மலைமுடிகளுடன் உரையாடுதல்

பி.கெ.பாலகிருஷ்ணன்
பி.கே.பாலகிருஷ்ணன் தமிழ் விக்கி
நாவல் எனும் கலை நிகழ்வு வாங்க

( 1 )

இலக்கிய விமர்சனம் என்பதன் அடிப்படை என்ன என்ற கேள்விக்கு மிகப்புகழ்பெற்ற பதில் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் சொன்னது. “எந்த விமர்சனமும் மேலும் சிறந்த வாசிப்புக்கான பயிற்சியே”. விமர்சனத்தில் வரலாற்றை தேடுதல் இருக்கும், அலசல் இருக்கும், மதிப்பீடு இருக்கும், தரப்படுத்தலும் இருக்கும். ஆனால் இவை அனைத்துமே வாசிப்பதற்கான பயிற்சிகள்தான். அப்பயிற்சியை அளிக்காத எந்த எழுத்துக்கும் விமர்சனத் தகுதி இல்லை.

ஐயமிருந்தால் நாம் எப்படி இலக்கியத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினோம் என்பதை மட்டும் கவனித்தால் போதும். முதலில் இலக்கியப்படைப்புக்குள் நுழைகையில் ஒன்றும் பிடிகிடைப்பதில்லை. நாம் சரியாக வாசிக்கிறோமா என்னும் ஐயம் அலைக்கழிக்கும். பிறருடைய வாசிப்புகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்போம். நம்மைவிடச் சிறந்த வாசகர்களின் கருத்துக்களை புரிந்துகொள்வோம். அந்தப் புரிதலுடன் மேலும் இலக்கியப்படைப்புகளை வாசிப்போம். இப்போது நம் வாசிப்பு வளர்ந்திருப்பதை நாமே உணர்வோம்.

இலக்கிய அரட்டைகள், இலக்கிய உரையாடல்கள், மதிப்புரைகள் எல்லாவற்றிலும் உள்ளுறைந்துள்ளது இலக்கிய விமர்சனம்தான். அவை அளிப்பது இலக்கிய வாசிப்புக்கான பயிற்சிதான். இலக்கிய விமர்சனம் என்பது பிரக்ஞையுடன் செய்யப்படுவது என்பதே வேறுபாடு. நாம் இலக்கிய விமர்சனங்கள் வழியாகவே தேர்ந்த வாசகர்களாக ஆகிறோம். அவை நம்மை பயிற்றுவிக்கின்றன.

அந்தப் பயிற்சி எவ்வாறு நிகழ்கிறது? நல்ல இலக்கிய விமர்சகன் என்பவன் மிகச்சிறந்த வாசகன். அதாவது வாசிப்புக்கு முறையான பயிற்சி எடுத்துக்கொண்டவன். அவனுடைய வாசிப்பு மூன்று தளங்கள் கொண்டது.

அ. அவன் அந்த மொழியின் இலக்கிய மரபையும், உலக இலக்கிய மரபையும் நன்கறிந்தவன். பேரிலக்கியங்களை கற்றவன். பேரிலக்கியங்களை கற்றவன் மட்டுமே இலக்கிய விமர்சகன். மற்ற எதைக் கற்றிருந்தாலும் அவன் இலக்கிய விமர்சகனல்ல.

ஆ. இலக்கிய விமர்சகன் இலக்கியத்தின் துணை அறிவுத்துறைகளான தத்துவம், வரலாறு, சமூகவியல், அரசியல் மற்றும் மொழியியல் போன்ற களங்களிலும் விரியும் வாசிப்பு கொண்டவன்.

இ. இலக்கிய விமர்சகன் தான் செயலாற்றும் இலக்கியக் களத்தை ஒட்டுமொத்தமாகக் கவனிப்பவன், அவ்வகையில் ஒரு முழுமையான வாசகன்.

இலக்கிய விமர்சகர் அல்லாத வாசகர்களுக்கு அந்த வகையான முழுமையான வாசிப்பு அமைவதில்லை – தேவையுமில்லை. இலக்கிய விமர்சகனல்லாத இலக்கிய வாசகன் தன் ருசிக்காக, தன் தேடலுக்காக மட்டுமே வாசித்தால்போதும். தனக்கு உகந்ததை மட்டுமே ஏற்றுக் கொண்டால் போதும். ஆனால் அவன் இலக்கிய விமர்சகனை கவனிக்கவேண்டும். தன் வாசிப்பை நிறைவாக நிகழ்த்திக்கொள்ளும்பொருட்டு.

இலக்கிய விமர்சனம் என்னும் கலை உலகளாவிய தளத்திலேயே ஏறத்தாழ மறைந்துவிட்டது என்றே நான் இன்று நினைக்கிறேன். என் வாசிப்பில் ஹரால்ட் ப்ளூம்தான் இறுதிப் பெரும் விமர்சகர். மேதைகள் என்று சொல்லத்தக்க குறைந்தது ஐம்பதுபேர் ஐரோப்பிய இலக்கிய விமர்சன வரலாற்றில் உள்ளனர். இன்று அப்பட்டியலில் எவரையும் சேர்க்கவியலாது.

இன்று மேலைநாடுகளில் இருவகை எழுத்துக்களே இலக்கிய விமர்சனங்களாகக் கருதப்படுகின்றன.

ஒன்று, மதிப்புரைகள். இவை பதிப்பகத்தாரின் ‘ஊக்குவிப்பால்’ எழுதப்படுகின்றன. இவற்றிலுள்ளது வணிகம் மட்டுமே. அவை ஒருவகை விளம்பரங்கள்.

இரண்டு, கல்வித்துறை அலசல்கள். இவற்றுக்கு இலக்கியப்படைப்பு வெறும் கச்சாப்பொருள். கல்வித்துறையினருக்கு அவர்கள் சார்ந்துள்ள அறிவுத்துறையே முக்கியமானது. சமூகவியல், மானுடவியல், மொழியியல், அரசியல் எதுவானாலும் அவர்களின் அக்கறை அவற்றில் மட்டுமே. அந்த அறிவுத்துறையின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போட்டுப் பரிசீலிக்கவேண்டிய ஒரு களம் மட்டுமே இலக்கியம்.

கல்வியாளர்களின் விமர்சனங்கள் வழியாக அந்த இலக்கியப்படைப்பை இம்மியளவுகூட புரிந்துகொள்ள முடியாது. அந்தந்த அறிவுத்துறைகளில் என்ன நிகழ்கிறதென்று மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இவை இலக்கிய விமர்சனங்களே அல்ல. ஓர் எளிய இலக்கியவாசகன் தன் நுண்ணுணர்வால் அடையும் புரிதல்களைக்கூட இந்த கல்வித்துறை அலசலாளர்களால் அடையமுடியாதென்பது கண்கூடு.

மிகமிகமிக எளிய அரசியல் வாசிப்பையே இவர்களால் நிகழ்த்த முடியும். மிகமிகமிகப் பொதுவான அரசியல் கருத்துக்களையே படைப்பிலிருந்து உருவியெடுக்கவும் முடியும். அதற்கு இலக்கிய வாசிப்பில் எந்த மதிப்பும் இல்லை. நல்ல இலக்கிய வாசகன் இவர்களின் எழுத்தை மலையைக் கெல்லி கரப்பாம்பூச்சியை பிடிக்கும் முயற்சியாகவே கருதுவான்.

மதிப்புரையாளர்கள் கல்வித்துறையாளர்களின் புதிய கலைச்சொற்களை எடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதன் வழியாக தங்கள் எழுத்துக்கு ஓர் அறிவுத்துறை சாயத்தை அளிக்கிறார்கள்.

இச்சூழலில் நாம் மீண்டும் இலக்கிய விமர்சனத்திற்கே திரும்பிச் செல்லவேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். அண்மைக்காலத்தில் வால்டர் ஸ்காட், கூல்ரிட்ஜ், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், டி.எஸ்.எலியட், வில்லியம் எம்ப்ஸன் ஆகியோரின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை வாசிக்கையில் அவை அளிக்கும் மின்னல்கள் திகைக்கச் செய்கின்றன. இன்றைய உள்ளீடற்ற இலக்கிய அலசல்களைக் கண்டு எரிச்சலும் சலிப்பும் அடைந்த உள்ளத்தை அவை துள்ளி எழச்செய்கின்றன.

கலையை உருவாக்குபவன், வாசித்து அடைபவன் என்னும் வகையில் எனக்கு புதியவற்றைச் சொல்ல அவர்களால் மட்டுமே இயல்கிறது. கலை உருவாக்கும் இக்கட்டுகள், அவற்றுக்கான தீர்வுகளின் சாத்தியக்கூறுகள், கலைக்கே உரிய தீராத மர்மங்கள் ஆகியவற்றை அவர்களால் மட்டுமே தொட்டுச் சொல்லமுடிகிறது.

ஏனென்றால் அவர்களும் கலைஞர்களே. இலக்கியவாதி வாழ்க்கை வழியாக மெய்மை நோக்கிச் செல்கையில் அவர்கள் இலக்கியப்படைப்பு வழியாக மெய்மை நோக்கிச் செல்கிறார்கள் என்பதே வேறுபாடு. மாபெரும் படைப்பிலக்கியவாதிகள் அளிக்கும் உச்சகட்ட அடைதலனுபவத்துக்கு நிகரானவை இவர்கள் அளிக்கும் புரிதலனுபவங்கள். ஒரே வகையான உச்சநிலைத் திறப்புக் கணங்கள்.

( 2 )

மாபெரும் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகர்களைப் போன்ற ஒரு தனித்தன்மை பி.கே. பாலகிருஷ்ணனுக்கும் உண்டு. அவரும் ஒரு பெரும் படைப்பாளி. நாவலாசிரியராக மலையாளத்தில் என்றும் அழியாத இடம் பெற்றவர். பி.கே.பாலகிருஷ்ணன் அடிப்படையில் இதழாளர். அரசியலிலும் தொழிற்சங்கப் பணியிலும் ஈடுபட்டிருந்தவர். மலையாளத்தின் திருப்புமுனையான வரலாற்றாய்வாளர்களில் ஒருவர். “ஜாதிமுறையும் கேரளசரித்திரமும்” கேரள வரலாற்றாய்வில் முதன்மையான நூல்களிலொன்றாக கருதப்படுகிறது.

முதன்மையாக கவிதை விமர்சனங்களே பி.கே.பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ’நாவல் ஸித்தியும் சாதனையும்” என்னும் அவருடைய நூல் 1963 ல்,  அறுபதாண்டுகளுக்கு முன்பு, எழுதப்பட்டது. அன்று முதல் இன்று வரை கேரள இலக்கிய விமர்சனத்தில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திவரும் படைப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப்பின் பல இலக்கிய விமர்சன அலைகள் வந்துசென்றுவிட்டன. பாலகிருஷ்ணனின் இந்நூலைப் பற்றியே மூன்று தலைமுறைக்காலமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

முதன்மைக் காரணம், இந்நாவல் இலக்கியப் படைப்பின் சமூகவியல் உள்ளடக்கம் என்ன, தத்துவசாரம் என்ன என்று ஆராயும் வழக்கமான பார்வை கொண்டது அல்ல. நாவலை ஒரு கலைநிகழ்வு என இது வகுத்துக்கொள்கிறது. அது கலையாவது அதன் வடிவம் வழியாக. அந்த வடிவம் அதன் உள்ளடக்கம் சார்ந்தது. அந்த உள்ளடக்கம் அரசியல், சமூகவியல், தத்துவம் என பல களங்கள் சார்ந்தது. அந்த கலைநிகழ்வு எப்படி நிகழ்கிறதென ஆராய்கிறது இந்நூல்.

இப்படிச் சொல்லலாம். நம் எண்ணமும் பேச்சும் அடிப்படையில் நாம் உண்ணும் உணவிலிருந்து பெறும் ஆற்றலால் நிகழ்கின்றன. உணவு வெளியே உள்ள விளைபொருட்களால் ஆனது. அந்தப் பருவடிவப் பொருட்களிலிருந்து நுண்வடிவமான சிந்தனையும் பேச்சும் எப்படி உருவாகின்றன என்று ஆராய்வதற்கு நிகரானது இந்நூலின் பேசுபொருள்.

நூலின் தலைப்பை நேரடியாக மொழியாக்கம் செய்தால் ‘நாவல்- எய்துதலும் நிகழ்த்துதலும்’ என வரும். பொருள் படைப்புசக்தியும் வெளிப்பாடும் என கொள்ளலாம். தன்னியல்பால் ஒருவரிடம் அமைவது நுண்ணுணர்வு. அந்நுண்ணுணர்வை வளர்த்து ஒருவர் சென்றடையும் உச்சநிலை ஸித்தி. ஸித்தி என்றால் சைவமரபில் ஞானமடைதல் என்றே பொருள். (புதுமைப்பித்தன் சித்தி என்னும் கதை எழுதியுள்ளார்) சாதனை என்பது யோக சாதனா என்று நாம் சொல்லும் பொருள் கொண்டது. தன்னை முழுமையாக நிகழ்த்திக்கொள்ளுதல்.

நாவல் என்னும் கலையை விவாதிக்கும் நூலானாலும் இதில் பி.கே.பாலகிருஷ்ணன் கலைநிகழ்வு என்னும் புதிரான மானுடநிலையை ஆராய்கிறார். ஆகவேதான் இந்நூலுக்கு இந்த காலம்தாண்டி நிலைகொள்ளும் தன்மை அமைகிறது. அன்றன்று பேசப்பட்டு கடக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலாக என்றுமுள்ள சில கேள்விகளையும், சில கண்டடைதல்களையும் இந்நூல் முன்வைக்கிறது. இலக்கிய ரசனைகொண்டவர்கள் இதனூடாக அந்தரங்கமாக நெடுந்தொலைவு செல்லமுடியும்.

மலையாளத்தில் பெருநாவல்கள் உருவாகாத தொடக்க காலகட்டத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் ஐரோப்பியப் பெருநாவல்களை ஆராயும்விதமாக இந்தக் கட்டுரைகளை எழுதினார். அதுவும் இந்நூலின் ‘நிரந்தரத்தன்மை’க்கு ஒரு காரணம். இவை ஐரோப்பிய மூலநூல் தொகை என ப்ளூம் சொல்லும் பேரிலக்கியங்களை ஆராய்கின்றன. அந்நாவல்களும் மலைமுடிகளைப்போல காலம் கடந்து நிலைகொள்பவை, தலைமுறை தலைமுறையாக வாசிக்கப்படுபவை.

இக்கட்டுரைகள் மலையாளத்தில் எழுதப்பட்டவை, ஆனால் இந்த வகையில் சென்ற நூறாண்டுகளில் உலகில் எந்த மொழியிலும் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளுக்கு நிகரானவை என ஒரு இலக்கியவாசகனாக நான் உறுதிபடச் சொல்லமுடியும். பி.கே.பாலகிருஷ்ணன் ஒரு மலைமுடி. அங்கே நின்றபடி நாம் நம்மைச்சூழ்ந்திருக்கும் ஐரோப்பிய மலைமுடிகளை அருகே என காண்கிறோம்.

எந்த ஓர் இலக்கியக் கல்வியும் பேரிலக்கியங்களிலேயே தொடங்கமுடியும். பேரிலக்கியங்களே இலக்கிய அளவுகோல்களை வகுத்தளிக்க முடியும். அவ்வகையில் தமிழ் வாசகர்களுக்கு ஐரோப்பியப் பேரிலக்கியங்களை அணுக, மேலும் கூர்ந்த வாசிப்பை அடைய இக்கட்டுரைகள் உதவும். பி.கே.பாலகிருஷ்ணனுடன் எனக்கு முப்பத்தைந்து ஆண்டுக்கால உரையாடல் உண்டு, அவர் மறைந்தபின்னரும் நீடிக்கும் உரையாடல் அது. அத்தகைய ஒன்று வாசகர்களுக்கும் நிகழட்டும்.

சரளமான அழகிய மொழியில் அழகியமணவாளன் இந்நூலை மொழியாக்கம் செய்துள்ளார். இது மணவாளனின் முதல் நூல். தொடர்ச்சியாக அவர் எழுதும் கட்டுரைகள் வழியாக மொழிநுண்ணுணர்வும் கலைப்புரிதலும் கொண்டவர் என அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். இலக்கிய விமர்சகராக, கலைவிமர்சகராக, இலக்கியப் படைப்பாளியாக அவர் மலரக்கூடும். வாழ்த்துக்கள்.

ஜெயமோகன்

நாகர்கோயில்

முந்தைய கட்டுரைமு.காசிவிஸ்வநாதன் செட்டியார்
அடுத்த கட்டுரைஅ.வெண்ணிலாவின் நீரதிகாரம் -லோகமாதேவி