காடும் நாடும் -கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

ஒரு கருப்பு தேநீரை பருகிக் கொண்டே இந்த கடிதத்தை எழுதுகிறேன். கிரிதரனும், குட்டப்பனும் காட்டில் உள்ள தங்களது குடிலின் வெளியே அமர்ந்து முடிவில்லாமல் தொடரும் வானத்தையும், முடிவது போல தோன்றி, முன்னகர்ந்து கொண்டே இருக்கும் காட்டையும் கண்டவாறு பருகும் தேநீரின் சுவை இந்த வீட்டு தேநீருக்கு இருக்காது என்பது எனக்கு நன்றாக தெரியும். காட்டின் மத்தியில் இருக்கும் ஒருவர் தண்ணீரை சுட வைத்து, சிறிது காபி பொடியோ, தேயிலை பொடியோ இட்டு, சக்கரை கூட இல்லாமல் அந்த நீரை குடிக்க முடியும். அந்த நீரை பருக சிறிது களைப்பும் தாகமும் மட்டும் இருந்தால் போதும். அதை பருகிய பிறகு உந்துதல் அடைந்து விடுவார்கள். காடு எல்லாவற்றையும் இனிமையாக்கி விடுகிறது. கிரிதரனுக்கும் காடு அப்படிதான் செய்கிறது. காடு அவனுக்கு இனிமையான முதல் காதலை கொடுக்கிறது. காட்டின் மீதான காதல்; நீலியின் மீதான காதல்.

நாவலில் வடிவமைக்க பட்டிருக்கும் காடும், நீலி கதாபாத்திரமும் வெவ்வேறு அல்ல; இரண்டும் ஒன்று தான் என்று எனக்கு படுகிறது. அதன்பாடு தான் அந்த மலைக்கு நீலி மலை என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீலி அந்த மலையாக இருக்கிறாள்; மலை நீலியாக இருக்கிறது. நீலியின் மறைவு, அந்த மலை அழிவின் தொடக்கமாக நிற்கிறது. வயதான கிரிதரன், அந்த 182 QR கல்வெர்ட் இருக்கும் இடத்திற்கு வந்து, குப்பைகளுக்கு மத்தியில் அதை தேடுவது அதற்கு ஒரு உதாரணம். நீலி ஒரு மழலை. மலையின் மழலை. நாவலில் கிரிதரன், நீலியோடு உரையாடுவது மிகவும் சொற்பம் தான். அனால் அவையெல்லாம் சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளை போல மிகவும் தங்கமானவை. ஏன் என்றால், அவன் காடோடு உரையாடுகிறேன். காடு அளவாகத்தான் பேசும். காட்டிடம் இருந்து கேட்பதற்கு எதுவுமே இல்லை, ஆனால் காட்டிடம் இருந்து அவதானிப்பதற்கு எண்ணில் அடங்கா விஷயங்கள் உள்ளன. செயலே காட்டின் பேச்சாக, சொற்களாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்டிற்குள்ளும் குட்டப்பன் போன்ற  ஒருவன் இருக்கிறான்.  அவன் காட்டின் செயல்களை சொற்களில் செதுக்கி அடுத்தவர்களுக்கு அளித்து, காட்டை பாடுகிறான். கிரிதரன் போன்று நகரத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு காட்டை பற்றிய குட்டப்பனின் பார்வையே, காட்டை புரிந்து கொள்ள அடித்தளமாக அமைகிறது. காட்டை பற்றிய, ஜீவிதத்தை பற்றிய குட்டப்பனின் பார்வை, அவனுடைய முன்னோர்களின் வழியாக, பல தலைமுறைகளாக தவழ்ந்து வருவது. அதன் காரணமாக  தான் பல்வேறு விஷயங்களை கிரியிடம் கூறும் போது “அப்பன் சொல்லியிட்டுண்டு… அப்பன் சொல்லியிட்டுண்டு” என்கிறான். யானைகளை பற்றி குட்டப்பன் கூறியது உண்மையாகத்தான் இருக்குமோ என்ற எண்ணம்  மேலெழுகிறது. காட்டின் ராஜாவாக யானை தான் இருந்திருக்க வேண்டும். எங்கோ எதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது. யானைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன, இல்லையெனில் மனிதர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்ற சிந்தனை வருகிறது. யானைகளை போற்றி பாடிய குட்டப்பன், யானையால் இறந்து போனான் என்பதை வாசிக்கையில் மனம் கனத்தது. அவன் ஆசைப்படியே தான அவன் இறந்து போனான் என்பதை நினைக்கும் போது மனம் கொஞ்சம் லேசானது. “என்ன ஒரு ஆன சவிட்டி கொன்னா அதுதான் மோட்சம்.”

நான் இப்பொழுது தான் உங்களுடைய ஒவ்வொரு படைப்பாக வாசித்து வருகிறேன். “ஏழாம் உலகம்” வாசித்திருக்கிறேன் (மறுவாசிப்பு செய்த பிறகு நிச்சயம் ஏழாம் உலகம் பற்றி கடிதம் எழுதுவேன்); “யானை டாக்டர்” வாசித்திருக்கிறேன்; என்னுடைய மலையாள நண்பர் ஒருவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே “நூறு நாற்காலிகள்” வாசித்தேன் (அதே நண்பருக்கு The Abyss-ஐ பரிந்துரை செய்துள்ளேன்). யானை டாக்டர் கே-வும் என்ஜினீயர் அய்யரும் எதோ ஒரு புள்ளியில் இணைவதாக எனக்கு தோன்றுகிறது. அவர்களை இணைக்கும் மையமாக காடு இருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. வனத்தை பற்றிய அய்யரின் பார்வையும், டாக்டர் கே-வின் பார்வையும் ஒன்று தான் என்று படுகிறது. அய்யர் தான் டாக்டர் கே வா? டாக்டர் கே தான் அய்யரா?

நீலி இறந்து போனாள். அந்த சந்தன காட்டுக்குடில் மறைந்து போனது. நீலி மலை அழிந்து போனது. காடு நாவல் வெளிவந்த நாள்தொட்டே இது போல எத்தனையோ நீலிகள், எத்தனையோ பழங்குடி குடில்கள், எத்தனையோ வனங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கலாம். இதற்கெல்லாம் என்ன தான் முடிவு?

நாவலில் வரும் ஒரு வரி: “காடு அழிந்து ஊர்கள் ஆவதே நாகரிகம் என்பது.” இப்படிப்பட்ட நாகரிகம் யாருக்கு தேவை?

அன்பும், ப்ரியமும்,

பவித்ரன்

*

அன்புள்ள பவித்ரன்

இப்படி பார்க்கலாம். காட்டில் இல்லாத எது நம் ‘நாகரீகத்தில்’ உள்ளது? அதை ‘பேணுதல்’ எனலாம். Benevolence. இங்கே நாம் பசியற்றிருக்கிறோம். நோய்க்கு மருந்து உள்ளது. வன்முறையிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறோம். காடு நேர் மாறு. இயற்கை இரக்கமற்றது. காடு என்றும் இளமையானது. ஏனென்றால் முதியவை, ஆற்றலற்றவை உடனே கொல்லப்பட்டு உண்ணப்பட்டுவிடும். ஒரு காட்டு விலங்குக்கு காயம் உருவானால் அதில் ஈக்களும் சிற்றுயிர்களும் மொய்த்து அதை அழுகவைத்து கொன்றுவிடும். நாம் காட்டில் இருந்து வெளியேறி அடைந்தவையே நம்மைப் பேணும் அனைத்தும். விலையாக காட்டுவாழ்க்கையின் அழகை அளித்தோம்

ஜெ

முந்தைய கட்டுரைபனியும் தனிமையும் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஆனந்த்குமார், மூன்று நீலம்