இனிய ஆசிரியருக்குப் பணிவான வணக்கங்கள். வெண்முரசு வரிசையில் வண்ணக்கடலை இன்று நிறைவு செய்தேன். நமக்குள் நாமே உரையாடும் தருணங்களில் கேட்கப்படுகின்ற கேள்வி ஒன்று என்னவெனில் வெண்முரசு அதில் என்ன தனிச் சிறப்பு?
வண்ணக்கடல் சொல்லும் மூலக்கதைச் சுருக்கமாக எழுதினால் சில வரிகள் தான்.
- சதசிருங்கத்தில் இருந்து ஹஸ்தினாபுரம் திரும்பும் பாண்டவர்கள் அதையொட்டிக் கௌரவர்களுடன் ஏற்படும் வேறுபாடுகள்.
- குருத் துரோணரின் பிறப்பு, கல்வி, லௌகிக வாழ்க்கையின் ஏற்படும் இன்னல்கள் அதிலிருந்து விடுபட வேண்டித் துருபதனிடம் சென்று பெறப்படும் அவமரியாதைப் பின்புக் குருவாக ஹஸ்தினாபுரத்தில் அமைதல்; தன் மாணவர்களைக் காக்கும்பொருட்டு ஏகலைவனிடம் கட்டைவிரலைத் தக்ஷணையாகப் பெறுதல்.
- கர்ணனுக்கு இளமையில் பிறப்பினால் ஏற்படும் அவமானங்கள்; திறமை இருந்தும் பல இடங்களில் நிராகரிக்கப்படுதல்; அதில் உச்சமாகக் களம்புகும் நாளில் அர்ச்சுனனிடம் அறைகூவுதல் மற்றும் அதையொட்டிய நிகழ்வுகள்.
மனமானது லயிப்பது மூலக்கதையை அல்ல அவை உண்டாகும் காரணிகளை, அதற்கு நீங்கள் தரும் உச்சபுனைவுகளை மற்றும் கதைசொல்லும் பாங்கை!
உதாரணத்திற்கு இலக்கில்லாமல் மாமதுரையிலிருந்து தொடங்கி – இச்சிறு மண்ணில் இன்றிலிருந்து நாளை மறையும் மக்களைப் பாடுவது அல்ல என் பணி, வடக்கே செல்கிறேன் கீரன் எங்கே ஹஸ்தினாபுரிக்கா என்னும் சொல்லின் நூலைப் பிடித்துச் செல்லும் இளநாகனின் வழியாக நம் மனதும் பிரயாணிப்பது லயித்தலின் ஒரு காரணி.
ஒருபோதும் ஆண்கள் முன் தாழா ஆணவம் கொண்டபெண்ணாக வரும் பிருதை என்னும் குந்தி. தான் பெற்ற வரத்தின் பயனாகக் கிடைத்த புதல்வர்களை அஸ்தினபுரியின் அரியணையில் அமர்த்த நினைப்பது ஒவ்வொரு அன்னையின் எண்ணம், இது இப்படித்தான் இருக்கமுடியும் என்கிற தர்க்கம் இரண்டாவது காரணி.
துரியோதனின் உவமைக்குப் பாறையும் பீமனின் உவமைக்கு யானையும் என்று கொண்டுசென்று ஒரு கட்டத்தில் நிலைகொள்ளாத யானையாகத் துரியோதனனும் நிலைகொண்ட பாறையாகப் பீமனும்; அலையடிக்கும் கடலாகத் துரியனும் அசைவற்ற வண்ணமாகப் பீமனும் ஒருவர் இன்னொருவரின் ஆடியாக அமைதல் இனிய கற்பனை. அதற்கும் மேலே ராகுவும் கேதுவும் இருநாகங்களாகத் துரியனின் கையில் அமைவதும் ஜயனும் விஜயனும் பீமனின் கையில் அமர்ந்து ஊழின் விளைவாகத் தோள் கோர்க்கக் காத்திருத்தல் வாசகனுக்குப் பரவசம் ஏற்படுத்தும் மூன்றாவது காரணி.
சிறிய செய்கைகள் நட்பில் பெரும்பூசலைக் கொண்டுவருவது இயற்கையில் நாம் கண்டுவருவது இல்லையா, அதுபோல ஒரு கற்பனையான தாய்க் கரடியிடம் அகப்பட்ட துரியோதணனனைக் காக்கும் பொருட்டுப் பீமனின் செய்கையானது துரியோதனின் இயலாமை அகம்பாவமாக உருவாகிப் பூசலைத் தொடங்கிவைத்தல் அபாரமான கற்பனை, இது நான்காம் காரணி .
ஊழும் துரோணரும் என்னும் உதாரணத்திற்கு: துரோணரின் சிறிய விழைவு உபகர்ம நாளில் தர்ப்பையைத் தொட்டுத் தந்தையிடம் வேதம் கற்க வேண்டும் என்பதே. இருப்பினும் ஊழின் எண்ணம் என்றுமே வேறாகஇருக்கும் என்னும் உதாரணத்திற்கு விஸ்வாமித்ரப் புல் என்னும் தர்ப்பையைக் கொண்டு சிறகடித்து எழுந்த குருவியின் மேல் எய்தி தந்தைக்குத் தன் திறமையைக் காட்ட விழைந்த செயல் நீ கற்க வேண்டியது பிராமணன் ஓதும் வேதமல்ல க்ஷத்ரியர்கள் கற்கும் வில்வேதமே என்று துரோணருக்காக அடித்தளம் அமைத்தல் மனம் ஏற்கும் தர்க்கம்.
ஊழின் இன்னுமொரு இடம் ஏகலைவனின் அன்னையாக வரும் சுவர்ணை இடும் சாபம். எவருக்காகக் கட்டைவிரலைப் பெறப்பட்டதோ அவனாலேயே வதைக்கப்படுவதும் அறமின்றிச் செய்தச் செய்கையினால் மீளாப் பெருந்துயருக்கு அஸ்வத்தாமன் ஆளாகப்போவதும் ஏற்புடைய செயல் மற்றொரு காரணி.
தான் பெற்ற மகன் அஸ்வத்தாமனுக்கும் சுவீகரிக்கப்பட்ட மகனான அர்ச்சுனனுக்கு மனதில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் கதையில் மற்றுமொரு அழகு. வண்ணக்கடல் விமர்சனத்தில் சக வாசக நண்பர் எழுதியதுபோல மறைந்த சு. ரா வின் மகனுக்கும் உங்களுக்கும் நேர்ந்தது போன்று தோன்றிய அனுபவம் அடியேனுக்கும் தோன்றியது.
கர்ணன் வரும் பகுதிகள் அனைத்துமே திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் மனம் அடையும் எழுச்சி. அங்கநாட்டுச் சத்யகர்மனின் உயிரைக் காப்பாற்றும் நிகழ்விலும் அரசனின் உயிரைச் சூத்திரன் காப்பானெனில் அவனைக் கொல்வது உத்தமம் என்று கர்ணனைத் தண்டிக்கமுயல்வது காழ்ப்பின் உச்சக்கட்டம். அங்கிருந்து ஓடி ஹஸ்தினாபுரம் அடைந்து ஏற்படும் இழிபேச்சுகளும் பின்வரும் நாட்களில் தவறாகவே இருப்பினும் இவன் ஏன் கௌரவர்களுடன் இருந்தான் என்பதற்கு நல்ல அடித்தளம் அமைந்த பகுதிகள் ஒரு முக்கிய காரணி. இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுவந்த பீமனும் ஒருஇடத்தில் அர்ச்சுனனுக்குக் கர்ணனுக்கும் நடக்கும் சண்டையில் புகுந்து கர்ணனை இழித்துப் பேசி அவமதிக்கும் செயல் ஒரு ஆசை அண்ணனாக அன்புத் தம்பி அர்ச்சுனன் அவமதிக்கப்பட்டு விடுவானோ என்றே கற்பனையில் சுவீகரிக்கிறேன்.
கதையைத் தவிர்த்துக் குதிரையைக் குறித்துச் செய்திகளாகட்டும் அதல விதாலப் பாதாள நாகங்கள் பற்றியா கண்தெரியா உலகமாகட்டும் தனுர் வித்தைப் பற்றிய இத்தனைநாள் அறியா குறிப்புகளாகட்டும் இந்திரச் சூரிய விழா நிகழ்வுகளாகட்டும் மற்றும் பூமியே புல்லால் ஆனது என்னும் படிமமாகட்டும் இவையெல்லாம் ஒருதடவை வாசித்துப் பெரும் இன்பமல்ல பலதடவை வாசிக்கவேண்டுபவை! வண்ணக்கடல் கடைந்த ஆசிரியருக்கு நன்றிகள் பல!
லங்கேஷ்