மிகக்குறைவான உடலுழைப்பு. இரண்டு கவனச்சிதறல்.

பெரும்பாலும் நாம் அமர்ந்தபடியே இருக்கிறோம். மிகையான உணவும், ஒழுங்கற்ற உணவும் நம் வாழ்க்கையாக உள்ளன. தொடர்ச்சியாகக் கூர்ந்து எதையாவது செய்கிறோம். ஆனால் ஒருங்கிணைந்த கூர்மை இல்லாமல் அலைபாய்ந்து கொண்டும் இருக்கிறோம். உணர்ச்சிகரமாக ஈடுபடுகிறோம். உணர்ச்சிகள் மாறிக்கொண்டும் இருக்கின்றன.

இந்த நெடுநேர அமர்வுநிலை நம் முதுகை பாதித்து முதுகெலும்புச் சிக்கல்களையும் மூட்டுவலியையும் உருவாக்குகிறது. உணர்ச்சிநிலையால் அட்ரினல் மிகையாகச் சுரந்து உடல் பெரும்பாலும் இறுக்கமாகவே உள்ளது. ஆகவே தோள்களையும் கழுத்தையும் இறுக்கி வைத்திருக்கிறோம். விளைவாக கழுத்துச்சிக்கலள் உருவாகின்றன . ரத்த அழுத்தச் சிக்கல்கள் உருவாகின்றன.

பலர் அமரும் விதம் சரியில்லை என எண்ணி நாற்காலிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இணையம் முழுக்கவே நாற்காலி விளம்பரங்கள்தான். நானும் பல நாற்காலிகளை மாற்றியவன்தான். அதனால் எந்தப் பயனுமில்லை. பிரச்சினை அமரும் விதத்தில் இல்லை. உடலை இறுக்கி பிடித்திருக்கும் உள்ளத்தில் உள்ளது. உள்ளம் உள்ளிருந்து எல்லா உறுப்புகளையும் விசையுடன் இழுத்து கட்டி முடிச்சு போட்டிருக்கிறது, பொம்மலாட்டப் பொம்மைகளுக்குப் பின்னாலிருக்கும் கை அது. அந்தச் சரடுகள் தளரவேண்டும்

நம் உள்ளத்தை நம் அட்ரினலின் தூண்டிக்கொண்டே இருக்கிறது. இந்நூற்றாண்டில் மிக அதிகமாக செயல்படும் உடற்சுரப்பி அதுதான். அட்ரினலின் என்பது விலங்குகளுக்கு அபாயகட்டத்தில் ஓடித் தப்பிப்பதற்கு தேவையான விசையை அளிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள சுரப்பி. அதை விழித்திருக்கும் நேரமெல்லாம் தூண்டி உள்ளத்தையும் உடலையும் ஒருவகை விசைநிலையிலேயே வைத்திருப்பதன் விளைவு நம் இன்றைய சிக்கல். அதைச் செய்யாமலும் இருக்க முடியாது. ஏனென்றால் நாம் போட்டியுலகில் வாழ்கிறோம். நம் கேளிக்கைகளும் அட்ரினலினை தூண்டி நம்மை படபடப்பும், பதற்றமும் கொண்டவர்களாக ஆக்குவனதான்.

உடலுழைப்புக்கு உடல்பயிற்சி தீர்வு. ஆனால் உடலை இறுக்கமாக வைத்திருப்பதன் விளைவுகளுக்கு உடல்பயிற்சி தீர்வல்ல.  முழு உடலுக்கும் பயிற்சி  என்பது யோகமே. உள்ளத்தையும் இணைத்துக்கொண்டு செய்யப்படும் பயிற்சி அது.

கவனச்சிதறல் இன்றைய தொழில்நுட்ப ஊடகப்புரட்சியின் விளைவு. உலகமே உங்களுடன் உரையாடுகிறது. உலகமே உங்களை உரையாட அழைக்கிறது. அத்துடன் இன்றைய ஊடகமென்பது முதன்மையாக விளம்பரத்திற்குரியது. கருத்து தெரிவிக்கவும், செய்திகள் அறியவும், கேளிக்கைக்கும் அது நமக்கு வாய்ப்பளிப்பதென்பது விளம்பரத்தை நம்மிடம் கொண்டுவருவதற்காகத்தான்.

விளம்பரங்கள் நம்மை தொட்டு உசுப்பி கவர்ந்து நம்மிடம் பேசுபவை. நம்மால் தவிர்க்கவே முடியாதவை. மிகப்பெரிய உளவியல் நிபுணர்களால் உருவாக்கப்படுபவை அவை. எளிய தனிமனிதர்கள் அவற்றை எளிதில் கடக்கமுடியாது ( அந்த உலகிலும் நான் இருக்கிறென், அருகிருந்து அறிந்திருக்கிறேன்) ஆகவே நம் பொழுது பலநூறாகச் சிதறடிக்கப்படுகிறது. ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக ஒன்றைச் செய்யமுடியாதவர்களாக ஆக்குகிறது.

நவீன உலகமே தொடர்ச்சியாகக் கவனத்தை குவிப்பவர்கள், குவிக்க முடியாதவர்கள் என இரண்டு பெரும் பிரிவினராக ஆகிவிட்டிருக்கிறது. முதல் சாரார் இரண்டாம் சாராரை ஆட்சி செய்கிறார்கள். கவனச்சிதறலை கடந்து சென்று  கவனக்குவிப்பை அடைவது இந்நூற்றாண்டின் பெரும் சவால். உலகமெங்கும் அதை கடந்து செல்வதற்கான பலவகை பயிற்சிகள் மிகப்பெரிய கட்டணத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொழில்நிர்வாகிகள் அவற்றில் சேர்ந்து பயில்கிறார்கள். நான் தங்கும் நட்சத்திரவிடுதிகளில் அத்தகைய வகுப்புகள் நிகழாத ஒருநாளைக்கூட கண்டதில்லை.

சிந்தனையாளர்கள், இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அவை தேவை. அவர்களே இன்னும் கூடுதலாக அகம்குவிக்கவேண்டியவர்கள். ஆனால் அதற்கான வசதி இங்கில்லை. தொழில்துறையில் பெருங்கட்டணத்தில் அளிக்கப்படும் அப்பயிற்சியை எளிய செலவில் அளிக்க முயல்கிறேன்.

யோக- தியானமுறைகள் வழியாக கவனக்குவிப்பை கற்றவர்கள் இயல்பாகவே எங்கும் கவனம் குவிவதை காணலாம். கவனம் குவியும்போது உருவாகும் இன்பம் ஒன்றுள்ளது. அதை அடைந்தவர்களின் உள்ளம் அதைநோக்கியே செல்லும் என்பதனால்தான் அப்படி நிகழ்கிறது.

நானறிந்த வரை இந்திய  யோக- தியானமுறைகள் போல பயனுள்ள கவனக்குவிப்புப் பயிற்சிகள் வேறெங்கும் இல்லை. சிங்கப்பூர் , அமெரிக்கா எங்குமே இதன் வடிவங்களையே கற்பிக்கிறார்கள் என கண்டுள்ளேன். இன்னும் சுருக்கமாகவும் இன்னும் தீவிரமாகவும் ஆக்க அவர்கள் முயல்கிறார்கள். பெரும்பாலும் இங்கிருந்து சென்றவர்கள், அல்லது இங்குள்ள அமைப்புகளில் பயின்றவர்களே அவற்றை நிகழ்த்துகிறார்கள்.

அவர்கள் எவரை விடவும் தகுதி கொண்டவர்களால் இவ்வகுப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. நடத்தும் செலவு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தேவையானவர்களுக்கு இல்லை என அமையலாகாது, இவ்வளவுதான் என் நோக்கம்

ஜெ

முந்தைய கட்டுரைசூரியனார்கோயில் நாராயணசாமிப் பிள்ளை
அடுத்த கட்டுரைவெண்முரசு விவாதங்களும் கட்டுரைகளும்