மு.இளங்கோவன்,எஸ்.ஜே. சிவசங்கர் -கடிதங்கள்

கொங்குநாட்டின் நவீன அறிவியக்கம் மூன்று ஆளுமைகளில் இருந்து தொடங்குகிறது. சே.ப.நரசிம்மலு நாயுடு, ஆர்.ஷண்முகசுந்தரம் மற்றும்  பெரியசாமித் தூரன்  தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவரான அவரை நினைவுகூரும்பொருட்டு 2022 முதல் தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விருது ஆகஸ்ட் 5-6 தேதிகளில் ஈரோட்டில் நிகழும்.

இவ்வாண்டுக்கான விருது  ஆய்வாளர் மு.இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருது இளம் ஆய்வாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்விக்கி – தூரன் விருது 2023

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் !

சிலரை முதலில் பார்க்கும்பொழுது, கடக்கும்பொழுது நம் நினைவில் நின்றுவிட்ட அவரது முறுக்கிவிட்ட மீசை, சிரிக்கும்பொழுது கன்னத்தில் விழும் குழி, படிய வாரிவிட்ட தலை, என நினைவில் வருவதுபோல, மு. இளங்கோவன் என்றால், அவரை அறிந்துகொண்ட, அவரது நூலான, இசைத்தமிழ்க்  கலைஞர்கள்தான் நினைவில் வரும். அவருக்கு இந்த வருடம் தமிழ் விக்கி விருது என்று தாங்கள் அறிவித்ததும், இசைத்தமிழுடன் தொடர்புடைய 5764 நபர்களைப் பற்றி ஆவணம் செய்தவர், என்று மின்னல் அடித்தது. அவரது தளத்தில், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்தரனர், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவன் என்று ஒரு அலாதியான அறிமுகம் அவரைப் பற்றி இருக்கும்.. இணையத்தின் வழி தமிழின் வளர்ச்சியை அனைத்து முறைகளிலும் சாத்தியப்படுத்தும் இலக்கிய வரலாற்றாசிரியருக்கு தமிழ் விக்கி விருது கிடைப்பதில் மகிழ்கிறேன்.

பேராசிரியர் மு. இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

மு. இளங்கோவன் – தமிழ் விக்கி  

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் [email protected]

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

தூரன் விருதுகள் பற்றிய செய்தி கண்டேன். மனநிறைவடையச்செய்யும் தேர்வுகள். ஒரு சாதனையாளர், ஒரு சாதனைக்கு தொடங்குபவர் இருவரையும் கவனப்படுத்தியிருக்கிறீர்கள். இன்றைய சூழலில் அறிவியக்கம் சார்ந்தவர்களை அறிமுகம் செய்வது மிகப்பெரிய வேலை.

இங்கே போலி ஆய்வாளர்கள், போலி எழுத்தாளர்கள் மண்டியிருக்கிறார்கள். ஆளாளுக்கு ஐம்பது புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். எதையும் எவரும் படிப்பதில்லை. தங்களுக்கே விழாக்கள் எடுக்கிறார்கள். பட்டங்களும் பரிசுகளும் பெறுகிறார்கள். பட்டம், பரிசு, புத்தக எண்ணிக்கை வைத்துப் பார்த்தால் இந்த போலி எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும்தான் முன்னிலையில் இருப்பார்கள். நிஜ ஆய்வாளர்கள் ஆய்வில் மூழ்கியிருப்பதனால் முண்டியடிப்பது அவர்களுக்கு முடிவதில்லை.

நிஜமான ஆய்வாளர்களை போலிகளிடமிருந்துப் பிரித்துப்பார்ப்பது எல்லாருக்கும் சாத்தியமல்ல. அத்தனை நூல்களையும் படிக்க முடியாது. இங்கே பீர் ரிவியூ என்பதே கிடையாது. நேர்ப்பேச்சில் இன்னார் இன்னார் டுபாக்கூர் என்று சொல்லும் அறிஞர்கள்கூட மேடைகளில் எல்லாரையும் சரமாரியாகப் பாராட்டுவார்கள். எல்லாருக்கும் பொன்னாடை போர்த்தி பட்டம் கொடுப்பார்கள்.

இந்த விஷச்சூழலில் முக்கியமானவர்கள் இவர்கள் என்று சுட்டிக்காட்டுவதே பெரிய விஷயம். அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம் உட்பட சாதனையாளர்களையே நீங்கள் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகிறீர்கள். அவர்கள் பெயர்களே உங்கள் வழியாகத்தான் எனக்கெல்லாம் அறிமுகம். இப்போது அதை அமைப்புரீதியாகவே முன்னெடுக்கிறீர்கள்.

எஸ்.ஜே.சிவசங்கர் தமிழ் விக்கி

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100003825246295 

இங்கே ஆய்வுகளை கவனிப்பாரில்லை. இணையச்சூழல் ஒருவகையான வம்புக்கச்சேரியாக உள்ளது. நீங்கள் இரண்டு ஆய்வாளர்களை கவனத்துக்குக் கொண்டுவந்து பெரும்பணி செய்கிறீர்கள். ஒட்டுமொத்த சமூகவலைத்தளமும் பாலியல் தேடல் கொண்ட சில பெண்கள் ஏதோ போலி எழுத்தாளனிடம் தொடர்பு வைத்துக்கொண்டதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தது. ஆய்வாளர்களுக்கான சம்பிரதாயமான வாழ்த்துக்கள்கூட கண்ணுக்குப்படவில்லை. இதுதான் நிலைமை. ஆனால் இப்படி வம்புகளில் திளைக்கும் கும்பல் உங்கள்மீதோ விஷ்ணுபுரம் அமைப்பு மீதோ யாராவது உதிரி ஒரு விமர்சனம் வைத்தால்கூட உடனே அறிவுஜீவி நடிப்புடன் வந்து அமர்ந்துவிடுவார்கள்.

உங்களுக்கான ஒரு சுற்றத்தை உருவாக்கிக்கொண்டு, மிகுந்த நம்பிக்கையுடன் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறீர்கள். எந்த நற்செயலுக்கும் அதற்கான விளைவு உண்டு. இந்த நச்சுச்சூழலிலும்கூட கொஞ்சம்பேர் இதையெல்லாம் கவனிப்பார்கள். அவர்கள்தான் மெய்யானவர்கள்.

எம்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைStories of the True and The Abyss- A Conversation
அடுத்த கட்டுரைஇசை,பீத்தோவன், கடிதம்