காதலின் கள்ளமின்மை- ரம்யா

The Jewish Bride by Rembrandt

“ஒன்ன எனக்கு சீவனாக்கும்னு சொல்லுததுக்கு வளவி குடுக்குதது மாதிரி வளி ஒன்னும் இல்ல” என்ற வரி இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து உடன் வரும் வரிகள். அன்பை வெளிப்படுத்த எளிமையான விஷயங்களே போதுமானவை. மிக எளிதில் உடைந்துவிடக்கூடிய கண்ணாடி வளையல்களைப் போலவே மெல்லிய உணர்வுகள் கதை நெடுக வரும் தொகுப்பு மலர்த்துளி.

சில உணர்வுகளை முழுமையாகச் சொல்லமுடிவதில்லை. சில உணர்வுகள் முன் திகைப்பும் மெளனமும் கண்ணீரும் மட்டுமே காட்டமுடிகிறது. அத்தகைய ஒன்றை கலையாக வடிப்பதே வேறு எந்த உணர்வுகளையும் விட உயர்வானது என்று நினைக்கிறேன்.

இக்கதைகளின் நாயகிகளும் நாயகர்களும் பெரும்பாலும் இன்னொசெண்டுகள் என்ற வகைமைக்குள் அடைக்கலாம். கள்ளமற்ற தூய அன்பை அவர்களாலேயே வெளிப்படுத்தவியலும் என்பதாலும் இருக்கலாம். பிறவற்றில் இருப்பது கணக்குகள், சுயநலன்கள். பொதுவாகவே இன்னொசெண்ட் என்றவுடன் உடன் வருவது அறிவிலி என்ற பதாகையும் தான். ஆனால் அப்படியல்ல என்பதை கதையில் அவர்களின் ஆளுமைகள் உணரவைக்கிறது. ”மக்குன்னு சொல்லல. குதர்க்க புத்தி கெடயாது. ஒருமாதிரி சிம்பிளான எமோஷனலான பொண்ணு” என்ற வரையறை கொண்ட இன்னொசெண்ட் பெண்களே பெரும்பாலும் இக்கதைகளின் நாயகிகள். ஆம் பிரில்லியண்ட் பீஸஸ் இல்லை. நடிக்கத்தெரியாத இயல்பான அன்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய பெண்கள். தன் முன் நிற்பவர் காண்பிக்கும் காதலை சரியாக புரிந்து கொள்ளும் உணர்வுத்தளத்தில் இருக்கும் நாயகிகள்.

இன்னொசெண்ட் பெண்களைப் போலவே இக்கதைகளில் வரும் ஆண்களும் இன்னொசெண்டுகள் தான். கொலைச்சோறு நாயகனும், ராமச்சந்திரனும், ஒச்சனும் அப்படிப்பட்டவர்கள் தான். கருவாலியின் நாயகனும், யமியின் நாயகனும் அறிவாளிகள் என்றாலும் கூட தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றை கூர்மையாக கவனிக்கும் நுண்ணுணர்வாளர்கள்.

ஆயிரம் கணக்குகளுடன் அல்ல ஏன் எதற்கு எப்போது என்று விளக்கிவிட முடியாத காதல் ஒன்று கொலைச்சோறு சிறுகதையில் நிகழ்கிறது. ஏற்கனவே குழந்தைமைலிருந்து சற்றே மாறிவிட்ட அம்முக்குட்டி கொலைச்சோறு கொடுக்கச் செல்ல ஒத்துக் கொண்டு மெல்ல அவனை எதிர்கொண்டு காதலில் விழும் கதை. இக்கதையில் மெல்ல நகரும் உரையாடலை புன்னகையோடே வாசித்துக் கொண்டிருந்தேன். பெண் தான் சந்திக்கும் ஒரு ஆண் எனும் ஆளுமையை உட்கிரகித்து அதனுள் மூழ்குவதைக் காணிக்கும் உரையாடல்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் முதிர்ச்சியடைந்த பாச்சியம்மை “அவன் மேல ஒனக்கு மொதல்ல ஒரு பாவம் தோணுது. பிறவு அவன் ஒரு நல்லவனாக்கும்னு நீயே நெனச்சுகிட்டே. உனக்கு அவன் மட்டும்தான் அவனுக்கு நீ மட்டும் தான் இருக்கேன்னு அதுக்குபொறவு தோணும். அப்படியே அது வளர்ந்து போயிடும்.” என்று சொல்லும் போதும் “இந்த சின்ன வயசுல பொம்பளப் பிள்ளைங்க அவளுகளுக்கு அடுப்பம் தோணும் முதல் ஆம்பிளய ஸ்னேகிக்கத் தொடங்கிருவாளுக. பத்து ஆம்பிளயப் பாத்து அதில ஒருத்தன தெரிஞ்சு எடுக்கறதில்ல ஆரும்.” என அறிவுரை சொல்லும்போது அப்பட்டமான உண்மை அல்லது எதார்த்தம் என்று இயல்பாக தெரிந்தும் கூட விலக்கிவிட்டு அந்த கள்ளமற்ற காதலின் முன் சென்று வாய் நிறைய புன்னகையோடு நின்று கொள்ளவே தோன்றுகிறது.

“நான் போன பொறவு நீ அத நெனச்சிக்கபடாது” என்று சொன்னவனை காலம் முழுமைக்கும் நினைத்துக் கொள்ளும்படி அம்முக்குட்டி ஒன்றை செய்துகொள்கிறாள். ”அவனுக்க ஞாபகம் இருக்கனும் இல்ல? எனக்க வயித்துல இருக்கு” என்பதைவிட உறவில் உச்சமான ஒன்று இருக்கவியலாது என்று தோன்றியது ஜெ. கண்ணீரைத்தவிர இக்கதைக்குமுன் கொடுக்க ஒன்றுமில்லை. வாசித்துவிட்டு நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன். இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட அம்முக்குட்டியின் அந்த முகத்தை கதையில் சொல்லப்படாத அவர்கள் ஒன்றிணைந்த தருணத்தின் புனைவை மீட்டிப் பார்த்து அழுதேன்.

’பெருங்கை’ போல, ’கொலைச்சோறு’ போல முதலில் பூக்கும் காதல் மட்டுமல்ல ’பரிசு’ போல நடுவயதில் பூக்கும் காதலும் ’கல்குருத்து’போல முதியதின் காதலும் என யாவும் இனிமையின் உச்சமாகவே இருந்தன. மெல்ல இனித்து இனித்து சாகச் செய்வது மதுரம். அத்தகைய உணர்வுகள் நிரம்பிய கதைகள் இவை. இயல்பாகவே ஏனோ வாசிப்பின் வேகம் இக்கதைகளில் குறைந்ததை உணர்ந்தேன். என் மண்டை எப்போதும் படபடப்பான துடிப்புடன் மிக வேகமாக வாசிப்பதும் வேலைசெய்வதுமான தன்மையது. வெண்முரசின் சில தருணங்களில் சில சொற்களில் இப்படி வேகம் குறைந்து திகைத்து நிற்பதுண்டு மெல்ல இனித்து அசைபோட்டுக் கொள்வதுண்டு. சலனமேயல்லாமல் சீராக ஓடும் ஆற்றின் முன் நிகழும் மனஒழுகல் ஒன்று இயல்பாக என்னில் நிகழும் அனுபவத்தைக் கண்டேன். இக்கதையின் ஒவ்வொரு நுண்மையான தருணத்திற்கும் உணர்வுக்கு முன் நின்றும் அதை நீட்டித்து புன்னகைத்துக் கொண்டேன். ஆம்! இக்காதல்களிலெல்லாம் முதன்மையாகத் தெரிவது தன்னிலிருந்து எழும் காதல் தான். “காதலிப்பவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் காதல் தான் மிகப் பெரியது”.

“ஓரிரவு முழுக்க ஒரு பெண்ணை நினைத்துக் கொண்டிருப்போம் என்று சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தால் நம்பியிருக்கமாட்டான். ஒவ்வொரு வாழ்க்கையிலும் அப்படியொரு தருணம் வருகிறது” என்ற வரியைப் போலவே இத்தருணம் வாய்க்கப்பெற்றவர்களும், அப்படி வாய்க்கப்பட்டிருந்தும் அதை ரசிக்கத் தெரிந்தவர்களும், அதற்கான மனநிலையில் உள்ளவர்களுமே சிலாகிக்க முடிந்த கதைகள் இவை.

ஆம்! இது எல்லோருக்குமான சிறுகதைகள் இல்லை. இங்கு எதுவுமே எல்லோருக்குமானதல்ல. இன்னசெண்டுகளுக்கும், அவர்களைப் புரிந்து கொள்பவர்களுக்குமான கதை. வாழ்க்கையில் எல்லோரும் ஏதோவோர் தருணத்தில் அப்படி இருந்திருப்பார்கள். அந்த நுண்ணுணர்வை மீட்ட முடிந்தவர்கள் தீற்றல்களைச் சென்று தரிசிக்கும் கதை. வளையலும், கொலுசுத்துண்டும் என படிமங்கள் நெஞ்சில் நிறைந்துள்ளன. மிக ஆழத்தில் ஆனால் மிக மெல்லிய சரடால் இந்த உயிர்க்குலம் பிணைக்கப்பட்டிருக்கும் ஒன்றைப் பற்றிய கதைகள்

இங்க மனுசங்கள பாத்தா ஒவ்வொருத்தரும் தனித்தனியா அலையுத மாதிரி தோணும். ஆனா அத்தன பேரையும் ஒண்ணாச் சேத்துக் கெட்டிப்பின்னி வச்சிருக்கு. சொந்தம், பந்தம், பாசம், அன்பு, காதல், காமம்னு என்னென்னமோ இருக்கு. அது ஒரு மாதிரி பசைனு வையுங்க. இல்ல ஒரு வலைன்னு சொல்லுவாங்க. அதனாலேதான் மனுஷ வாழ்க்கை இங்க நடக்குது. மனுசங்கள்லாம் சேந்து ஒற்றைக்கெட்டா இங்கிண வாழுறாங்க..

தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது.. அந்தத் தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்

இந்த இரண்டு வரிகளையும் அணைத்துக் கொள்கிறேன் ஜெ. சேரவில்லை என்றாலும் பித்தாக்கும் என்றாலும் சாகும் என்றாலும் இம்மதுரங்கள் இனிமையானவை. “மண்ணில பொறந்தவங்களுக்கு தெய்வம் தம்புரான் போட்ட ஒரு உத்தரவுண்டு” என்ற சொல் இறுதியாக வந்து என்னில் நிற்கிறது. இங்கிருப்பவற்றை அல்ல. தெய்வம் உண்மையில் திகழும் கணங்களையே இந்தக் கதைகள் முழுவதும் தரிசித்தேன்.

ஆனால் ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றியது ஜெ. ஏன் இது எதார்த்த உலகில் நிகழ்வதேயில்லை அல்லது அது நிகழ்வதற்கான நிகழ்தகவு சாத்தியங்கள் மலர்த்துளி அளவுக்கு மிகச் சல்லிசாக இருக்கிறது. எதார்த்தம் ஏன் குரூரமாக இருக்கிறது ஜெ. இப்புனைவுகளுக்குள் எங்காவது மிகப்பத்திரமாக ஒளிந்து கொள்ளவேண்டும் போல இருந்தது. இனிமையான கதைகள்.

பிரேமையுடன்

ரம்யா.

மலர்த்துளி வாங்க

மலர்த்துளி மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைகர்ணனின் குணம் -கடிதம்
அடுத்த கட்டுரைசென்ற காலத்து நிலம்- கடிதம்