அன்புள்ள ஜெ
நாட்கள் முன்பாக ஏழாம் உலகம் வாசித்திருந்தேன், மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டேன். மூன்றாம் நாளின் நள்ளிரவில் தான் முடித்தேன். மறுநாள் காலையில் கடிதம் எழுத வேண்டுமென அகம் துடித்தது இருப்பினும் என்ன எழுதுவதென்று தெரியவில்லை உண்மையில் ஏழாம் உலகம் என்னை என்ன செய்ததென்றும் தெரியவில்லை, என்னை நானே சிறுமை செய்து சிரித்தேன் போத்திவேலு பண்டாரம் மாட்டுப்பண்ணை உரிமையாளர் அல்ல என்று, பொது புத்தியில் எவ்வளவு நல்ல மனிதர் என பக்கங்களுக்கு பக்கம் அவரை judge செய்தேன், நல்லவரா கெட்டவரா என கவனித்துக் கொண்டே நகர்ந்தேன். பின் மகள் ஓடிய துக்கத்தில் குளக்கரை படிகளில் நின்று பறந்து கொண்டிருந்த பறவையைப் பார்த்துப் புன்னகை செய்த போத்திவேலு பண்டாரம் எதார்த்தத்தின் நிஜமாக தெரிந்தார்.
இரத்தம், மலம், மூத்திரம் அழுக்கு என்றாலும் ரஜினிகாந்தின் அழகும், குய்யனின் குழந்தைத்தனமும், என ஏழாம் உலகத்தில் சில நாட்கள் தங்கினேன். வாழ்க்கையில் இனி குறை கூற ஒன்றுமில்லை என ஏழாம் உலகம் உரக்கக் கூறியதைப் போன்றிருந்தது கடைசி பக்கத்தை வாசித்த பின் அவ்வளவுதானா முடிந்துவிட்டதா அவர்களுடன் இன்னும் சிறிது நேரம் கற்பனையில் வாழ முடியாதா என தோன்றியது, கனத்த இரவு புத்தகத்தை கட்டிலில் வைத்து பெருமூச்சு விட்ட பின் சில நிமிடங்கள் எந்த சிந்தனைகளிலும் மூழ்காமல் விட்டத்தை பார்த்தபடியே இருந்து உறங்கினேன். “இருளில் தான் மூழ்கவிருக்கிறேன் என வாசித்தேன் இருள் ஒளி என எதிலும் மூழ்கிடாமல் சமநிலையெனும் ஒளி குறைந்த இருளில் முன்நகர்கிறேன்” நன்றி!
அன்புடன்
சக்தி
அன்புள்ள ஜெ
நான் ஏழாம் உலகம் நாவலை 2009ல் வாசித்தேன். அன்று என் மனதை உலுக்கிய நாவல். ஆனால் ஏன் உலுக்கியது என என்னை நானே கேட்டுக்கொண்டேன். பரிதாபம் அனுதாபம் அறவுனர்ச்சி என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அதைவிட ஆழமாக ஒன்று அதற்குள் இருந்தது. அது என்ன என்று நானே விவாதித்துக்கொண்டேன். சென்றவாரம் The Abyss மொழியாக்கத்தை என் மகனுக்கு வாங்கிக்கொடுத்தேன். அவன் ஒரே நாளில் படித்து முடித்தான். முகம் வெளிறிப்போய் ஒருவாரம் இருந்தான். அதன்பின் அவனிடம் பேசினேன்.
அவன் சொன்னது இது. ஏழாம் உலகத்தின் உருப்படிகள் வேறு யாருமல்ல, நாம்தான். ஐடியில் வேலைபார்ப்பவர்கள் வேலைகொடுக்கும் போத்திவேலு பண்டாரங்களின் உருப்படிகள். இத்தனைபேர் இருக்கிறார்கள் என கணக்குகாட்டித்தான் அமெரிக்காவிலிருக்கும் எஜமான்களிடம் உள்ளூர் பண்டாரங்கள் பிச்சை எடுக்கிறார்கள். கதைக்குள்ளேயே ஒரு தோழர் வந்து அதைச் சொல்லவும் செய்கிறார். நாமும் விற்கப்படும் வாங்கப்படும் கைகால்கள்தான். என் மகனின் கம்பெனியை, ஊழியர்களுடன் சேர்த்து ஒரு மாதம் முன்புதான் விற்றிருந்தார்கள்
அது உண்மை என தெரிந்தது. வாழ்க்கையில் நாம் யார் என நமக்கே காட்டும் நாவல் அது.
ஸ்ரீ ஞானதேசிகன்