ஞானி- கடிதம்

ஞானி நூல் வாங்க

ஞானி மின்னூல் வாங்க

ஞானி – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

பின் தொடரும் நிழலின் குரல் இன்றும் எனக்கு பெரும் ஈர்ப்பையும் வலியையும் ஒருங்கே அளிக்கும்  ஒரு நாவல்.   அருணாச்சலத்தின் தவிப்பு சிந்திக்கின்ற மனிதநேயத்தை முன் வைக்கின்ற ஒவ்வொருடையதும் கூட.  மனநல மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் அளவிற்கு அந்த தவிப்பு ஒவ்வொருவரையும் தள்ளினாலும் இறுதி காலடியில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் தப்பித்து விடுகிறார்கள். நான் மிக அஞ்சும், முழு உயிரைக் கொடுத்தாவது தவிர்க்க நினைக்கும் நிலை அது.அருணாசலத்திற்கு தோழர் கந்தசாமியின் வாதங்கள் நிறைவைத் தருகின்றன. தனது தவிப்பிற்கும் கேள்விகளுக்கும் நடைமுறை சாத்தியமான பதிலை பெற்று இனி நிம்மதியாக முன் செல்லலாம் என நினைக்கையில் வீரபத்ர பிள்ளையின் குரல் கேட்கிறது. உயிர்க்கொலைகள் எவ்வளவு தான் அது நியாயப்படுத்தப் பட்டாலும், அது கொலையே அல்லவா? அதன் மிக மெல்லிய ஓலமூம் மனதின் அனைத்து தர்க்கங்களையும் தூக்கி எறிந்து விடும் வலிமை கொண்டவை.

சு ரா மார்க்ஸியத்தில் ஸ்டாலினிஸ தாக்கத்தையும் அதன் விளைவான பேரழிவையும் கண்டு அதை அப்படியே விட்டு விட்டு சென்றார், ஆனால் நான் அப்படி சொல்லவில்லை. இதை எப்படியாவது சரி செய்து முன்செல்ல முடியுமா என பார்க்கிறேன் என்று ஞானி உங்களிடம் சொல்கிறார்.  அதற்காக சிறிதும் களைப்புறாமல் இறுதி வரை முயன்றிருக்கிறார் என்பதும் உங்களது நினைவுக்குறிப்பலிருந்து அறிய முடிகிறது.   [  எனக்கும் அவருக்குமான வேறுபாடு இதுதான். அடிப்படையில் மார்க்சியத்தில் இருக்கும் இந்த அறப்பிரச்னையைக் கண்டதுமே அப்டியே அதை கைவிட்டுட்டு முன்னகர்ந்தவர் அவர். நான் அப்டி செய்யலை. மார்க்சியம் என்பது ஒரு அடிப்படையான கனவு, அது இல்லாம மானுடத்தின் மீட்பு வேறில்லைன்னு நினைச்சேன். ஆகவே அதன்மேல் அதன் நடைமுறையிலிருந்து உருவாகும் இந்த பழியும் திரிபும் களையப்படவேணும்னு நினைச்சு மார்க்சியத்தை மறுவார்ப்பு செய்யவும் நம்ம சூழலில் புதிதாக அதை கண்டடையவும் வாழ்நாளை செலவிட்டேன்.  ].   ஞானி அவர்களின் ஆளுமையையும் அணுகுமுறையும் துல்லியமாக விளக்கும் வரிகள் இவை. மார்க்ஸியத்தை மறுவார்ப்பு செய்வதற்காக  மிக விரிவாகவும் அதே சமயம் ஆழமாகவும் சென்று தயங்காமல் ஆராய்கிறார்.  மணல் மேட்டின் மீது ஒரு அழகிய வீடு நூல் ஆன்மீகம் மீதான அவரது மார்க்ஸிய பார்வையிலான ஆக்கபூர்வமான விமர்சனம். தொடர்ந்து உங்களில் ஆரம்பிக்கும் பின்நவீனத்துவ இலக்கிய அலையை முதன் முதலாக கண்டுணர்ந்து ஆதரிக்கவும் செய்திருக்கிறார்.

உங்களது சிறுகதைகள் குறிப்பாக மாடன் மோட்சம், போதி சிறுகதைகளின் மீதான ஞானி அவர்களின் வாசிப்பு அபாரமானது.போதி சிறுகதையில் நான் ஞானத் தேடல் கொண்டவன் அடையும் ஏமாற்றமே கதை என வாசித்திருக்கிறேன். பெரிய ஆதீனம் விவேகானந்தரை எதிர்க்கும் முகமை பழைய மரபான  ஹிந்து மதத்தை புதிய ஒன்று எதிர்ப்பதான யுகசந்தி   ,அதிலும் ஆதீனம் அறிவுத்தரப்பால் தோற்கடிக்கப் படவில்லை, மாறாக தந்திரமாக விஷம் வைத்து கொல்லப்படுவது என்று வரும் வாசிப்பு  உண்மையில் சற்று அசைத்து விட்டது.  ஆச்சரியமாக இலக்கியவாதி அல்லாத , கோட்பாட்டாளரான‌ ஞானி விஷ்ணுபுரத்திற்கும் பின் தொடரும் நிழலின் குரலுக்கும் வழங்கிய ஆதரவை சமகால இலக்கிய பேராளுமையான சு ரா வழங்கவில்லை என்பது தீராத மர்மங்களுள் ஒன்று.

ஞானி அவர்களின் கூர்ந்த அவதானிப்புகள் அற்புதமானவை.கார்ல் மார்க்ஸ் பேரடைஸ் லாஸ்ட் காவியத்தை ஏற்றுக் கொண்டதன் காரணம், விஷ்ணுபுரத்தின் தகவல் பிழைகள் சார்பான விமர்சனங்களை ஒதுக்கும் படி சொன்னதும் பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு தேவைக்கு அதிகமாக ஆதாரங்கள் தேவையில்லை என சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது [ நமக்குள்ள இருக்கிற இருட்டை வைச்சு அங்க இருந்த இருட்டை நாம அடையாளம் கண்டுகொள்றோம் ].

ஞானி அவர்களின் நுண்ணலகு மார்க்ஸியம் அவரது சிந்தனை பாய்ச்சல்களுள் முதன்மையான ஒன்று. பேரலகு மார்க்ஸியம் ஒரு கட்டுப்பாடான மதம் போல தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. அதனாலேயே இன்றியமையாத தோல்விக்கு வழிவகுத்துக் கொள்கிறது.

ரஷ்யாவிலே இருந்தது ஆர்தடாக்ஸ் கத்தோலிக்க மதம். உலகம் முழுக்க கத்தோலிக்க மதத்தை புரட்டஸ்டண்ட் மதம் நீக்கம் செய்ய முடிஞ்சிருக்கு. ஆனால் மார்க்ஸியம் ஏன் நீக்கம் செய்ய முடியலை? ஏன்னா எந்தக் கேள்விக்கு கத்தோலிக்கம் பதிலாக அமைகிறதோ அந்தக்கேள்விக்கான இன்னொரு பதில்தான் புரட்டஸ்டண்ட் மதம். மார்க்சியம் அந்தக் கேள்வியையே செவியிலே வாங்கிக்கலை.”

மாறாக அந்தந்த மக்களின் சமய பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் பொருட்படுத்தி , தனது செயல்பாட்டில் அவற்றுக்குரிய இடத்தையும் அளித்தால்  வளரமுடியும். மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்னும் அவரது கருத்து மிக முக்கியமான ஒன்று. வரட்டுத்தனமாக கொள்கைகளை அப்படியே எழுத்து மாறாமல் பிடித்துக் கொள்ளாமல் அதன் மையக் கருத்தை உணர்ந்து அதிலிருந்து முன் செல்லும் செயலே அவரது சிறப்பாக தோன்றுகிறது.   இயல்பாக அவர் தமிழ் தேசியம் நோக்கி வந்ததும் அதிலும் அவரது அவதானிப்பு மிக கூர்மையானது.

அன்றாடத்தில் உள்ளது நம் மனம். ஆழ்மனம் தொன்மையில் உள்ளது. மனிதர்கள் அன்றாடத்தால் இழுக்கப்பட்டு தங்கள் தொன்மையில் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். அன்றாடத்தில் உழல்கிறார்கள். அன்றாடத்தை கடந்து தொன்மைக்குச் செல்வதே தியானம் என்பது. அந்த தொன்மை பலவற்றுடன் இணைந்தே உள்ளது. ஆனால் அடையாளம் காணமுடியாமல் அது மாற்றப்பட்டிருந்தால் எவரும் ஆழ்நிலைப் பயணத்தில் ஆழத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாதபடி ஆகிவிடும். ஆகவே தொன்மையை சென்றடைய தனித்தன்மை அவசியம். தமிழரின் மெய்யியலை வகுப்பது உரிமைக்காக மட்டும் அல்ல. பொருளியல் உரிமை, பண்பாட்டு உரிமை எல்லாம்கூட அடிப்படையில் மெய்யியல் உரிமைக்காகத்தான். வீடுபேறு என்று சொல்லப்படும் பெருநிலை மனிதர்களுக்கு உண்டு. அது இயற்கையுடன் இயைந்து மொத்தப் பிரபஞ்சமாகவும் தன்னை உணரும் பெருமனதை அடைதல். அதற்கு தொன்மை தேவை, அத்தொன்மையானது தனித்தன்மைகொண்ட தேசியத்தாலேயே பேணப்படமுடியும், அந்த தேசியம் தன் பொருளியலுரிமையை தக்கவைத்துக்கொண்டால் மட்டுமே நிலைகொள்ளமுடியும். அவ்வாறு தன்னுரிமை அடையும் தேசியத்திற்குள்ளே மட்டுமே உழைப்பாளர் உரிமைகொள்ள முடியும்.

நூலின் முக்கியத்துவம்  நீங்கள் அளிக்கும் விரிவான வரலாற்று சித்திரம். நக்சலைட் இயக்க  தோல்வி,  வேலைவாய்ப்பின்மை முதலான பொருளாதார சிக்கல்கள் , கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய கட்டுப்பாடுகள்  விளைவாக பரவிய சோர்வு, பிறகு ஜே ஜே சில குறிப்புகள் வழியாக மீண்ட சூழ்நிலை, சு ரா வின் காலச்சுவடு முயற்சி, அவரது சொந்த  கடப்பாடுகள் காரணமாக எதிர்பார்த்த அளவு அவறால் வெற்றி பெற முடியாமல் போனது என துல்லியமான விவரிப்பு மிக நன்றாக வந்துள்ளது.

நூல் முழுவதும் அவரது இயல்பான நகைச்சுவை உணர்வுகள் தெரிய வருகிறது. மோக முள் நாவல் தொடர்பான அவரது  அவதானம் [ ’எலிகளுக்கு ராஜ்ஜியம் கிடைச்சா பூனைகளை வைப்பாட்டியா வச்சுகிடும்னு ஒரு பழமொழி உண்டு. தஞ்சாவூர்லே பிராமணர்கள் உட்பட பலருக்கு மராட்டியர்கள் மேலே இருக்கிற ஈர்ப்புக்கு அது ஒரு காரணம். ஜமுனா பாபுவோட எஜமானியும்கூட ]உங்கள் நண்பருக்கு எழுந்த‌ சந்தேகமும் அதற்காக அவர் எழுப்பிய கேள்வியை பார்த்து ஞானி மட்டுமல்ல நானும் வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தேன்.  [  என்னுடன் வந்திருந்த நண்பர் யமுனாவும், பாபுவும் கொள்ளும் அந்த உடலுறவு மலையாளப்பாணியில் அமைந்திருக்குமா என்று கேட்கஅய்யய்யோ, என்னங்க பேசுறீங்கஎன்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டே இருந்தார் ஞானி.]

ஒருத்தர் நம்ம தோழர்தான், அவரோட அண்ணாகூட பங்காளிச்சண்டை. இவர் அவரை திரிபுவாதி, ஃபிலிஸ்டைன், நிகிலிஸ்டுன்னு வைவார். அப்ப அவரு கவுண்டர் இல்லியான்னு நான் ஒருமுறை கேட்டேன். குழம்பிட்டார்” 

நூலை வாசித்த பிறகு எனக்குள் எழும் கேள்வி, இனி என்ன? மார்க்ஸியர்களும் காங்கிரஸும் திராவிட இயக்கத்தின் இரண்டாம் கிளையாக மாறியதும், ஜாதி வெறியர்களின் ஒரு பகுதி நைச்சியமாக ஹிந்துத்துவத்தில் இணைவதும் நடந்த பிறகு, தேர்தல் என்பதே ஜாதி,  மதம் பார்த்து வாக்களிப்பதும் , வாக்குரிமையை விற்பதற்கான திருவிழா என மாறிய பிறகு, தேர்தல் அரசியலில் செய்வதற்கு என்ன இருக்கிறது?

இதற்கான விடையை கண்டடைவேன் என நம்புகிறேன்.

சங்கரன் 

முந்தைய கட்டுரைவாசகர் கடிதங்கள் வழியாக நிகழ்வதென்ன?
அடுத்த கட்டுரைகீரனூர் ஜாகீர்ராஜா சிறப்பிதழ்