தேவர் மகனும் சாதியமும்

ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். தங்களுடைய எழுத்து பணியின் சினிமா பற்றிய கேள்விகள் கால விரையமாக இருக்கலாம். இருந்தும் இந்த விஷயத்தில் தங்கள் கருத்து ஒரு தெளிவை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.

சமீபத்தில் மாமன்னன் பட விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தில் வரும் சாதிய பார்வையை விமர்சித்தது ஒரு விவாதமானது.

தேவர் மகன் படம் பங்காளி சண்டையையும் வன்முறையை தவிர்ப்பதை மையமாக கொண்டது. ஆனால் அந்த பாடலின் காரணமாக சாதீய படமாக விமர்சிக்கப் படுகிறது. இது ஒரு திரிபா, இல்லை இதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் உள்ளதா.

சினிமாவிலும் இருந்து தலித்களின் பிரச்சனைகளையும் உணர்ந்து தமிழ் சமூகத்தின் குழப்பங்களையும் அறிந்த தங்கள் கருத்து என் போன்றவர்களுக்கு ஒரு தெளிவை தரும்.

நண்றி
தேவநாதன்

*

அன்புள்ள தேவநாதன்,

இந்த விஷயம் விவாதிக்கப்படுவதே இது சினிமா என்பதனால்தான். வேறெவ்வகையிலும் சமூகம், சாதி சார்ந்த எதையும் கவனிக்கும் வழக்கம் நம் பொதுச் சூழலில் இல்லை. ஆனால் சினிமாவினூடாக நம் சொந்த சாதி-மதக்காழ்ப்புகளையே அபிப்பிராயங்களாக உமிழ்ந்துகொண்டுமிருக்கிறோம்.

வணிக சினிமாவில் எப்போதும் செயற்கையான  சமூகச் சித்திரம் ஒன்றை மேலோட்டமாக  உருவாக்கிக் காட்டவே முடியும்.  எதையும், எவரையும் சீண்டாமல் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு கதைப்பரப்பு ஒன்றை உருவாக்குவதே அதன் இயல்பு. பெரும்பாலான வணிகப்படங்களின் வழி அதுவே.

அதற்கு அப்பால் சமூக யதார்த்தத்தை காட்டும் சினிமாவுக்கு மூன்று வழிகளே உள்ளன.

அ. சமூகநிலையை பிரச்சார நோக்குடன் புனைந்து முன்வைக்க முடியும். அதற்கு குறைந்தபட்ச தரவுகளை எடுத்துக்கொண்டு மிகையாக்கிக் காட்டமுடியும் – உதாரணம், கேரளா ஸ்டோரி.

ஆ.ஏறத்தாழ உண்மையான ஒரு சூழலை காட்டி, அதில் பிற்போக்குத்தனமான அம்சங்களை விதந்தோதி முன்வைக்கமுடியும் – உதாரணம், நாட்டாமை.

இ. யதார்த்தத்தை கூடுமானவரை அப்படியே காட்டுதல். யதார்த்தத்திற்கு சமானமான புனைவுச்சூழலை உருவாக்குதல்.

முதல் இரண்டுவகைக்கும் மூன்றாவதற்குமான வேறுபாடு பொதுவாக இங்கே ‘சவுண்டு’ விடும் கும்பலுக்கு தெரியாது. காரணம், சினிமாவுக்கும் அன்றாட அரசியலுக்கும் அப்பால் எதையுமே அந்தக்கூட்டம் கவனிப்பதில்லை. முதல் இரு வழிகள் கண்டனத்திற்குரியவை. மூன்றாம் வழிதான் மெய்யான கலையின் தெரிவு.

இந்த மூன்றாவது வழியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அந்த யதார்த்ததின் உள்ளே சமூகத்தின் முன்னகர்வுக்கான ஒரு கருத்தை, ஓர் அறைகூவலை வைத்தல். இரண்டு, அந்த யதார்த்தத்தை மட்டும் அப்படியே காட்டிவிட்டு நின்றுவிடுதல்.

மூன்றாவது வழியில் ஒரு சமூக யதார்த்தத்தை அப்படியே காட்டி, மேற்கொண்டு ஒன்றையுமே சொல்லாமலிருந்தாலும்கூட அது முக்கியமான சமூக சீர்திருத்தப் படம்தான். ஏனென்றால் அப்பட்டமாகக் காட்டுவதேகூட  அந்த யதார்த்தம் மீதான தாக்குதல்தான்.

காரணம், சமூகம் தன் அவலங்களையும் கீழ்மையையும் பொத்திவைக்கவும், செயற்கையாக நியாயப்படுத்தவும்தான் எப்போதும் முயற்சி செய்யும். அதையே அதற்குக் காட்டுவதையே பெரும்பாலான இயல்புவாத இலக்கியப்படைப்புகள் செய்கின்றன. இந்திய சினிமாவின் மிக முக்கியமான கலைப்படைப்புகள் இந்த வகையானவை.

தேவர் மகன் உண்மைக்கு மிக அணுக்கமாக ஒரு யதார்த்தச் சூழலைக் காட்டிய படம். சாதியடுக்கு, சாதிப்பெருமிதம், சாதிய மூர்க்கம், சாதிப் பாசாங்குகள், சாதிய சமூகத்தின் தேக்கநிலை எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டியது அது. கூடவே அதில் இருந்து முன்னகர்வதற்கான அறைகூவலையும் அது விடுத்தது. அவ்வகையில் அது இங்குள்ள யதார்த்தவாத முற்போக்கு இலக்கியம் போன்றது.

சினிமா ஓர் ‘அப்பட்டமான’ கலை. காட்சிக்கலையின் வலிமை அது. அது உண்மையை அப்படியே காட்டுகிறது. மொழிவடிவில் இலக்கியம் தேவையானவற்றை மட்டும் காட்டலாம். சொற்றொடர் அமைப்பு வழியாக கூட்டியும் குறைத்தும் காட்டலாம். சினிமாவில் ஒரு காட்சிச் சட்டகமே உண்மையை முகத்திலடித்தது போல காட்டிவிடும். அந்தக் காட்சி நீண்டநாள் நினைவில் நிற்கும். நம் அகமனதில் வளரும். அதை நாம் நம்முடைய உணர்ச்சிகள் சார்ந்தும், நம் கருத்துநிலை சார்ந்தும் வளர்த்துக்கொள்வோம்.

உதாரணமாக, ஓர் உயர்சாதியினரின் காலடியில் ஒரு தலித் ஒடுங்கி அமர்ந்திருக்கும் ஒரு காட்சிச்சட்டகம் ஓர் உயர்சாதிப் பார்வையாளருக்கு தலித் அப்படி ஒடுங்கி அமரவேண்டியவர் என்னும் சித்திரத்தை அளிக்கலாம். தலித் ஒருவருக்கு தங்களை இழிவுபடுத்துவதாகத் தோன்றலாம். முற்போக்கு எண்ணம் கொண்ட ஒருவருக்கு ஒரு சமூக அவலத்தின் காட்சியாகத் தோன்றி அதற்கு எதிரான மனநிலையை அளிக்கலாம். அது காட்சியூடகத்தின் பலமும் பலவீனமும்.

ஒரு சினிமா ரசிகன் அக்காட்சிச் சட்டகத்தை அந்தப்படத்தின் ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டு பொருள் கொள்வான். உண்மையை காட்டுவதே சினிமாவின் அழகியலும் அறமும் ஆகும் என்று புரிந்து கொள்வான். சினிமா காட்டும் உண்மைக்கு ரசிகனாகிய தான் எப்படி அர்த்தம் கொடுக்கிறோம் என்பதே முக்கியம் என்றும், அதன் வழியாகவே அச்சினிமா உருவாகிறது என்றும் அவன் அறிந்திருப்பான்

ஒரு சினிமா சாதிய யதார்த்தத்தை காட்டியது என்பதனாலேயே அது சாதியப்படம் என்று சொல்பவர்கள், உண்மையை ஒளிக்கவேண்டுமென நினைப்பவர்கள். அது பேசுபொருளாகக் கூடாது என நினைப்பவர்கள். சாதிய உள்நோக்கத்தை மறைத்துக் கொண்டு முற்போக்கு பேசுபவர்கள்.

தேவர் மகன் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே அமைதியின்மையை உருவாக்கியதா என்றால் ஆம் என்பதே பதில். ஏனென்றால் அது உண்மையைக் காட்டியது.உண்மை உருவாக்கிய அமைதியின்மை அது. அது சினிமா என்னும் கலையின் வலிமை. அதில் ஒரே ஒரு பாடலும் ஒரே ஒரு காட்சிச்சட்டகமும் சாதியவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. அது சினிமா என்னும் கலையின் பலவீனம்.

தேவர் மகனுக்கு முன் சாதிப்பெருமித வரலாறுகளைக் காட்டிய சின்னக்கவுண்டர், நாட்டாமை போன்ற படங்கள் உருவாக்காத அமைதியின்மை இந்தப் படத்தால் ஏன் உருவாகியது? அந்தப் படங்கள் காட்டியது உண்மையல்ல, வெறும் ‘சினிமாக்களம்’ மட்டும்தான். அதை சினிமாவாகவே கடந்துசென்றனர்.ஆனால் தேவர்மகன் உருவாக்கியது நேரடிச் சமூக யதார்த்தம். ஆகவே அது அமைதியிழக்கச் செய்தது.

மாரி செல்வராஜ் தெளிவாகவே சொல்கிறார். அவருடைய அமைதியின்மை என்பது தேவர் மகன் சினிமா உருவாக்கியது அல்ல. அந்த சினிமாவின் மனநிலையோ பார்வையோ அவரை அமைதியிழக்கச் செய்யவில்லை. அது காட்டும் உண்மையான சமூகச் சூழல்தான் அந்த அமைதியின்மையை உருவாக்கியது. அது உண்மையை எடுத்து முன்னால் வைத்து ’இதோ இதுதான் நம் சமூக யதார்த்தம்’ என்று காட்டியது. இன்றும் அதுவே சமூகநிலை.அத்தனை முற்போக்கு சக்திகளாலும் ஊட்டி வளர்க்கப்படும் சமூகச்சூழ்நிலை அது.

தலித் மக்கள் நடுவே அந்த அமைதியின்மை உருவாக முக்கியமான இன்னொரு காரணம் அப்போது உருவாகி வந்த தலித் அரசியல். அதன் வழியாக இளைய தலைமுறை வளர்ந்து வந்தமை.

அந்த அமைதியின்மையில் இருந்து மாரி செல்வராஜின் படங்கள் உருவாயின என அவர் சொல்கிறார். அப்படியென்றால் அது தேவர் மகன் படத்தின் சாதகமான விளைவுதான். தேவர் மகன் காட்டும் உண்மைக்கு தலித் தரப்பில் இருந்து எழவேண்டிய எதிர்வினை மிகச்சரியாக அதுவே. அவ்வாறென்றால் மாரி செல்வராஜின் படங்கள் தேவர் மகன் படத்தின் வெற்றி என்றே சொல்லவேண்டும்.

‘படிங்கடா’ என்று தேவர்மகனின் சக்திவேல் எழுப்பிய குரல்தான் அசுரன் படம் வரை மிக வலுவாக எதிரொலிக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைசோதிப்பிரகாசம்
அடுத்த கட்டுரைசாகித்ய அகாடமி விருதுகள்