அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6

வேதசகாயகுமார்

அயோத்திதாச பண்டிதரின் உரைகள்

இந்தியமரபில் பொதுவாக ஓர் அறிஞனின் செயல்பாடு என்பது இரண்டு வகைப்பட்டதாக இருப்பதைக் காணலாம். ஒன்று உரை எழுதுதல்.  இன்னொன்று புராணம் எழுதுதல். நீண்ட மரபுள்ள ஒரு பண்பாட்டின் இரு இயல்பான அம்சங்கள் இவை.  உரை,செவ்வியல் மரபைக் கையாள்வது, புராணம்,நாட்டார் மரபைச் செவ்வியலாக்குவது. இரண்டுமே ஒன்றையொன்று நிரப்பும் செயல்பாடுகள். அயோத்திதாச பண்டிதருக்கு முந்தைய அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரண்டையும்தான் செய்திருக்கிறார்கள்.

ஏன் என்பது முக்கியமான வினா. இங்கே மரபு பிரம்மாண்டமாகப் பின்னால் எழுந்து நிற்கிறது. நீ யார் என்ற கேள்விக்கே மரபில் உன் இடம் என்ன என்றுதான் உண்மையில் அர்த்தம். ஆகவே இங்கே அதிகாரத்தை அடைந்த ஒவ்வொரு தரப்பும் முதலில் செய்வது தங்கள் நோக்கில் மரபுக்கு உரை எழுதுவதும்,தங்களுக்கான புராணங்களை உருவாக்கிக் கொள்வதுமாகும். அதன்மூலமே அவற்றின் கருத்தியலதிகாரம் நிறுவப்படுகிறது. கருத்தியலதிகாரமே பொருளியலதிகாரத்தை நிலைநாட்டும் அடித்தளமாகப் பின்னர் உருமாறுகிறது.

இதை நாம் ஆரம்பம் முதலே பார்க்கலாம். பௌத்தமும் சமணமும் இங்கே வந்தபோது அவை இங்கே இருந்த நூல்களுக்குத் தங்களுக்குரிய மாற்றுக்களை உருவாக்கிக்கொண்டன. பல உரைகள் கிடைக்கவில்லை என்றாலும் நன்னுலைத் தொல்காப்பியத்தின் மீதான பௌத்த-சமண மாற்றுரை என்று கொள்ளலாம். சமணமும் பௌத்தமும் உருவாக்கிய புராணங்களை நாம் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண்கிறோம். பெரும்பாலும் அவை தமிழகத்தின் நாட்டார்கதைகளை பௌத்தசமண தத்துவப்பரப்பில் மறுஆக்கம்செய்பவையாக இருந்தன. உதாரணம்-நீலகேசி,குண்டலகேசி. பின்னர் அவை பெருங்காவியங்களை உருவாக்கின.

இன்னும் பிந்தைய காலகட்டத்தில் இதை இன்னும் தெளிவாகக் காணலாம். பிற்காலச் சோழர் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சைவம் பெருமதமாக ஆகிப் பேருருவம் கொண்டபோது இரு அறிவுச்செயல்பாடுகளும் வேகம் கொண்டன. இன்று நாம் நம் மரபிலக்கியத்திற்குக் கொண்டிருக்கும் பெரும்பாலான உரைகள் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டவையே. நச்சினார்க்கினியர்,பரிமேலழகர் போன்ற பெரும் உரையாசிரியர்களின் காலம் இது. கூடவே புராணங்களும் எழுதப்பட்டன. அவற்றில் முக்கியமானது பக்தி இயக்கத்தைத் தொகுத்து அதன் மனநிலைகளை வரையறை செய்த பெரிய புராணம். திருவிளையாடல் புராணம் அதன் இன்னொரு வகைமாதிரியின் உச்சம்.

மீண்டும் சைவம் கிளைத்தெழுந்த பதினெட்டாம் நூற்றாண்டிலும் உரையெழுதுவதும் புராணமெழுதுவதும்தான் தீவிரமாக நிகழ்ந்தது. இக்காலகட்டத்தின் பெரும் சைவ அறிஞர்களனைவரின் நூல்பட்டியலிலும் திருமந்திரம், சிவஞானபோதம் போன்ற நூல்களுக்கு எழுதப்பட்ட விரிவான உரைகளே வரிசையாகக் காணப்படுகின்றன. அத்துடன் தலபுராணங்கள். உ.வே.சாமிநாதய்யரின் குரு மீனாட்சிசுந்தரம்பிள்ளையே நூற்றுக்கும் மேற்பட்ட புராணங்களை எழுதியிருக்கிறார்.

ஆறுமுகநாவலரை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.அவர்  பெரியபுராணம் வசனம், திருக்குறள் மூலம்-பரிமேலழகர் உரை, தொல்காப்பிய உரை,கந்த புராணம் வசனம், திருவிளையாடல் புராணம் வசனம்,  கோயிற் புராண உரை,நன்னூல் விருத்தியுரை,சைவ நெறி விளக்கம்,திருமுருகாற்றுப் படைஉரை ஆகிய நூல்களை எழுதினார். இவற்றில்பாதி உரைகள். மீதி புராணங்களுக்கான வசனவடிவங்கள்.

அதேபோல வைணவமும் உரைகள் மூலம் மீட்டு நிலைநாட்டப்பட்டதை நாம் காணலாம். வைணவ உரைகள் தமிழைநோக்கிக் குவியாமல் தமிழ்வைணவ மரபைப் புதுவேதாந்த மரபுகளுடன் பிணைக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன. வைணவப்புராணங்களும் ஏராளமாக உள்ளன.

இந்த உரைகளின் பங்களிப்பென்ன என்று நாம் சரியாக உணர்வதில்லை. பொதுவாக தமிழ்ப்பண்பாடு, தமிழ்மொழி, அன்றாடவாழ்க்கையின் ஆசாரங்கள் போன்று நாம் இன்று நம்பிவரும் பெரும்பாலான சிந்தனைகள் இந்த உரை-புராணங்களால் உருவாக்கி நம் சமூகமனத்தில் நிலைநாட்டப்பட்டவையே. ஆகவே தமிழின் மரபில் உதித்த அயோத்திதாச பண்டிதரும் உரைகள் புராணங்கள் என்னும் இரு வடிவங்களில் முயற்சி செய்திருக்கிறார்.

அயோத்திதாசர் தொகைநூல்கள் வெளிவந்த 1999 இல் அவற்றை வாசித்துவிட்டு நான் மிகவும் குழம்பித்தான் போனேன். அக்காலங்களில் அனேகமாக தினமும் என் வீட்டுக்கு வந்து அயோத்திதாசரைப்பற்றிப் பேசி அந்நூலை வாசிக்க எனக்கு உதவி செய்தவர் பேராசிரியர் எம்.வேதசகாயகுமார். இந்தக்கட்டுரைக்காகவேகூட நான் அவருக்கு மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். அதை இங்கே பதிவுசெய்கிறேன். பண்டிதரின் நூலைவாசிக்க எனக்கு மிகப்பெரிய மனத்தடை இருந்தது.  பழம்பாடல்களுக்குப் பொருள்கொள்ளுவதில் நமக்கு இதுவரை இருந்து வந்த வழிமுறைகள் அதில் குழம்பிக்கிடந்தன. உடனடியாக அது ஒரு பிற்பட்ட, அல்லது முதிராத உரைமரபு என்று சொல்லிவிடத்தான் தோன்றும்

உதாரணமாக, பண்டிதர் எந்த நூலுக்கும் ஹடயோகம் மற்றும் வைத்தியம் எல்லாவற்றையும் கலந்துகட்டித்தான் உரை சொல்லிச் செல்கிறார். ஒருவகையான கூட்டாஞ்சோறு அணுகுமுறை என அதைச்சொல்லலாம்.  துறைப்பிரிப்பு ஒரு அடிப்படை விதியாக இருக்கும் நம் சமகாலக் கல்விமுறைமையில் இவ்வாறு கலந்துகட்டுவது மிகப் பிழையான ஒன்றாகவே நமக்குத் தோன்றுகிறது. நம் பழசு,பெரிசுகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்ப்பது போல தோன்றுகிறது.

வேதசகாயகுமார் பேசும்போது சொன்னார், அது ஒரு சித்தவைத்தியரின் குரல் என்று. அவரது தந்தை முத்தையாநாடார் ஒரு புகழ்மிக்க சித்த வைத்தியர். அவர்களைப்பொறுத்தவரை வைத்தியம் என்பது நோய்-மருந்து என்ற இருமை சார்ந்த ஒன்றல்ல. அதில் ஆன்மீகம், அறவியல், ஒழுக்கம் இயற்கை எல்லாமே கலந்திருக்கும். ’ஒரு மருந்தை அதற்கான நீதி இல்லாமல் நோயாளிக்கு கொடுக்க அப்பாவால் முடியாது’ என்று வேதசகாயகுமார் வேடிக்கையாகச் சொன்னார். என்னைப்பொறுத்தவரை அது ஒரு திறப்பாக அமைந்தது. ஆம் இது நம் மண்ணுக்குரிய ஒரு முழுமைநோக்காக [Holistic view] இருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் இங்கே இருந்த ஒரு முழுமைநோக்கின் இன்றைய எச்சமாக இருக்கலாம்.

வேதசகாயகுமார் சொன்னார், ’யாக்கோபுசித்தர் என்ற சித்தரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ நான் ஆச்சரியமாக ’இல்லை’ என்றேன். ‘என் அப்பா ஒரு பெரிய சித்தவைத்திய நூல் வைத்திருந்தார். அதை எழுதியவர் யாக்கோபு சித்தர். கிறித்தவர். சித்தர் என்ற பெயர், பொதுமரபுக்கு வெளியே உள்ள மறைவான ஞானம் ஒன்றை அறிந்தவர் என்ற அர்த்ததிலேயே அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ . பெரும்போக்கான பக்திமரபுக்கு வெளியே உள்ள ஞானங்கள் எல்லாம் காலப்போக்கில் ஒற்றைஞானமாகத் திரண்டன. அவையே சித்தர்ஞானம் எனப்பட்டன. அயோத்திதாசரின் சிந்தனைகளுக்கு அந்த சமானமான மறைஞான மரபு ஒரு வலுவான பின்னணியாக இருந்துகொண்டிருக்கிறது.

இத்தருணத்தில் ஒரு சித்தமருத்துவரிடம் பேசினேன். ‘எங்களையெல்லாம் பௌத்தனுங்கன்னுல்லா அவுங்க சொல்லுவாங்க’ என்றார். நான் ஆச்சரியத்துடன் ‘பௌத்தம் என்றால்?’ என்றேன். ‘முஸ்லீம்ங்கிற மாதிரியான வார்த்தைசார் அது’ ஆச்சரியமாக ஒன்றை நினைவுகூர்ந்தேன். ஓ.வி.விஜயனின் கஸாக்கின்றே இதிகாசம் முதலிய நாவல்களிலும் கதைகளிலும் பாலக்காடுபகுதி கிராமியச்சித்திரம் உள்ளது. ஐம்பதுகளில் அக்கிராமங்களில் இஸ்லாமியர் பிறரால்  வட்டார வழக்கில் பௌத்தர்கள் என்றே சொல்லப்பட்டிருக்கிறார்கள் என அந்நாவல்கள் காட்டுகின்றன . அவர்களின் வழிபாட்டிடம் பள்ளி என்றும்.  உண்மையான பௌத்தத்தை எவருமே அறியாத கிராமங்கள் அவை.

ஆக,  இங்கே மறைக்கப்பட்ட ஒரு ஞானமரபு இருந்திருக்கிறது. அது சிதறுண்டதாகவும், முறையாக விளக்கப்படாததாகவும் பல்வேறு ஞானவழிகளையும் அறிதல்முறைகளையும் கலந்து ஒரு முழுமையை உருவாக்க முயல்வதாகவும் இருந்திருக்கிறது. அதுவே இங்கே முன்பு சித்தர் மரபு என்று சொல்லப்பட்டது.  அது தாந்த்ரீகம், ரசவாதம், வைத்தியம், ஹடயோகம், நாத்திகம் , ஜடவாதம் எல்லாம் கலந்ததாக இருந்தது. நாம் இன்னும் வாசிக்காத சுவடிக்குவியல்களில் பெரும்பகுதி அந்தமரபைச் சார்ந்தவை.

அந்த சித்தர்மரபுக்கு இன்று [சைவ] பக்திமரபில் உள்ள இடம் என்பது சித்தர்பாடல்கள் அச்சில் வந்தபின்னர் பல்வேறு உரைகள்மூலம் உருவாக்கப்பட்டதே. சித்தர்கள் என முக்கியமாகத் தொகுக்கப்பட்டவர்கள் சைவத்தின் அகச்சயமங்களான தாந்த்ரீக மதங்களைச் சேர்ந்தவர்கள். அவ்வாறு தொகுக்கப்படாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் உள்ளனர்.  நாற்பதுகளில் அவ்வாறு ஏராளமான சித்தர்களின் நூல்கள் ஆர்வமுள்ளவர்களால் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த சித்தர்களில் சைவம் சாராதவர்களும் இருந்தார்கள், யாக்கோபு சித்தர் போல.

[இங்கே ஓர் எச்சரிக்கை, சித்தர்ஞானம் என்பதை நாம் இன்றுகிடைக்கும் சித்தர்பாடல்களை வைத்து மதிப்பிடலாகாது.அதன் ஒரு சிறுபகுதியே அச்சில் வந்தது. அச்சில்வந்து குஜிலிபதிப்பாகப் பேசப்பட்டதன் ஒரு சிறுபகுதியே பதினெண்சித்தர்களின் பெரியஞானக்கோவையாக மாம்பழகவிசிங்கராயர் தொகுக்க ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் வெளியீடாக வந்தது.

ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் சித்தர்ஞானம் என்பது கண்டிப்பாக சைவத்தின் ஒரு பகுதியே. ஆனால் பெருமரபான சித்தாந்த சைவத்தின் பகுதி அல்ல. நித்ய சைதன்ய யதியின் வேடிக்கைச் சொற்களில் சொல்லப்போனால்  சித்தாந்த மரபு என்பது ஆசார சைவம். அதற்கிணையாக ஓர் அனாசார சைவம் இருந்தது. அதுதான் சித்தர்ஞானம்.]

சித்தர்ஞானத்தின் மூலப்பொருள், ஆதிவடிவம் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டு சிதறல்களாகப் பலரிடம் எஞ்சி மறு ஆக்கம்செய்யப்பட்ட பௌத்த சமண மெய்ப்பொருளேயாகும்என அயோத்திதாசர் சொல்கிறார். பண்டிதரின் ஆர்வம் சித்தர்ஞானத்தினூடாக அந்த பௌத்த – சமண மெய்ப்பொருளை மீட்டெடுப்பதே

ஒரு சிந்தனையாளரை நாம் ஆராயும்போது அவரது சிந்தனைக்கான பின்புலம் என்ன என்று பார்ப்போம். அதாவது எந்த விவாதப்பரப்பில் அல்லது சொற்களனில் அவர் நின்று பேசுகிறார் என்று. அயோத்திதாசரைப்பற்றிய ஆய்வுகளில் பெரும்பாலானவை அவரை சமகாலத்தில் இருந்து பின்னால்சென்று ஆராய்கின்றன. அதாவது பின்னாளில் அம்பேத்கார் முன்வைத்த நவயான பௌத்த அலையின் தொடக்கமாக அவரைப் பார்க்கின்றன. இந்த நவயான பௌத்தத்தின் விவாதப்பரப்பில் அவரைப் பொருத்தி ஆராய்கின்றன. அதுவும் ஒரு ஆய்வுமுறையே. ஆனால் அது அவரது அரசியலை விளக்குமே ஒழிய அவரது நூல்களை விளக்க உதவாது.

அயோத்திதாசரின் விவாதப்பரப்பு அல்லது சொற்களன் என்பது சித்தர் மரபு என்று சொல்லலாம். இங்கே அச்சொல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவத்தின் பகுதியாக மாற்றப்பட்ட சித்தர்மரபைச் சுட்டவில்லை. அதற்கு முன்னர் பொதுமரபுக்கு வெளியே தனித்து ஓடிவந்திருந்த மறைக்கப்பட்ட மரபைச்சுட்டுகிறது. அன்றைய பல சித்தமருத்துவர்கள் நின்று பேசிய அந்தத் தளத்திலேயே பண்டிதரும் நிற்கிறார் என்று சொல்லலாம். ஆனால் பிற சித்த வைத்தியர்களைப்போலன்றி அங்கே நின்றுகொண்டு அவர் சமகாலத்தைய அறிவியக்கத்தை எதிர்கொண்டார்.

இந்தச் சித்தர்மரபின் முன்வடிவம் என்ன? அது பௌத்த-சமண மதங்கள் என்று சொல்வதற்கான சாத்தியங்கள் பற்றி ஏற்கனவே சொன்னேன். பௌத்தமும் சமணமும் மறைந்தபின் அவை விட்டுச்சென்ற இடைவெளியை நிரப்பிய இடிபாடுகளில் இருந்து உருவானதே இந்த சித்தர்மரபு என சொல்லலாம். அங்கே பௌத்தசமண மதங்களைப்போலவே பக்திமரபால் ஒடுக்கப்பட்ட தாந்த்ரீகமும் ரசவாதமும் கூடவந்து சேர்ந்துகொண்டன. இந்தச்சித்தர் மரபை அன்று பேசிய பிறசாதியினரில் கணிசமானவர்கள் அந்தஇடிபாடுகளில் இருந்து மீட்டு எடுக்கப்பட்ட துண்டுகளையே கண்டிருந்தனர். பண்டிதர் அவரது குலமரபால் இன்னும் விரிவான சித்திரத்தைக் காண வாய்ப்புள்ளவராக இருந்தார் என்று சொல்லலாம்.

ஆகவே தன் விளக்க நூல்கள் வழியாக அயோத்திதாச பண்டிதர் செய்தது என்ன என்ற வினாவுக்குச் சுருக்கமாக இப்படி பதில் சொல்லலாம். ‘சித்தர்மரபை அதன் முந்தைய வடிவமான பௌத்தசமணம் நோக்கிக் கொண்டுசெல்ல முயன்றார்’ அதற்காகவே அவர் தன்னுடைய உரைகள் வழியாக முயல்கிறார் என்று கொண்டால் அதன் பல சிக்கல்கள் எளிதாக அவிழ்கின்றன. பண்டிதர் பௌத்தசமண காவியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நீதிநூல்கள் ஆகியவற்றுக்கு அளிக்கும் விளக்கமானது இந்த சித்தர்மரபில் நின்றபடி பௌத்த பாரம்பரியத்தை ஆராய்வதற்கும் விளக்குவதற்குமான வழியேயாகும்

 

அயோத்திதாசரின் உரைகள் – மரபும் புதுமையும்

 

பொதுவாக இந்தியமரபைச்சேர்ந்த அறிஞர்கள் அனைவருக்குமே உரைவகுப்பதில் சில பொது இயல்புகள் காணக்கிடைக்கின்றன. அவர்கள் மூலநூல்களின் சொற்களை எப்போதைக்குமாக வகுக்கப்பட்டவை என்று எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது அவை எழுதப்பட்ட கால-இடத்துக்கு ஏற்பப் பொருள்கொள்ளவேண்டுமென்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதில்லை. தாங்கள் வாழும் காலத்தின் சொற்களனுக்கு ஏற்ப மூலநூல்களை விளக்கிப் பொருள்கொள்வதே அவர்களின் வழி.

இவ்வாறு பொருள்கொள்வதில் இரு அம்சங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒன்று சொல்லாராய்ச்சி. சொற்களைப் பிரித்தும் தொகுத்தும் சந்தர்ப்பத்தை மாற்றியமைத்தும் பொருள்கொள்வது. இன்றுகூட நம் தமிழாசிரியர்களின் அறிவுச்செயல்பாட்டில் மிக முக்கியமான இடம் வகிப்பது சொல்லாராய்ச்சியே ஆகும். திருக்குறள் பொருள்கோடலில் நிகழ்ந்துள்ள கழைக்கூத்துக்களுக்கு அளவேயில்லை. விவேகானந்தன் என்ற குமரிமாவட்ட ஆய்வாளர்,தொல்காப்பியம் என்பது முழுக்க முழுக்கப் பாலியலைப் பேசும் நூல் என்று ஒரு உரை எழுதியிருக்கிறார்.

இரண்டாவதாக, வைப்புமுறையைக் கவனிப்பது. செய்யுட்களில் உள்ள சொல்வைப்புமுறை யாப்பின் வசதிக்காகவோ அல்லது தன்னிச்சையாகவோ அமைந்தது என்பதை அவர்கள் ஏற்பதில்லை. அதை ஒரு விரிவான தர்க்கமுறையாகவே காண்கிறார்கள்.

அயோத்திதாசரின் ஆய்வுகளையே பார்ப்போம். ’தையல்சொல்கேளேல்’ என்ற ஆத்திச்சூடி வரிக்குப் பொருள்விளக்கமளிக்கும் அயோத்திதாச பண்டிதர் ‘தைக்கும்படியான சொற்களைக் கேட்காதே’ என்கிறார். அதற்கான விரிவான சொல்விளக்கமும் அளிக்கிறார். ’ஏற்பது இகழ்ச்சி’ என்ற வரியை ஆராயாமல் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது இகழ்ச்சிக்குரியது என்று விளக்குகிறார். ’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’என்ற வரியில் உள்ள ஆலயம் என்ற சொல்லை அ+லயம் என்று பிரித்து ஆ என்றால் என்றால் மனம் வாக்கு காயம் என்ற மூன்றின் தொகை என்றும் அவை சென்று லயிக்கும்படி தொழுவது சிறப்பு என்று விளக்குகிறார்.

இவ்விரு வழிமுறைகளும் மரபில் சாதாரணமானவை. சைவப்புலவர்கள் எல்லாருமே செய்தவை. இவற்றுக்கு மேலாக அயோத்திதாசரின் அணுகுமுறையில் உள்ள தனித்தன்மை அவரது அறிவார்ந்த பௌத்தப்பார்வை என்று சொல்லலாம். உதாரணமாக ‘நீர்விளையாடேல்’ என்ற ஆத்திச்சூடி வரிகளுக்கு அவர் தரும் விளக்கம். அதைப் ‘பெண்களுடனான ஜலக்கிரீடைகள் செய்யவேண்டாம்’ என்று அவர் விளக்குகிறார். பிழையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு பெரிய வரலாற்றுப் பின்னணி அதற்குள்ளது

சங்ககாலத்தில் நீர்விளையாட்டு,ஒரு முக்கியமான கேளிக்கையாக இருந்திருக்கிறது. ஆண்கள் பரத்தையருடன் சென்று புதுப்புனலாடுவதும் நீர்விளையாடுவதும் மருதத்திணையில் விரிவாகவே காணக்கிடைக்கிறது. கோவலன் மாதவியுடன் ஆடிய நீர்விளையாட்டு சிலம்பில் நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கேளிக்கை என்பது ஒரு ஒழுக்கமீறல் என்பதனால் இது தேவையில்லை என்று பௌத்தசமண மதங்கள் விலக்கின. அந்த விலக்கையே இந்த ஆத்திச்சூடி வரி குறிப்பிடுகிறது என்கிறார் பண்டிதர்

பண்டிதர் பழைய தமிழ் நூல்களுக்கு அளித்த உரைகளை இன்று நாம் விரிவாகவே விவாதிக்கலாம். அதற்குள் செல்ல விரும்பவில்லை. நான் இந்த உரையில் சுட்டிக்காட்ட விரும்புவது அது நமக்கு அளிக்கும்  சாத்தியக்கூறுகளைப்பற்றித்தான். பண்டிதர் இந்த உரைகள் வழியாக ஒரு சமானமான பௌத்த பண்பாட்டு வரலாற்றை உருவாக்குகிறார். அந்த வரலாற்றுக்கான ஒரு முன்வரைவு, ஒரு வாசல்திறப்பு இந்த உரைகளில் உள்ளது.அவரை முன்னோடிச் சிந்தனையாளராக நான் காண்பதற்கான முக்கியமான தடயம் இந்த உரைகளில் காணக்கிடைக்கும் அவரது அறிவார்த்தமேயாகும்.

உருவாக்குகிறார் என்றசொல்லைக் கவனமாகவே கையாள்கிறேன். எல்லா வரலாறுகளும் சமகால அரசியல்-சமூகவியல்-பண்பாட்டுத்தேவைகளுக்காக உருவாக்கப்படுவனவே. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாம் ஜனநாயக குடிமையியல், பொதுப்பண்பாடு ஆகியவை நோக்கி வந்தபோது இந்த காலச்சூழலில் நின்றபடி சென்றகாலத்தைப் பார்த்து விரிவான உரைகள் மற்றும் வரலாற்றெழுத்து வழியாக ஒரு பண்பாட்டுச்சித்திரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அந்ப் பண்பாட்டுச்சித்திரம் நம்முடைய வரலாற்றுச் சித்திரத்துடன் பொருத்தப்பட்டுப் பொருள் உருவாக்கம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது

இந்த பண்பாட்டு – வரலாற்று உருவாக்கத்தில் பெரும் அறிஞர்வரிசை கடுமையாக உழைத்துப்பங்களிப்பாற்றியிருக்கிறது. சைவமீட்பியக்கத்திற்கு இதில் உள்ள பங்கு பிரம்மாண்டமானது. வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், ஆறுமுகநாவலர் முதல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் வரை ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது. அவர்களுடன் இணைந்துகொள்பவர்களாகவே நம் வரலாற்றாசிரியர்களான ஸ்ரீனிவாச சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்றவர்களும் இருந்தார்கள். அவர்கள் முரண்பட்டு விவாதித்தும், இணைந்து இடைவெளிகளை நிரப்பியும் அதை உருவாக்கினார்கள்.  அந்த சித்திரத்தை ஐநூறு கலைஞர்கள் சேர்ந்து வரைந்த ஒரு மாபெரும் ஓவியத்துக்கு நிகரானதாகக் கொள்ளலாம். நம் கையிலிருப்பது அதுவே.

ஆனால் ஒரு பண்பாட்டின் வரலாற்றுச் சித்திரம் என ஏன் ஒன்று மட்டுமே இருக்கவேண்டும்? ஏன் பல வரலாற்றுச்சித்திரங்கள் இருக்கலாகாது? இங்கே நான் சொல்வது புனித தாமஸ்தான் ஒட்டுமொத்த தமிழ்ச்சிந்தனையையும் வடிவமைத்தார் என்று இன்று சில கிறித்தவ வெறியர்கள் அன்னிய நிதி பெற்று உருவாக்கும் மோசடி வரலாறுகளை அல்ல. சரியான தரவுகளின் அடிப்படையில் சாத்தியமான மாற்று வாய்ப்புகளை. அதாவது கடந்தகாலத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும் விவரிப்பை.

ஆக வரலாற்றை ஒரு யதார்த்தசித்திரம் என்பதை விட ஒரு மொழிபு [narration] என்றே கொள்ளவேண்டும். ஆகவே அந்த மொழிபுக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அந்நோக்கம் எதுவாக இருக்கலாம்? அது விழுமியங்களக் கண்டெடுப்பதும் உருவாக்குவதுமாகவே இருக்கமுடியும். வரலாற்றில் இருந்து இன்றைய வாழ்க்கைக்குரிய அடிப்படைகளைப் பெறுவதற்கான ஒரு வழி அது. இன்றைய சிக்கல்களின் நேற்றைய தொடர்ச்சியை, இன்றைய கருத்துக்களின் நேற்றைய ஆதாரங்களையே நாம் வரலாற்றில்தேடுகிறோம்.

ஆகவே வரலாற்றிலும் பண்பாட்டிலும் நாம் தேடுவது விழுமியங்களையே. விழுமியங்களை முழுமைசெய்துகொள்வதற்குப்பெயர்தான் வரலாற்றாய்வு, பண்பாட்டாய்வு. முழுமுற்றான ஒரு பண்பாட்டு யதார்த்ததை அல்லது வரலாற்று யதார்த்தத்தை உருவாக்கிக்கொள்வது அல்ல. அப்படியென்றால் அந்த மொழிபு ஏன் ஒற்றைப்படையானதாக இருக்கவேண்டும்? அதற்குப் பல்வேறு வடிவங்கள் இருக்கலாமே? பன்மைத்தன்மை அல்லவா எப்போதும் நீதிக்கு நெருக்கமானது? முழுமையை நோக்கிச் செல்லக்கூடியது?  அதைத்தானே நாம் இந்தியமரபு என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?

அப்படிப்பார்த்தால் நம்முடைய பண்பாட்டு வரலாற்று வரைவில் மாற்று வழி முழுமையாகவே தேங்கிப்போயிருக்கிறதென்பதே உண்மை. ஏற்கனவே சொன்னதுபோல ஒரு பொதுமரபு உள்ளது. சைவ,வைணவக் கருத்தியல்கள், அவற்றின் ஜனநாயக காலகட்டத்து வளர்ச்சிகள் சார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை ஒட்டி உருவாக்கப்பட்டது அது. அது நம் கண்முன் உள்ளது, நம்மிடம் புழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் நெடுங்காலமாக மறைவாக ஓடிவந்துகொண்டிருந்த அந்த மாற்று மரபு சார்ந்து ஒரு பண்பாட்டு வரலாற்றுச் சித்திரம் நம்மிடையே இல்லை.

அதை உருவாக்குவதற்கான சாத்தியங்களை அயோத்திதாசரின் உரைகள் திறக்கின்றன என்று நான் நினைக்கிறேன். நம்முடைய சித்தர் மரபு மற்றும் அதன் முந்தைய காலகட்டமாக இருந்த சமண-பௌத்த மரபு சார்ந்து ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டு – வரலாற்று வரைவையே புதியதாக உருவாக்கமுடியும் என்று அவை காட்டுகின்றன.  அதன் மூலம் புதிய அறங்களை நோக்கிச் செல்லமுடியும் என்று அவை நிரூபிக்கின்றன. அயோத்திதாசரின் முக்கியமான பங்களிப்பு இதுவே. அவரை முன்னோடியாகவும் அசல் சிந்தனையாளராகவும் ஆக்கும் அம்சமும் இதுதான்.

ஒரு பெரும் பணி

அயோத்திதாசர் ஒட்டுமொத்தத் தமிழ்ப்பண்பாட்டு வரைவுக்கும் ஒரு பௌத்த வடிவம் உருவாக்க முயல்கிறார் என்று சொல்லலாம். அவரது பௌத்தம் சமணத்தையும் உள்ளடக்கியதென்பதைச் சொல்லவேண்டியதில்லை.  மணிமேகலை முதல் பின்னாளைய நீதிநூல்கள் வரை அனைத்துக்கும் பௌத்த அர்த்தம் கொடுக்கிறார். இதை அவர் ‘வலிந்து’ செய்வதாக நமக்குத் தோன்றுவதற்கான காரணம் ஏற்கனவே இருக்கும் பொதுமரபு அர்த்தத்தை நாம் இயல்பான உண்மையான அர்த்தமாகக் காண்பதுதான். அதுவும் ஒரு பொருள்கோடலே என்றால் இது இன்னொரு கோணம் என்றே தோன்றும்.

அயோத்திதாசரின் உரையில் பௌத்தத்துடன் யோகமும் மருத்துவமும் கலந்து வருவதைத் தொடர்ந்து காணலாம்.’சனி நீராடு’ என்றால் உலோகத் தாதுக்கள் கலந்த ஊற்றில் நீராடு என்று சித்தவைத்தியம் சார்ந்து பொருள் அளிக்கிறார். ’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற சொல்லாட்சிக்குச் சித்தர்களின் யோகமரபைச் சார்ந்து பொருள் அளிக்கிறார். அவரது நோக்கு, சித்தர் மரபைக்கொண்டு தொல்நூல்களைப் பொருள்கொள்வதும் அதனூடாக ஒட்டுமொத்தமாகப் பண்பாட்டுக்கு ஒரு மாற்றுப்பாடத்தை அளிப்பதுமாகும்.

இந்தவகையான ஆய்வுக்கு இன்றைய இடம் அல்லது அவசியமென்ன? இதன் வழியாக நாம் எதை செய்ய நினைக்கிறோம்? ஒருவகையான வெட்டிவேலையா இது? எதற்காக மரபை ஆதியிலிருந்து ஆரம்பித்து திரும்பவும் விளக்கவேண்டும்?

காரணம் ஒன்றே. நம்முடைய பண்பாட்டு வரலாறு முழுமையற்றது. அரைகுறையானது. வளர்ச்சி தேங்கி ஒரு புள்ளியில்நின்றுவிட்டது. அதன் பல பக்கங்கள் இன்னும் எழுதப்படாமலேயே உள்ளன. நம் மக்களின் கணிசமானவர்கள் இன்னும் வரலாற்றுக்குள் வரவேயில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் பாதிக்குள் நாம் நம்முடைய இன்றைய பண்பாட்டு- வரலாற்று முன்வரைவை எழுதி முடித்துவிட்டோம். அதன்பின் அதில் தகவல்களைச் சேர்க்கும் திருத்தும் பணி மட்டுமே நிகழ்ந்து வருகிறது. இந்த வரைவை முழுமையானதென நம்பவும் ஆரம்பித்துவிட்டோம். அதை பள்ளிகளில் படிக்கிறோம், அதனடிப்படையில் நம் சமகால அரசியலையும் சமகால பண்பாட்டையும் விவாதிக்கிரோம். முடிவுகளை எடுக்கிறோம்.

ஆனால் நம் மக்களிடமிருந்து பலவாறாக திரட்டப்பட்டு ஆவணக்காப்பகங்களில் மூடைகளாக கட்டப்பட்டு நம் கைவசமிருக்கும் பண்டைய ஏடுகளில் பாதிப்பங்குக்கு இந்த பண்பாட்டு, வரலாற்று முன்வரைவு பொருள் கொள்ளமுடியாமல் நிற்கிறது என்ற உண்மை நம் முன்னால் உள்ளது. நம்முடைய வரலாற்றின் , பண்பாட்டின் கணிசமான பகுதி இன்னும் சித்தரிக்கப்படவே இல்லை என்ற யதார்த்தமும் இங்கே உள்ளது.

நான் இந்த அரங்கிலே இரு விஷயங்களைக் குறிப்பிடுகிறேன். ஒன்று, மணிமேகலையின் பிற்பகுதியில் வரும் தத்துவ விவாதங்கள். உ.வே.சா உரை உட்படப் பல உரைகளை நான் வாசித்திருக்கிறேன். அவையெல்லாமே மிக எளிய விளக்கங்களும் சமரசங்களுமே ஒழிய இன்னும் அவை தமிழில் உரியமுறையில் வாசித்துப் பொருள்கொள்ளப்படவே இல்லை. நான் விஷ்ணுபுரம் நாவலுக்கான ஆராய்ச்சியின்போது இந்தப்பகுதிக்குள் நுழைந்து பெரும் திகைப்பை அடைந்தேன். இத்தனை வருடங்களாக இவ்வளவு முக்கியமான ஒரு காவியத்தின் மையமான பகுதி பொருள்கொள்ளப்படாமலேயே இருக்கிறது என்பதை நம்பமுடியவில்லை.

என்னுடைய சிக்கல் வந்தது அளவைவாதம் என்ற சொல்லை வைத்து. அளவைவாதி அந்த விவாதத்திலே பேசுகிறான். அளவைவாதி என்றால் பிரமாணவாதம் செய்பவன் என்றே பொதுவாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது- அளவை என்றால் பிரமாணம் என்ற சொற்பொருளில் [எஸ்.வையாபுரிப்பிள்ளையும் அவ்வாறே சொல்கிறார்] ஆனால் பிரமாணவாதம் எல்லா தரிசனங்களுக்கும் உரியதே. வெவ்வேறு வடிவில். நான் என் நோக்கில் அவர்களை மீமாம்சகர் என்று எடுத்துக்கொண்டேன்.

மணிமேகலை சுட்டுகிற அளவைவாதி,  சைவவாதி, வைணவவாதி,  வேவாதி, ஆசீவக வாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேஷகவாதி, பூதவாதி  என்பவற்றில் சைவம்,வைணவம்,ஆசீவகம்,சாங்கியம், வைசேஷிகம் தவிரப் பிற என்ன என்பது தெளிவாகச் சொல்லத்தக்கதல்ல. ஆரம்பகால சைவ அறிஞர்கள் அவர்களுக்குரிய அறிதல்தளத்தில் நின்று செய்த ஊகங்களே நமக்குக் கிடைக்கின்றன. ஆங்கில ஊடகத்தில் அந்தத் தளத்தில் அன்று நடந்த பல ஆய்வுகளை [குறிப்பாக எஸ்.என் தாஸ்குப்தா, என் என் பட்டாச்சாரியா] அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.

சமணம் பௌத்தம் மற்றும் அவைதிக மதங்களைப்பற்றி இன்று நடந்திருக்கும் ஏராளமான மேலதிக ஆய்வுகளின் ஒளியில் மணிமேகலையை முழுமையாக மறு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அந்த ஆய்வு ஒரு மேலைநாட்டுப்பார்வையாக ஆகிவிடவும்கூடும். அதற்கு மாற்றாக உள்ளது அயோத்திதாச பண்டிதர் முன்வைக்கும் முழுக்கமுழுக்க தமிழ்வேர் கொண்ட மாற்று ஆய்வுமுறைமையாகும்.

 

இன்னொன்று, திருமந்திரம். அதன் இரண்டாம்பகுதியின் பாடல்கள் முழுக்க குத்துமதிப்பாகவும் அதீததாவல்களாகவுமே பொருள்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதே என் எண்ணம். சைவப்பெருமரபுக்குள் வைத்து அதை பொருள்கொள்ளமுடியாது. அது சித்தர் மரபு என்ற மாற்று அறிதல்முறையைச் சார்ந்ததாகும். சித்தர்பாடல்களிலேயே முக்கால்வாசிப்பாடல்களுக்கு மிக அசட்டுத்தனாமாகவே இதுவரை பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது- குறிப்பாக கம்பிளிச்சட்டைநாயனார் போன்ற சித்தர்களின் பாடல்கள். என்ன ஏது என்றே தெரியவில்லை என்பதே உண்மை.

 

இதுவே வரலாற்றிலும் நிலைமை. நம்முடைய வரலாற்றின் மிகப்பெரிய ஒரு காலகட்டம், களப்பிரர் காலம் இன்னும் எழுதப்படாமலேயே கிடக்கிறது. அதை இருண்டகாலம் என்று சொல்லி தாவி இந்தப்பக்கம் வந்துவிட்டார்கள் நமது மரபான வரலாற்றாசிரியர்கள். களப்பிரர்காலகட்டத்தை நாம் இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள சமண-பௌத்த ஆவணங்கள் மற்றும் கல்வெட்டாதாரங்களின் அடிப்படையில் எழுதமுடியும். இன்றுவரை அந்த பணி எவராலும் தொடங்கப்படவில்லை. ஆதாரமில்லாத சில்லறை ஊகங்கள் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளன.

 

அதேபோல வலங்கை -இடங்கை சாதிகள் என்ற ஒரு மாபெரும் சிக்கல் நம்முடைய வரலாற்றிலே கிடக்கிறது. ஆளாளுக்கு ஏதாவது சொல்லிவிட்டுச் செல்கிறார்களே ஒழிய என்ன அது என்பது இன்னமும் நம்பகமாக விளக்கப்படவில்லை. சோழர்காலத்து கல்வெட்டுகளில் தமிழ்ச்சாதிகள் வலங்கை இடங்கை என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் தகவல் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அது சோழர்களால் செய்யப்பட்ட பிரிவினை அல்ல. சோழர்காலகட்டத்தின் கடைசிக்காலகட்டத்தில் வலங்கை இடங்கை சாதிகள் மோதிக்கொண்டு பெரும் கலவரங்கள் வெடித்தன

 

இதைப்பற்றி விரிவாகப்பேசியவர் வரலாற்றாய்வாளர் கே.கே.பிள்ளை. அவரது ஊகமென்னவென்றால் வலங்கைசாதிகள் அரசனுக்கு நேரடியாக வரிகட்டும் சாதிகள். அதாவது நில உடைமையாளர்கள், கைவினைஞர்கள். இடங்கை சாதிகள் அந்த வலங்கைசாதிகளுக்கு வரிகட்டுபவர்கள். ஓரளவு சரிதான். ஆனால் பறையர்கள் உடபட சில தாழ்த்தப்பட்ட சாதியினர் வலங்கை என்பதும் சில ‘உயர்’சாதிகள் இடங்கை என்பதும் உதைக்கிறது. இன்னும் சில ஏடுகளில் பறையர்களில் ஆண் வலங்கைசாதி என்றும் பெண் இடங்கைசாதி என்றும் உள்ளது. இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை.

 

உண்மையில் தமிழக வரலாறு எழுதப்பட்டுவிட்டது என்ற பிரமை நம்மிடையே உள்ளது. அது உண்மை அல்ல. தமிழக வரலாறு எழுதப்பட்ட ஆரம்பகாலகட்டத்தில், பெரிதும் சைவப்பின்புலம் கொண்ட அந்த ஆய்வாளர்களின் பொதுநோக்குக்குள் வந்த பகுதிகள் மட்டுமே எழுதப்பட்டன. பிற முழுமையாக வெளியே கிடக்கின்றன என்பதே உண்மை. ஐம்பதுகளுக்குப்பின்னர் அந்த இடைவெளியை எழுதி நிரப்பும் சவாலை எவருமே மேற்கொள்ளவில்லை

 

உண்மையில் தமிழ் வரலாற்றில் என்னென்ன எழுதப்பட்டுள்ளது? சங்ககாலம் பற்றிய மேலோட்டமான ஒரு பெயர்பட்டியல் கிடைக்கிறது. இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டது அது. சேரசோழபாண்டியர்களின் இடைவெளிமிக்க ஒரு வம்சாவளி. சங்ககால வேளிர்மன்னர்கள், கடல்சேர்ப்பர்கள், நாஞ்சில்குறவன் போன்ற பல்வேறு குறவ மன்னர்களைப்பற்றி எந்த சித்தரிப்பும் இல்லை. இந்தச்சிறுகுடிமன்னர்கள் பலர் பௌத்த-சமண மதத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம். உதாரணமாக குமரிமாவட்டத்தில் உள்ள சிதறால் என்ற ஊரில் இருக்கும் புராதனமான சமண பல்கலைகழகத்தை நிறுவ நிதியளித்தவர் குறத்தியறையார் என்ற அரசி. நாஞ்சில்குறவனின் வழிவந்த சிறுகுடி அரசி.

 

அதன்பின் களப்பிரர்காலகட்டம். சுத்தமாக ஒன்றும் தெரியாது. அதன்பின் பல்லவர், பிற்கால சோழர், பிற்காலப் பாண்டியர்  பற்றி ஓரளவு தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அக்கால சேரர் வரலாறு காலியாக கிடக்கிறது. பெருமாள்களின் வம்சம் ஒன்று ஆண்டதாகவும் அவர்கள் பௌத்தர்கள் என்றும் பின்னர் அவர்களில் சிலர் சைவர்களானார்கள் என்றும் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை போன்றவர்கள் சொல்கிறார்கள்.சேரமான் பெருமாள்நாயனார் போன்ற சில பெயர்கள் உள்ளன, அவ்வளவுதான்.

 

அதன்பின்னர் இஸ்லாமிய படையெடுப்பு. அப்படையெடுப்புக்குப் பின்னர் நாயக்கர் காலகட்டம் வரை தமிழகத்தை ஆண்ட உதிரி சுல்தானிய ஆட்சியாளர்களைப்பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது.அன்றைய சமூகச்சித்திரமே இல்லை. பின்னர் நாயக்கர் காலகட்டம். அந்தவரலாற்றிலும் பெரும்பகுதி மர்மமே. ஏனென்றால் அதை நாம் ஆந்திரவரலாற்றில் இணைத்து ஆராயவேண்டும். நாயக்கர்கள் என பொதுவாகச் சொல்லப்படும் மக்களின் உள்சாதி – குல- அரசியல் அன்றைய முக்கியமான பண்பாட்டுப்பிரச்சினை, வரலாற்றுப்பிரச்சினை.

 

நாயக்கர் காலகட்டத்தில் நம்முடைய நில உடைமைகள் பல தலைகீழாயின. அந்த மாற்றம் மூலமே இன்றுவரை நீளும் நம்முடைய சமூக கட்டமைப்பே உருவாகியிருக்கிறது. அதற்கு முன்னால் சென்று இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் சோழர் காலத்தில் களப்பிரர் காலத்தில் எப்படியெல்லாம் நில உடைமை கைமாறியது என்று பார்க்கவேண்டும். அப்படி ஒரு தெளிவான சித்திரத்தை உருவாக்காமல் நம் சமூகத்தின் பண்பாட்டு, அரசியல் கட்டமைப்பைப்பற்றி அர்த்தபூர்வமாக பேசமுடியாது

 

ஏன் , ஒரு சாதியின் இன்றைய நிலை நேற்றைய நிலை பற்றியெல்லாம் பேசுவதற்கு இந்த விரிவான வரலாற்றுப்பரிணாமத்தின் சித்திரம் மிக இன்றியமையாததாகும். நான் இந்த உரையின் ஆரம்பத்தில் சொன்னது போல பறையர்களின் சமூகநிலையையே எடுத்துக்கொள்வோம். அவர்கள் எப்படி கீழே சென்றார்கள் என்றறிய அவர்களின் நில உரிமை என்ன ஆயிற்று என்று அறியவேண்டும். அதற்கு களப்பிரர்காலகட்டத்து நில உரிமைகள் சோழர்காலகட்டத்தில் எப்படி மாறின என்று பார்க்கவேண்டும். அந்த மாற்றம் பின்னர் எப்படியெல்லாம் நீடித்தது என்று பார்க்கவேண்டும். ஆனால் இந்த வரலாறுகள் இன்னமும் எழுதப்படவே இல்லை!

 

ஆம் நண்பர்களே, நம்முடைய பண்பாட்டின் பெரும்பகுதி இன்னும் கண்டடையப்படவில்லை. நம் வரலாற்றின் பெரும்பகுதி இன்னும் எழுதப்படவேயில்லை. நாம் இன்னும் நம்மைப்பற்றி பேசவே ஆரம்பிக்கவில்லை என்று ஓங்கிச்சொன்னால் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் உண்மை அது. என்னிடம் அன்பு பொன்னோவியம் கோபமாகச் சொன்னார் ‘சைவர்கள் அவர்களுக்குச் சாதகமான பகுதிகளின் வரலாற்றை மட்டும் எழுதி வைத்துவிட்டு போனார்கள். அது ஒரு பத்து சதவீதம். மிச்சமெல்லாம் எழுதப்படவேயில்லை’ அன்று கேட்க ஒருமாதிரி இருந்தது. இப்போது உண்மை என்றே உணர்கிறேன்.

 

நம் மரபிலே ஒரு பெரும்பகுதி கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கிறது – திருவனந்தபுரம் புதையல்அறைகளைப்போல. சாவி நம் கையிலே இல்லை. நம்முடைய பண்பாட்டின் பொதுமரபு அங்கே நுழையமுடியாமல் தவித்து தேங்கி நிற்கிறது. நமக்கு இன்று இன்னொரு வழி தேவைப்படுகிறது. இன்னொரு மொழிபு தேவையாக இருக்கிறது. இந்த பொதுமரபு முட்டி நின்றுவிட்ட இடங்களிலெல்லாம் உள்ளே செல்லக்கூடிய ஒரு ஆய்வுக்கோணம். தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் பௌத்த-சமண கோணத்தில் ஆராயக்கூடிய ஒரு அணுகுமுறை. அதை முன்வைத்த முன்னோடி என அயோத்திதாசரைச் சொல்வேன்.

 

இந்த மறுசித்தரிப்பை நான் மறுப்பு என்று கொள்ள மாட்டேன். திரிப்பு என்று சிலர் சொல்லக்கூடும். அதுவும் பிழை என்றே சொல்வேன். பன்மையாக்கம் என்று சொல்லலாம். நம்முடைய வரலாற்றில் பௌத்த-சமண நெறிகள் உருவாக்கிய செல்வாக்கை கருத்தில்கொண்டு முழுமையாக இன்னொரு பண்பாட்டையும் வரலாற்றையும் எழுதிப்பார்த்தல். இமையச்சவால் இது. ஆனால் வேறுவழியே இல்லாதது. எதிர்காலத்தில் அப்படி ஒரு அலை எழுமென்றால் அதன் முதல்புள்ளியாகவே அயோத்திதாச பண்டிதர் கருதப்படுவார்.

 

இந்த மாற்று எழுத்தின் சில சிக்கல்களை பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன்.மேலைநாட்டு கல்விநிறுவனங்களால் உருவாக்கப்பட்டு நமக்களிக்கப்படும் கோட்பாட்டு முன்வரைவுகள், மற்றும் கலைச்சொற்களை ஒட்டி செய்யப்படும் ஆய்வாக இது இருக்குமென்றால் அது கண்டிப்பாக ஆரோக்கியமான ஒன்றாக இருக்காது. அந்த மேலைநாட்டு அமைப்புகளை வழிநடத்தும் அரசியல், மதம் மற்றும் வணிக நிறுவனங்களின் நலன்களைப்பாதுகாக்கும் ஆய்வுகளாகவே அது அமையும்.

 

நம்மை நாம் ஆராய்வதற்கான வழிமுறைகளை பிறர் வகுத்து நமக்களிக்கவேண்டியதில்லை. அதற்காகவே அயோத்திதாச பண்டிதர் போன்ற ஒரு முன்னோடியைச் சுட்டுகிறேன். ஐரோப்பிய ஆய்வுத்தளத்துடன் நேரடியான தொடர்பு உடையவராக இருந்தும்கூட அவர் தன்னுடைய குலபாரம்பரியத்தில் இருந்து பெற்ற ஞானத்தையெ பெரிதும் சார்ந்திருந்தார். ஆகவே அவர் அசலானவராக இருந்தார். அந்த சுயத்தன்மையை நான் பெரிதும் வலியுறுத்துவேன். நம்மைச்சுற்றி இன்னமும் அவ்வரலாற்றின் கூறுகள் பரந்து கிடக்கின்றன. நம் வாழ்க்கையில் அது ஊடாகக் கலந்திருக்கிறது.

 

ஆம், அது ஒன்றும் அழிந்துபோன தொல்பொருள் அல்ல. கண்டெடுக்கப்படாமல் நம்மிடமிருக்கும் ஒன்று. அதை நாமே நம்மை அவதானிப்பதன் மூலம் எடுத்துவிடமுடியும். நம்முடைய ஆய்வுக்கருவிகள் முறைமைகள் அனைத்தையும் நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியும். அது பல்வேறு துறைகளை ஒன்றாக இணைத்துச்செய்யப்படவேண்டிய ஒன்று. அதற்கான வழிகாட்டுதல்களை நாம் அயோத்திதாச பண்டிதர் எழுத்துக்களிலே காணலாம். குறிப்பாக அவர் வைத்தியம், ஹடயோகம், பௌத்தநீதிகள் ஆகிய மறைக்கப்பட்ட எல்லா ஞானங்களையும் ஒரே தரப்பாக கண்டு அவற்றை ஒரே கருவியாக ஆக்கிக்கொள்வதைச் சொல்லலாம்.

 

ஆக்கபூர்வமான பண்பாடுகள் பலமுனைகளில் சித்தரிக்கப்பட்டு பல மொழிபுகள் கிடைக்கின்றன. தமிழ் பண்பாடும் அப்படி பல்வேறு மொழிபுகளை தேடி நிற்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவற்றை நாம் சுயமாக உருவாக்க முடிவதில்லை. திரும்பத்திரும்ப நமக்கு மேலைநாட்டு கல்விக்கூடங்களில் இருந்து புதியதாக ஏதேனும் கோட்பாட்டு முன்வரைவுகள் கிடைக்கின்றன. அங்கே பத்தாண்டுகளுக்கு ஒரு புதிய கொள்கை அறிமுகமாகிறது. அவர்களும் அதை உலகு முழுக்க செல்லுபடியாகக்கூடியதென்ற நம்பிக்கையுடன் முன்வைக்கிறார்கள். நம்மவர்கள் அதை மேற்கோள்களாக எடுத்துக்கொண்டு பண்பாடு- வரலாறு மேல் ஒரு தாக்குதலை மேற்கொண்டு சில்லறை சிராய்ப்புகளை மட்டும் உருவாக்கிவிட்டு அடுத்த கொள்கைக்குச் செல்கிறார்கள்.

 

நம்மை நாம் வேறு கோணத்தில் அவிழ்த்து திருப்பிச்சொல்லிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் பண்பாட்டு- வரலாற்று முன்வரைவை பன்மையாக ஆக்கிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது நீதி சார்ந்த பிரச்சினையும்கூட. நம்முடைய வரைவு மேல்தட்டில் இருந்து உருவாக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டது. அது கீழ்த்தட்டிலிருந்தும் எழுதப்படவேண்டும். அவ்வாறு நம் பண்பாட்டு- வரலாற்று வரைவு பன்மையும் விரிவும் கொண்டாலொழிய நாம் நம்முடைய அனைத்து மக்களையும் உள்ளடக்கும்விதமாக அதை ஆக்க முடியாது. அப்படிப்பார்த்தால் அது ஒரு அதிகாரச்செயல்பாடும்கூட.

 

அயோத்திதாசர் அவரது நேரடியான தலித்தியக் களப்பணிகளுடன் சேர்த்தே செய்த பண்பாட்டுப்பணி என இதைச் சொல்லலாம். ஆனால் அவரால் இதை முழுமையாக, அல்லது வேண்டிய அளவுக்குக் கூட , செய்து பார்க்கமுடியவில்லை. சில சாத்தியங்களை மட்டுமே அவர் தொட்டிருக்கிறார். அவருடையது ஒரு வாசல்திறப்பு மட்டுமே. சவால்கள் இன்னும்மேலே சென்றால்தான் உள்ளன. ஆகவேதான் அவரை முதல்சிந்தனையாளர் என்று சொல்லத்துணிகிறேன்

 

[மேலும்]

முந்தைய கட்டுரைவட்டார வழக்கும் ஆங்கிலமும்
அடுத்த கட்டுரைகாடு-ஒருகடிதம்